கலைமாமணி விருதுகள் 2011

நாங்கள் மீண்டு(ம்) ஆட்சிக்கு வந்தால் 2011க்கான கலைமாமணி விருதுகளை சர்வதேச அளவில் கொண்டு செல்வேன் என்பதை இந்தக் கணத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்பே…

நாகேஷ்!

தீனதயாளு தெருவில் நான் தங்கியிருந்த அறையில், என்னுடைய உடைமைகள் என்று சொல்லிக் கொள்ளும்படியாக பெரிசாக ஏதும் கிடையாது. வயிற்று வலி நோயாளியாக நடித்து, எம்.ஜி.ஆர். கையால் வாங்கிய கோப்பையை மட்டும், அறையின் அலமாரியில் பெருமையோடு வைத்திருந்தேன்.

அந்தக் கோப்பையின் முகத்தில்தான் நான் தினமும் கண் விழிப்பேன் என்றாலும்கூட அது மிகையில்லை. அவ்வப்போது, அந்தக் கோப்பை என்னுடைய கற்பனைக் குதிரையைத் தட்டி விடத் தவறவில்லை.

எனக்குக் கோப்பையைக் கொடுத்தபின், என் நடிப்புத் திறமையால் பெரிதும் கவரப்பட்ட எம்.ஜி.ஆர். எங்கே போனாலும், தன்னுடன் என்னையும் அழைத்துக்கொண்டு போவது போலவும் பார்க்கிற ரசிகர்கள் எல்லாம், என்னைப் பார்த்து கையசைத்து ஆரவாரம் செய்வது போலவும், கும்பிடு போடுவது போலவும், அதைப் பார்த்து நான் முதலில் சந்தோஷப்பட்டாலும் உடனே, ‘அடேய்! இந்த வரவேற்பெல்லாம் எம்.ஜி.ஆருக்குத்தான்; உனக்கில்லை. புரிந்து கொள்!’ என்று என் மனச்சாட்சி என்னை இடிப்பது போலவும்கூட நான் கற்பனை செய்து கொள்ளுவேன்.

இதைப் படிக்கிறபோது, நான் ஒரு கோயில் முன் உட்கார்ந்து பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறபோது, கோயில் முன் நின்று கையெடுத்துக் கும்பிட்டு விட்டுப் போகிற பக்தர்கள் எனக்குக் கும்பிடு போடுவதாக நான் நினைத்துக்கொண்டு சந்தோஷப்பட, ஒரு பக்தர், என்னைப் பார்த்து, ‘யோவ்! பிச்சைக்காரா! சாமி பார்க்க விடாமல் குறுக்கே உட்கார்ந்து மறைக்கிறியே!’ என்று திட்டும்போது உண்மையை உணர்வது போலவும் நான் நடித்த சினிமாக் காட்சி உங்கள் நினைவுக்கு வருகிறதா?

எனக்கு ஒரு ராசி உண்டு. எனக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்கிறபோது அதைப் பற்றி மற்றவர்கள் விசாரிக்க வேண்டும் என்று என் மனசு நினைக்கும். ஆனால், ஒருவரும் அதைக் கண்டு கொள்ளவே மாட்டார்கள்.

உதாரணத்துக்கு, எம்.ஜி.ஆர். கொடுத்த கோப்பையையே சொல்லலாம். நாடகத்தில் வயிற்று வலிக்காரராக நடித்து, எம்.ஜி.ஆரே பாராட்டி கோப்பையைக் கொடுத்து விட்டார். அதை எடுத்துக்கொண்டு, நாடகம் நடந்த டவுன் கோகலே ஹாலிலிருந்து நடந்தே புறப்பட்டேன். கோப்பையை ரோட்டில் போகிறவர்கள் கண்ணில் படும்படி பிடித்துக்கொண்டு மவுண்ட் ரோடு முழுக்க நடந்தே வந்தேன்.

