வெளிச்சத்தின் நிறம் கருப்பு – அத்தியாயம் 01

தமிழக அரசியல் வாரமிருமுறை இதழில் நான் எழுத ஆரம்பித்துள்ள வெளிச்சத்தின் நிறம் கருப்பு தொடரின் முதல் அத்தியாயம் உங்களுக்காக. (சென்ற ஞாயிறு இதழில் வெளியானது.)

***

பூ ஒன்று செடியிலிருந்து உதிர்ந்த ஒரு சமயத்திலோ, நீர்க்குமிழ் ஒன்றை காற்று மோதி உடைத்த சமயத்திலோ, வண்ணத்துப் பூச்சி ஒன்று தன் சிறகை இழந்த சமயத்திலோ அந்தக் காதல், அவர்கள் உறவு முறிந்திருக்க வேண்டும்.

ஹென்றி ஸீக்லேண்ட் என்ற காதலன், தனது நீண்ட நாள் காதலியை விட்டு நிரந்தரமாகப் பிரிந்தான். உறவு முறிய ஓரிரு சுடுசொற்கள்கூட போதுமே. இருவரும் திருமணம் செய்துகொண்டு, ஏழெட்டு குழந்தைகள் பெற்று, பேரன் பேத்தி எடுத்து… ஹென்றியின் காதலிக்கு ஏராளமான கனவுகள். அவை எல்லாம் வெறும் கனவுகள் மட்டுமே என்று அவள் உணர்ந்த நொடியில் விரக்தியை உச்சத்தைத் தொட்டாள். தனது நிகழ்காலத்தை, ‘இறந்த’காலம் ஆக்கினாள்.

அவள் தற்கொலை செய்துகொண்டதுகூட ஹென்றியை எந்த விதத்திலும் பெரிதாகப் பாதிக்கவில்லை. அந்தக் காதலிக்கு ஓர் அண்ணன் இருந்தான். பாசமலர் சிவாஜி வகையறா பிரதர். தங்கையின் கோர முடிவு அவனை ஏராளமாக உலுக்கியிருந்தது. துப்பாக்கியைத் தூக்கிக் கொண்டு ஹென்றியைப் பழிவாங்கக் கிளம்பினான்.

ஹென்றி தன் வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தான். அங்கே திடீரென உதித்த அண்ணன், சற்று தொலைவிலிருந்து கைகள் நடுநடுங்க, ஹென்றியின் தலைக்குக் குறிபார்த்தான். அண்ணன், அப்போது கெட்ட வார்த்தைகள் கலந்த ஆங்கிலத்தில் ஏதாவது டயலாக் விட்டிருக்கலாம். அவனது துப்பாக்கி தோட்டா ஒன்றை வெளியே விட்டது.

ஹென்றி சுருண்டு விழுந்தான்.

‘அய்யோ… கொலை செய்துவிட்டேனா?’ – சில நொடிகளில் அண்ணனை பயம் கவ்விக் கொண்டது. அந்த பயம், உடனே உருமாற்றமும் அடைந்தது. ‘நினைத்தபடியே பழிவாங்கிவிட்டேன். இனி எனது பாசமலரின் ஆத்மா சாந்தியடையும்.’ அண்ணன், தன் தன் நெற்றியில் துப்பாக்கியை வைத்து விசையை அழுத்தினான். இன்னொரு தோட்டா அவனது உயிரைக் குடித்தது.

சில நிமிடங்கள் கடந்திருக்கும். ஹென்றி மயக்கம் தெளிந்து எழுந்தான். ‘நான் உயிரோடுதான் இருக்கிறேனா!’ – அவனாலேயே நம்ப முடியவில்லை. தோட்டா, அவனது நெற்றியைத்தான் உரசிக் கொண்டு சென்றிருந்தது. உயிருக்குச் சேதாரமில்லை. அவன் அருகிலிருந்த மரத்தைப் பார்த்தான். அதைத் துளைத்திருந்த தோட்டா, உள்ளே பத்திரமாகத் தஞ்சமடைந்திருந்தது. இன்னொருபுறம் அண்ணன் செத்துக் கிடந்தான்.

