சொதப்பல் ஸ்டாரின் அடுத்த மூவ்! – மிஸ்டர். காக்கையார்

ங்கிருந்தோ லவட்டிய ஊசிப்போன வடையுடன் ஸ்டைலாக வந்து உட்கார்ந்தார் காக்கையார்.

‘என்ன அமெரிக்கா ரிட்டர்ன் மாதிரி ஸ்டைலா வர்றீர்?’ என்றோம்.

‘எவன் அமெரிக்கா போய்ட்டு ரிட்டர்ன் வந்தாலும் ஒரு கெத்து இருக்கும். ஆனா சூப்பர் ஸ்டார் போயிட்டு வந்தா மட்டும் மேட்டர் ‘சொத்’துனு ஆயிருது’ – காக்கையார் கச்சேரியை ஆரம்பித்தார். நாமும் கேள்விகளை அவிழ்த்துவிட்டு ஸ்ருதி ஏற்றினோம்.

‘முடிவா சூப்பர் ஸ்டார் என்னதான் சொல்ல வர்றாராம்?’

‘நான் முடிவெடுத்துதான் ஆகணும்னு யாரும் முடிவா என்னை முடிவெடுக்கச் சொல்ல முடியாது. அப்படி நான் முடிவெடுக்கணும்னு நினைச்சா முடிவுல என்ன முடிவெடுத்துருக்கிறேன்னு என்னாலேயே சொல்ல முடியாது.’

‘என்னய்யா அது, ஏற்கெனவே பன்ச்சர் ஆகிக்கிடக்குற இமேஜை பன்ச் டயலாக் விட்டு மேலும் பாழ்படுத்துறார்.’

‘படுத்தத்தான் செய்யுறார். அதுதாங்காம, கோவையில அவர்கிட்ட கேட்காமலேயே கட்சி, கொடின்னு ஆரம்பிச்ச ரசிகர் மன்றத்தினர், அடுத்த எலெக்ஷன்ல வடிவேலுவுக்கு ஆதரவா களமிறங்கப் போறாங்களாம்’ என்று புது ஸ்கூப் நியூசைக் கிளப்பிவிட, நிமிர்ந்து உட்கார்ந்தோம். ‘நாயர் கடையில சாயா சொல்லியாச்சா?’ என்றபடியே வடையைக் கபளீகரம் செய்ய ஆரம்பித்தார் காக்கையார்.

‘ஆமா ரஜினி, தன் பொண்ணு சௌந்தர்யாவுக்கு ஏதோ ரகசிய ப்ராஜெக்ட் அசைன் பண்ணியிருக்காராமே?’ – காக்கையாரிடம் கொக்கி போட்டுப் பார்த்தோம்.

‘அதற்குள் விஷயம் வெளியில் கசிந்துவிட்டதா’ என்று செல்லமாகச் சலித்துக் கொண்டவர், தொடர்ந்தார். ‘குசேலனில் குளத்தில் டால்பின் விட்ட சௌந்தர்யாவின் க்ரியேடிவிட்டி குறித்து ரஜினிக்கு எப்போதுமே பெருமிதம் உண்டாம். சக்கரகட்டி படத்தில் ‘சின்னம்மா’ பாடலில் மம்மியை எல்லாம் மானாவாரியாக அலையவிட்டு, தனது அழகியலை நிரூபித்த மகளை உச்சி முகர்ந்து பாராட்டினாராம் சூப்பர் ஸ்டார். கூடவே, ‘சுல்தான் தி வாரியர்’ பொம்மைப் படத்தின் கதையைக் கொஞ்சம் மாற்றி அதில் அரசியல் போர்ஷனை அதிகமாக்கச் சொல்லியிருக்கிறாராம். ஷங்கரிடம் ஸ்பெஷல் பெர்மிஷன் வாங்கி ‘முதல்வன்’ பட அரசியல் காட்சிகள் சிலவற்றை அதில் அப்படியே இடம்பெறச் செய்யப் போகிறாராம். கொதித்துப் போயிருக்கும் ரசிகர்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்தவே இந்த முயற்சி’ – காக்கையார் சொல்லிக் கொண்டிருக்கும்போதே சூடான சாயா வந்து சேர்ந்தது.

‘ஆமா, சேனல்காரங்க, பத்திரிகைக்காரங்க எல்லாம் நாளைக்கு ஏதோ அவசரமா மீட்டிங் போடப்போறாங்களே, என்ன விஷயம்?’ – காக்கையாரைத் தூண்டினோம்.

‘எல்லாம் சூப்பர் ஸ்டார் விஷயமாத்தான். இனிமே ரஜினி மேட்டரை யாரும் கவர்-ஸ்டோரியா போட்டு பத்திரிகை சர்குலேஷனைக் குறைச்சுக்க வேண்டாம்னு முடிவெடுக்கப்போறாங்களாம். எந்தச் சேனல்ல ரஜினி படம் போட்டாலும், ‘நான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது’ மாதிரி, சூப்பர் ஸ்டாருக்குச் சொந்தமில்லாத, அடுத்தவங்க எழுதிக் கொடுத்த பன்ச் டயலாக்கை எல்லாம் ‘கட்’ பண்ணிட்டுத்தான் ஒளி பரப்பப்போறாங்களாம்.’

‘ஆமா, ரஜினி அடுத்து அமெரிக்காவுக்குப் போறதுக்கு முன்னாடி ஹைதராபாத் விசிட் செய்யப்போறாராமே. உண்மையா?’ – அடுத்த கேள்வியைத் தவழ விட்டோம்.

சாயாவை பாயாபோல் உறிஞ்சிமுடித்த காக்கையார், கண்கள் மின்ன தொடர்ந்தார். ‘ஹைதராபாத் விசிட்டுக்கு ரஜினி ப்ளான் பண்ணுனது உண்மைதான். ‘ஏன் சிரு, இப்படி கட்சியெல்லாம் ஆரம்பிச்சு என்னைச் சிக்கல்ல மாட்டிவிட்டுட்டீங்க’ன்னு சிரஞ்சீவியைப் பார்த்து, உரிமையோட கண்டிக்கிறதுக்காகவாம். ஆனா விஷயத்தைக் கேள்விப்பட்ட சிரஞ்சீவி, எங்க ரஜினி, ஹைதராபாத் வந்து நேர்ல சந்திச்சா, தன்னோட இமேஜ் சரி ஞ்சிடுமோன்னு பயந்து, எங்கியோ குக்கிராமத்துல தலைமறைவா இருக்கிறாராம்.’

சொல்லிமுடித்த காக்கையார் அடுத்த நிமிடமே பறபற!