சென்னை புத்தகக் கண்காட்சி 2013 : என் புத்தகங்கள்

சென்னை புத்தகக் கண்காட்சி இன்று ஜனவரி 11 முதல் ஆரம்பமாகவிருக்கிறது. இந்த வருடம் என்னுடைய புதிய புத்தகம் ஒன்று வெளியாகிறது. நான் எடிட் செய்த புத்தகம் ஒன்று புதிதாக வெளியாகிறது. தவிர மறுபதிப்பாகும் சில புத்தகங்கள் குறித்த அறிவிப்புகளையும் இங்கே தருகிறேன்.

அறிவிப்பு 1 : வெளிச்சத்தின் நிறம் கருப்பு

மர்மங்களின் சரித்திரம் குறித்த புத்தகம். பேய், பிசாசு, பில்லி, சூனியம், ஆவி, அமானுஷ்யம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இந்தப் புத்தகத்தை அடக்கிவிடக் கூடாது. அவற்றையும் தாண்டி, நெஞ்சை நடுங்க வைக்கும், தூக்கத்தை தொலைக்க வைக்கும் சாகாவரம் பெற்ற மர்மங்கள் குறித்து இந்தப் புத்தகம் பேசுகிறது. இது 2012ல் தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் தொடராக வெளிவந்தது.
வெளியீடு : சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிஷர்ஸ்
விலை ரூ. 200.


அறிவிப்பு 2 : ரஜினி
ஆறிலிருந்து அறுபத்து மூன்று வரை ரஜினியின் முழு வாழ்க்கையைச் சொல்லும் புத்தகம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் பா. தீனதயாளன் எழுதியுள்ள, ‘ரஜினி’ புத்தகம் இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு வெளியாகிறது. கடுமையான உழைப்பைக் கொட்டி, நுணுக்கமான தகவல்கள் சேர்த்து, அசரடிக்கும் எழுத்து நடையில் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை எடிட் செய்தவன் என்ற முறையில், சந்தையில் இனி எத்தனை ரஜினி புத்தகங்கள் வந்தாலும் இது தனித்துவமாக நிலைத்து நிற்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன். சிவாஜி, ஜெமினி கணேசன், சிலுக்கு, சாண்டோ சின்னப்பா தேவர் வரிசையில் தீனதயாளனில் மாஸ்டர் பீஸ் – ரஜினி. இந்தப் புத்தகக் கண்காட்சியில் நிச்சயம் இந்தப் புத்தகம் ஹிட் ஆகும். புத்தகத்தின் பதிப்பாளர் முடிவு செய்து அச்சிட்டுள்ள அட்டைப்படத்தில் மட்டும் எனக்கு உடன்பாடில்லை என்பதையும் இங்கே பதிவு செய்துகொள்கிறேன்.

அரிய புகைப்படங்களுடன் 400+ பக்கங்கள்.
விலை : ரூ. 275
வெளியீடு : மதி நிலையம்

அறிவிப்பு 3 : அகம் புறம் அந்தப்புரம்
மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளியான எனது மெகா வரலாற்று புத்தகம். இந்திய சமஸ்தானங்களின் – மகாராஜாக்களின் வரலாறு. கிழக்கு பதிப்பகம் வெளியீடு. விலை குறித்து கவலைப்படாமல் வாசகர்கள் அதிகம் நேசித்த புத்தகமும்கூட. சுமார் 1400 பக்கங்கள் கெட்டி அட்டைப் புத்தகமாக இதைக் கொண்டு வருவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் இருந்ததால், கிழக்கு பதிப்பகத்தினர் இதனை அதிக அளவில் பிரிண்ட் செய்யவில்லை. ஆனால், டிமாண்ட் இருந்துகொண்டே இருந்தது. இந்த முறை, அகம் புறம் அந்தப்புரத்தை ‘பேப்பர் பேக்’காக கொண்டு வருகிறார்கள் என்பதை வாசகர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
விலை : ரூ. 995.