இந்தச் சம்பவம் நடந்தது 1893ல். நடந்த இடம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள ஹனி குரோவ் நகரில்.
இந்த இடத்தில் பாஸ்ட் பார்வேர்ட் பட்டனை அழுத்தி, 1913க்கு வந்துவிடலாம்.

ஹென்றி அதே வீட்டில்தான் சுபிட்சமாக வாழ்ந்து கொண்டிருந்தான். ஆனால் என்ன, தோட்டத்தில் அந்தத் ‘தோட்டா மரம்’ கண்ணில்படும்போதெல்லாம் பழைய காதலியின் நினைவு அநாவசியமாக வந்து தொலைத்தது. இந்த மரத்தை எதற்கு விட்டு வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் ஒருநாள் வலுப்பெற்றது.

ஹென்றி, கோடாரியுடன் அந்த மரத்தை நோக்கிச் சென்றான். கோடாரி வேலைக்கு ஆகவில்லை. மரம் புஜபலம் காட்ட, ஹென்றிக்கு கோபம் வந்தது. மரத்தைத் தகர்த்தெறிய முடிவு செய்தான். மரத்தில் சில டைனமைட்டுகள் கட்டப்பட்டன. பலத்த சப்தம். மரம் நாலாபக்கமும் சிதறியது. பறவைகள் அலறிக் கொண்டிருந்தன.

ஹென்றி அதை உணரும் நிலையில் இல்லை. இறந்து கிடந்தான். உடலில் வேறெங்கும் காயங்களில்லை, ஆனால் அவன் தலையில் இருந்து மட்டும் ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. அந்தப் பழைய தோட்டா, அச்சமயம் ஹென்றியின் தலையில் தஞ்சமடைந்திருந்தது.

‘அந்தத் தோட்டாவால்தான் அவன் உயிர்போக வேண்டுமென்பது விதி. அதனால்தான் இருபது வருடங்கள் கழித்து அதே தோட்டாவால் செத்திருக்கிறான்.’ ‘அந்த மரத்தைப் பார்த்திருக்கிறாயா? பேய் மரம். அந்த அண்ணனின் ஆவி அதில்தான் காத்திருந்தது. சமயம் வாய்த்தபோது கொன்றுவிட்டது.’, ‘ஹென்றி ஏமாற்றிய அந்தக் காதலியின் ஆவிதான் தோட்டாவுக்கும் புகுந்து அவனைப் பழி தீர்த்துவிட்டது.’

பலருக்கும் பல கருத்துகள். விதவிதமாகப் பேசிப் பேசி மாய்ந்துபோனார்கள். பழைய தோட்டா தலையில் பாய்ந்துதான் ஹென்றி இறந்துபோனான் என்பதில் மாற்றமில்லை. இருந்தாலும், என்றோ மரத்துள் புதைந்துபோன தோட்டா, மீண்டும் குறிபார்த்துப் பாய்ந்து வந்து உயிரைப் பறித்திருக்கிறது எனில், அதன்பின் உள்ள மர்மம் என்ன?
விடை இல்லை.

1657, மார்ச் 4 அன்று டோக்கியோ என்ற நகரமே சுடுகாடு ஆகிப் போனதன் பின்னணியில் உள்ள மர்மத்துக்குக் கூட விடை கிடையாது.

இன்றைய டோக்கியோவின் அன்றைய பெயர் இடோ (Edo), ஜப்பானின் மிகப்பெரிய வணிக நகரம். சுமார் மூன்று லட்சம் பேர் வசித்தார்கள். நெருக்கமாக அமைந்த வீடுகள் (மரத்தால், காகிதக் கூழினால் ஆனவை), குறுகலாக அமைந்த தெருக்கள், நீளமான சந்தைகள், நிறைய கோயில்கள், பாலங்கள் கொண்ட நகரம் அது.

