சினிமாவுக்குப் போன…

(ரொம்ப வருஷமாச்சு. இப்படி ஒரு நையாண்டிக் கட்டுரை எழுதி. இன்னிக்கு எழுதிப்பார்த்தேன். பரவாயில்ல, எதுவும் விட்டுப் போகல. நல்லாத்தான் வருது. ஆக, இந்த நையாண்டிக் கட்டுரையின் நோக்கம் யாரையும் புண்படுத்துவதோ, பண்படுத்துவதோ, டின்கட்டுவதோ அல்ல. இந்தக் கட்டுரையின் மூலம், அது உங்களுக்குத் தெரியாததா என்ன!)

தெலுங்கு தேஜஸ்வினி பத்திரிகையில் ரேணிகுண்டா ரெங்கநாயுடு (ரேரெ) தனது சினிமா  அனுபவங்களை கிசுகிசுக்களாக எழுதி வருகிறார். எதை எழுதினாலும் எவனுமே புரிந்துகொள்ளக்கூடாது என்ற பாணியில் எழுதுவதே ரேரெவின் வழக்கம். கிசுகிசுக்களின் சுவாரசியம்  பற்றி கேட்க வேண்டுமா? மர்ம நபர் இயக்கும் ரயில்போல காலம் கடந்துசெல்வதை  அதில்  உணர்ந்து பீதியடைய முடிகிறது.

பிரெட் பஜ்ஜி மடித்து வந்த காகிதத்தில் ரேரெவின் ஏப்ரல் மாதக் கட்டுரை அகப்பட்டது. தான் தங்கியிருந்த தெருவோரங்களை, உல்லாச விடுதிகள் குறித்து அதில் பீற்றியிருந்தார் ரேரெ. அவர் சிறுவயதில் திருட்டு தம் அடிக்க ஒதுங்கும் இடத்தில் தன் வாத்தியாரைத் திட்டி கரித்துண்டால்  எழுதுவாராம். குப்புறப்படுத்துக்கொண்டு ஹோம்வொர்க் எழுதுவாராம். அப்படியே  குறட்டைவிட்டு விடுவாராம். எழுத்துப் பிழை இல்லாமல் எழுதவேண்டும் என்பது அவரது நெடுங்கனவாக இருந்திருக்கிறது. சினிமாவுக்குள் நுழைந்த பிறகுதான் அது சாத்தியமாகியிருக்கிறது.  ஏறக்குறைய எனக்கும் அந்த அனுபவம் உண்டு. சினிமாவில்தான் யாரும் எழுத்துப் பிழைகளைக்  கண்டுகொள்வதில்லை.

எனக்குச் சிறுவயதில் கிறுக்குவதற்கென தனி இடமே இருந்ததில்லை. எதிர்வீட்டு போலீஸ்காரர்  வீட்டுச்சுவரில் கவிதை எழுதி ஏகப்பட்ட முறை அடி வாங்கியிருக்கிறேன். கோயில் பிரகாரம்  எனக்கு பிரசாதம் தரும் இடமாகத் தெரிந்ததே தவிர, எழுத்துப் பிரசவத்துக்குத் தோதான இடமாகத்  தோன்றவில்லை. வீட்டுக் கொல்லையில் மாமரம் மீது ஏறியமர்ந்து எழுதியிருக்கலாம். மாங்காயின்  சுவை என்னை எழுதவிடவில்லை.

பின்னர் நான் வேலைக்குச் சேர்ந்த உடன் செய்துகொண்ட வசதி, நான்கு கோடு போட்ட நோட்டு  ஒரு டஜன் வாங்கிக் கொண்டேன். கையெழுத்தைச் சரிசெய்ய. அதற்கு ஒரு மேஜை தேவை என்பதை உள்மனம் குத்திக்காட்டியது. தவணை முறையில் வாங்கினேன். ஒரு மேஜைமுன் அமர்ந்து  தப்பின்றி, எனக்குப் பிடித்த சினிமாப் பாடல்களை எழுதிப் பார்த்து குதூகலித்தது இன்றும் பசுமையாக, நாஞ்சில்நாட்டு பலாச்சுளையின் சுவைபோல நினைவில் நிற்கிறது.

