காலை 7:25 ;'(

ஆல் இந்தியா ரேடியோ

நேரம் காலை ஏழு மணி இருபந்தைந்து நிமிடம்

இன்று ஒரு தகவல்

வழங்குபவர்…

தன் எளிமையான பேச்சினால் எல்லோருடைய இதயத்திலும் இடம்பிடித்த மனிதர் தென்கச்சி சுவாமிநாதனுக்கு அஞ்சலி.

Alt + Ctrl + Del ஆகாஷ்!

(இந்தக் கட்டுரைகளில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள், உரையாடல்கள் யாவும் கற்பனை அல்ல. உங்களைக் குறிப்பிடுவதாகக் கூட இருக்கலாம். ஹிஹிஹி… )
1998

‘சுளையா… சுளை சுளையா செமஸ்டருக்கு செமஸ்டர் முப்பதாயிரம் ரூவா கட்டிருக்குலே… எப்படியாவது அரியர்ஸையெல்லாம் க்ளியர் பண்ணிருலே’ன்னு உள்மனசு கிடந்து குய்யோ முய்யோன்னு கதறுது! இப்பத்தான் பிஎஸ்சி மேத்ஸ் முடிச்சு, எம்சிஏ சேர்ந்தாப்புல இருக்குது. ஆனா வெட்டியா விமலாகிட்ட கடலை போட்டதுலயே ரெண்டரை வருசம் ஓடிப்போச்சு.

மவனே இதுவரைக்கும் அஞ்சு அரியர்ஸ் வைச்சிருக்க. இந்த அஞ்சாவது செமஸ்டர்லயும் எண்ணிக்கையைக் கூட்டிடாத, நெஞ்சு தாங்காது. நாளைக்கு ஆரக்கிள் பேப்பர் இருக்குடா, படிடா மவனே… படிடா… அய்யோ இன்னிக்குன்னு பார்த்து கிரிக்கெட் மேட்ச் நடக்குதே. ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு டீவியைப் போடலாமா..?

1999

என்னடா இவங்க நமக்கு மேல ஃப்ராடா இருக்கானுங்க. இது எனக்கு பைனல் செமஸ்டர். ஏதாவது ப்ராஜெக்ட் தேடலாம்னு சென்னைக்குக் கிளம்பி வந்தேன். பெரிய கம்பெனிக்காரங்க எல்லாம் ‘நோ என்ட்ரி’ன்னு தொரத்துனான். சரி, எதாவது சின்ன கம்பெனியாப் பாத்து பட்டறையைப் போடலாமுன்னு ‘ப்ராஜெக்ட்ஸ் அவைலபிள்’ பேப்பர் வெளம்பரம் பார்த்து இந்த இடத்துக்கு வந்தேன். இனிக்க இனிக்கப் பேசி பத்தாயிரம் குடுன்னு பதவிசா கேட்டான். சரி, இப்பவாவது ஏதாவது கத்துக்கலாமேன்னு சொல்லி நானும் கொடுத்தேன். வீக்லி டென் ஹவர்ஸ். அதுல டூ ஹவர்ஸ் சிஸ்டம் யூஸ் பண்ணலாமுன்னு சொன்னாங்க. ஆனா அவங்க கொடுத்த சிஸ்டத்துல வீபி, ஆரக்கிள்னு ஒரு எலவும் இன்ஸ்ட்டாலே பண்ணலை. வெறுமன கம்ப்யூட்டர்ல சீட்டு விளையாண்டுகிட்டு இருந்தேன்.

ரெண்டு மாசம் முடிஞ்சே போச்சு. இன்னிக்கு மூஞ்சிக்கு முன்னாடி, ‘ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட்’, ‘லைப்ரரி மேனேஜ்மென்ட்’, ‘பில்லிங் மேனேஜ்மென்ட்’னு மூணு சர்ட்டிபிகேட்டைத் தூக்கிப் போட்டு, ‘உன் ப்ராஜெக்ட் முடிஞ்சுது. இதுதான் சர்ட்டிபிகேட். எது வேணுமோ எடுத்துக்கோ’ன்னு சொல்லுறான். அடங்கொக்கமக்கா… ப்ராஜெக்ட் வைவா-ல எப்படிச் சமாளிக்கப் போறேன்னு தெரியலயே?