‘அட! என்ன கோப்பை இது? யார் கொடுத்தாங்க? எதற்காகக் கொடுத்தாங்க’ என்ற யாராவது கேட்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். அப்படி யாராவது கேட்கும் பட்சத்தில், நாடகத்தில் ஒரே காட்சியில் நடித்து, எம்.ஜி.ஆர். கையால் கோப்பை வாங்கின விஷயத்தைச் சொல்லத் துடித்தேன். கேட்பவர் பொறுமையோடும், ஆர்வத்தோடும் இருந்தால் நடு ரோட்டிலேயே வயிற்று வலிக்காரராக நடித்துக் காட்டவும் தயாராக இருந்தேன். ஆனால், என் துரதிருஷ்டம்! ஒரு பயல் கோப்பையைப் பற்றி விசாரிக்கவில்லை.

வழியில் ஒரு போலீஸ்காரர் தலையைக் கண்டதும் பயம். இவர், ‘ஏது கோப்பை?’ என்று கேட்டு நான் ‘நடிப்புக்காக எம்.ஜி.ஆர். கையால் வாங்கிய பரிசு’ என்று சொன்னால், அவர் நம்பாமல் ‘டேய்! நல்லா நடிக்கிறியே! எங்கே திருடினே? சொல்லு!’ என்று இரண்டு தட்டுத் தட்டி விடுவாரோ என்று பயம் பிடித்துக்கொண்டது. கோப்பையைச் சட்டைக்குள் மறைத்துக்கொண்டேன்.

யாருமே கோப்பையைப் பற்றிக் கேட்கவில்லையே என்ற வருத்தத்துடன் அறைக்கு எடுத்துக்கொண்டு வந்து பரிசுக் கோப்பையை அலமாரியில் கம்பீரமாக நிறுத்தி வைத்தேன். தினமும் ரசித்தேன். கற்பனையில் மிதந்தேன்.

***

ஒருநாள் வாகினி ஸ்டூடியோவுக்குள் நடந்து போய்க்கொண்டு இருந்தேன். ஜகன்னாதன் என்கிற புரொடக்ஷன் மேனேஜர் என்னைப் பார்த்துவிட்டு ‘நாகேஷ்! வாகினியிலே தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளில் ஒரு படம் எடுக்கிறோம். ஜெமினி கணேசன் ஹீரோ. இன்னிக்கு எடுக்கப் போகிற காட்சியின் துவக்கத்தில், டேபிள்களை ஒரு சர்வர் துடைப்பது போல ஒரு ஷாட் இருக்கிறது. அந்த ஒரு சீனில் நீ நடிக்கணும். எவ்வளவு பணம் வேணும்? ஐந்நூறு ரூபாய் போதுமில்லையா?’ என்றார்.

நான் ‘சரி’ என்றேன். காத்திருக்கச் சொன்னார். அப்போது, நடந்து போய்க்கொண்டிருந்த ஒருவர் என் கவனத்தை ஈர்த்தார். வயதான மனிதர். அவர் வில் போல உடலை பின்னுக்கு வளைத்து, நடந்து போய்க்கொண்டு இருந்தார். அவரது கையில் ஒரு சிகரெட் பெட்டியும், ஒரு தீப்பெட்டியும்தான் இருந்தது.

என் குசும்பு புத்தி சும்மா இருக்குமா? கிடுகிடுவென்று அவரிடம் போனேன். அவரது தோள் பட்டையைத் தொட்டு, ‘ரொம்பக் கஷ்டப்பட்டு சிகரெட் பெட்டியைத் தூக்கிட்டுப் போறாப்போல இருக்கு. என்கிட்ட வேணும்னா கொடுங்க. நான் எடுத்துக்கிட்டு வரேன்!’ என்றேன்.

அவர், ‘ஹ… ஹ…’ என்று சுருக்கமாகச் சிரித்து விட்டு, தன் பின்னோக்கிய வில் நடையைத் தொடர்ந்தார்.