பல வருடங்களாக வேறு வழியின்றி, வீட்டின் ஒற்றைப் படுக்கை அறையில் கணிப்பொறி வைத்து  அமர்ந்து டைப் அடித்துப் பழகினேன். தூங்க வேண்டும் என்றால் மானிட்டரை கட்டிலுக்கு அடியில் தள்ளிவிட வேண்டும். இந்த வசதியின்மைகள் என்னை ஓர் இலக்கியவாதியாக மாற்றியதில் ஆச்சரியமில்லை. வசதிகளைத் தேற்றுவதற்காக நான் திரைத்துறையை ‘அரைக்கண்’ணால்  வாஞ்சையோடு நோட்டமிட்டுக் கொண்டிருந்ததையும் மறுப்பதற்கில்லை.

சினிமாவுக்குள் நுழைவதற்கு முன்பாகவே எதை எதையெல்லாம் அடையலாம் என்று பகல் கனவு  காண்பது எனக்கு நாவல் எழுதுவதைவிட சுகானுபவமாக இருந்தது. சின்ன வாய்ப்பு ஒன்று  கிடைத்தபோதுகூட நான் என் கோரிக்கைகளை முன்னெடுத்து வைக்கத் தயங்கவே இல்லை. எழுதுவதற்குத்தான் யோசிக்க வேண்டும், பேசுவதற்கு அல்ல.

லால் பார்க், கப்பன் பார்க், நாகேஸ்வர ராவ் பார்க், மாநகராட்சி பார்க் என்று ஒரு பார்க்கைக்கூட  விடாமல் கொட்டாவி விட்டபடி காவியங்கள் படைத்த எனக்கு கீரின் பார்க்கில் ரூம்போட்டு எழுத  வேண்டும் என்பது வாழ்நாள் ஆசை. வெறி என்பதுகூட மிகையில்லாத சொல்தான். சினிமா வாய்ப்புகள் அனைத்தையும் சாத்தியமாக்கின. ஒரு நல்ல அறை ஓர் ஊற்றுக்கண். சுத்தமான கழிப்பறையோடு இணைந்த சௌகரியமான அறை, சொர்க்கம். கதைக்கான ஸீன் பிடிப்பது, கம்பா நதியில் மீன் பிடிப்பதற்கு ஒப்பானது. நாம் ஒரு நல்ல ஸீனைப் பிடித்துவிட்டோமென்றால் அந்த அறையும் ஸீனும் பின்னிப்பிணைந்து கொள்கின்றன. நினைவுகளின் ஏகாந்தக் கூட்டில் நிலைக்கின்றன.

‘கழுதைப்புலி’ எழுதும்போது சென்னையில் லொங்கடா ஓட்டல் ஒன்றில்தான் எனக்கு அறை  கொடுத்தார்கள். மாநகராட்சி பார்க்கைவிட அங்கே வசதிகள் குறைவுதான் என்றாலும் நறுமணங்களுக்குக் குறைவில்லை. வாடகையும் குறைவே. பஞ்சு இழந்த தலையணை, முடை நாற்றம் வீசும்  மெத்தை. நான்கில் ஒரு காலுக்குப் பதில் செங்கலால் அண்டை கொடுக்கப்பட்ட கட்டில்.  ஒருக்களித்துப் படுத்துக்கொண்டே பக்கத்து கட்டடத்தில் நடப்பதைப் பார்க்கும் சுதந்தரம்.  அனைத்தையும் சாத்தியப்படுத்திய அறைகூட எனக்கு சினிமாவின் கருவறையாகத்தான் தோன்றியது.

சமீபத்தில் தங்கிய தாஜ் கோரமண்டல் அறை என்னை வசீகரித்தது. எப்போதாவது இம்மாதிரி  விபத்துகளும் நேர்ந்துவிடுவது உண்டு. ஒருபக்கச் சுவர் முழுவதையும் என் முகத்தை எனக்கே  வெளிச்சம்போட்டுக் காட்டும் கண்ணாடி. பிடித்து கொதிக்கும் குழம்பில் போட்டுவிடலாமா என்று  நாக்கின் வெறியைத் தூண்டும் தொட்டி வண்ண மீன்கள். மார்கழி திருப்பாவைக் குளிரை ரிமோட்டில் கொண்டுவரும் ஏசி. இதையெல்லாம் இழந்து இத்தனைகாலம் அகம் பிரம்மாஸ்மி ருத்ரன்  போல தலைகீழாக நின்று தொலைத்த வாழ்க்கை உறுத்தலாக இருந்தது. தாஜில் என்னால் சிந்திக்கவே இயலவில்லை, வாழ்வைச் சுகித்துக் கிடந்தேன்.

