நீயும் பொம்மை! நானும் பொம்மை!

பொம்மை, பலூன்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான குழந்தைகளின் தாயார்கள் இதனால் மகிழ்ச்சி அடைவர்.

– நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, (நன்றி : தினமலர்)

பெட்ரோல், டீசல் விலையெல்லாம் ஒரு மேட்டரா? மாமூ, பொம்மை சைக்கிள் வாங்கிக்கோ. பொம்மை கார், பஸ்கூட வாங்கிக்கோ.உங்கள் பயணம் இனிதாகுக!

***

ஹலோ, என்னங்க எங்க இருக்கீங்க?

மார்க்கெட்ல இருக்கேம்மா. காய்கறி வாங்க வந்தேன்.

ஏங்க உங்களுக்கென்ன பைத்தியமா புடிச்சிருக்கு. பக்கத்துல ஏதாவது டாய்ஸ் கடை இருந்தா போங்க. அங்க மெழுகுல செஞ்ச கத்திரிக்காய், வெண்டைக்காயெல்லாம் கிடைக்கும். அதை வாங்கிட்டு வாங்க. சூப்பரா சாம்பார் செஞ்சு தர்றேன்.

***

அரிசி வாங்க முடியாத நிலையா?

பருப்பு வாங்க முடியாத விலையா?

பசியால் உங்கள் குழந்தை துடித்து அழுகிறதா?

எங்கள் இங்கிபிங்கிபாங்கி பொம்மைகளை வாங்கிக் கொடுங்கள்.

குழந்தைகள் பொம்மையைக் கட்டியணைத்துக் கொண்டே தூங்கிவிடும்.

பசியை மறக்கடிக்க

இங்கிபிங்கிபாங்கி பொம்மைகள்!


‘கல போல வருமா!’

க்ளவுட் செவன் அண்ட் ஆப்பு நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தில் வாய்க்கொழுப்பு நடிகர் என்று பரம்பரை பரம்பரையாக வாரமலர் நடுப்பக்கச் செய்திகளில் பாசமாக கொஞ்சப்படும் அஜித் நடிக்க இருக்கிறார் என்பது எல்லோரும் அறிந்ததே.

யாருமே அறியாத பல செய்திகள் ஒவ்வொன்றாக தற்போது வெளியாகிக் கொண்டிருக்கின்றன. எங்கே, எப்படி என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாமல் மேற்கொண்டு தொடரவும் (கிசுகிசுன்னா ஆராயக்கூடாது, அனுபவிக்கணும்).

தும்பைப் பூ என்றும் ‘மாஸ்’அற்ற மலர் என்றும் அஜித்தை கலைஞர் பாசமாகச் சுட்டிக் காட்டி அறிக்கை விட்டதன் பின்னணியில் ஏகப்பட்ட உள்’கும்மாங்’குத்து வேலைகள் இருப்பதாக நியூஸ் பேப்பர் ஏஜென்ஸி செய்திகள் தெரிவிக்கின்றன.

கலைஞரின் வசனத்தில் விரைவில் வெளியாக இருக்கும் பெண் சிங்கம் படத்தில் ஒரு குத்து பாடலுக்கு அஜித் நடனமாட(?) இருக்கிறாராம். ‘வாய் உள்ள பிள்ளை குலைக்கும்’ என்று தொடங்கும் அந்தப் பாடலை கலைஞரே எழுதவிருக்கிறாராம்.

தவிர, க்ளவுட் செவன் அண்ட் ஆஃப் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த அஜித் படத்துக்கும் கலைஞரே வசனம் எழுதலாம் என்று மதுரை இட்லி கடைகளில் பேசிக் கொள்கிறார்கள். அந்தப் படம் முழுவதும் அஜித் வரும் பெரும்பாலான காட்சிகளின் பின்னணியில் ‘கல போல வருமா…’ (கலைஞர் என்பதன் சுருக்கம் கலை, செல்லமாக ‘கல’) என்று அஜித்தே சொந்தக் குரலில் பாடுவது போல பயன்படுத்த இருக்கிறார்களாம்.

அஜித் பேசும்போது எழுந்து நின்று கைதட்டி ‘ஊக்குவித்த’ ரஜினிக்கு கலைஞர் செல்லும் பாராட்டு விழாக்கள் ஒவ்வொன்றிலும் அவருக்கு அருகிலேயே நாற்காலி போட ‘ஏற்பாடு’ செய்துள்ளார்களாம். இதனால் எந்திரன் படம் மேலும் சில வருடங்களுக்கு தள்ளிப் போகலாம் ஷங்கர் வட்டாரத்தில் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

சினிமாவைவிட்டே அஜித் விலகப் போகிறார் என்று பத்திரிகைகள் செய்தி பரப்பிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர் ரேஸில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். கார் ரேஸ் மட்டுமன்றி, ரேக்ளா ரேஸ் முதல் ஸ்லோ சைக்கிள் ரேஸ் வரை எதையும் விட்டுவைக்காமல் கலந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறாராம்.

