பாக்யராஜின் முதுகு!

சென்னை நுங்கம்பாக்கத்திலிருந்த பாக்யா பத்திரிகை அலுவலகத்தின் பிரகாசமான விளக்குகள் அணைக்கப்பட்டன. இரவு மணி சரியாக 12.00. ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்த கையோடு நடிகர் பாண்டியராஜன் கொத்தாக ஒரு கட்டு ஊதுபத்தியை ஏற்றி வைத்தார்.

கோலப்பன் என்ற மீடியம், அந்தப் பளபளப்பான ஆவிகளுடன் பேச உதவும்  பிரான்சட் போர்டை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வைத்தார்.
‘ஒரு 10 செகன்ட் எல்லாரும் உங்களுக்குப் பிரியமா இருந்து ஏதோ ஒரு காரணத்துனாலே இறந்து போன அந்த நபரை மனசார நெனைச்சு கண்ணை மூடிட்டுப் பிரார்த்தனை பண்ணுங்க.’
மீடியம் கட்டைக்குரலில் வேண்டுகோள் விடுத்தார். அந்த விஸ்தரமான அறையில் மீடியத்தையும் சேர்த்து ஐந்து பேர் மட்டுமே இருந்தோம். எல்லோரும் மீடியத்தின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு கண்மூடிப் பிரார்த்தனை செய்தோம்.
கண்ணைத் திறந்தபோது – ஒரு நிமிடம் ஆடி அதிர்ந்து போனேன்.
பாக்யராஜின் தலைக்குமேலே வெள்ளை வெளேர் நிறத்தில் இரண்டு ஆவிகள் கை கோர்த்து மிதந்து போய்க் கொண்டிருந்தன. அது வேறொன்றும் இல்லை. பாண்டியராஜன் ஆவியோடு இன்றைக்குப் பேசியே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தில் கொத்தாகக் கொளுத்தி வைத்த ஊதுபத்திப் புகைதான் என்பதை உணர்வதற்குள் என் முகத்தில் பேய் பயம்.

அதைக் கவனித்த பாக்யராஜ், ‘ஆவிகளோட பேசறதுக்கு முன்னாடியே ரொம்ப டென்சன் ஆயிட்டீங்களே. பேசி முடிச்சிட்டீங்கன்னா எல்லாஞ் செரியாப் போயிரும். ப்ரபசர் சார், நீங்களும் சஞ்சீவியும் மொதல்லெ ஆவி போர்டுலெ கைவைங்க. சஞ்சீவிக்கு ஏதாவது வித்தியாசமா வந்து சேரும்!’

எனக்கும் சரி, ப்ரபசருக்கு சரி, இந்த மாதிரியான விஷயங்களில் அவ்வளவு நம்பிக்கை கிடையாது. இப்படி நம்பிக்கை இல்லாத இரண்டு பேரும் சேர்ந்து பிளான்சட் போர்டு ஸ்ட்ரைகரில் விரல் வைத்தாலோ என்னவோ, வெகு நேரம் ஸ்ட்ரைகர் இருந்த இடம் விட்டு நகரவேயில்லை.

அதற்குப் பிறகு ஸ்ட்ரைகர் மெதுவாக நகர ஆரம்பித்தது. ஆனால், பிளான்சட் போர்டில் அச்சடித்த ஆங்கில எழுத்துகளில் எந்த சம்பந்தமும் இல்லாமல், அர்த்தமும் இல்லாமல் அந்த ‘பிளாஸ்டிக் வில்லை’ நின்று நின்று நகர்ந்தது. சிலசமயம் பிளான்சட் போர்டின் சதுரம் தாண்டி வழுக்கிக் கொண்டு போய் தரையிறங்கியது.

மீடியம் அப்போது நம்பிக்கையூட்டும் வகையில் ஓர் அறிவிப்பு செய்தார்.
‘சார்! ஏதோ ஆவி ஒண்ணு, இப்போ இங்க வந்திருச்சு. இல்லாட்டி ஸ்ட்ரைகர் நகரவே நகராது. இதுல இன்னொரு விஷயமும் இருக்கு. இப்போ இங்க வந்திருக்கிற ஆவிக்கு இங்கிலீஸ் எழுத்துகள் படிக்கத் தெரியலேன்னு வெச்சுக்குங்க. அப்போ இது மாதிரிதான் வெளையாட்டு காட்டிட்டுப் போயிரும்.’