வசதியான அறை ஒன்றை அனுபவித்துத் தீர்த்தபின் மனம் பூனைக்குட்டிபோல அதை நோக்கியே  பாய்கிறது. இப்போது மொட்டைமாடியில் எனக்கான அறையைக் கட்டிவிட்டேன். வீட்டின் கீழ்த்தளத்தில்  இருக்கும்போது நான் தக்காளி ரசம். மேல்தளத்தில் இருக்கும்போது பாதரசம். என்னை நானே  பிரித்துக் கொண்டேன். அறையில் இரண்டு புத்தக அலமாரிகள். ஒன்று குமுதம், விகடன், குங்குமத்துக்கானது. பரபரப்பை, சர்ச்சையைக் கிளப்ப ஏதாவது தூண்டுகோல் வேண்டுமே.  இன்னொரு அலமாரி எப்போதுமே பூட்டு கொண்டது. சாவி தொலைந்துவிட்டது. அது உலக  இலக்கியங்களுக்கானது.

என் அறையே சன்னல்களால் ஆனது போன்று பிரமிக்க வைக்கும். எப்போது வேண்டுமானாலும்  வெயிலும் வெள்ளை நிலாவும் வந்து போகலாம். இன்னும் கட்டுமானப்பணி முடியவில்லை. பக்கத்து  வீட்டு மரத்தில் காய்த்திருக்கும் கொய்யா அடிக்கடி கண்ணை உறுத்துகிறது. எதிர்வீட்டில் அலறும்  மெகா சீரியல் வசனங்கள். கேரளாவை நினைவுபடுத்தும் பக்கத்துவீட்டுப் பாட்டி. அவள் வளர்க்கும்  நாயின் நள்ளிரவு ஊளை. இயற்கையை இழக்க நான் விரும்புவதில்லை.

இந்த அறையின் வளர்ச்சியும் சினிமாவில் என் வளர்ச்சியும் ஒன்றுதான். வளர்ந்து கொண்டிருக்கி÷ றாம். எங்கு வேலை பார்த்தேன், என்ன வேலை பார்த்தேன் என்பதே நினைவிலிருந்து அழிந்து  கொண்டிருக்கிறது. சினிமா, ஒரு சமண முனிவனைப்போல என்னுள் தவமிருக்கிறது. சினிமா  எனக்கு வருமானம் தருகிறது. இரவு எனக்கு வெளிச்சத்தைத் தருகிறது. இரவெல்லாம் தூக்கத்தைத் தொங்கலில் விட்டுவிட்டு கூர்க்காவின் விசிலோசைகளை எண்ணிக் கொண்டிருக்கிறேன். இருளின் கருமை என் எழுத்துகளை,  பஞ்ச் டயலாக்குகளை கணிணியில் செதுக்குகிறது. இரவில் விழித்திருக்க விதிக்கப்பட்டவன், கத்திரி  வெயில் பல்லிளிக்கும் பட்டப்பகலில் தூங்கச் சபிக்கப்படுகிறான். கொசுக்கடியில் அவதிப் படுபவனும் கோடம்பாக்கத்துக்கு வாக்கப்பட்டவனும் இரவில் தூங்குவதில்லை.

இலக்கியம் நாயர் கடை பாக்கியைக்கூட தீர்க்க உதவவில்லை. அதில் கொஞ்சூண்டு பிராய்ந்து  எடுத்து கோடம்பாக்கத்தில் கடைவிரித்திருக்கிறேன். கல்லா நிறைகிறது. சினிமா என் நேசம் அல்ல.  எனக்கு சுவாசம் அல்ல. பேக்கரியைக் கடந்து செல்கையில் மூக்கைத் துளைக்கும் கேக்கின் வாசம்.  கேப்பைக்கூழும் இலக்கியமும் நல்லதுதான், நிலைத்த ருசி கொண்டதல்ல. எனக்கு கேக்தான் பிடித்திருக்கிறது. என்னால் கேக் இன்றி வாழ முடியாது.

இலக்குகள் இல்லாதவனுக்கு இலக்கியம் சுகம். எல்லாம் தேவைப்படுபவனுக்கு மசாலா சினிமாவே  முகம். அது வாழ்ந்து என்னை வாழ்விக்க!

ஒரு எலக்கியவாதியின் எடக்குமடக்கு அனுபவங்கள்!

(இந்தக் கட்டுரை எதற்காக, யாருக்காக எழுதப்பட்டிருக்கிறது, எதற்கு இப்படி ஒரு தலைப்பு என்றெல்லாம் ஆழ்ந்து யோசிக்க வேண்டாம். யோசித்துத்தான் தீருவீர்கள் என்றால் பின் உங்கள் இஷ்டம்.)

