‘நான் யார்?’ – சோ

கேள்வி : சோ என்பதற்கு அர்த்தம் என்ன?

சோ :

‘சோ’ என்பதற்கு அர்த்தமே ஒன்றுமில்லை. நான் செய்யும் பல காரியங்களைப் போல, இதற்கும் அர்த்தம் கிடையாது. எப்படி இருந்தாலும் சரி, வீட்டில் இதுதான் என் செல்லப்பெயர்.

(1974ல் பொம்மை சினிமா மாத இதழில் ஒரு கேளிவிக்கு சோ அளித்துள்ள பதில்.)

லாலுவுக்கு ஒரு வேண்டுகோள்!

அதிகாலை ஏழு அம்பதுக்கு என் செல்ஃபோன் சிணுங்கும். நண்பர்களோ உறவினர்களோ யாராவது  இருக்கும். எடுத்து காதில் வைப்பேன்.

‘டேய், வீட்லதான இருக்க? வர்ற சண்டே, எங்கம்மாவை ஊர்ல இருந்து அழைச்சுட்டு வர்றேன். தி ருநெல்வேலில இருந்து. தட்கல்ல டிக்கெட் போடணும். எதுல இருக்குதுன்னு பார்த்து எனக்கு ஃபோன் பண்ணு. ம்.. வேணாம், நீயே புக் பண்ணிடு. எனக்கும் அம்மாவுக்கும். அம்மா வயசு  அம்பத்தியாறு.’

வைத்துவிடுவார்கள். செல்லில் மணி பார்ப்பேன். ஏழு அம்பத்துரெண்டு. இன்னும் எட்டு நிமிடங்கள்தான் இருக்கின்றன. தட்டுத்தடுமாறி எழுந்துநிற்பேன். சுவிட்சைத் தட்டுவேன். ரேடியோ  ஒன்னில் சுச்சியின் குரல் குட்மார்னிங் சொல்லும். பக்கத்து அறைக்கு நகருவேன். யுபிஎஸ்ஸின்  முனகலுடன் சிஸ்டம் உயிர்த்தெழும். பிஎஸ்என்எல் மோடம் பல்புகளால் சிரிக்கும். ஐஆர்சிடிசிக்குள்  லாக்-இன் ஆனபின் முகம் கழுவச் செல்லுவேன்.

வந்து உட்காரவும் ஐஆர்சிடிசியின் நேரம் ஏழு அம்பத்தொன்பதாக இருக்கும். பரபரப்பாவேன்.  இன்னொரு வின்டோவில் சதர்ன்ரயில்வே தளத்தில் ரயில்களையும் காலி இருக்கைகளையும்  தெரிந்துகொள்ள கண்கள் படபடக்கும். புறப்படும் இடம், சேருமிடம், தட்கல், பயணிகளின் விவரங்கள் விரல்களிலிருந்து சிதறிவிழும். பணம் செலுத்தும் ஆப்சனை க்ளிக் செய்யும் நேரத்தில் பெரும்பாலும் ராகுகாலம் ஆரம்பமாகும்.

ஒன்று ஐசிஐசியை தளம் வேலைசெய்யாது அல்லது பணம் செலுத்திய பின் சர்வர் எரர் வரும்.  டிக்கெட் பதிவு செய்யப்பட்டிருக்காது. மீண்டும் பரபரவென ஆரம்பத்திலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். அதற்கும் எல்லா டிக்கெட்டுகளும் தீர்ந்துபோய்விடும் அபாயம் நிறைய உண்டு. டிக்கெட்  புக் செய்யும் நேரத்தில் அவைலபிள்-ஆக இருக்கும். பணம் எல்லாம் செலுத்தியபின் வரும்  டிக்கெட்டில் வெயிட்டிங் லிஸ்ட் என பல்லிளிக்கும் சம்பவங்களும் சகஜம்.