பாக்யராஜ் அப்போது என்னிடம் கேட்டார். ‘ஏங்க சஞ்சீவி, நீங்க கூப்புட்ட ஆவிக்கு இங்கிலீஸ் தெரியுமா? தெரியாதா?’
‘இல்லில்லே, நான் மனசிலே நெனைச்ச ஆவி ஒரு ஸ்கூல் டீச்சர். இங்கிலீஸ் ப்ராப்ளம் எல்லாம் இல்லே’ என்று நான் சொல்லி முடிக்கும்போது ஸ்ட்ரைகர் பிளான்சட் போர்டின் நடுவில் சென்று நின்றது.

முன்பு இல்லாத ஒரு வைபரேசனை என் விரல்கள் உணர்ந்தன. அதை ஆமோதிப்பது போல் இங்கிலீஷ் ப்ரபசர் என்னைப் பார்த்து லேசாகத் தலையாட்டினார். அதற்குப் பிறகு ஸ்ட்ரைகர், M – என்ற எழுத்துக்குச் சென்று ஒரு செகண்ட் நின்று, பின் A, Y – அடுத்து A  என்று அங்கேயே நங்கூரம் பாய்ச்சிக் கொண்டது.

‘மாயாவோட ஆவி வந்திருச்சுங்க ஏன் சார்… நீங்க மாயாவைத்தான் நெனைச்சீங்களா?’ – பாண்டியராஜன் கேட்டார். உண்மைதான் அந்த ஸ்கூல் டீச்சரின் பெயர் மாயாதான். ஒப்புக்கொண்டேன் இருந்தாலும் மீடியமாக வந்திருப்பது நான் கூப்பிட்ட டீச்சரின் ஆவிதான் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொள்ளும் வகையில் ‘எங்க பிரார்த்தனைய மதிச்சு இந்த ராத்திரி நேரத்துல இங்க வந்திருக்கற மாயா ஆவிக்கு எங்க வணக்கம். நீங்க பிறந்த ஊரைச் சொல்லமுடியுமா ப்ளீஸ்’ – என்று கேட்டேன்.

இப்போது நானும் ப்ரபசரும் மீண்டும் பிளாஸ்டிக் வில்லையில் விரல் வைத்தோம்.
S
A
L
E
M – என்று ஸ்டைகர் நிலைகொண்டது. பாண்டியராஜன் அதை சலீம் என படித்து வாய் விட்டுச் சிரித்தார்.

‘அது சலீம் அல்ல…‘சேலம்’தான். ஸ்கூல் டீச்சர் வாழ்ந்து, சின்ன வயதிலேயே மறைந்தது சேலத்தின்தான். அதன் ஸ்பெல்லிங்கும் SALEMதான்!’ என்றேன். அதற்குப் பிறகு நான் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டிருக்க வேண்டும். என்னால் தொடர்ந்து மாயாவுடன் பேச முடியவில்லை. நிலைமையை உணர்ந்துகொண்ட பாக்யராஜ், என்னை ஆறுதல்படுத்தினார். அறிவுபூர்வமாக சில விளக்கங்களையும் சொன்னார்.

‘இதுல பெருசா ஒண்ணும் இல்லீங்க. எல்லாமே உங்க சப்கான்சியஸ்லெ இருந்ததுதான். உங்க விரல் மூலமா வெளிப்பட்டிருக்கு. மத்தபடி ஆவி வந்து போறதெல்லாம் நம்பறமாதிரி இல்லே. ஒரு ஆவி வந்து தன்னோட ஊரு பேரைச் சொல்றதுல என்ன அதிசயமிருக்கு. நாளைக்கு இதே இடத்துல இதே மணிக்கு என்ன நடக்கும்னு சொன்னா அது அதிசயம்.’
பாக்யராஜின் யதார்த்தத்தை வந்திருந்த மீடியம் ஒப்புக்கொள்வதாக இல்லை. ‘வீணாக நாம் இப்போ எந்த ஒரு ஆவியோட கோபத்துக்கும் ஆளாக வேண்டாம். இதோட பூஜையை முடிச்சுக்குவோம். அதுதான் எல்லாருக்கும் நல்லது.’

மீண்டும் அந்த இடத்தில் இருட்டுமாறி வெளிச்சம் வந்தது.

மறுநாள். நான் பாக்யா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் பொறுப்பில் இருந்ததால் அன்றும் இரவு 12 மணி அளவில் பத்திரிகை தொடர்பாக சந்திக்க வேண்டி வந்தது. அப்போது பாக்யராஜ் தான் போட்டிருந்த சட்டையைக் கழட்டினார். தனது முதுகை என் பக்கம் திருப்பிக் காட்டினார்.