அமானுஷ்ய ஜெயசாமி – தமிழ் எழுத்துலகின் உள்ளீடற்ற படைப்பாளி. இலக்கியத்தின் இருப்பை ஆதாரமாக்கும் வெப்பக் கவிஞர். படைப்புகளின் நகர்வில் ஊர்ந்து செல்லும் தாக மேகம். பின் நவீனத்துவத்தின் நவீன பின்னல். ‘ஓலைத்தகடு’ சிற்றிதழின் பேராசிரியர். யார் அவர் என்று எந்திரத்தின் எஞ்சிய சப்தத்தின் மீட்சியாகக் குரலெழுப்பாதீர். அது நான்தான்.

நான் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. பெயர் என்பதுகூட அடையாளங்களைத் தொலைத்த சில எழுத்துக்களின் முகம் தொலைத்த கூட்டணி. தன்னை அறிவித்துக் கொள்ள வெறி கொண்டு அலையும் அகங்காரம் பிடித்தவர்களின் பிடிவாதமே முற்றிய நிலையில் நெறிகட்டி அறிவிக்கப்படுகிறது பெயரென! இப்போது சொல்லுங்கள் மனிதனுக்கு பெயர் தேவையா?!

அப்போது பெயரை எங்கே உபயோகிக்க வேண்டும் என்று கிணற்று நீரின் வறட்சிக் குமிழாகக் கேட்கறீர்களா? உயிரற்ற கேள்வி. விஸ்தாரமான பாறைகளின் இடுக்கில் விதைகளை காகங்கள் ஒளித்து வைத்தாலும், தன்னை வெளிப்படுத்திக் கொள்ள தலை நீட்டும் தாவர சரீரம். இதயத்தின் நிழல் எங்கே விழும்? பிம்பங்களைச் சார்ந்திருத்தலின் வெளிநிலைக்கும் அவதானிப்புகள் வெட்டப்படும் பூரித்த நிலைக்கும் இடைப்பட்ட ஒரு அந்தர நிலையில் ‘பெயர்’ என்பது கட்டாயமாக்கப்படுகிறது.

சிலர் என்னிடம் கேட்பார்கள். இலக்கிய உலகில் என் பங்கு என்ன என்று.

கண்ணிவெடிகள் நிறைந்த நிலப்பரப்பில் நான் என் கால்களைத் தேடி நடந்து கொண்டிருக்கிறேன். இரகசியமாக ஊர்ந்து செல்லும் ஓநாய்கள் வாழும் காட்டில், என் ஒற்றைப் பேனா தீராத அபத்த நிலைகளின் ஊடாக குருதி தெளித்து இந்தப் பிரபஞ்சத்தைப் புனிதமாக்கிக் கொண்டுள்ளது. என் எழுத்துக்களின் கற்பிதங்களால் தமிழ் இலக்கியம் வாழ்விக்கப்பட்டு கொண்டிருக்கிறது.

ஆனால் மனநிலை பிழன்ற சிலர், என் படைப்புகளை ‘கழிவுகளின் இழிநிலை’ என்று சொத்தைப் பல் கண்ட சொப்பனம் போல் விமர்சிப்பார்கள். அவர்களுக்கு என் விஸ்தாரமான நுனி பதில் இதுதான்.

என்னை விமர்சிப்பவனின் குரல், முகமற்ற ஒரு டிராகுலாவின் குரலற்ற குரல். பிணவறையின் உள் ஒளிந்து கொண்டு தனக்குத் தானே ஒப்பாரி வைக்கும் நிழலற்ற காட்டேரியின் கதறல் அது. என் ஆழ்ந்த புனைவுகளின் சூடு தாங்காமல் மரங்களற்ற காட்டினில் போய் தன்னைத் தானே புதைத்துக் கொண்ட ரத்த அணுக்கள் இல்லாதவனின் பிதற்றல். சடலங்களைப் பற்றி இனி நான் பேசப் போவது இல்லை.

‘பின் நவீனத்துவ’த்தால் வெகுஜன மக்களுக்கு என்ன வாழ்வியல் பயன் என்று நீங்கள் சொல்லின் துணையோடு தூர்வாரிக் கேட்கலாம்.

இதற்கு எனது இந்த கவிதை பொத்தாம் பொதுவாக பதிலளிக்கும்.