அறிவிப்பு 4 : சந்திரபாபு
2006 சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டு, பெரும் வரபேற்பைப் பெற்ற எனது புத்தகம், கண்ணீரும் புன்னகையும். நகைச்சுவை நடிகர் சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு. இது எனது முதல் புத்தகமும்கூட. கடந்த இரண்டு ஆண்டுகளாக அச்சில் இல்லாமல் இருந்தது. பலரும் புத்தகம் மீண்டும் எப்போது வரும் என்று கேட்டார்கள். இந்தப் புத்தகக் கண்காட்சிக்கு, ‘சந்திரபாபு’ என்ற தலைப்பில், அரிய புகைப்படங்களுடன் புதிய பதிப்பாக இந்தப் புத்தகத்தைக் கொண்டு வருகிறேன்.
வெளியீடு : சிக்ஸ்த் சென்ஸ்
பக்கங்கள் : 200
விலை : ரூ. 125


அறிவிப்பு 5 : அண்டார்டிகா
‘ஸ்…’ என்ற தலைப்பில் அண்டார்டிகாவின் வரலாறு, சில ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு வெளியீடாக வந்தது. தலைப்பு புரியவில்லையா அல்லது என்ன பிரச்னை என்று தெரியவில்லை, என் புத்தகங்களில் இது ‘குசேலன்’ ஆகிப்போனது. தற்போது, ‘அண்டார்டிகா – வரலாறு’ என்ற நேரடித் தலைப்பிலேயே புத்தகம் மறுபதிப்பு காண்கிறது. அண்டார்டிகா என்ற ஆச்சரியம் நிறைந்த கண்டம் குறித்த அனைத்துத் தகவல்களையும் உள்ளடக்கிய புத்தகம். உலகின் தென் துருவத்தை அடைவதற்காக மேற்கொள்ளப்பட்ட பயணங்கள் ஒவ்வொன்றும் உயிரை உலக்குபவை. படித்துப் பார்த்தால் உணருவீர்கள்.

வெளியீடு : மதி நிலையம்.

அறிவிப்பு 6 : சிலுக்கு
சிலுக்கு குறித்த உருப்படியான பயாகிராஃபி. சிலுக்கு லேபிளோடு தற்போது வெளிவந்த / வெளிவரப்போகும் அனைத்து பட இயக்குநர்களுக்கும் இந்தப் புத்தகம் நிச்சயம் பேருதவியாக இருந்திருக்கும். பா. தீனதயாளனின் எழுத்தில், நான் எடிட் செய்த, சிலுக்கு – ஒரு பெண்ணின் கதை, மேம்படுத்தப்பட்டு தற்போது மறுபதிப்பு காண்கிறது.
வெளியீடு : மதி நிலையம்.அறிவிப்பு 7 : சுப்ரமணியபுரம்
சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் திரைக்கதை, படம் உருவான விதம் – நூலாக வெளிவருகிறது. புத்தகத்தின் எழுத்து வடிவம் என்னுடையது. சில வருடங்களுக்கு முன்பு செய்து கொடுத்தேன். தற்போது புத்தகம் விகடன் பிரசுர வெளியீடாக வருவதாக நண்பர் சசிகுமார் தகவல் சொன்னார்.
மேற்சொன்ன புத்தகங்கள் தவிர, என்னுடைய பிற நூல்களான முகலாயர்கள், யூதர்கள், கிளியோபாட்ரா, செங்கிஸ்கான் போன்றவை கிழக்கு பதிப்பக ஸ்டாலில் கிடைக்கும். மற்றும் பல ஸ்டால்களிலும் கிடைக்கும்.
கடந்த ஏழு வருடங்களாக கிழக்கு பதிப்பகத்தின் ஆசிரியர் குழுவில் இருந்தபடி புத்தகக் கண்காட்சிக்கான வேலைகளில் ஈடுபட்டிருந்தேன். இந்த வருடம் எந்த நிறுவனமும் சாராத, சுதந்தர எழுத்தாளனாக புத்தகக் கண்காட்சியைச் சந்திக்கப் போகிறேன்.
ஜனவரி 19 முதல் 23 வரை சென்னை புத்தகக் கண்காட்சியில் இருப்பேன்.
அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

தொண்ணூறு டிகிரி – பகுதி 3

தொண்ணூறு டிகிரி (பகுதி 1)

தொண்ணூறு டிகிரி (பகுதி 2)

அன்று கிறிஸ்துமஸ். அந்தக் குழுவினரது முகத்தில் உற்சாகமே இல்லை. 10570 அடி உயரத்தில் அந்தப் பனிமலையில் சுருண்டு கிடந்தார்கள். பனிக்காற்று முகத்தைக் குத்திக் கிழிக்குமாறு மூர்க்கமுடன் வீசிக் கொண்டிருந்தது. அந்தக் குழுவின் தலைவரான இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் பால்கன் ஸ்காட், மெள்ள எழுந்தார். உற்சாகமாக இருக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. அப்போதுதான் குழுவினரை வழிநடத்த முடியும். வாழ்நாள் லட்சியமான ‘தொண்ணூறு டிகிரி’யில் கால் பதிக்க முடியும்.