சிறிது நேரத்தில் எனக்கு அழைப்பு வந்தது. செட்டுக்குள் போனேன். ஜகன்னாதன் ‘ஒரு முறை ஒத்திகை பார்த்துக் கொள்ளலாம்’ என்றார்.

நான் ஒரு சிறு டவலை வாங்கி, தோளில் போட்டுக் கொண்டேன். தட்டு, டம்ளர்கள் போடுகிற பக்கெட்டை எடுத்துக்கொண்டேன். டேபிளில் இருந்த ஒரு தம்ளரை மேலே தூக்கிப் போட்டுவிட்டு, அந்த டேபிளைச் சுத்தம் செய்துவிட்டு, மறுபக்கம் வந்ததும் கீழே வந்த டம்ளரை லாகவமாகப் பக்கெட்டில் பிடித்துக்கொண்டேன்.
‘சபாஷ்! ரொம்ப நல்லா பண்ணறியேப்பா!’ என்று ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தால் பேரதிர்ச்சி! நான் சற்று முன், செட்டுக்கு வெளியே நடையைக் கேலி பண்ணினேனே அதே மனிதர்! வாகினி ஸ்டூடியோவின் அதிபரான சக்ரபாணி!

‘சார்! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நீங்க நடந்து வந்துக்கிட்டிருந்தபோது யாருன்னு தெரியாம உங்களைக் கிண்டல் பண்ணிட்டேன். தயவு செஞ்சு என்னை மன்னிச்சிடுங்க’ என்று காலில் விழாத குறையாக அவரைக் கெஞ்சினேன்.

‘அதை நான் எப்பவோ மறந்தாச்சு! நீ ரொம்ப நல்லா நடிக்கிறியே!’ என்றவர், அடுத்தபடியாக, ‘உனக்கு எவ்வளவு பணம் பேசியிருக்கு?’ என்று கேட்டார்.

‘ஐந்நூறு ரூபாய்!’

‘தமிழ்ல நடிக்கத்தானே ஐந்நூறு பேசியிருக்கு? நீயே தெலுங்குலயும், இந்த சீனைப் பண்ணிடு. இரண்டுத்துக்குமா சேர்த்து ஆயிரம் ரூபாய் வாங்கிக்கோ’ என்றார்.

எனக்கு நடப்பது எல்லாம் கனவா? நிஜமா என்ற சந்தேகமே வந்து விட்டது.

தமிழ், தெலுங்கு இரண்டு படங்களின் காட்சிகளும் எடுக்கப்பட்டன.
புரொடக்ஷன் மேனேஜர் ஜகன்னாதனைக் கூப்பிட்டு, ஆயிரம் ரூபாய்க்குச் செக் எழுதிக்கொண்டு வரச் சொன்னார்.

நான், ‘சார்! சார்! செக்கெல்லாம் வேணாம்’ என்றேன்.

என்னைப் பார்த்துச் சிரித்தபடி, ‘வாகினி பெரிய கம்பெனி. செக்கெல்லாம் திரும்பி வராது. பயப்படாதே!’ என்றார்.

‘அதுக்கு இல்லை சார்! எனக்கு அவசரமா பணம் தேவைப்படுது. அதனால, கேஷா கொடுத்தீங்கன்னா ரொம்ப சௌகரியமா இருக்கும்’ என்றேன்.

‘அப்படியா! சரி!’ என்று சொல்லி விட்டு, ஜகன்னாதனிடம், ‘காரில் இவரை அழைச்சுக்கிட்டு நேரே பாங்குக்குப் போய், செக்கைப் பணமா மாத்தி இவரிடம் கொடுத்து விட்டு, இவரையும் அவரது இடத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்து விடு!’ என்றார்.

அந்த ஆயிரம் ரூபாயை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. அந்தப் பணத்தில்தான் ஒரு பட்டுப் புடவை, ஒரு தாலி, பிரவுன் கலரில் ஒரு பாண்ட் மூன்றும் வாங்கிக்கொண்டு நான் காதலித்த ரெஜினாவைப் பதிவுத் திருமணம் செய்துகொண்டேன்.