நண்பனுக்கு ஃபோன் செய்வேன். ‘டேய், எல்லாம் காலி. ஏற்கெனவே ரெண்டுதடவை பணம் போயிருச்சு. ஒரே ஒரு ஸ்பெஷல் டிரெயின் விட்டிருக்கான். பகல் பதினொன்னுக்குத்தான் வந்து சேரும். முப்பதியிரெண்டு சீட் இருக்குது. போட்டுரவா?’

*

‘மாப்ளே, நவம்பர் 1 தீவாளி. நாளைக்கு புக்கிங் ஆரம்பமாகுது. உஷாரு!’

தீபாவளி, பொங்கல் என்றால் சரியாக தொன்னூறு நாள்களுக்கு முன்பாக டிக்கெட் புக் செய்ய ஒரு  பெரிய நெட்வொர்க்கே அமைத்து காலை எட்டுமணிக்காகக் காத்திருப்போம். ஆளுக்கு ஓர்  இடத்தில் இருந்துகொள்வோம். செல்ஃபோன்கள் தயார்நிலையில் இருக்கும்.

எட்டு மணிக்கு உள்ளுக்குள்ளிலிருந்து ஒரு குரல் அலறும்.. ‘ஃபயர்!’

‘டேய் எனக்கு ஐஆர்சிடிசிக்கு உள்ளேயே போகலடா. நீ பண்ணிரு’, ‘டேய் என் சிஸ்டம் ரீஸ்டார்ட்  ஆகியிருச்சு.’, ‘மச்சான், தூத்துக்குடி ஃபுல். அனந்தபுரில இருக்குது. சீக்கிரமா பண்ணுடா.’

தீபாவளி, பொங்கலை தூத்துக்குடி தவிர வேறெங்கு கொண்டாட முடியும்? பல்வேறு போராட்ட ங்களுக்குப் பிறகு தீபாவளிக்கான டிக்கெட் புக்கிங்கை செய்து முடிப்போம். அன்று  கிடைக்கவில்லையா? வேறுவழியில்லை, அடுத்தநாளைக்கு முயற்சி செய். துவண்டு விடாதே மனமே, தொடர்ந்து போராடு! உன் தீபாவளி உன் கையில்!

*

அலுவலக நண்பர்களுக்கு வெளியூரில் திருமணமா? ஏதாவது புத்தகக் கண்காட்சிக்கு வெளியூர்  செல்ல வேண்டுமா? அலுவலகத்தின் ஆஸ்தான ரயில்வே டிக்கெட் புக்கிங் வித்வான் முகிலைக் கூப்பிடுங்கள்!

‘மச்சான் நாளைக்குள்ள டிக்கெட்டை கேன்சல் பண்ணிருடா. அப்புறமா எவ்வளவு ஆச்சுன்னு சொல்லு. அனுப்புறேன்’ – இப்படி கேன்சல் சடங்குகளும் பொது வாழ்க்கையில் சகஜம். என்னுடைய பேங்க் ஸ்டேட்மெண்டை எடுத்துப் பார்த்தால், எனக்கும் ரயில்வேக்குமான பாசப்பிணைப்பு பளீரிடும். கொடுக்கல் நிறைய. வாங்கல் சற்றே நிதானமாகத்தான் நடக்கிறது. ஒவ்வொரு  டிக்கெட்டும் வங்கிகளுக்கு நான் கட்டிய கப்பத்தொகையை வைத்துமட்டுமே ஒரு நானோ கார் வாங்கியிருக்கலாம் போல!

*

ஒவ்வொரு இரவு தூங்குவதற்கு முன்பு நானும் சொக்கலிங்கமும் பேசிக்கொள்வோம். ‘நாளைக்கு யாருக்காவது டிக்கெட் புக் செய்யணுமா?’

இணையம், டிக்கெட் கவுண்ட்டரில் கால்கடுக்க நிற்கும் அவஸ்தைகளிலிருந்து விடுதலை கொடுத்திருக்கிறது என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்த சௌகரியம், இப்படி ஒரு ஏஜெண்ட் அவதாரத்தை எனக்கு அளிக்குமென நினைக்கவில்லை. இருந்தாலும் இணைய வசதியின்றி  கவுண்டரில் நிற்கும் சக மனிதர்களை நினைக்கும்போது உறுத்தலாகவே இருக்கிறது.