இங்கிலாந்தின் ராபர்ட் பால்கன் ஸ்காட்டுக்கும், நார்வேயைச் சேர்ந்த ரோல்ட் அமுண்ட்செனுக்கும் அண்டார்டிகாவில் பயணம் செய்து, உலகின் தென் துருவமான தொண்ணூறு டிகிரியில் முதன்முதலில் காலடியைப் பதித்துவிட வேண்டும் என்பதுதான் வாழ்வின் லட்சியம், ஆசை, குறிக்கோள் எல்லாமே.

அமுண்ட்சென், ஸ்காட்

கி.பி. 1911ல் ஸ்காட், தனது குழுவினருடன் அண்டார்டிகாவில் தென் துருவத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்திருந்தார். அதே சமயத்தில் ரோல்ட் அமுண்ட்செனும் தன் குழுவினருடன் அண்டார்டிகாவின் இன்னொரு முனையிலிருந்து தென் துருவத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். அடுத்த ஒரு வார காலத்தில் ஸ்காட் குழுவினர் தினமும் சுமார் பதினைந்து மைல்கள் வரை பயணம் செய்தனர். அந்தப் பனிப்பிரதேசத்தில் அவ்வளவு தூரம் பயணம் செய்வதே பெரும் சாதனைதான்.

ஜனவரி 3, 1912. கைவசமிருந்த உணவுப் பொருள்கள் பெருமளவு கரைந்து போயிருந்தது. தென் துருவத்தைத் தொட்டுவிட்டு, மீண்டும் திரும்பிவர வேண்டும். கைவசமிருக்கும் உணவு இத்தனைபேருக்கு நிச்சயம் போதுமானதாக இருக்காது. என்ன செய்யலாம் என்று வெகு தீவிரமாக யோசித்த ஸ்காட், தன் குழுவில் இருந்து மூன்று பேரைக் கழட்டிவிட முடிவு செய்தார். ‘டெடி இவான்ஸ், க்ரீன், லாஷ்லி – என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் மூவரும் திரும்பிச் சென்றுவிடுங்கள்.

ஸ்காட்டும் மேலும் நான்கு பேரும் (ஓட்ஸ், வில்சன், டாஃப் இவான்ஸ், பௌவர்ஸ்) தென் துருவத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஜனவரி 9, ஊளையிட்டுக் கொண்டே வீசிய பனிப்புயல் ஸ்காட் குழுவினரை கூடாரத்துக்குள்ளேயே முடக்கி விட்டது. ஜனவரி 10, அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். இன்னும் சில மைல்கள்தான். சில  நாள்கள் பயணம்தான். தென் துருவம் கிட்டி விடும். கனவுகள் கண் முன் விரிய ஒரு வாரத்துக்கான உணவுப் பொருள்களை சேமித்து வைக்கும்படியான கூடாரம் ஒன்றை அந்த இடத்தில் அமைத்தனர். சுமக்க வேண்டாம். திரும்பி அதேபாதையில் வரும்போது உபயோகப்படுமல்லவா.

அடுத்தடுத்த நாள்களில் பத்து மைல்கள் கடப்பதென்பதே பெரும்பாடாகிப் போனது. இன்னும் நான்கு நாள்கள் இதேபோல் கடும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை. ஜனவரி 13ல் ஸ்காட் குழுவினர் 89டிகிரி தென் அட்ச ரேகைப் பகுதியைக் கடந்தனர். அடுத்த நாள் அவர்கள் தங்களது இறுதி சேமிப்புக் கூடாரத்தை அமைத்தனர். அதில் நான்கு நாள்களுக்கான உணவுப் பொருள்கள் வைக்கப்பட்டன. அன்று இரவு ஸ்காட், ‘இப்போதே என் லட்சியத்தை அடைந்துவிட வேண்டும்’ என எழுதினார். அவர் தன் டைரியில் எழுதிய சந்தோஷமான இறுதிவரி அதுதான்.

ஜனவரி 16, வழக்கத்தைவிட அதிக தூரம் பயணம் செய்ய முடிந்தது. நாளை கண்டிப்பாக தென் துருவத்தை தொட்டு விடலாம் என ஒவ்வொருவரின் மனதிலும் உற்சாகம் பீறிட்டது.