***

நடிகர் நாகேஷின் வாழ்க்கை அனுபவங்கள், கல்கியில் சிரித்து வாழ வேண்டும் என்ற பெயரில் தொடராக வெளிவந்தது. எழுதியவர் எஸ். சந்திரமௌலி. தற்போது ‘நான் நாகேஷ்’ என்ற பெயரில் கிழக்கு வெளியீடாக வந்துள்ளது. எம்.ஜி.ஆர்., வாசன், சிவாஜி, திருவிளையாடல், கமல்ஹாசன் (கமா, கமா போட்டு இன்னும் சேர்க்கலாம்) என்று தன் வாழ்வின் மறக்கமுடியாத மனிதர்களையும் சம்பவங்களையும் நாகேஷ் இதில் பிரத்யேகமாக நினைவுகூர்கிறார். இதுவரை நாம் சந்தித்திராத ஒரு புதிய நாகேஷ் இந்த அனுபவங்களின் வாயிலாக உருப்பெற்று நிற்கிறார். சென்னை புத்தகக் கண்காட்சியில் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் புத்தகம், தமிழ் சினிமா ரசிகர்கள் தவற விடக்கூடாத பொக்கிஷம்.

பயணம்

* இயக்குநர் ராதாமோகனுக்கு வித்தியாசமான முயற்சி. தமிழ் சினிமாவின் வித்தியாசமான முயற்சி என்றெல்லாம் சொல்ல முடியாது.

* டைட்டில் சாங் தவிர வேறு பாடல்கள் கிடையாது. ஓரிரண்டு காட்சிகள் தவிர அநாவசியக் காட்சிகள் இல்லை. நகைச்சுவைக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமே இல்லை. தேவையான அளவு செண்டிமெண்ட்.

* நாகர்ஜுனுக்கு ஏற்ற கதாபாத்திரம். தேவைக்கு ஏற்ப அழகாக நடித்திருக்கிறார். ஆனால் ‘இந்தப் படம் தெலுங்கு டப்பிங்கா?’ என்று இன்று மட்டுமே என்னிடம் மூன்று பேர் கேட்டுவிட்டார்கள்.

* இஸ்லாமிய தீவிரவாதம் சார்ந்த காட்சிகள் வழக்கம்போல உறுத்துகின்றன. அதுவும் சில வசனங்களுக்காகவும், சில காட்சிகளுக்காகவும் ராதாமோகன் கடும் விமரிசனங்களைச் சந்திக்கப் போவது உறுதி.

* ஒரு மதத்தைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, ஒரு கதாபாத்திரம் மூலமாக இன்னொரு மதத்தைத் தூக்கிப் பிடிப்பது சரியல்ல என்று சுற்றி வளைத்து மறைமுகமாகச் சொல்லலாம். முந்தைய வரியைப் போலத்தான் இயக்குநரும் படத்தில் சில விஷயங்களை மென்று முழுங்கி விமரிசித்திருக்கிறார். இந்தப் பத்தியின் முதல் வரியை நேரடியாகச் சொல்ல வேண்டுமென்றால், இஸ்லாமிய மதத்தைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, கிறித்துவத்தைத் தூக்கிப் பிடித்திருக்கிறார் இயக்குநர்.

* சினிமா சூப்பர் ஹீரோவைக் கடுமையாகத் தாக்கித் தாளிக்கும் இயக்குநர், கடைசியில் காம்ப்ரமைஸ் செய்துகொள்கிறார். டிஆர்பி ரேட்டிங்குக்காக மீடியாக்கள் நடந்து கொள்ளும் விதத்தையும் கடுமையாகத் தாக்கும்படியான காட்சிகள் இருக்கின்றன. ஆனால் இன்னென்ன சேனல்கள் என்று நேரடியாகச் சொல்லாமல் பூசி மெழுகியிருக்கிறார்.

