‘இந்த எண்ணம் மிஸ்டர் எம்.ஜி.ஆருக்கு இருக்குமா?’

காலையிலேயே சேகர் என்ற நண்பர் தொலைபேசியில் அழைத்தார். அவர் ஜே.பி. சந்திரபாபுவின் குரலில் பாடும் மேடைப் பாடகர். எனது கண்ணீரும் புன்னகையும் புத்தகத்தின் ரசிகர். அவ்வப்போது அழைத்து சந்திரபாபு குறித்து பேசுவார். அவர் பேசி முடித்ததிலிருந்து எனக்குள் சந்திரபாபுவின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

*

‘நான் குடிகாரன் என்பது ஊரறிந்த உலகறிந்த ஒரு விஷயம். ஒவ்வொரு மனிதனையும் அழைத்து அவனுக்கு மதுவை ஊற்றிக் கொடுத்துப் பாருங்கள். அவன் தன் வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளை ஒளிவு மறைவின்றி கூறிவிடுவான். அழுது விடுவான். மதுவை நான் அளவோடு தினமும் குடிப்பேன். ஆனால் என்று ‘மாடி வீட்டு ஏழை’ படமெடுக்கத் துணிந்தேனோ அன்று முதல் ‘மொடாக்குடி’ என்று கூறுவீர்களே, அப்படிக் குடிக்க ஆரம்பித்தேன். அந்த மயக்கமும் போதாமல்தான் ‘பெத்தடினுக்கு’ வந்தேன். நடிகனுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும்போது, ஊதியமும் சேர்ந்து உயரத்தான் செய்யும்.

மனிதன் எதற்காக உழைக்கிறான்? ஊதியத்திற்காகத்தானே? அது கிடைக்காதபோது ஷூட்டிங்குக்கு போகாமலிருக்கிறேன். பணம் தராத படத் தயாரிப்பாளர்களின் படங்களில் சில சமயங்களில் நடிக்கப் போகாமலிருந்ததுண்டு. பிறகு நானே வருத்தப்பட்டு போகிறது பாவம் கஷ்டப்படுகிறார் என்றுணர்ந்து நடிக்கச் சென்று விடுவேன். உண்மையான ஒரு கலைஞன் ஷூட்டின் இருக்கிறது என்றறிந்த பிறகும் போகாமல் இருக்கமாட்டான்.

அவரது ஊதியத்தை பேசியபடி கொடுக்காத தயாரிப்பாளர்களுண்டா?
நல்ல கறவை மாடு என்றறிந்தால்தான் மிஸ்டர் எம்.ஜி.ஆர். நடிக்கவே ஒப்புக் கொள்வார். இதுதான் உண்மை. நான் எந்தத் தயாரிப்பாளரையும் சரி செட் போடுங்கள் என லட்ச ரூபாய்க்கு செட் போடச் சொல்லிவிட்டு, பிறகு செட்டைப் போய்ப் பார்த்து, இது நன்றாக இல்லை கலைந்து விடுங்கள் என்று சொன்னதில்லை.

உடன் நடிக்கும் நடிகையைக் கூப்பிட்டு நாளை நான் கால்ஷீட் கொடுத்திருக்கிறேன். நீ இல்லாமல் படமெடுக்க முடியாது. உன்னை அழைக்க வந்தால், மாத விலக்கு என்று கூறிவிடு என சொல்லிவிட்டு நான் தப்பித்துக் கொண்டதில்லை.

ஷூட்டிங் இருக்கும் நாளில் கண்வலி என்று சொல்லி கன்னியருடன் விளையாடிக்கொண்டிருந்ததில்லை. முக்கியமாக எடிட்டிங் அறைக்குப் போனதே இல்லை. போனாலும் என் காட்சிகள் தவிர மற்றவர் காட்சிகளை நீக்கச் சொல்லிவிட்டு, எடிட்டர் மீது பழி போட்டதே இல்லை. தொழிலில் நான் அன்றும் சரி, இன்றும் சரி, மிகவும் நாணயமாக நடந்து கொள்ள முயற்சித்து வருகிறேன்.

நான் ரசிகர்களை மதிக்கிறேன். நீங்கள் எனக்களித்த ஏகோபித்த வரவேற்பால்தான் சாதாரண மீனவக் குடிமகனான நான் உயர்ந்த நிலைக்கு வந்தேன். வாழ்ந்தேன். இன்றும் உங்களால் தான் ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இந்த எண்ணம் மிஸ்டர் எம்.ஜி.ஆருக்கு இருக்குமா?

கட்சிக்காரர்கள், ரசிகர்கள் தொல்லை தருகிறார்கள். அதனால்தான் அயல்நாடுகளில், பிற மாநிலங்களில் படப்பிடிப்பு நடத்துகிறேன் என்றல்லவா கூறியிருக்கிறார். நான் என்றும் அப்படி கூறியதில்லை. அவுட்டோர் ஷூட்டிங் என்றால் எனக்கு ஒரே ‘குஷி’யாக இருக்கும். நமது திறமையை மக்களுக்கு நேரில் காட்டுவோம் என்றெண்ணி உற்சாகமாக உழைப்பேன்.

என்னிடமும் சில குறைபாடுகள் உண்டு. ஆனால் அது பிறருக்குத் தீங்கு விளைவிக்காது.
ஆனால் மிஸ்டர் எம்.ஜி.ஆரிடம் உள்ள குறைபாடுகள், என்னைப் போன்ற ஏமாளிகளைத் தெருவில் நிறுத்தி விடும்.

சமீபத்தில் எனது நண்பரான ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவரின் திருமணத்திற்காக நான் சென்றிருந்தேன். முன் வரிசையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது வழக்கத்திற்கு மாறாக பரபரப்பு ஏற்பட்டது. பலர் என்னையே பார்த்தார்கள். என்ன விஷயம் என்று தெரியாமல் நான் திகைக்க, முன் வரிசைக்கருகே மிஸ்டர். எம்.ஜி.ஆர். வந்து கொண்டிருந்தார்.

கை கூப்பி வணங்க கையைத் தூக்கியவர் என்னைக் கண்டதும் எதையோ பார்த்தவர் போலானார். விருட்டென்று அருகிருந்த கதவுப் பக்கம் ஓட்டமும் நடையுமாக ஓடி கதவைத் தட்டினார். அது திறக்கப்படவில்லை.

பின் வேகமாக என் பாதை வழியாக முகத்தை திருப்பியபடி சென்று மறைந்தார்.
என்னைக் கண்டு ஏன் இப்படி ஓடி மறைய வேண்டும்? நானென்ன பேயா.. பூதமா.. நான் உண்மையை எழுதுகிறேன் என்ற ஆத்திரமா.. பணத்தையும் கொடுத்து விட்டு, பரிதாபத்திற்குரிய காட்சிப் பொருளாக ஆனவன் நானல்லவா! ஆத்திரப் படவேண்டிய நான் அமைதி அடைந்து விட்டேன். தர்மத்தை கண்டு பொறுக்காமல் அதர்மம் ஆத்திரப்படுகிறது. இப்படித்தான் நான் அன்று எண்ணிக் கொண்டேன்.’