தொண்ணூறு டிகிரி

ஜனவரி 17, தங்கள் கனவு நிறைவேறப் போகிறதென்ற சந்தோஷத்தில் பயணத்தைத் தொடங்கினர். மதிய நேரம். பௌவர்ஸின் முகம் சுருங்கியது. காரணம், அந்தப் பகுதியில் ஏற்கெனவே பனிச்சறுக்கு வாகனமான ஸ்லெட்ஜ் கடந்து போன தடங்கள், நாய்களின் பாதச் சுவடுகள் தென்பட்டன. தூரத்தில் ஏதோ அடையாளக் கல் வைத்திருப்பது போல் தெரிந்தது. அவ்வளவுதான்.

ஒவ்வொருவரின் மனத்திலும் வெடிப்பதற்குக் காத்திருந்த உற்சாகம் அப்படியே அமுங்கிப் போனது. பதைபதைப்புடன் தங்களின் லட்சியமான தொண்ணூறு டிகிரியை நோக்கி தள்ளாடித் தள்ளாடிச் சென்றார்கள்.

தூரத்தில் ஒரு கொடி காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. அது நார்வேயினுடையது.

***

மேலே நாம் பார்த்தது சென்ற நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட தென் துருவ சாகசப் பயணத்தின் ஒரு சிறு பகுதி. இதுவரை உலகில் மேற்கொள்ளப்பட்ட அதிமோசமான, மிக பயங்கரமான பயணம் இதுவே. தென் துருவத்தை அடைய ஸ்காட்டாலும் அமுண்ட்செனாலும் மேற்கொள்ளப்பட்ட அந்தப் பயணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் எவருக்கும் உடல் நடுங்கி, உயிர் உறைவது உறுதி. உலகில் மக்களின் மனத்தை அதிகமாகப் பாதித்த பயணமும் அதுவே. இந்த ஆண்டு (2010- 2011) அந்த பயணங்களுக்கான நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருக்கிறது. ஸ்காட், அமுண்ட்சென் அமைத்துக் கொடுத்த பாதையால், அண்டார்டிகாவில் தற்போது பல்வேறு நாடுகளும் தங்களது ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளன. இந்தியாவும் மைத்ரி என்ற ஆராய்ச்சி மையத்தை அமைத்து சுமார் இருபது ஆண்டுகளாக அங்கே தீவிரமாக இயங்கிக் கொண்டு வருகிறது.

இதோ இந்த நாள்களில் உலகின் தென் துருவத்தில் பல்வேறு நாட்டு ஆய்வாளர்களும் சென்று ஸ்காட்டுக்கும் அமுண்ட்செனுக்கும் மரியாதை செய்து வருகிறார்கள். எனது அண்டார்டிகா புத்தகத்தைக்கூட நான் ஸ்காட், அமுண்ட்சென் மற்றும் தென் துருவத்தைக் கடக்க முயற்சி செய்த இன்னொரு பயணியான ஷாகெல்டன் ஆகிய மூன்று பனிப்போராளிகளுக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.

நடந்துமுடிந்த புத்தகக் கண்காட்சியில் அண்டார்டிகா புத்தகம் விற்பனையில் இல்லை. புத்தகத்தை விரும்புபவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.

தொண்ணூறு டிகிரி (பகுதி 2)

(தொண்ணூறு டிகிரி பகுதி 1 படிக்க.)

‘திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் போற ரோட்டுல அந்த சென்டர் இருக்குது’ என்றான் பாலாஜி.

‘அதோட பேரு என்ன தெரியுமா?’ – நான் கேட்டேன்.

‘ஏதோ ஜியோமேக்னடிக் சென்டர்னு வரும்.’

‘நீ சொல்றபடி உண்மையிலேயே அங்க அப்படிப்பட்ட ஆள்கள் இருக்காங்களா?’

‘எம்எஸ்சி பிஸிக்ஸ் நான் படிக்கிறப்போ என்னோட பிரெண்ட்ஸ் அங்க ப்ராஜெக்ட் பண்ணிருக்காங்க. அவங்க சொல்லிருக்காங்க.’

பாலாஜி என் நண்பனின் சகோதரன், எனக்கும்தான். திருநெல்வேலியில் இருக்கும் ஒரு மையத்தில் உள்ள ஆய்வாளர்கள், அடிக்கடி அண்டார்டிகாவுக்குச் சென்று வந்திருக்கிறார்கள். அவர்களிடம் பேசினால், அண்டார்டிகா குறித்த பல தகவல்கள், அனுபவங்கள் கிடைக்கும் என்று பாலாஜி தகவல் கொடுத்தான்.

