தொண்ணூறு டிகிரி – பகுதி 3

தொண்ணூறு டிகிரி (பகுதி 1)

தொண்ணூறு டிகிரி (பகுதி 2)

அன்று கிறிஸ்துமஸ். அந்தக் குழுவினரது முகத்தில் உற்சாகமே இல்லை. 10570 அடி உயரத்தில் அந்தப் பனிமலையில் சுருண்டு கிடந்தார்கள். பனிக்காற்று முகத்தைக் குத்திக் கிழிக்குமாறு மூர்க்கமுடன் வீசிக் கொண்டிருந்தது. அந்தக் குழுவின் தலைவரான இங்கிலாந்தைச் சேர்ந்த ராபர்ட் பால்கன் ஸ்காட், மெள்ள எழுந்தார். உற்சாகமாக இருக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு. அப்போதுதான் குழுவினரை வழிநடத்த முடியும். வாழ்நாள் லட்சியமான ‘தொண்ணூறு டிகிரி’யில் கால் பதிக்க முடியும்.

இங்கிலாந்தின் ராபர்ட் பால்கன் ஸ்காட்டுக்கும், நார்வேயைச் சேர்ந்த ரோல்ட் அமுண்ட்செனுக்கும் அண்டார்டிகாவில் பயணம் செய்து, உலகின் தென் துருவமான தொண்ணூறு டிகிரியில் முதன்முதலில் காலடியைப் பதித்துவிட வேண்டும் என்பதுதான் வாழ்வின் லட்சியம், ஆசை, குறிக்கோள் எல்லாமே.

அமுண்ட்சென், ஸ்காட்

கி.பி. 1911ல் ஸ்காட், தனது குழுவினருடன் அண்டார்டிகாவில் தென் துருவத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பித்திருந்தார். அதே சமயத்தில் ரோல்ட் அமுண்ட்செனும் தன் குழுவினருடன் அண்டார்டிகாவின் இன்னொரு முனையிலிருந்து தென் துருவத்தை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தார். அடுத்த ஒரு வார காலத்தில் ஸ்காட் குழுவினர் தினமும் சுமார் பதினைந்து மைல்கள் வரை பயணம் செய்தனர். அந்தப் பனிப்பிரதேசத்தில் அவ்வளவு தூரம் பயணம் செய்வதே பெரும் சாதனைதான்.

ஜனவரி 3, 1912. கைவசமிருந்த உணவுப் பொருள்கள் பெருமளவு கரைந்து போயிருந்தது. தென் துருவத்தைத் தொட்டுவிட்டு, மீண்டும் திரும்பிவர வேண்டும். கைவசமிருக்கும் உணவு இத்தனைபேருக்கு நிச்சயம் போதுமானதாக இருக்காது. என்ன செய்யலாம் என்று வெகு தீவிரமாக யோசித்த ஸ்காட், தன் குழுவில் இருந்து மூன்று பேரைக் கழட்டிவிட முடிவு செய்தார். ‘டெடி இவான்ஸ், க்ரீன், லாஷ்லி – என்னை மன்னித்துவிடுங்கள். நீங்கள் மூவரும் திரும்பிச் சென்றுவிடுங்கள்.

ஸ்காட்டும் மேலும் நான்கு பேரும் (ஓட்ஸ், வில்சன், டாஃப் இவான்ஸ், பௌவர்ஸ்) தென் துருவத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார்கள். ஜனவரி 9, ஊளையிட்டுக் கொண்டே வீசிய பனிப்புயல் ஸ்காட் குழுவினரை கூடாரத்துக்குள்ளேயே முடக்கி விட்டது. ஜனவரி 10, அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். இன்னும் சில மைல்கள்தான். சில  நாள்கள் பயணம்தான். தென் துருவம் கிட்டி விடும். கனவுகள் கண் முன் விரிய ஒரு வாரத்துக்கான உணவுப் பொருள்களை சேமித்து வைக்கும்படியான கூடாரம் ஒன்றை அந்த இடத்தில் அமைத்தனர். சுமக்க வேண்டாம். திரும்பி அதேபாதையில் வரும்போது உபயோகப்படுமல்லவா.