முதுகில் யாரோ கூரிய நகங்களால் கீறிய ரத்தச் சுவடுகள் தெரிந்தன.

எனக்கு அதிர்ச்சி. நேற்று வந்த ஏதாவது வந்து பிராண்டிவிட்டுப் போனதா? பாக்யராஜும் அப்படி ஒரு பில்ட்-அப்தான் கொடுத்தார். மேலே நடந்த சம்பவங்களை எல்லாம் பாக்யாவில் எழுதலாம் என்னுமளவுக்கு நான் தயாராகி விட்டேன். கடைசியில் பாக்யராஜ் உண்மையைப் போட்டுடைத்தார்.

‘சஞ்சீவி, நான் சரியா நகம் வெட்டலை. குளிக்கும்போது முதுகு தேய்க்கறப்போ கீறல் விழுந்திருக்குது. ஒரு சுவாரசியத்துக்காக உங்ககிட்ட ஸ்கீரின் ப்ளே பண்ணி சொன்னேன். இப்படித்தான் இந்த பேய், ஆவி சமாசாரங்களை எல்லாம் இஷ்டத்துக்குப் பரவியிருக்கும்னு நினைக்கிறேன்.’

***

உண்டா, இல்லையா? கடவுளுக்கு அடுத்து அதிகம் விவாதிக்கப்படும் விஷயம் பேய்தான். ஆதி காலம் தொட்டு அறிவியல் ஆட்சி செய்யும் இந்தக் காலம் வரை அமானுஷ்யங்கள் மீதான அச்சமும் நம்பிக்கையும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கின்றன. பல தனியார் சேனல்கள் இரவு பத்து மணிக்கு மேல் இந்த பேயை ஹீரோவாக வைத்துத்தான் நிகழ்ச்சிகளை ஒப்பேற்றிக் கொண்டிருக்கின்றன. பரபரப்பு வாரமிருமுறை இதழ்களிலும் ஆவி, பேய் செய்திகள் என்றாலே அதற்கு தனி மவுசுதான்.

ஆவி, பேய், பூதம், மோகினி, கொள்ளிவாய்ப் பிசாசு, காட்டேரி, காத்து, கருப்பு என்று பல வடிவங்களில் மனிதனின் மனத்தை ஆக்கிரமித்திருக்கும் பேய், நிஜமா, கற்பனையா? பில்லி, சூனியம், ஏவல் போன்ற மாந்திரீக விஷயங்களில் எவ்வளவு உண்மை உள்ளது? பேசப் பேச, எழுத எழுத தீராத சந்தேகங்களும் சுவாரசியமும் கொண்ட டாபிக் இது. உள்ளூரில் மட்டுமல்ல, முன்னேறிய நவீன நாடுகளிலும் பேய்கள் உலாவிக்கொண்டுதான் இருக்கின்றன. அறிவியலுக்கு பொருந்தாது என்று சொல்லி பேயை நிராகரிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், பேயின் இருப்பை மறுதலிக்க முடிந்தது போல், பேய் பயத்தை ஒழிக்க அறிவியலாலும் முடியவில்லை என்பதுதான் நிஜம்.

அறிவியல், அமானுஷ்யம் இரண்டின் கலவையாக ‘பேய்’ என்ற புத்தகம், கிழக்கு வெளியீடாக சென்னை புத்தகக் கண்காட்சிக்கு வர இருக்கிறது. இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கும் சஞ்சீவியை, பாக்யா வாசகர்கள் ஏற்கெனவே அறிந்திருப்பீர்கள். சஞ்சீவி, ஓவிய ஆசிரியராகப் பணியாற்றியவர். ‘பாக்யா’ வார இதழின் நிர்வாக ஆசிரியராக பதினான்கு ஆண்டுகள் இருந்தவர். கண்ணன் சர்வதேச அறிவியல் ஆய்வு மையத்தின் நிறுவனர். அமானுஷ்ய விஷயங்கள் குறித்து அறிவியல்பூர்வமாக தொடர்ந்து எழுதி வருபவர். இந்தப் புத்தகத்தை எடிட் செய்த விதத்தில் என் கருத்து – மிக மிக சுவாரசியமான விஷயங்களும் கதைகளும் சம்பவங்களும் நிறைந்துள்ள, அறிவியல்பூர்வமான விளக்கங்களும் கொண்ட விறுவிறு புத்தகம்.