கூகுள், அந்த திருநெல்வேலி மையத்தின் தொடர்பு எண்ணை எனக்குக் கொடுத்தது. பேசினேன். விஷயத்தைச் சொன்னேன். நேரில் வாருங்கள், பேசலாம் என்றார்கள். பாராவிடம் சொல்லிவிட்டு சென்னையிலிருந்து கிளம்பினேன்.

அது Indian Institute of Geomagnetism – திருநெல்வேலி கிருஷ்ணாபுரத்தில் இயங்கிவரும் பூமத்திய புவி இயற்பியல் ஆராய்ச்சி மையம். ஊரைவிட்டு வெளியே பாளையங்கோட்டையிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் கிருஷ்ணாபுரம் என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ள மையம் அது. பேருந்து நிறுத்தப்படும் இடத்திலிருந்து சில கி.மீ. நடந்துதான் செல்ல வேண்டும். மினி நெய்வேலி டவுன்ஷிப் போல, அலுவலர் குடியிருப்புடன் அந்த மையம் அமைந்திருந்தது.

அதன் தலைவர் குருபரன் அவர்களைச் சந்தித்தேன். ‘எந்த மாதிரியான விவரங்கள் வேண்டும் என்று கேளுங்கள். இங்கே உள்ள தொழில்நுட்ப அலுவலர்கள் பலரும் அண்டார்டிகாவுக்கு சென்று வருபவர்கள்தாம். அநேக பேர் ஷார்ட் டிரிப்  சென்று வருபவர்கள். ஜீவா என்று ஒருவர் இருக்கிறார். அண்டார்டிகாவுக்கு சிலமுறை லாங் டிரிப் சென்றிருக்கிறார் அவர். நீங்கள் அவரிடம் பேசினால் சரியாக இருக்கும்’ என்று எனக்கு வழிகாட்டினார் குருபரன்.

ஜீவா, மென்மையான மனிதர். பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ளக்கூடிய குணம் கொண்டவர். அண்டார்டிகா குறித்து ஒரு புத்தகம் எழுதப்பட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கும் இருந்தது. எனக்கு உதவுவதற்கு ஒப்புக்கொண்டார். ஓரிரு சந்திப்புகளிலேயே நண்பரும் ஆனார்.

சொந்த ஊரான தூத்துக்குடியில் தங்கிக் கொண்டேன். தினமும் கிருஷ்ணாபுரத்துக்குச் சென்றுவர ஆரம்பித்தேன். பேச வேண்டிய விஷயத்தை, கேள்விகளை முன்னதாகவே தயார் செய்துகொள்வேன். ஜீவா, தன் பணிகளுக்கிடையில் கிடைக்கும் நேரங்களில் என்னுடன் பேசினார். மற்ற நேரங்களில் மையத்தில் உள்ள அண்டார்டிகா அனுபவம் கொண்ட பிற நபர்களிடம் பேசி தகவல்களைச் சேகரித்தேன்.

நண்பர் ஜீவா என்னிடம் பகிர்ந்துகொண்ட தகவல்கள் அண்டார்டிகாவுக்குச் சென்று வந்ததைப் போன்ற உணர்வைத் தந்தன. அண்டார்டிகாவின் வானிலை, காலநிலை எப்படிப்பட்டது, எந்த மாதிரியான ஆராய்ச்சிகளை இந்தியர்கள் அங்கே மேற்கொள்கிறார்கள், அங்குள்ள மைத்ரி இந்திய ஆராய்ச்சி மையத்தில் தின வாழ்க்கையின் நிகழ்வுகள் என்னென்ன, குளிர்காலம் எப்படிப்பட்டது, அங்கே விளைபவை என்று எதுவும் கிடையாதே, மாதக்கணக்கில் தங்கியிருப்பவர்கள் உணவுக்கு என்ன செய்கிறார்கள், காலையில் எழுந்ததும் சுடச்சுட டிகிரி காபி சாத்தியம்தானா என்பது முதற்கொண்டு யாரெல்லாம் அண்டார்டிகாவுக்குச் சென்று தங்க முடியும் என்பது வரையிலான பல்வேறு விஷயங்களைக் கேட்டு அறிந்துகொண்டேன். சென்னைக்குத் திரும்பினேன்.