கனத்த சாரீரமுடைய ஒருவர் பலமாகத் தும்மினால்கூட ‘நில அதிர்வு’ ஏற்படும் சபிக்கப்பட்ட தேசம்தானே ஜப்பான். 1657, மார்ச் 2 அன்று நண்பகலில் ஏதோ ஓரிடத்தில் சிறிய அளவில் நெருப்பு பரவ ஆரம்பித்தது. எங்கிருந்தோ கிளம்பிவந்த சூறாவளிக் காற்று அந்த நெருப்பின் இருப்பை பல மடங்காக்கியது. அந்தக் காலத்திலேயே இடோ நகரில் தீயணைப்புப் படை இருந்தது. ஆனால் அளவில் மிகச் சிறியது. அவர்கள் நெருப்பிடம் தோற்றுப் போனார்கள். மார்ச் இரண்டாம் தேதி இன்முகத்துடன் தன் சேவையைத் தொடங்கிய தீ, மூன்றாம் தேதி முழுவதும் மும்மரமாக வேலை பார்த்துவிட்டு, நான்காம் தேதி நண்பகலுக்குப் பின்னரே ஓய்வெடுக்கச் சென்றது.

புகைமூட்டத்தினுள் புதைந்திருந்த இடோ நகரில், கால்வைத்த இடமெல்லாம் கருகிய உடல்கள். அந்தப் ‘பேரழிவு நெருப்பு’ பரவக் காரணம் என்ன?

நில அதிர்வாகத்தான் இருக்கும் என்பது பொதுவான கருத்து. ஆனால் இன்றைக்கும் ஜப்பானியர்களைக் கேட்டால், இடுங்கிய கண்களில் பயம் பரவ, நடுங்கும் குரலுடன் அந்தச் சம்பவத்தைச் சொல்வார்கள்.

ஜப்பானிய இளம்பெண் ஒருத்தி விலையுயர்ந்த, பகட்டான கிமோனோ (Kimono, ஜப்பானியப் பெண்கள் அணியும் முழுநீள கவுன்) ஒன்றை வாங்கி ஆசையுடன் அணிந்தாள். ஏனோ, அடுத்த சில நாள்களிலேயே நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தாள். என்ன நோயென்று பிறர் அறியும் முன்பே செத்துப் போனாள்.

அவள் ஆசையுடன் வாங்கி வைத்திருந்த கிமோனோ, இன்னொரு இளம்பெண்ணுக்கு விற்கப்பட்டது. அவளும் அணிந்துகொண்டு அழகு பார்த்தாள். சில நாள்களிலேயே மர்ம நோயொன்று அவளை அணிந்துகொண்டு அழகு பார்த்தது. இரண்டாமவளும் இறந்து போனாள். மூன்றாவதாக கிமோனோ, இன்னொரு இளம்பெண்ணிடம் சென்று சேர்ந்தது. அவளுக்கும் அதே கதி. அதோ கதி.

கிமோனோ அணிந்த பெண்

இடோ நகரமெங்கும் விஷயம் பரவியது. ‘அந்த கிமோனோவில் துர்சக்தி ஏதோ புகுந்துள்ளது. அதுதான் மூன்று இளம்பெண்களின் உயிரை எடுத்துள்ளது.’ மதகுரு ஒருவரிடம் அந்த மர்ம கிமோனோ ஒப்படைக்கப்பட்டது. ஊரே கூடி நிற்க, மதகுருவும் அந்த கவுனைப் பரப்பி வைத்து மந்திரமெல்லாம் ஓதி, சடங்குகள் செய்து, எரிகின்ற கட்டை ஒன்றை எடுத்து அந்த கிமோனோவுக்குக் கொள்ளி வைக்க…

அச்சுறுத்தும் ஊளைச் சத்தத்துடன் சூறாவளிக் காற்று ஒன்று எங்கிருந்தோ கிளம்பி வர… உயரமாகக் கிளம்பிய தீ, திகுதிகுவென வேகமாகப் பரவ…

அந்தச் சம்பவத்தால் ஏற்பட்ட இழப்பு – சுமார் ஒரு லட்சம் மனித உயிர்கள். பல்லாயிரக்கணக்கான கால்நடைகள். முந்நூறு கோயில்கள். அறுபது பாலங்கள். அநேக கட்டடங்கள். 60 -70 சதவிகித இடோ நகரமே தீக்கிரையாகியிருந்தது. இதுவரை ஜப்பான் சந்தித்தப் பேரழிவுகளில் இதுவும் ஒன்று.

