தொண்ணூறு டிகிரி! (பகுதி 1)

அண்டார்டிகா – 2006ல் நான் எழுதிய புத்தகம். ‘அண்டார்டிகா குறித்த ஒரு புத்தகம் எழுதப்பட வேண்டும். நீ எழுது’ என்று யோசனை கொடுத்தது பாராதான்.

கொஞ்சம்கூட யோசிக்கவில்லை. எழுத ஒப்புக்கொண்டேன். அண்டார்டிகா குறித்து பெரிதாக எனக்கு எதுவும் தெரியாது. அண்டார்டிகாவுக்கான ஆங்கில ஸ்பெல்லிங்கில்கூட சந்தேகம் இருந்தது.

அந்தச் சவாலான சூழ்நிலைதான் அண்டார்டிகா குறித்து எழுதுவதற்கான உந்துசக்தியாக என்னை வழிநடத்தியது. இங்கே தமிழ்நாட்டில் வாழும் நாம் எந்தச் சூழ்நிலையிலும் அண்டார்டிகா குறித்து கொஞ்சம்கூட யோசித்துப் பார்த்திருக்க மாட்டோம். அது ஒன்றும் அமெரிக்கா இல்லையே. அந்தக் கண்டம் குறித்த கவலைகள் நமக்கு அநாவசியமே. எனில், தமிழ் வாசகர்களுக்கு அண்டார்டிகா என்ற ஒரு கண்டத்தை புதிதாக, எளிதாக அறிமுகப்படுத்த வேண்டும். அதன் வரலாறு, புவியியல், அறிவியல் விஷயங்களை நான் அறிந்து கொள்ள வேண்டும். அதை புத்தகத்தில் சுவாரசியம் குறையாமல் கொண்டுவர வேண்டும். முடிவு செய்து கொண்டேன். உடனே அண்டார்டிகா குறித்த தகவல்களை, புத்தகங்களைத் தேடி ஓடவில்லை.

அண்டார்டிகா குறித்து நான் அறிந்த ஒரு சில பொதுவான செய்திகளைக் கொண்டு, அந்தப் புத்தகத்துக்கான அறிமுக அத்தியாயத்தை எழுதினேன். அதுதான் இது.

***

படிக்க ஆரம்பிக்கும் முன் முதலில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுங்கள். இது அவசியம்.

குறைந்த பட்சம் இரண்டு ஸ்வெட்டர்கள் அணிந்து கொள்ளுங்கள். அப்புறம் கை கால்களை முற்றிலும் மூடும் படி உறை அணிந்து கொள்ளுங்கள். மப்ளர், தலையில் குல்லா மிகவும் அவசியம். ஹலோ ஹலோ ஒரு நிமிஷம். குல்லா அணியும் முன் காதினில் பஞ்சு வைத்துக் கொள்ளுங்கள். ஆச்சா? முடிந்தால் ஒரு கம்பளிப் போர்வையால் போர்த்திக் கொள்ளுங்கள். உங்கள் கண்கள் மட்டும் வெளியே தெரிந்தால் போதுமானது. ஓ.கே. இப்பொழுது நீங்கள் ரெடி. ஆரம்பிக்கலாம்.

ஒரு வளவளப்பான கூடைப் பந்தில் ஒருபுறம் ஒரு கப் வெண்ணிலா ஐஸ்கீரிமை கொட்டினால் எப்படி இருக்கும். கற்பனை செய்து பாருங்கள். அப்படித்தான் பூமிப் பந்தின் தென் துருவத்தில் அண்டார்டிகா ‘என் கடன் பனியால் உறைந்து கிடப்பதே’ என ஜில்லிட்டுக் கிடக்கிறது.

அண்டார்டிகா என்ற சொன்னால், புது வெள்ளை மழை நம் கற்பனைக் கண் முன்னால் பொழியும். தத்தக்கா பித்தக்கா என நடக்கும் பென்குயின்கள் நினைவுக்கு வரும். பக்கத்து வீட்டு குண்டு மாமா போல மீசை வைத்த ஸீல்கள் ஞாபகத்துக்கு வரும். வேறென்ன? ‘வேறென்ன இருக்கிறது, அவ்வளவுதான்’ என்பது பெரும்பான்மையானோரின் பதிலாக இருக்கும். ஆனால் உண்மையில் இன்னும் சொல்லப்படாதவை, கண்டுபிடிக்கப்படாதவை நிறைய நிறைய இருக்கின்றன.

பூமியின் மற்ற பகுதிகளில் காண முடியாதவற்றை, உணர முடியாதவற்றை பூமியின் இறுதிப் பகுதியான அண்டார்டிகாவில் காணலாம்.