அண்டார்டிகாவின் இந்திய ஆராய்ச்சி நிலையம் ‘மைத்ரி'

தொண்ணூறு டிகிரி தென் துருவத்தை முதன் முதலில் தொட வேண்டும் என்ற வெறியில், பயணம் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் ஸ்காட், நார்வேயைச் சேர்ந்த ரோல்ட் அமுன்ட்சென், இன்னொரு முக்கிய பனிப்போராளியான அயர்லாந்தைச் சேர்ந்த ஷாகெல்டன் ஆகியோரது பயணங்கள் குறித்த புத்தகங்களைப் படித்தேன். அவை குறித்து கிடைக்கும் ஆவணப் படங்களைப் பார்த்தேன். அண்டார்டிகாவின் புவியியல், அறிவியல் விஷயங்கள், அதன் வரலாறு, தென் துருவத்தை அடைவதற்காக நடந்த பந்தயங்கள் என பிரித்துக் கொண்டு புத்தகத்தை எழுத ஆரம்பித்தேன். தயாரிப்புகளுக்கு இரண்டு மாதங்கள் பிடித்தன. எழுதுவதற்கு இரண்டு மாதங்கள். இடைப்பட்ட காலத்தில் மீண்டும் நண்பர் ஜீவாவைச் சென்று சந்தித்து, சில விஷயங்கள் குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொண்டேன்.

ஒரு மாலை. புத்தகம் எழுதி முடித்து ஸ்கிரிப்டை பாராவுக்கு அனுப்பினேன். மாலை வீட்டுக்குக் கிளம்புவதாக இருந்தவர், ஸ்கிரிப்ட் வந்ததும் அன்று இரவு கிழக்கிலேயே தங்குவதாக முடிவு செய்தார், எடிட் செய்வதற்காக. முத்துக்குமார், ச.ந. கண்ணன், முத்துராமன், மருதன் உடன் நானும் அன்று இரவு அலுவலகத்திலேயே தங்கினேன்.

பாரா, மாலை ஆறு மணிபோல ஸ்கிரிப்டை வாசிக்க ஆரம்பித்தார். இரவு ஏழரை மணி இருக்கும். இரவு சாப்பாட்டுக்கு என்ன டிபன் வேண்டும் என்று கேட்பதற்காக அவரது அறைக்குள் நுழைந்தேன். மடிக் கணிணிக்குள் மூழ்கியிருந்தார். முகம் சாதாரணமாக இல்லை. இரண்டு முறை அழைத்தேன். பதிலில்லை. அருகில் சென்று தோளைத் தொட்டு அழைத்தேன். சட்டென நிமிர்ந்தார். முகத்தில் ஒருவிதமான மிரட்சி. முன் நிற்பது நான்தான் என்று அவர் உணர்வதற்குக்கூட சில நொடிகள் பிடித்தன.

‘சார் டிபன் வாங்கணுமா?’

‘அப்புறம் சொல்றேன்…’

அறையிலிருந்து வெளியில் வந்துவிட்டேன். வருவதற்கு முன் அவர் லேப்டாப்பின் திரையில் பார்த்தேன். ஸ்காட்டும் அமுண்ட்சென்னும் தென் துருவத்தைத் தொட போராடிக் கொண்டிருந்தார்கள். அடுத்த ஒருமணி நேரத்தில் புத்தகத்தை எடிட் செய்துமுடித்துவிட்டு பாரா அறையிலிருந்து வெளியே வந்தார்.

‘ஸ்காட், அமுண்ட்சென் – ரெண்டு பேருமே என்னை மிரட்டிட்டாங்க. உன்னோட பெஸ்ட் புக் இது. இனி நீ என்ன எழுதுனாலும் இதுக்கு நிகரா வராது.’

(பாரா பரிந்துரைக்கும் Top 100 புத்தகங்களில் எனது அண்டார்டிகாவுக்கும், கண்ணீரும் புன்னகைக்கும் எப்போதும் இடம் உண்டு என்பதில் மகிழ்ச்சி )

அண்டார்டிகா புத்தகம், கடும்குளிரை வெளிப்படுத்தும் வார்த்தையான  ‘ஸ்…’ என்ற தலைப்பில் வெளிவந்தது. 2007 சென்னை புத்தகக் கண்காட்சியில் ஓரளவு விற்பனையானது.

அதற்குப் பின்?