2000

வேலை தேடப் போறேன்னு சென்னைக்கு வந்து செங்கல்லை நட்டியாச்சு. மூணு மாசமாச்சு. வீட்டுல இருந்து வர்ற பணத்துல, பக்கத்துல இருக்கு மெஸ் புண்ணியத்துல வாழ்க்கை சுமுகமா ஓடிக்கிட்டிருக்கு. திநகரு, ஸ்பென்ஸர் ப்ளாசா, பெசண்ட் நகர் பீச்சுன்னு எதோ ஃபிகரும் பீருமா டைம் பாஸாகுது.

ஆனா எதாவது கம்பெனில இன்டர்வியூக்குன்னு போனா, முத ரவுண்டுலயே நம்ம முகமூடி டார்டாரா டர்ராயிடுது. வீபி, ஆரக்கிள், சி++… இதெல்லாம் படிச்சிருக்கேன்னு சொல்லி வெளிய தலைகாட்ட முடியல. எவனாவது ஒருத்தன் வீபி கத்துக்குறதுக்குன்னு சம்பளம் இல்லாம வேலை கொடுத்தாக் கூட சேர்ந்துரலாம். அவனவன் கேக்குற கேள்வியைப் பார்த்தா, ஜப்பான்காரன் பாஷை மாதிரி புரியவே மாட்டிங்குது.

இப்படியே போய்க்கிட்டிருந்தா சென்னைல நீ கிழிச்சது போதும், ஊரு பக்கமா வந்து நம்ம கடையிலேயே உக்காந்து வியாபாரத்தைப் பாருன்னு உத்தரவு போட்டுருவாரு எங்கய்யா. இப்போதைக்கு பிஎஸ்சின்னு குவாலிபிகேஷனைக் காட்டி, ஏதாவது டேட்டா என்ட்ரி வேலைக்குப் போகலாம். மாசம் ரெண்டாயிரம் ரூவா கிடைக்கும்.

2001

அரியர்ஸ் கணக்கை அப்படி இப்படி பார்டர்ல பைசல் பண்ணியாச்சு. ஆகாஷ் எம்சிஏன்னு வருங்காலத்துல என் கல்யாணப் பத்திரிகைல வக்கணையாப் போட்டுக்கலாம். கூடிய சிக்கீரம் இந்த எழவு டேட்டா என்ட்ரியை விட்டு வெளிய வரணும். விட்டா, இதுலயே சிக்கிச் சீரழிஞ்சு முன்னேறிறுவேனோன்னு பயமா இருக்கு.

பீல்டு மாறணும். ஆங்.. அது என்ன.. ஆரக்கிள்… ஆரக்கிள்… அதுல அட்வான்ஸ் கோர்ஸ் ஏதாவது சேர்ந்து, அதையாவது ஒழுங்காப் படிச்சு, நல்ல வேலைக்குப் போகணும். கூட படிச்சவனெல்லாம் பத்தாயிரம், பதினைஞ்சாயிரம் சம்பாதிக்கிறேன்னு மெயில் அனுப்பி வயிறெரிய வைக்குறானுங்க. விமலாக்கு வேற கல்யாணம் ஆயிருச்சு. அடுத்த வாரம் புருஷனோட யுஎஸ் போறாளாம். டேய் ஆகாஷு, உன் வாழ்க்கை என்னடா இன்னும் boot ஆகாத சிஸ்டமாவே இருக்கு?