குப்பை லாரிகளின்
சப்தமற்ற நகர்விலும்
நாசிகளுக்கு அறிவிக்கப்படும்
பால்வெளி வாசனைகள்…

நெருஞ்சி முள்ளின்
தொப்புள் கொடியில்
உபரியாய் முளைத்த
நீள் எலும்புகள்…

குருதிக்கோட்டின்
முள்ளங்கித் தீட்டில்
குதறிக் கொண்ட
ஒற்றை மயிறு…

அண்மைக்கு அப்பால்
ஈயின் நிழலில் ஓய்வுறும்போது
எதிர்கொள்கிறது
சிகரெட்டின் தித்திப்பு!

புரியவில்லையா? வாழ்வின் இருள்வெளிகள் புரிவதில்லை.

சென்றமாதம்தான் பிரபலம் என்று தன்னைக் கூறிக் கொள்ளும் அந்த எழுத்தாளருக்கு ‘சாதித்த அக்காடம்மி’ விருது கொடுத்தது பற்றி என்னிடம் ஒரு நிருபன் நேரே வந்து கருத்து கேட்டான்.

அறிவிலிகள். விருதுகள் வாங்குவதென்பது, மனித வெடிகுண்டை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்குவதற்குச் சமம். பொதுவாக நான் விருதுகளை வடுக்களின் மேல் வடியும் புரை என நினைக்கிறேன் என்றேன்.

‘கோண பீட’ விருதுக்கு உங்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் கிளம்பியிருக்கின்றனவே என்றான் எச்சிலின் எச்சக் குரலோடு.

நான் தீர்க்கத்தின் தீர்ப்பாகவே பதிலளித்தேன். எனக்கு விருது வழங்கும் தகுதி இங்கே எவனுக்கும் இல்லை. எனக்கு விருது வழங்க நினைப்பவன் தன்னைத்தானே ஒருமுறை நெருப்பால் எரித்து தன் கற்பின் ஸ்திரத்தை நிரூபிக்கக் கூடியவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சமூக ஜீவி நான் மட்டுமே!

உங்களோட ‘ஓலைத்தகடு’ சிற்றிதழ் மொத்தம் எத்தனை பிரதிகளை எட்டியுள்ளது என்றான் அந்த நிருபன் கணக்குப்பிள்ளையின் கடைசிக் கேள்விபோல்.

என் எழுத்துக்களின் வாசிப்பாளர்கள் என் அக்குளில் இருந்து கிளம்பியவர்கள். நான், என் நிழல், என் நிழலின் பிம்பங்கள், அந்த பிம்பங்களின் பிரதி பிம்பங்கள் என சந்தாதாரர்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்காக தாண்டவமாடுகிறது என்றேன் பெருமையின் பித்தமேறி.

என்னைப் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்றான் அவன் புதைகுழியின் பூரிப்பில் நின்றுகொண்டு.

நான் பொதுவாக உதட்டுச் சாயம் பூச மாட்டேன். என் உதடுகளுக்கு கிளுகிளுப்பாக புன்னகைக்கத் தெரியாது. எனக்கு அகண்ட கவர்ச்சியான உடலமைப்பு கிடையாது. இவற்கெல்லாம் ஒத்துழைக்கும் என் வீட்டு நாய்களை வேண்டுமென்றால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கட்டி வைக்கப்பட்டிருந்த என் வீட்டு நான்கு கால் மனிதர்களை அவிழ்த்து விட்டேன்.

அவ்வளவுதான். வந்தேறிகளின் வியர்வை பொழியும் அத்துவானக்காட்டில், வயிறூதிக்கிடக்கும் குள்ளநரியைக் குறிபார்த்து இறகுதிர்க்கும் ஒவ்வாமைக் குருவிகளின் கூட்டை நோக்கி ஓடி விட்டான் அந்த நிருபன்.

எதற்கு இப்படி புழக்கத்தில் இல்லாத புரையேறிய வார்த்தைகளை மட்டுமே பேசியும் எழுதியும் கொண்டிருக்கிறேன் என்று கேட்கிறீர்களா?

ஒரு எலக்கியவாதின்னா இப்படித்தான் இருக்கணும்னு ஆகிப்போச்சு. அதான் இந்த மண்டைக் கர்வத்தோட, வார்த்தைக்கு வார்த்தை வன்முறை கலந்தே பேசிக்கிட்டிருக்கேன். சாயங்காலம் ‘பப்’புக்குப் போகணும். ஐசிஐசிஐ அக்கவுண்ட் நம்பர் தர்றேன். ஒரு டென் தௌஸண்ட் போட்டு விடுறீங்களா?