நான் எழுதி வெளியான புத்தகங்களிலேயே மிகக் குறைவான எண்ணிக்கையில் விற்பனையான புத்தகம் அண்டார்டிகாதான். கிழக்கின் சேல்ஸ் டிபார்ட்மெண்டில் கேட்டால் ‘Failure’ புத்தக வரிசையில் சொல்வார்கள். யூதர்கள், செங்கிஸ்கான போன்ற ஹிட் புத்தகங்கள் எழுதியிருந்தாலும், அகம் புறம் அந்தப்புரம், முகலாயர்கள் போன்ற மெகா சைஸ் புத்தகங்கள் எழுதியிருந்தாலும், என் மனத்துக்கு அதிக சந்தோஷம் கொடுக்கும் புத்தகம் ‘அண்டார்டிகா’தான். எழுதும்போதே என் மனத்தை அதிகம் பாதித்த புத்தகமும் இதுதான். இன்று வரையில், என் எழுத்தை புதிதாக வாசிக்கப் போகிறவர்களுக்கு நான் முதலில் பரிந்துரைக்கும் புத்தகம் அண்டார்டிகாதான். இந்தப் புத்தகத்தின் மூலம் எனக்கு அறிமுகமான நண்பர்களும் அநேகம்.

கடந்த மூன்று ஆண்டுகளாகவே ‘ஸ்…’, சென்னை புத்தகக் கண்காட்சியில் கிழக்கின் இலக்கியப் புத்தக ஸ்டாலில் இடம்பெற்றிருந்தது. (ஏன் என்று புரியவிலலை. ஒருவேளை இலக்கியம் படைத்துவிட்டேனோ?) இந்தமுறையும் விற்பனைக்குக் கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் ‘ஸ்..’ என்ற பழைய தலைப்பில் கிடைக்குமா, அல்லது ‘அண்டார்டிகா’ என்று தலைப்பும் அட்டையும் மாற்றப்பட்ட புதிய பதிப்பாகக் கிடைக்குமா என்று என்னால் உறுதியாகக் கூறமுடியவில்லை. விருப்பப்பட்டால் வாங்கிப் படித்துவிட்டு உங்கள் விமரிசனங்களை முன் வையுங்கள்.

நண்பர் ஜீவாவும் எனது அண்டார்டிகா புத்தகத்தை மிகவும் ரசித்தார். தற்போதுகூட அண்டார்டிகாவில் ஆராய்ச்சி நிமித்தமாக தங்கியிருக்கும் (இந்த முறை குழுவுக்குத் தலைமையேற்று சென்றிருக்கும்) நண்பர் ஜீவாவுக்கு அவர் செய்த உதவிகளுக்காக என் நன்றிகளை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தொண்ணூறு டிகிரி மூன்றாம் பாகத்தில் பனிப்போராளிகளான ஸ்காட், அமுன்ட்சென், ஷாகெல்டன் ஆகியோரோடு சந்திக்கிறேன்.

தொண்ணூறு டிகிரி! (பகுதி 1)

அண்டார்டிகா – 2006ல் நான் எழுதிய புத்தகம். ‘அண்டார்டிகா குறித்த ஒரு புத்தகம் எழுதப்பட வேண்டும். நீ எழுது’ என்று யோசனை கொடுத்தது பாராதான்.

கொஞ்சம்கூட யோசிக்கவில்லை. எழுத ஒப்புக்கொண்டேன். அண்டார்டிகா குறித்து பெரிதாக எனக்கு எதுவும் தெரியாது. அண்டார்டிகாவுக்கான ஆங்கில ஸ்பெல்லிங்கில்கூட சந்தேகம் இருந்தது.

அந்தச் சவாலான சூழ்நிலைதான் அண்டார்டிகா குறித்து எழுதுவதற்கான உந்துசக்தியாக என்னை வழிநடத்தியது. இங்கே தமிழ்நாட்டில் வாழும் நாம் எந்தச் சூழ்நிலையிலும் அண்டார்டிகா குறித்து கொஞ்சம்கூட யோசித்துப் பார்த்திருக்க மாட்டோம். அது ஒன்றும் அமெரிக்கா இல்லையே. அந்தக் கண்டம் குறித்த கவலைகள் நமக்கு அநாவசியமே. எனில், தமிழ் வாசகர்களுக்கு அண்டார்டிகா என்ற ஒரு கண்டத்தை புதிதாக, எளிதாக அறிமுகப்படுத்த வேண்டும். அதன் வரலாறு, புவியியல், அறிவியல் விஷயங்களை நான் அறிந்து கொள்ள வேண்டும். அதை புத்தகத்தில் சுவாரசியம் குறையாமல் கொண்டுவர வேண்டும். முடிவு செய்து கொண்டேன். உடனே அண்டார்டிகா குறித்த தகவல்களை, புத்தகங்களைத் தேடி ஓடவில்லை.