*

லாலுவுக்கும் வேலுவுக்கும் ஒரு வேண்டுகோள். டிக்கெட் பதிவு செய்வதில் எனது அனுபவம், வேகம், விவேகம், திறமை – இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு மாம்பலம் ரயில்நிலைய பதிவுச்சீட்டு அலுவலகத்தில் பார்ட்-டைம் வேலை போட்டுக் கொடுப்பீர்களா?

எல்லாக் கேள்விகளுக்கும் அழாமல் விடையளிக்கவும்.

போட்டித் தேர்வு. படபடப்புடன் சென்று அமர்ந்திருக்கிறீர்கள். இஷ்ட தெய்வங்கள் எல்லாம் கண்முன் வந்து செல்கிறார்கள். அந்த நேரத்திலும் பக்கத்து பெஞ்சில் அமர்ந்திருக்கும் பிங்க் நிற சுடிதார் பெண் கவனம் கலைக்கிறாள். தேர்வு அறை கண்காணிப்பாளர் வந்து வினா, விடைத்தாளை நீட்டுகிறார். இப்படி ஒரு வினாத்தாள் கொடுக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?

எல்லாக் கேள்விகளுக்கும் அழாமல் விடையளிக்கவும்.
மொத்த மதிப்பெண்கள் : ஏதோ பார்த்துப் போட்டுக் கொடுப்போம்.

1. சன் பிக்சர்ஸ் வழங்கியதிலேயே உன்னதமான காவியம் எது?
அ) தெனாவெட்டு ஆ) படிக்காதவன் இ) எட்டுமணி செய்திகள்

2. நியூட்டனின் மூன்றாவது விதியைக் கண்டுபிடித்தவர் யார்?
அ) கொலம்பஸ் ஆ) சயின்ஸ் வாத்தியார் இ) எஸ்.ஜே. சூர்யா

3. இந்தியாவின் கேப்பிடல் (CAPITAL) எது?
அ) InDiA ஆ) india இ) INDIA

4. த.பி.பா (தயவுசெய்து பின்னால் பார்க்கவும்) என்பதன் விரிவாக்கம் என்ன?
அ) தயவுசெய்யாமல் பின்னால் பார்க்கவும் ஆ) தயவுசெய்து பிராண்டிப் பார்க்கவும் இ) பா.பி.த.

5. ‘எதிர்ச்சொல்’ என்ற சொல்லின் எதிர்ச்சொல் என்ன?
அ) எதிரெதிர்ச்சொல் ஆ) எதிர்மௌனம் இ) எதிர் இல்லாத சொல்

6. சூரியன் இரவு நேரத்தில் எங்கே போய் தங்குகிறது?
அ) இருட்டான இடத்தில் ஆ) தாஜ் ஹோட்டலில் இ) அறிவாலயத்தில்

7. இந்தக் கேள்வியின் எண் என்ன?

அ) 8 ஆ) 10 இ) 15

8. அ-வும் ஆ-வும் அக்கா தங்கச்சி. ஆ-வும் இ-யும் ஒண்ணுவிட்ட தங்கச்சி. இ-யும் ஈ-யும் உறவுமுறை. ஈ-க்கு அ அத்தை. உ-க்கு ஈ சகலை. இ-க்கு உ சம்பந்தி முறை. ஆ-வை, ஈ கல்யாணம் பண்ணினா ஆ-வுக்கு ஈ என்ன வேணும்?
அ) தூரத்துச் சொந்தம் ஆ) பக்கத்து வீட்டுக்காரன் இ) பங்காளி

9. ஒரு வேலையை 12 பேர் 8 நாட்களில் செஞ்சு முடிக்கமுடியும். 16 பேர் 6 நாட்களில் செஞ்சு முடிக்கமுடியும். 20 பேர் 4 நாட்களில் செஞ்சு முடிக்கமுடியும். அப்படின்னா, அந்த வேலையை யாருமே செய்யலைன்னா அந்த வேலை எப்ப முடியும்?
அ) நேத்திக்கி ஆ) நாளைக்கி இ) அமாவாசை அன்னிக்கி

