தமிழக அரசு விருது

தொழில் முனைவோர் கையேடு புத்தகத்துக்காக எழுத்தாளர் எஸ்.எல்.வி. மூர்த்திக்கு தமிழக அரசின் விருது கிடைத்துள்ளது. சிறு தொழில் முனைவோர் மத்தியிலும் தொழில் தொடங்கும் ஆர்வம் கொண்டவர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்ற புத்தகம் இது.

தொழில் முனைவோர் கையேடு புத்தகத்தை வைத்து நாங்கள் தயாரித்த கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியும் நல்ல கவனம் பெற்றது.

மூர்த்தி சாருக்கு கிழக்கு ஆசிரியர் குழுவின் சார்பாக வாழ்த்துகள்!

ரஜினியை மிஞ்சிய கமல்!

அதிரடியான, பாக்ஸ் ஆபிஸ் ஹிட் படங்களையும் அமைதியான கலாபூர்வமான படங்களையும் ஒருங்கே ஒருவரால் அளிக்கமுடியும் என்பதை கமல்ஹாசன் அளவுக்கு ஆணித்தரமாக நிரூபித்த இன்னொரு நடிகர் இங்கே இல்லை.

கோடம்பாக்கத்தின் விதிகளை மிகக் கறாராகக் கடைபிடித்த அதே கமலால் அந்த விதிகள் ஒவ்வொன்றையும் அடுத்தடுத்து உடைக்கவும் முடிந்தது. உடைபட்ட ஒவ்வொன்றும் சாதனை படைத்தது. தமிழ்த் திரையுலகில் கமல் மேற்கொண்ட பரீட்சார்த்த முயற்சிகளுக்குப் பின்னால், அவற்றின் வெற்றி, தோல்விகளுக்குப் பின்னால், புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்கத் துடிக்கும் ஒரு விஞ்ஞானியின் ஆர்வத்தைக் காணலாம்.

நடிப்பின் இலக்கணத்தை நிர்ணயித்தவர் சிவாஜி என்றால் அதை வெற்றிகரமாக நடைமுறைக்குப் பழக்கியவர் கமல். அதனால்தான், இந்த இருவரையும் பல சமயம் ஒரே நேர் வரிசையில் நிற்க வைத்து பெருமிதம் கொள்கிறது திரையுலகம்.

கமலின் சாதனைகள் அவர் நடிப்பிலோ அவர் பெற்ற விருதுகளிலோ, பாராட்டுகளிலோ அடங்கியிருக்கவில்லை. தமிழ் திரையுலகை அதன் அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல அவர் கொண்டிருக்கும் ஏக்கத்தில், அதற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் அவர் நெஞ்சுறுதியில் அடங்கியிருக்கிறது.

சிவாஜி, ஜெமினி, சின்னப்பா தேவர் வரிசையில் பா. தீனதயாளனின் அடுத்த விறுவிறுப்பான புத்தகம் இது.

*

நேற்றுதான் புத்தகக் கண்காட்சிக்கு கமல் புத்தகம் வெளிவந்தது. வந்த நிமிடத்திலிருந்தே வாசகர்கள் விரும்பி எடுத்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். திரையுலகத்தினர் மட்டுமல்ல, வெகுஜன வாசகர்களும் வாங்கிச் சென்றார்கள். கமல் கிழக்கின் ஹிட் புத்தக வரிசையில முதல் நாளே சேர்ந்துவிட்டது.

எடிட் செய்யும்போதே நினைத்தேன், கமல் புத்தகம் நல்ல கவனத்தைப் பெறும் என்று. ஆனால் நான் எதிர்பார்த்தைவிட, நல்ல வரவேற்பு பெற்றது குறித்து மகிழ்ச்சி. விமரிசனங்களுக்காகக் காத்திருக்கிறேன்.  நான் அறிந்து கிழக்கின் ரஜினி புத்தகம் இந்த அளவுக்கு விறுவிறுப்பான விற்பனையில் இடம்பெறவில்லை. (நண்பர் ராம்கி கோபித்துக் கொள்ளமாட்டார் என்ற உரிமையில் சொல்கிறேன்.)