ரேஸில் தல பின்தங்கிய இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு தனது சுறாவை வேகமாக முடித்து களமிறக்க இருக்கிறாராம் பழைய இளைய தளபதி. இதற்கிடையில் ‘3 இடியட்ஸ் தமிழ் மேக்கிங்கில் விஜய் நடிக்கப் போகிறார்’ என்றொரு சோக செய்தி வந்து விஜய் ரசிகர்களைத் தாக்கவும், ‘சேச்சே, நான் என்ன லூஸா?’ என்று அதற்கு பதில் சொல்லி தன் ரசிகர்களின் வாயிலும் வயிற்றிலும் ‘பாலை’ ஊற்றியிருக்கிறார் விஜய்.

தேசிய விருது

ராஷ்ட்ரிய விஞ்ஞான் ஏவம் பிரதியோகிகி சஞ்சார் பரிஷத் என்ற மத்திய அரசின் அமைப்பு அறிவியல் வளர்ச்சிக்குப் பங்காற்றுபவர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் விருது அளிக்கிறது.

இதில் இந்த ஆண்டு, புத்தகம் மற்றும் இதழ்கள் மூலம் அறிவியல், தொழில்நுட்ப தகவல் தொடர்பில் தனித்துவ ஈடுபாட்டு முயற்சிக்கான தேசிய விருது என்ற பிரிவின்கீழ் எழுத்தாளர் என். ராமதுரைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுமாக இந்தத் துறையில் அனைத்து மொழிகளும் சேர்த்து ஒருவருக்கு மட்டும்தான் இந்த விருது என்பது கவனிக்கப்பட வேண்டியது.

கிழக்கு, பிராடிஜி என்ற இரண்டு பதிப்புகளிலும் ராமதுரை எழுதியுள்ள அறிவியல் புத்தகங்கள் காரணமாக இந்த தேசிய விருது அவருக்குக் கிடைத்துள்ளது.

மகிழ்ச்சி. கடினமான விஷயங்களை எளிய தமிழில் எழுதுவது எப்படி என்று ராமதுரையிடம்தான் ஒவ்வொருவரும் கற்றுக் கொள்ள வேண்டும்.

கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சிக்காக ‘அணு – அதிசயம், அற்புதம், அபாயம்’ புத்தகம் குறித்து ராமதுரை பேசினார். 50 நிமிடங்கள் அணு குறித்து இத்தனை சுவாரசியமான பேச்சை கேட்டிருக்கவே முடியாது. ராமதுரை போன்ற ஒருவர் எனக்கு பள்ளி, கல்லூரியில் அறிவியல் சொல்லிக் கொடுத்திருந்தால் அது இனித்திருக்கலாம்.

ராமதுரை பேசிய நிகழ்ச்சியைக் கேட்க & டௌன்லோட் செய்ய.

ராமதுரையின் புத்தகங்கள் வாங்க.

சலூனில் கலைஞர்!

வார நாள்களில் கூட்டம் அதிகம் இருக்காது அல்லது கூட்டமே இருக்காது என்ற நினைப்பில் நேற்று காலை (வியாழன்) சலூனுக்குச் சென்றேன். நினைப்பில் முடி விழவில்லை.

எனக்கு வழக்கமாக முடி வெட்டி விடும் அண்ணன் ஒருவருக்கு முடிவெட்டிக் கொண்டு இருந்தார். வேறு யாரும் இல்லை. குமுதத்தைப் புரட்ட ஆரம்பித்தேன். விமரிசனத்தில் தீராத விளையாட்டுப் பிள்ளையை டர்…

அண்ணனைப் பார்த்தேன். அந்த நபருக்கு அப்போதுதான் வெட்ட ஆரம்பித்திருப்பார் போல. அண்ணன் அசையாமல் நிற்பார். வேலை செய்வதுபோலவே தெரியாது. ஆனால் அவரது விரல்களின் வேகம் அலாதியாக இருக்கும். மின்சாரக் கனவு பிரபுதேவா போல சினிமாத்தனமாகவெல்லாம் இருக்காது. கட்டிங் என்றால் எந்தத் ‘தல’க்கும் பத்தே நிமிடங்கள்தான்.