2002

‘டேட்டாவேர்ல்ட் கம்பெனில சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டரா ஒரு வருஷம், ஜே&ஜே பிரைவேட் லிமிடெட்ல ப்ரோகிராமரா ஒன்றரை வருஷம், அப்புறம் அது என்ன, ஆங் ஸ்வஸ்திக் சாஃப்ட்வேர்ஸ்ல ஆரக்கிள் ப்ரோகிராமரா கடந்த ரெண்டு வருசமா வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். இப்போ நான் வாங்குற சம்பளம் எட்டாயிரம்’ – இந்த டயலாக்கை நியாபகப்படுத்தி சொல்லிப் பார்த்துக்குவேன். ஏன்னா அப்படித்தான் என்னோட ரெஸ்யூம்ல போட்டிருக்கேன்.

ஆமாங்க… Fake-தான். 100% சுத்தமான பொய்களால் நிரப்பப்பட்ட ரெஸ்யூம்தான். ‘Fake போட்டு வாழ்வாரே வாழ்வார் –  மற்றோரெல்லாம் பிழைக்கத் தெரியாதவர்’-னு வள்ளுவரே சொல்லியிருக்காரே! ஆரக்கிள்ல அட்வான்ஸ்  கோர்ஸ் ஒண்ணு படிச்சிட்டு நானும் கடந்த ஆறு மாசமா, இதே Fake ரெஸ்யூமோட கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கிட்டிருக்கேன். எதாவது கன்டிஷனைச் சொல்லி, query எழுதச் சொல்லுறான். worry ஆகிப் போகுது. எப்படி ஒரு டேட்டாபேஸை backup எடுப்பேன்னு கேக்குறான். அதுல நான் pack-up ஆயிடுறேன். பிள்ளையாரே, எனக்கு மட்டும் ஒரு வேலை கிடைச்சுட்டா, 1008 ஆரக்கிள் query எழுதி உனக்கு மாலையாப் போடுறேன்.

2003

டேய் ஆகாஷு… உன்னையும் நல்லவன்னு நம்பி ஒருத்தன் வேலை கொடுத்துட்டான்டா! சம்பளம் வேற 15000-னு சொல்லிட்டான். ஜாய்ன் பண்ணி ஒரு வாரமாச்சு. எந்த ப்ராஜெக்ட்ல போடப் போறாங்கன்னு தெரியல. ஏதோ சமாளிக்கிற அளவுக்கு ஆரக்கிள் தெரியும், எடக்குமடக்கா ஏதாவது வேலை கொடுத்து, கோக்குமாக்க நான் முழிச்சி, இவன் Fake-தான் கண்டுபிடிச்சிருவாங்களோன்னு அடிவயிறு ரிமைண்டர் வைச்சு அரை மணி நேரத்துக்கு ஒருமுறை கலங்கிக்கிட்டே இருக்கு.

இவ்வளவு நாள், மாசம் ரெண்டாயிரத்தை வைச்சே இன்பமா வாழ்ந்துட்டேன். இனிமே மாசம் 15000 ரூபா வரப் போகுதே.. அவ்வளவு பணத்தை எப்படிச் செலவழிக்க? பீட்ஸா, பீட்டர் இங்கிலான்ட், கிரெடிட் கார்டு, டிஸ்கோதேன்னு உன் வாழ்க்கையே மாறப் போகுதுடா மச்சான்!

2004

ங்கொய்யால… பதினைஞ்சாயிரம் சம்பளம் கொடுத்துட்டு, முப்பதாயிரத்துக்கு வேலை வாங்குறானுங்க. கடைசியா என்னிக்கு வீட்டுக்குப் போனேன்னு மறந்து போச்சு. தீவாளிக்கு லீவு தர மாட்டேனுட்டானுங்க. கேட்டா, யுஎஸ் க்ளையண்ட். தீவாளி அன்னிக்கி முக்கியமான call வரும். இருந்தே ஆகணுங்கிறாரு என்னோட ப்ராஜெக்ட் மேனேஜர். நான் எப்படியோ போராடி ஒருநாள் லீவு வாங்கி, ஊருக்குக் கிளம்பிட்டேன்.