10. பதவிப்பிரமாணத்தின் போது ஒபாமா சொல்ல மறந்த அந்த வார்த்தை என்ன?
அ) எவனாயிருந்தாலும் வெட்டுவேன். ஆ) ஆசை, தோசை, அப்பளம், வடை  இ) பத்து ரூபாய்க்கு ‘சேஞ்ச்’ இருக்கா?

11. ஐஸ் கட்டி தயாரிக்க என்ன மூலப்பொருள் தேவை?
அ) பெரிய ஐஸ் கட்டி ஆ) மூளை இ) அடுப்பு

12. காற்றுக் குமிழுக்குள் என்ன நிறைந்திருக்கும்?
அ) கொட்டாவி  ஆ) பஞ்சு முட்டாய்  இ) உள்ளீடற்ற வெற்றிடம்.

13. ‘எக்ஸ்’ என்பது ஒரு இரட்டை எண். அதை ‘ஒய்’ ஆல் பெருக்கினால் 12 வரும். 3320 என்பது ‘எக்ஸின்’ ஐந்தரை மடங்கு. ‘ஒய்’ மற்றும் ‘இஸட்’டின் இரு மடங்குக் கூட்டுத்தொகை ‘எக்ஸின்’ மூன்று மடங்கு பெருக்குத்தொகையின் நாலில் ஒரு பங்கு. ‘எக்ஸ், ஒய், இஸட்’ – இவற்றின் மதிப்புகளைக் கண்டறிந்து, இரண்டால் பெருக்கி, 7-ஐக் கழித்தால் இறுதியில் என்ன வரும்?
அ) எரிச்சல் ஆ) தலைவலி இ) மனநோய்

14. கீழ்க்கண்டவற்றில் ‘உயிர்’ எழுத்துகள் எவை?
அ) கடசதபற ஆ) ஞஙணநமன இ) உயிர்

15) இருட்டான அறையொன்றில் நேராக நிற்கும்போது நமது நிழல் எங்கே விழும்?
அ) பக்கத்து வீட்டில் ஆ) உண்டியலில் இ) மொட்டை மாடியில்

16) 9841111111 என்ற எண்ணை டயல் செய்கிறீர்கள். லைன் கிடைக்கவில்லை. உடனே ரீடயல் செய்தால் என்ன எண் டயல் ஆகும்?
அ) 100 ஆ) 9841111112 இ) 98411111119841111111

17) நீங்கள் இறுதிக் கேள்வியை அடைந்துவிட்டீர்களா?
அ) தெரியவில்லை ஆ) புரியவில்லை இ) %#@%@(*^&

ஓனர்கள் ஜாக்கிரதை!

பிடிக்கக்கூடாத இடத்துல யாராவது பிடிச்சுக்கிட்டு இருந்தா பிடிச்சுக் கொடுக்கலாம்னு மொட்டையா சொல்லிப்புட்டாங்க. எங்கெல்லாம் பிடிக்கலாம்? பிடிக்கக்கூடாத இடத்துல பிடிச்சா, பிடிக்கறவங்களை யாரெல்லாம் பிடிக்கலாம்? பிடிச்சவங்களைப் பிடிச்சு என்ன பண்ணலாம்? இப்படி ஒரு மண்ணும் பிடிபடலை. பிடிக்கறவங்க எந்தவிதச் சங்கடமும் இல்லாம பிடிச்சுக்கிட்டுத்தான் இருக்காங்க. அப்போ நடுவண் அரசு கொண்டுவந்த தடை எதுக்கு?

சமீபத்தில் என் கையில் கிடைத்த பசுமைத் தாயகத்தின் நோட்டீஸ் இது. நடைமுறையில் சாத்தியப்படுமா என்று புரியவில்லை. சாத்தியப்பட்டால் சந்தோஷமே!