டீவி ஓடிக் கொண்டிருந்தது. இந்தியா தென் ஆப்ரிக்கா இரண்டாவது டெஸ்ட் மேட்ச் ஐந்தாவது நாள். அம்லாவின் அஸ்திவாரத்தைத் தகர்க்க, நாக்கு தள்ள ஓடிவந்து முயற்சி செய்து கொண்டிருந்தார் இஷாந்த் சர்மா. இருவரையுமே சலூனுக்கு அழைக்கலாம் என்று தோன்றியது.

சலூனுக்குள் ஒருவர் நுழைந்தார். கையில் டிஃபன் பார்சல். உள்ளே கொண்டுபோய் வைத்தார். ‘பொங்கல் வாங்கியிருக்கேன்’ என்றார் அண்ணனிடம். ‘நீங்க வாங்க உக்காருங்க’ என்றார் என்னிடம். தொடர்ந்து ‘ஏவ்வ்வ்’ என்று அடிவயிற்றில் இருந்து அசுர ஏப்பம் வேறு.

கடைக்குப் புதியவர் போல. அதென்னவோ, சில விஷயங்களில் மாற்றத்தைச் சட்டென்று மனம் ஏற்றுக் கொள்ளாதல்லவா. யோசித்தேன். பின் (பாரா ஸ்டைலில் சொல்ல வேண்டுமென்றால்) ‘கேச’வ பெருமாளை மனமார வேண்டிக் கொண்டு, தலையைக் கொடுத்தேன். அவர் என் சட்டை மேல் பட்டனைக் கழற்றி, துணி சுற்றவே சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டார். சுற்றிய துணியை உருவி மேலும் சிலமுறை சுற்றிப் பார்த்துக் கொண்டார்.  ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ எனக்குள்ளே ஈனஸ்வரத்தில் யாரோ பாடினார்கள்.

செடிக்கு பூச்சி மருந்து அடிப்பதுபோல தண்ணீரை ஸ்பிரே செய்தார். அதுவும் சில நிமிடங்களுக்கு. ஷாம்பு வாங்கிக் கொடுத்தால் குளிப்பாட்டி விட்டிருப்பார். டிராயரை நிதானமாகத் திறந்து கத்திரிக்கோலுக்கு வலிக்காமல் எடுத்தார். நான்கைந்து சீப்புகளையும் எடுத்துவைத்தார். ஒவ்வொன்றாகப் பார்த்தார். மனத்துக்குள் இங்கி பிங்கி பாங்கி சொல்லியிருப்பார்போல. கடைசியாக ஒரு சீப்பைத் தேர்ந்தெடுத்து கத்திரிக்கோலையும் கையில் எடுத்துக் கொண்டார். சிலமுறை 360 டிகிரி என்னைச் சுற்றி வந்தார். எங்கிருந்து ஆரம்பிப்பது என்ற குழப்பம்போல. பின் மண்டையிலிருந்தே ஆரம்பித்தார். சோதனைச் சாலை எலிகள் என் தலையில் ஊர்வதுபோல தெரிந்தது.

மயிரே போச்சு என்று விட்டுவிட முடியாதே, எல்லை மீறினால் காப்பாற்ற அண்ணன் வருவாரா என்று ஓரக்கண்ணால் நோக்கினேன். அண்ணன் கஸ்டமரை அனுப்பிவிட்டு, பொங்கலைக் கவனிக்கப் போயிருந்தார்.

என்னவர், பக்கத்து தெரு கடையில் சென்று பொங்கல் வாங்கி வந்த உப்புச் சப்பற்ற கதையை பேச ஆரம்பித்தார். மேட்சில் விக்கெட்டும் விழவில்லை. நானே விக்கெட் ஆகிவிடுவேனோ என்ற பயம் எனக்கு.

‘நேத்து ஒரு கண்ணால வூட்டுக்குப் போயிருந்தேன். பெர்சா பந்தியெல்லாம் போட்டு சாப்பாடு போட்டானுக. ஒரு சோறு ஒரு சாம்பாரு ஒரு வத்தக்குழம்பு ஒரு ரசம்னு துன்னாத்தானே நமக்கு திருப்தியா இருக்கும். ஊத்தப்பம் வைக்கிறானுக, சுண்டு விரலு சைஸுல ஸ்வீட்டு வைக்கிறானுக. என்னென்னமோ வைக்கிறானுக. துன்ன மாதிரியே இல்ல. சப்ளைக்கு எல்லாம் பொண்ணுங்க. ஒரு ஆம்பிள கெடயாது. பாதி பேரு துன்னவே மாட்டேங்கிறான். ஜொள்ளு வுட்டுக்கினு கெடக்கிறான்.’