பஸ், டிரெயினு எதுலயும் டிக்கெட் இல்லாம கஷ்டப்பட்டு, ஒரு டப்பா ப்ரைவேட் பஸ் புடிச்சு ஊர் பக்கத்துல போறேன். கம்பெனில இருந்து போன் வருது. ‘ஆகாஷ், உடனே கிளம்பி வாங்க. கோடிங்ல நிறைய bugs இருக்கு’ன்னு ப்ராஜெக்ட் மேனேஜர் மிரட்டுறாரு. ‘சார் இப்பத்தான் ஊருக்குள்ளேயே போகப் போறேன்’னு பரிதாபமா சொல்லுறேன். ‘நோ ப்ராப்ளம். அடுத்த பஸ்ஸைப் பிடிச்சு வந்திருங்க’ன்னு கூலா சொல்லுறாரு. ம்ஹூம்… இனிமே தாங்காது. கம்பெனி மாறிட வேண்டியதுதான்.

2005

இந்த வருசத்துலேயே ரெண்டாவது கம்பெனி மாறப்போறேன். வருசத்துக்கு நாலு லட்சம் தர்றேன்னு சொல்லிருக்கான். லாப்டாப் தர்றதாவும் சொல்லிருக்கான். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி 50 கிலோ இருந்த நான், இப்ப 80-ஐத் தொடப் போறேன். தொப்பையைக் குறைக்கணும். ஜிம் போகணும். ஏன்னா வீட்டுல பொண்ணு பாக்குறாங்க.

2006

நான் இப்போ பிஎம் ஆகிட்டேன். அதான் ப்ராஜெக்ட் மேனேஜர். இப்ப கொஞ்ச பேரை இண்டர்வியூ எடுத்துக்கிட்டிருக்கேன்.

‘பேரு என்ன, சுபாஷா? ஓகே… SQL-ல உங்க ஸ்டிரென்த் என்ன? இப்ப எங்க வொர்க் பண்ணுறீங்க? ஆரக்கிள் ப்ரொகிராமரா எத்தனை வருஷம் எக்ஸ்பீரியன்ஸ்? ஓகே வீ வில் கால் யூ லேட்டர்’

அந்தப் பையன் போயிட்டான். நான் அவனை செலக்ட் பண்ணப் போறதில்லை. முசப் புடிக்குற நாயை மூஞ்சப் பார்த்தா தெரியாதா! ரெஸ்யூம் சுத்த Fake. அதை வெச்சிக்கிட்டு என்கிட்டயே டகால்டி வேலை காட்டுறான். இன்டர்வியூல எப்படியெல்லாம் நடிக்கணும்னு அவன் இன்னும் பழகல. போகப் போக கத்துக்குவான். நாங்கள்ளாம் எவ்ளோ கஷ்டப்பட்டோம் தெரியும்ல?

# கிழக்கு வெளியீடு : லொள் காப்பியம்

கமலஹாசனின் குடும்பப் பாடல்!

லக் – முதல் ஹிந்தித் திரைப்படத்தில் ஷ்ருதிஹாசனுக்கு பேட் லக். அடுத்த அவதாரம், தந்தையின் படத்தில் இசையமைப்பாளராக. பாடல்கள் எப்படி இருக்கின்றன?

ஷ்ருதிஹாசன், அக்சரா, சுப்புலட்சுமி, கமலஹாசன் என்று எல்லோருடைய குரல்களும் உன்னைப் போல் ஒருவன் பாடல்களில் இடம்பெற்றிருக்கின்றன. இதுதான் குடும்பப்பாடலோ என்று நினைக்கத் தோன்றுகிறது. கௌதமியின் குரல் மட்டும்தான் கேட்கவில்லை. அதுகூட எந்தப் பாடலிலாவது கோரஸாக ஒலித்திருக்கிறதா என்று பிரித்துணர முடியவில்லை.