அடுத்தடுத்த நாள்களில் பத்து மைல்கள் கடப்பதென்பதே பெரும்பாடாகிப் போனது. இன்னும் நான்கு நாள்கள் இதேபோல் கடும் முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை. ஜனவரி 13ல் ஸ்காட் குழுவினர் 89டிகிரி தென் அட்ச ரேகைப் பகுதியைக் கடந்தனர். அடுத்த நாள் அவர்கள் தங்களது இறுதி சேமிப்புக் கூடாரத்தை அமைத்தனர். அதில் நான்கு நாள்களுக்கான உணவுப் பொருள்கள் வைக்கப்பட்டன. அன்று இரவு ஸ்காட், ‘இப்போதே என் லட்சியத்தை அடைந்துவிட வேண்டும்’ என எழுதினார். அவர் தன் டைரியில் எழுதிய சந்தோஷமான இறுதிவரி அதுதான்.

ஜனவரி 16, வழக்கத்தைவிட அதிக தூரம் பயணம் செய்ய முடிந்தது. நாளை கண்டிப்பாக தென் துருவத்தை தொட்டு விடலாம் என ஒவ்வொருவரின் மனதிலும் உற்சாகம் பீறிட்டது.

தொண்ணூறு டிகிரி

ஜனவரி 17, தங்கள் கனவு நிறைவேறப் போகிறதென்ற சந்தோஷத்தில் பயணத்தைத் தொடங்கினர். மதிய நேரம். பௌவர்ஸின் முகம் சுருங்கியது. காரணம், அந்தப் பகுதியில் ஏற்கெனவே பனிச்சறுக்கு வாகனமான ஸ்லெட்ஜ் கடந்து போன தடங்கள், நாய்களின் பாதச் சுவடுகள் தென்பட்டன. தூரத்தில் ஏதோ அடையாளக் கல் வைத்திருப்பது போல் தெரிந்தது. அவ்வளவுதான்.

ஒவ்வொருவரின் மனத்திலும் வெடிப்பதற்குக் காத்திருந்த உற்சாகம் அப்படியே அமுங்கிப் போனது. பதைபதைப்புடன் தங்களின் லட்சியமான தொண்ணூறு டிகிரியை நோக்கி தள்ளாடித் தள்ளாடிச் சென்றார்கள்.

தூரத்தில் ஒரு கொடி காற்றில் படபடத்துக் கொண்டிருந்தது. அது நார்வேயினுடையது.

***

மேலே நாம் பார்த்தது சென்ற நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்ட தென் துருவ சாகசப் பயணத்தின் ஒரு சிறு பகுதி. இதுவரை உலகில் மேற்கொள்ளப்பட்ட அதிமோசமான, மிக பயங்கரமான பயணம் இதுவே. தென் துருவத்தை அடைய ஸ்காட்டாலும் அமுண்ட்செனாலும் மேற்கொள்ளப்பட்ட அந்தப் பயணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் எவருக்கும் உடல் நடுங்கி, உயிர் உறைவது உறுதி. உலகில் மக்களின் மனத்தை அதிகமாகப் பாதித்த பயணமும் அதுவே. இந்த ஆண்டு (2010- 2011) அந்த பயணங்களுக்கான நூற்றாண்டு விழா நடந்து கொண்டிருக்கிறது. ஸ்காட், அமுண்ட்சென் அமைத்துக் கொடுத்த பாதையால், அண்டார்டிகாவில் தற்போது பல்வேறு நாடுகளும் தங்களது ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளன. இந்தியாவும் மைத்ரி என்ற ஆராய்ச்சி மையத்தை அமைத்து சுமார் இருபது ஆண்டுகளாக அங்கே தீவிரமாக இயங்கிக் கொண்டு வருகிறது.

இதோ இந்த நாள்களில் உலகின் தென் துருவத்தில் பல்வேறு நாட்டு ஆய்வாளர்களும் சென்று ஸ்காட்டுக்கும் அமுண்ட்செனுக்கும் மரியாதை செய்து வருகிறார்கள். எனது அண்டார்டிகா புத்தகத்தைக்கூட நான் ஸ்காட், அமுண்ட்சென் மற்றும் தென் துருவத்தைக் கடக்க முயற்சி செய்த இன்னொரு பயணியான ஷாகெல்டன் ஆகிய மூன்று பனிப்போராளிகளுக்குத்தான் சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.

நடந்துமுடிந்த புத்தகக் கண்காட்சியில் அண்டார்டிகா புத்தகம் விற்பனையில் இல்லை. புத்தகத்தை விரும்புபவர்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்.

Leave a Comment