அண்ணன் பொங்கல் வாயோடு செய்தி சொன்னார். என்னவர் பின்பக்கம் இருந்தபடியே முன்பக்க முடியை பிடித்து இழுத்து (ஸ்கேல் இருந்தால் அளந்து அளந்து வெட்டுவார்போல) ஒரு தினுசாக கத்தரிக்க ஆரம்பித்தார். அசம்பாவிதம் ஏதும் நேர்ந்துவிட்டால் எப்படி வெளியில் ‘தலை காட்டுவது’ என்று எனக்குள் ஏக பயம்.

கட்டிங்கே கால்வாசிகூட முடியாத நிலையில் ‘ஸார் ஷேவிங் பண்ணனுமா?’ என்றார் என்னவர். வேண்டாம் என்றேன் வேகமாக. ‘நீங்களே செஞ்சுக்குவீங்களா?’ என்றார். ஆமாம் என்றேன். ‘இன்னைக்கே பண்ணுவீங்களா?’ என்றார். பொறுமையாக ‘ம்’ என்றேன். கிட்டத்தட்ட 25 நிமிடங்கள் ஓடியிருந்தன.

பாதிவேலை முடிந்த நிலையில் என்மேல் போர்த்திருந்த துணியை உருவினார். ‘இன்னும் முடியலையே’ என்று பதறினேன். ‘இருங்க சார்’ என்று விலகிச் சென்றவர், துணியை உதறிவிட்டு மீண்டும் வந்து போர்த்திவிட்டு வேலையைத் தொடர்ந்தார். இண்டர்வெல்போல.

‘நீங்க இந்த ஏரியாவா?’ கேட்டார் என்னவர்.

‘ம்’

‘எங்க?’

‘பக்கத்துல லெவன்த் அவென்யூ’

‘கலைஞர் டீவி கொடுக்கறார். வாங்கலையா?’

‘கலைஞரே வந்து கொடுக்குறாரா?’

‘ஹிஹி.. இந்த ஏரியாவுல ரேஷன் கார்டு இருக்கறவங்களுக்கெல்லாம் இன்னிக்கு கொடுக்கறாங்க.’

‘என்கிட்ட இல்ல.’

கட்டிங்கை முடிக்கும் நிலைக்கு வந்தார் என்னவர். கோடை வருகிறதல்லவா. இன்னும் கொஞ்சம் வெட்டச் சொல்லலாம் என்று நினைத்தேன். பயமாகவும் இருந்தது. இதுவரை விபத்து இல்லை. இனி நேர்ந்துவிட்டால்?

‘இன்னும் கொஞ்சம் வெட்டாலாம்பா’ – அண்ணனின் குரல் கொடுத்தார். மீண்டும் கத்திரிக்கோல் சோம்பல் முறித்தது. 45 நிமிடங்கள் நகர்ந்திருந்தன.

கத்தி போட ஆரம்பித்தார். கழுத்தருகே வரும்போது இதுவரை உயில் எழுதவில்லையே என்ற கவலை தோன்றியது. அதிலும் தப்பித்துவிட்டேன்.

எழுந்துகொள்ளலாம் என்ற நிலையில் அண்ணன் விடவில்லை. ‘மீசையை டிரிம் பண்ணி விடுப்பா?’

தில்லு முல்லு தில்லு முல்லு பாடல் எனக்குள் ஒலித்தது. வேண்டாம் என்று அவசரமாகச் சொல்லிவிட்டு பணத்தைக் கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டேன். என்னவர் விடவில்லை. நான் நகர நகர ‘நில்லுங்க சார்’ என்று என் மேல் ஒட்டியிருந்த ‘ரோம சாம்ராஜ்யத்தை’ தட்டிவிட்டுக் கொண்டே வந்தார்.

அப்பார்ட்மெண்ட் வாசலுக்குள் நுழைந்தேன். இரண்டு ஆட்டோக்களும் நுழைந்தன. ஒவ்வொன்றிலும் இரண்டுரண்டு கலர் டீவி பெட்டிகள்.

மூன்று பெண்மணிகள் கிளம்பித் தயாராக நின்றார்கள். ‘என்ன ஆன்ட்டி நீங்க டீவி வாங்கப் போகலியா?’

‘கால் டாக்ஸி சொல்லிருக்கோம். வெயிட்டிங்!’