அல்லா ஜானே… கமலஹாசனின் குரல். பல்லவி நன்றாக இருக்கிறது. முதல் சரணத்தில் கமல் பாடும்போது ஏதோ வேண்டுமென்றே குரல் மாற்றி பாடுவதுபோலத் தெரிகிறது. மொத்தத்தில் இந்தப் பாடல் இந்த ஆல்பத்தின் நெம்பர் ஒன் பாடல்.

அல்லா ஜானே ரீமிக்ஸ்… ஷ்ருதிஹாசனின் குரலில். சிக்னலில் ஆரஞ்சிலிருந்து ரெட்டுக்கு மாறுவதற்குமுன் வேகமாக வண்டியில் கடந்துபோவதுபோல உச்சரிப்புகளில் வேகம். ரசிப்புக்குரியதாகப் படவில்லை. ஆல்பத்தில் எண்ணிக்கைக்காகச் சேர்த்திருக்கிறார்கள்.

நிலை வருமா? – அடுத்த பாடல். பாம்பே ஜெயஸ்ரீ, கமலின் குரல்கள். கேட்கக் கேட்க ஒருவேளை பிடிக்கலாம். நின்றே கொல்லும் தெய்வங்களும் – இன்றே கொல்லும் மதப்பூசல்களும் – ஒன்றே செய்யும் என உணரும் – நன்றே செய்யும் நிலைவருமா? – யாருடைய வரிகள்? ஏதோ ஒரு பிரபல எழுத்தாளர் தான் ஷ்ருதிஹாசனின் இசையமைப்பில் பாடல் எழுதுவதாக குமுதத்தில் மகிழ்ச்சி பிதுங்க பேட்டி கொடுத்ததாக ஞாபகம். அது ‘அல்லா ஜானே’ என்று சக நண்பர்கள் சொல்கிறார்கள்.

உன்னைப் போல் ஒருவன் – தீம் மியூஸிக். சம்பவானி யுகே யுகே என அடிக்கடி ஒலிக்கிறது. ‘ஐ ஆம் தி நியூ ஃபேஸ் ஆஃப் டெரர்!’ என்று பல குரல்கள் வசனம் பேசுகின்றன. இது இந்து தீவிரவாதத்தைக் குறிக்கும் பாடல் என்று யாராவது களமிறங்கி பாடலுக்கு பாப்புலாரிட்டி கொடுக்காமலிருந்தால் சரி.

வானம் எல்லை – ப்ளாஸேவின் கரடுமுரடு RAP-ல் ஷ்ருதிஹாசனுக்கு அறிமுகம் கொடுத்து ஆரம்பமாகிறது பாடல். ஷ்ருதியின் குரல் ஸ்டைலிஷாக வெளிப்பட்டிருக்கிறது. மற்றபடி பாடல் பத்தோடு பதினொன்று.

கமலஹாசன் ஏதாவது ஒரு படத்தை ரீமேக் செய்கிறார் என்றால் முதலிலேயே அதன் மூலப்படத்தை பார்த்துவிடுவேன். வசூல்ராஜாவின் அறிவிப்பு வந்த உடனேயே முன்னா பாய் பார்த்து விட்டேன். வசூல்ராஜா எத்தனை முறை பார்த்தாலும் எனக்குச் சலிப்பு ஏற்படுத்தாத படம். காரணம் கிரேஸி மோகன். ஆனால் முன்னா பாய் அளவுக்கு வசூல் ராஜாவில் சில காட்சிகளில் அழுத்தம் இல்லை என்பதே என் கருத்து.

உன்னைப் போல் ஒருவனின் மூலப்படமான தி வெட்நெஸ்டே பார்த்துவிட்டேன். அது மிகவும் பிடித்தது. பார்க்கலாம். அது அதுவாகவே வருகிறதா அல்லது கமலின் வாசனையோடு புதிதாக வருகிறதா என்று.

குருதிப்புனல்போல இந்தப் படத்துக்கும் பாடல்கள் தேவையில்லை. ஆல்பத்தில் தீம் மியூஸிக், ரீமிக்ஸ் தவிர மூன்று பாடல்கள் இருக்கின்றன. A Shruthi hassan Musical என்று போடுவதற்காக இருக்கலாம். ரீரெகார்டிங் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.