அண்டார்டிகா குறித்து நான் அறிந்த ஒரு சில பொதுவான செய்திகளைக் கொண்டு, அந்தப் புத்தகத்துக்கான அறிமுக அத்தியாயத்தை எழுதினேன். அதுதான் இது.

***

படிக்க ஆரம்பிக்கும் முன் முதலில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது அவசியம்.

குறைந்த பட்சம் இரண்டு ஸ்வெட்டர்கள் அணிந்து கொள்ளுங்கள். அப்புறம் கை கால்களை முற்றிலும் மூடும் படி உறை அணிந்து கொள்ளுங்கள். மப்ளர், தலையில் குல்லா மிகவும் அவசியம். ஹலோ ஹலோ ஒரு நிமிஷம். குல்லா அணியும் முன் காதினில் பஞ்சு வைத்துக் கொள்ளுங்கள். ஆச்சா? முடிந்தால் ஒரு கம்பளிப் போர்வையால் போர்த்திக் கொள்ளுங்கள். உங்கள் கண்கள் மட்டும் வெளியே தெரிந்தால் போதுமானது. ஓ.கே. இப்பொழுது நீங்கள் ரெடி. ஆரம்பிக்கலாம்.

ஒரு வளவளப்பான கூடைப் பந்தில் ஒருபுறம் ஒரு கப் வெண்ணிலா ஐஸ்கீரிமை கொட்டினால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பாருங்கள். அப்படித்தான் பூமிப் பந்தின் தென் துருவத்தில் அண்டார்டிகா ‘என் கடன் பனியால் உறைந்து கிடப்பதே’ என ஜில்லிட்டுக் கிடக்கிறது.

அண்டார்டிகா என்ற சொன்னால், புது வெள்ளை மழை நம் கற்பனைக் கண் முன்னால் பொழியும். தத்தக்கா பித்தக்கா என நடக்கும் பென்குயின்கள் நினைவுக்கு வரும். பக்கத்து வீட்டு குண்டு மாமா போல மீசை வைத்த ஸீல்கள் ஞாபகத்துக்கு வரும். வேறென்ன? ‘வேறென்ன இருக்கிறது, அவ்வளவுதான்’ என்பது பெரும்பான்மையானோரின் பதிலாக இருக்கும். ஆனால் உண்மையில் இன்னும் சொல்லப்படாதவை, கண்டுபிடிக்கப்படாதவை நிறைய நிறைய இருக்கின்றன.

பூமியின் மற்ற பகுதிகளில் காண முடியாதவற்றை, உணர முடியாதவற்றை பூமியின் இறுதிப் பகுதியான அண்டார்டிகாவில் காணலாம்.

கொஞ்சம் நிதானமாக சிந்தித்து கேள்வி கேட்க ஆரம்பித்தாலே போதும். அண்டார்டிகா பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் நமக்குள் எரியத் தொடங்கி விடும்.

முதலில் ஒரு கேள்வி. அண்டார்டிகாவும் பூமியில் ஒரு கண்டம்? அது யாருக்குச் சொந்தம்? இன்னும் சில கேள்விகள்.

அது தனி நாடா? எந்த நாடு அண்டார்டிகாவை ஆட்சி புரியும் அதிகாரத்தை வைத்துள்ளது?

இல்லை, மக்களே இல்லாத பிரதேசமா? அங்கு மக்கள் அபார்ட்மெண்ட்ஸ் கட்டி வாழ முடியுமா? குறைந்த பட்சம் குடிசையாவது போட முடியுமா? இப்போது அங்கு மனிதர்கள் நிரந்தரமாக வசித்துக் கொண்டிருக்கிறார்களா?

வாழ முடியுமென்றால், அங்கு உணவு கிடைக்குமா? விவசாயம் செய்ய முடியுமா? என்னென்ன இயற்கை வளங்கள் உண்டு? நல்ல நீர் ஆதாரம் உண்டா? இல்லை, ஐஸ்கட்டிதான் எல்லாமுமா?

அங்கு டீவி, வானொலி, தொலைபேசி வசதிகளுக்கு சாத்தியமுண்டா? விமான சேவை வசதியுண்டா? நிரந்தர கப்பல் போக்குவரத்து வசதிகள், நிரந்தர துறைமுகங்கள் உண்டா?

இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ கேள்விகள் பனிப்புயலாய் வீசத் தொடங்கி விட்டதல்லவா. எதையும் விட்டு வைக்க வேண்டாம். ஒவ்வொன்றாகப் பார்த்து விடலாம்.

***

அண்டார்டிகா புத்தகம் எழுதிய அனுபவத்தை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.