கொஞ்சம் நிதானமாக சிந்தித்து கேள்வி கேட்க ஆரம்பித்தாலே போதும். அண்டார்டிகா பற்றி மேலும் மேலும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் நமக்குள் எரியத் தொடங்கி விடும்.

முதலில் ஒரு கேள்வி. அண்டார்டிகாவும் பூமியில் ஒரு கண்டம்? அது யாருக்குச் சொந்தம்? இன்னும் சில கேள்விகள்.

அது தனி நாடா? எந்த நாடு அண்டார்டிகாவை ஆட்சி புரியும் அதிகாரத்தை வைத்துள்ளது?

இல்லை, மக்களே இல்லாத பிரதேசமா? அங்கு மக்கள் அபார்ட்மெண்ட்ஸ் கட்டி வாழ முடியுமா? குறைந்த பட்சம் குடிசையாவது போட முடியுமா? இப்போது அங்கு மனிதர்கள் நிரந்தரமாக வசித்துக் கொண்டிருக்கிறார்களா?

வாழ முடியுமென்றால், அங்கு உணவு கிடைக்குமா? விவசாயம் செய்ய முடியுமா? என்னென்ன இயற்கை வளங்கள் உண்டு? நல்ல நீர் ஆதாரம் உண்டா? இல்லை, ஐஸ்கட்டிதான் எல்லாமுமா?

அங்கு டீவி, வானொலி, தொலைபேசி வசதிகளுக்கு சாத்தியமுண்டா? விமான சேவை வசதியுண்டா? நிரந்தர கப்பல் போக்குவரத்து வசதிகள், நிரந்தர துறைமுகங்கள் உண்டா?

இப்படி இன்னும் எத்தனை எத்தனையோ கேள்விகள் பனிப்புயலாய் வீசத் தொடங்கி விட்டதல்லவா. எதையும் விட்டு வைக்க வேண்டாம். ஒவ்வொன்றாகப் பார்த்து விடலாம்.

***

அண்டார்டிகா புத்தகம் எழுதிய அனுபவத்தை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

குபிலாய் கான் கூரியர் சர்வீஸ்

மாலையில் புக் செய்தால் மறுநாள் காலையில் டெலிவரி. இன்றைக்கு இருக்கும் போக்குவரத்து வசதிகளில் கூரியர் சர்வீஸ் குறித்து அதிகம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆனால் பதிமூன்றாம் நூற்றாண்டில் மங்கோலியப் பேரரசர் குபிலாய் கானின் ராஜ்ஜியத்தில் அதி அற்புதமாக கூரியர் சர்வீஸ் நடந்துள்ளது. அது குறித்து மார்க்கோ போலோ எழுதி வைத்துள்ள குறிப்புகளில் இருந்து…

***

குபிலாய் கானின் ராஜ்ஜியம் முப்பத்தி நான்கு மாகாணங்களைக் கொண்டது. ஒவ்வொரு மாகாணத்திலும், ஒவ்வொரு நகரங்களையும் இணைக்கும் வகையில் அற்புதமான சாலைகள் இருந்தன. சுமார் முப்பது மைல்களுக்கு ஒரு சத்திரம் கட்டப்பட்டிருந்தது. பயணிகள், வியாபாரிகள் தங்கும்படியான அருமையான வசதிகள் கொண்ட பெரிய சத்திரங்கள் (மார்க்கோ போலோ அவற்றை ‘யாம்ப்’ என்றழைக்கிறார்). சிற்றரசர்கள் முதல் சில்லறை வியாபாரிகள் வரை தங்கும்படியான  தரத்தில், ரகத்தில் அறைகள் அங்கே இருந்தன.

குபிலாய் கான்

ஒரு சத்திரத்துக்கும் இன்னொரு சத்திரத்துக்கும் இடையில் ஒவ்வொரு மூன்று மைல் தொலைவிலும் ஓர் அஞ்சல் நிலையம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் வேகமாக ஓடக்கூடிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள். தவிர ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ஓர் எழுத்தர் உண்டு. ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செய்தியை வேகமாகக் கொண்டு செல்ல இந்த ஏற்பாடு. செய்தியில் அது எங்கிருந்து கொண்டு வரப்படுகிறது, எங்கே கொண்டு செல்லப்பட வேண்டும் போன்ற விவரங்கள் தெளிவாக இருக்கும். தூரத்தில் மணியோசை கேட்டாலே, ஓர் அஞ்சல் நிலையத்திலுள்ள ஓட்டக்காரர், தன் இடுப்பில் மணி பெல்டைக் கட்டிக் கொண்டு தயாராகி விடுவார். அவர் வந்த நொடி செய்தியை வாங்கிக் கொண்டு அடுத்தவர் ஓட ஆரம்பிப்பார், ரிலே ரேஸ் போல. ஓடி வரும் நபர் வரும் தேதியை, நேரத்தை எழுத்தர் குறித்துக் கொள்ள வேண்டும். இதனால் செய்தி தவறிப் போனால் எங்கே, யாரால் தவறிப் போனது என்பதை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம் அல்லவா.