பாடல்களில் ஷ்ருதிஹாசன் ஈஸியாகப் பாஸ் செய்துவிட்டார். ஆனால் எந்தப் பாடலுமே உருக்கவும் இல்லை, அதே சமயம் உறுத்தவும் இல்லை.

இதனால் சகலமானவர்களுக்கும்…

அம்மா அப்பா தாத்தா பாட்டி அண்ணன் அக்கா தம்பி தங்கச்சி பெரியம்மா பெரியப்பா சித்தப்பா சித்தி மாமா மாமி மாமனாரு மாமியாரு கொழுந்தனாரு கொழுந்தியாளு நாத்தானாரு அத்தான் அத்தை ஒண்ணு விட்ட சகோதரன் ஒண்ணாங்கிளாஸ் தோழி மகன் மருமகன் மருமகள் மகள் பேத்தி பேரன் பூட்டன் பூட்டி எதிர்வீட்டுக்காரரு பக்கத்துவீட்டு ஆண்ட்டி, தொப்பையுள்ள அங்கிள்… மற்றும் நம் உறவினர்களெல்லாம் வயசு வித்தியாசமில்லாம, கண்டிப்பா கேட்க வேண்டிய நிகழ்ச்சி ஒண்ணு வரப்போகுது.

வேறெங்க? கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சி – ஆஹா 91.9 எஃப். எம்லதான். வர்ற ஞாயித்துக்கிழமை (செப்டெம்பர் 6, 2009) பகல் 12.00 முதல் 1.00 மணி. பேசப்போறவங்க அருணா ஷ்யாம். இவங்க ஒரு டயட்டீசியன். நிகழ்ச்சியோட டாபிக் டயட்.

எது டயட்? எதெல்லாம் டயட் இல்லை? எது சத்தான உணவு? குழந்தைங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்குற உணவு என்னென்ன? கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கான டயட் என்ன? வயசானவங்களுக்கான சாப்பாட்டு முறை என்ன? எந்தெந்த நோயாளிகள் எது எதை சாப்பிடணும், தவிர்க்கணும்? வாலிப வயசுல கட்டிளங்காளைகளும் ஸீரோ சைஸ் ஃபிகர்களும் – என்ன மாதிரியான டயட்டை கடைபிடிக்கலாம்? இன்னும் நிறைய விஷயங்கள் இந்த நிகழ்ச்சில வரப்போகுது.

ஆகவே அம்மா அப்பா தாத்தா பாட்டி அண்ணன் அக்கா தம்பி தங்கச்சி பெரியம்மா பெரியப்பா சித்தப்பா சித்தி………………

மனமாற்றம்!

எல்லா டீவிக்களுக்கும் ரிமோட் உண்டு. எல்லா வானொலிகளுக்கும் கிடையாது. இருந்தாலும் ஆல் டைம் பாடல்களை வழங்கும் ஒரு எஃப்.எம். சேனலில் அளவுக்கு அதிகமாக விளம்பரம் வந்தால்கூட சட்டென .1லிருந்து .9க்குத் தாவி விடுவோம்.

ஆனால் பாடல்களே இல்லாமல் எஃப். எம்மில் ஒரு மணி நேரத்துக்கு நிகழ்ச்சி செய்ய முடியுமா? ஏதாவது ஒரு துறை குறித்தோ, பிரச்னை குறித்தோ இரண்டு அல்லது மூன்று நபர்கள் ஒரு மணி நேரம் கலந்துரையாடுவார்கள். கிழக்கு பாட்காஸ்ட்டின் இந்த கான்செப்டுடன் சில எஃப்.எம். சேனல்களை அணுகியபோது, ‘ரிஸ்க்கு மாமூ’ என்று அவர்கள் முகம் திருப்பிக் கொண்டார்களாம். ‘செஞ்சு பார்க்கலாம்’ என்று வாசலைத் திறந்துவிட்டது குமுதம் ஆஹா 91.9 எஃப்.எம்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்வது முதல் நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்வது, பின்பு அதை எடிட் செய்து ஒலிபரப்புக்காக தயார் செய்வது வரையிலான பொறுப்புகள் எனக்கு வழங்கப்பட்டன. ஆரம்பத் தடுமாற்றங்கள் நிறையவே இருந்தன. பேச எடுத்துக் கொள்ளும் பொருள், பேசும் நபரைப் பொருத்து நிகழ்ச்சியின் சுவாரசியம் அமைந்தது. கருத்துகள், விமரிசனங்கள் நிறையவே வந்தன.