* படத்தில் கவரும் பயணி கதாபாத்திரங்கள் டாக்டர் ரிஷி, ஏர்ஹோஸ்டஸ் பூனம் கவுர், ரசிகன் பாலாஜி. ஒரு கட்டத்துக்குமேல் எரிச்சலூட்டும் கதாபாத்திரம் பாதிரியார் எம்.எஸ். பாஸ்கர்.

* நகைச்சுவை வசனங்களைப் பளிச்சென வெளிப்படுத்தும் புது வசனகர்த்தா, சீரியஸ் வசனங்களில் கோட்டை விட்டிருக்கிறார். மொழி, அழகிய தீயே படங்களில் விஜியின் வசனங்களை ரசிக்காதவர்களே இருந்திருக்க முடியாது.

* பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப அளவாக நடித்திருக்கிறார்.

* அடுத்து இன்னென்ன திருப்பங்கள் வரும் என்று பாமரர்களும் யூகித்துவிடக்கூடிய காட்சிகள்தாம். இருந்தாலும் சலிப்பையோ, கொட்டாவியையோ தரவில்லை.

* பயணம் – நிச்சயம் ஆதரிக்கப்பட வேண்டிய படம். குடும்பத்துடன் பார்க்கலாம், சில விஷயங்களைச் சகித்துக் கொண்டு.

ஜிந்தாக்கு ஜிந்தக் ஜிந்தக்…

சமீபத்தில் கவர்ந்த பாடல் வரிகள். அதனோடு பொருந்திப்போகும் அரசியல் நிகழ்வுகள். வரிகள் மாற்றியும், மாற்றப்படாமலும்.

***

ஜிந்தாக்கு ஜிந்தக் ஜிந்தக்

ஜிந்தாக்குதா…

நான் ரொம்ப ரொம்ப ரொம்ப

நல்ல புள்ளை இல்லை

ரொம்ப நல்ல புள்ளைக்கெல்லாம்

நான் செல்லப் புள்ளை இல்லை

சிபிஜ அன்புப் புள்ளை

கட்சியின் கவர்ச்சிப் புள்ளை

என்னோட பேரு இல்லா மீடியா நியூஸே இல்லை

ராசா ராசா நான் ஸ்பெக்டரம் ராசா

ராசா ராசா நான் ஸ்பெக்டரம் ராசா

*

என்னமோ ஏதோ…  

எண்ணம் திரளுது கனவில்!

டெல்லி பிரளுது நினைவில்!

கண்கள் இருளுது நனவில்!

என்னமோ ஏதோ…

முட்டி முளைக்குது மனதில்

வெட்டி எறிந்திடும் நொடியில்

விட்டுப் பறக்குது தொலைவில்

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபேழை

ஓஹோ உருவமில்லா உருவமில்லா நாளை..

ஏனோ குவியமில்லா குவியமில்லா ஒரு காட்சிபேழை

ஓஹோ அரைமனதாய் விடியுது என் காலை…

*

யாரது யாரது

யாரது யார் யாரது

சொல்லாமல் நெஞ்சத்தைத் தொல்லை செய்வது

மூடாமல் கண் ரெண்டை மூடிச் செல்வது

யாரது யாரது

யாரது யார் யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது

விலகாமல் விலகி நிற்பது

விடையாகக் கேள்வி தந்தது

தெளிவாகக் குழம்ப வைத்தது

யாரது யாரது…

*

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ  

யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

மீன் கொத்தியப்போல் நீக்கொத்துரதால

அட கூட்டணி வெக்கத்தான் அழைப்பாய்களா

இல்ல, திராட்டுல வுட்டுத்தான் வதைப்பாய்ங்களா

தலைகாலுப் புரியாம தரைமேல நிக்காம

தடுமாறிப் போனேனே

நானே நானே!

யாத்தே யாத்தே யாத்தே…

*

ஒரிஜினல் வரிகளுக்குச் சொந்தக்காரர்களான நா. முத்துக்குமார், மதன் கார்க்கி, யுகபாரதி, சிநேகன் ஆகியோருக்கு நன்றி.