மார்க்கோ போலோ

ஓட்டக்காரர் மூன்று மைல்கள்தான் ஓட வேண்டும் என்பதால் செய்தி வேகமாக அடுத்தடுத்த அஞ்சல் நிலையங்களுக்குச் சென்று சேர்ந்தது. பொதுவாக பத்து நாள்கள் பயண தொலைவுள்ள நகரங்களுக்குக் கூட, இரண்டே நாள்களில் செய்தி சென்று சேருமளவுக்கு தபால் சேவையில் செம வேகம். முதல் நாள் காலையில் ப்ரெஷ்ஷாகப் பறிக்கப்பட்ட பழங்கள்கூட, மறுநாள் மாலைக்குள் குபிலாய் கானைச் சென்றடைந்தன. அடுத்தது குதிரைகள் வழி நடந்த கூரியர் சேவை பற்றி பார்க்கலாம்.

ஒவ்வொரு சத்திரங்களிலும் சுமார் இருநூறு குதிரைகள் வரை பராமரிக்கப்பட்டன. குதிரையை வேகமாகச் செலுத்தும் வீரர்களும் ஒவ்வொன்றிலும் இருந்தார்கள். குபிலாய் கான் தன் மாகாணங்களுக்கு அனுப்பும் செய்திகள், குபிலாய் கானுக்கு அனுப்பப்படும் செய்திகள் எல்லாமே குதிரைகள் மூலம் கொண்டு செல்லப்பட்டன. ஓரிடத்தில் இருந்து கிளம்பும் குதிரை வீரர், முப்பது மைல் தொலைவிலுள்ள ஒரு சத்திரத்தை அடைவார். வந்த குதிரை களைத்திருக்கும் அல்லவா. ஆகவே அங்கே அடுத்த குதிரை தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும். அதில் ஏறி அடுத்த சத்திரத்துக்குச் செல்வார். வீரர் களைப்படையும் பட்சத்தில், சத்திரத்தில் மாற்றுவீரரும் ரெடியாகவே இருப்பார்.

குதிரை வீரரோ, ஓட்டக்காரரோ, பயண வழியில் ஆறுகள், ஏரிகளைக் கடக்க வேண்டியதிருந்தால் அதற்கென கரையில் எப்போது படகுகளும் தயார் நிலையிலேயே இருந்தன. இடையில் பாலைவனப் பயணம் மேற்கொள்ள வேண்டியதும் இருந்தது. அப்போதெல்லாம் பாலைவன எல்லையில் அவர்களுக்குத் தேவையான நீர், உணவு அளிக்க நிலையங்கள் இருந்தன. அவர்களோடு உதவிக்குச் செல்ல சிறு குழுவினரும் காத்திருந்தார்கள். ஒவ்வொரு குதிரை வீரருக்கும், ஓட்டக்காரருக்கும் வழியில் அடையாளத் தகடுகள் அளிக்கப்பட்டிருந்தன.

ஏதாவது ஒரு மாகாணத்தில் நிலவும் பதற்றம், கலவரம் உள்ளிட்ட அவசரச் செய்திகளைக் கொண்டு செல்ல வேண்டியதிருந்தால், இரண்டு குதிரைகளின் இரண்டு வீரர்கள் சேர்ந்து பயணம் செய்தார்கள். அதுவும் குதிரைகளின் உடலோடு தம் உடலைத் துணியால கட்டிக் கொண்டு அதிவேகமாக. ஒருவருக்கு ஆபத்து என்றாலும் அடுத்தவர் அடுத்த சத்திரம் வரை சென்று சேர்ந்துவிடலாம் என்பதால் இந்த ஏற்பாடு. இம்மாதிரியான அவசரமாகச் செல்லும் வீரர்கள் கையில் அதை உணர்த்தும்விதமாக வல்லூறு பொறிக்கப்பட்ட பட்டயம் இருந்தது. இந்த குதிரை வீரர்களுக்கும், தபால் ஓட்டக்காரர்களுக்கும் நல்ல சம்பளம் வழங்கப்பட்டது. அதே சமயத்தில் பணியில் தவறு நேர்ந்தால், கடுமையான தண்டனைகளும் வழங்கப்பட்டன.

***

தமிழக அரசியலில் நான் இப்போது எழுதி வரும் புத்தம் புது பூமி வேண்டும் தொடரில் மார்க்கோ போலோவின் பயணங்கள் குறித்த அத்தியாயங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.