‘பலர் ஒரே சமயத்துல பேசுறதுங்கிறது ஆல் இந்தியா ரேடியோவோட பழைய கான்செப்ட். அதை உடைக்கிறதுக்காகத்தான் எஃப்.எம்.லாம் வந்துச்சு. இரண்டு பேர் எப்பவாவது பேசுலாம். ஒருத்தரே கம்மியா பேசனாத்தான் நிகழ்ச்சி எடுபடும். இதான் இப்ப டிரெண்ட். நீங்க திரும்பவும் பழைய கான்செப்டுக்கே போறீங்க. பாடல்களும் இல்லை. சரி, செஞ்சு பாருங்க. எப்படிப் போகுதுன்னு பார்க்கலாம்’ – ஆஹாவிலேயே ஒரு நண்பர் சொன்ன கருத்து இது.

பலவிதமான விமர்சனங்களைக் கடந்து கிழக்கு பாட்காஸ்ட் கடந்த ஆறு வாரங்களாக ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. பத்ரியின் எண்ணங்கள் வழியாக மறுஒலிபரப்பும் நடக்கிறது. இன்னும் பல வாரங்கள் நிகழ்ச்சியைத் தொடர திட்டமிட்டிருக்கிறோம். நிகழ்ச்சியை எப்படியெல்லாம் மேம்படுத்தலாம், சுவாரசியப்படுத்தலாம் என்று ஒவ்வொரு வாரமும் கற்றுக் கொண்டிருக்கிறோம்.

‘ஒன் ஹவர் இப்படி ரெண்டு மூணு பேரு ஏதோ ஒரு டாபிக்ல மொக்கையப் போட்டா எவனும் கேக்க மாட்டான்’ – நிகழ்ச்சியை முழுவதுமாகக் கேட்கப் பொறுமையில்லாத என் நண்பர்களே அடித்த கமெண்ட் இது. ஊக்கப்படுத்தும் கமெண்ட்களும் எனக்கு நேரடியாகக் கிடைத்திருக்கின்றன. என் வீட்டின் அருகில் ஒரு பலசரக்குக் கடையில் வேலை பார்க்கும் குமார் என்பவர் சொன்ன கமெண்ட் முக்கியமானது.

‘நான் வித்யா நிகழ்ச்சி கேட்டேன். அவங்க பட்ட கஷ்டத்தையெல்லாம் கேக்குறப்போதான் அவங்கள புரிஞ்சுக்க முடிஞ்சது. திருநங்கைன்னு ஒரு வார்த்தை இருக்குதுன்னே உங்க ப்ரோகிராம்ல இருந்துதான் தெரிஞ்சுக்கிட்டேன். இவ்ளோ நாளா அவங்கள அலின்னும் அந்த நம்பரைச் சொல்லியும்தான் கூப்டுக்கிட்டிருந்தேன். இனிமே கண்டிப்பா அவங்களை அப்படிக் கூப்பிடமாட்டேன், அந்த நம்பரைச் சொல்லமாட்டேன்.’

சின்னதாக ஒரு மனமாற்றத்தைக் கொண்டு வந்தாலே அது நிகழ்ச்சிக்குக் கிடைத்த வெற்றிதானே!

லிவிங் ஸ்மைல் வித்யா பங்குபெற்ற கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சி இங்கே ஒலிவடிவில்.