*
உலகின் முதல் மனிதனுக்கு சூரியன், சந்திரன், வானம், கடல், மலை உள்பட தன்னைச் சுற்றியிருந்த ஒவ்வொன்றுமே விநோதமாகவும் மர்மமாகவும்தான் இருந்தன. ஒவ்வொன்றையும் கண்டு பயந்தான். இயற்கையில் அவன் பயந்த விஷயங்களை இறைவனாகப் பார்க்க ஆரம்பித்தான்.

எப்போது மனிதன் அறிவு சார்ந்தும், அறிவியல் சார்ந்தும் உலகைப் பார்க்க ஆரம்பித்தானோ, அப்போதிருந்தே இயற்கை மீதான வீண்பயம் விலகியது. எவையெல்லாம் விநோதமாகத் தெரிந்தனவோ, பின் அவையே அறிவியலை வளர்க்க உரமாக ஆயின. பகுத்தறிவு வளர மூடநம்பிக்கைகள் பலவும் தகர்ந்தன.

இருந்தாலும் ‘உலகம் மர்மங்களால் ஆனது’ என்று பறைசாற்றும்படியாக, மனித அறிவுக்கும் அறிவியலுக்கும் பிடிபடாத, விடைதெரியாத மர்மங்கள் காலம்தோறும் பெருகிக் கொண்டேதான் செல்கின்றன. மேலே பார்த்தபடி தோட்டாவாக, கிமோனோவாக விநோத விபரீதங்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

இந்தத் தொடர் எதைப் பற்றியெல்லாம் பேசப்போகிறது என்று பட்டியலிடுவது கடினம். ஆனால் குண்டலினி வித்தையால் பறக்க வைக்கும் சாமியார், சிவலிங்கத்தைக் கக்கும் ஆன்மிகவாதி, கூனர்களையும் குருடர்களையும் குணமாக்கும் மதகுரு போன்ற டுபாக்கூர்களை நாம் சீண்டப் போவதில்லை. ஸ்பை கேமரா வைக்கப்படாத அறையில் அவர்கள் சுபிட்சமாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும். தவிர ஆவி, பேய், பிசாசு, பில்லி, சூனியம், கண்கட்டு வித்தை என்ற மிகக் குறுகிய வட்டத்துக்குள்  மட்டும் நாம் சுற்றி வரப்போவதில்லை.

நமக்கான தளம் மிக மிகப் பெரியது. நாம் ஏற்கப் போகும் பாத்திரங்கள் (தசாவதாரம் கமல்ஹாசனைக் காட்டிலும்) ஏராளம். ஓர் அத்தியாயத்தில் நாம் அறிவியல் ஆராய்ச்சியாளராக மாற வேண்டியதிருக்கும். அடுத்ததில் உளவியல் மருத்துவராக. அதற்கடுத்த அத்தியாயங்களில் தொல்லியல் வல்லுநர், வரலாற்று ஆய்வாளர், வானியல் அறிஞர், துப்பறியும் அதிகாரி, விலங்கியல் நிபுணர், இயற்கை ஆர்வலர், அவசியப்பட்டால் பேய் ஓட்டும் மந்திரவாதியாகவும் மாற வேண்டியது வரலாம்.

பகுத்தறிவைப் பக்கத்துத் தெரு சேட்டிடம் அடகு வைத்துவிட்டு இந்தத் தொடரைப் படிக்கத் தேவையில்லை. உலகில் பலராலும் விடைகாண முடியாத மர்மங்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தவே இந்தத் தொடர். நம் அறிவுக்கும் அறிவியலுக்கும் அப்பாற்பட்ட மர்மங்கள், விநோதங்கள், விசித்திரங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுவதே இத்தொடரின் நோக்கம்.

எனில், அந்தத் தீராத புதிர்களுக்கு இதில் விடை கிடைக்குமா என்றால், என் பதில் – அந்த வெளிச்சத்தின் நிறம் கருப்பு!

(வெளிச்சம் பரவும்)