கந்தல்சாமி!

ஓப்பனிங் ஷாட்ல ஒரு கோபுரத்தைக் காட்டுறோம். கட் பண்ணுனா வேல். அடுத்த கட்ல தோகை விரிச்சாடுற மயில். அது திருப்போரூர் முருகன் கோயில். கட் பண்ணுனா பக்தர்களோட காவடியாட்டம். எல்லாத்தையும் மஞ்சக் கலர் டோன்ல காட்டணும். மங்களகரமா இருக்கும். கேமரா தரையோட தரையா உராசிட்டுப் போக நடந்துபோற ஒருத்தனோட கால்களைக் காண்பிக்கிறோம். அவன் ஒரு திண்டு மேல ஏறுறான். அங்க ஒரு மரம் இருக்குது. மரம் முழுக்க, பக்தர்கள் தங்கள் வேண்டுதலை பேப்பர்ல எழுதிக் கட்டி வைச்சிருக்காங்க. நடந்துபோனவனும் தன் சட்டைப்பையில இருந்து மடிச்ச ஒரு பேப்பரை எடுத்து மரத்துல கட்டுறான். கண்ணை மூடி கையெடுத்துக் கும்பிட்டு கடவுளை வேண்டிக்கிறான். அவன் மூஞ்சை க்ளோஸப்ல காட்டுறோம். அட, அது நாந்தான்.

சரி, என்ன வேண்டுதல் அது?

‘அப்பனே, கடவுளே கந்தசாமி! கலைப்புலியை ரசிகர்கள் கண்டிப்பா காப்பாத்த மாட்டாங்க. நீதாம்பா அவருக்கு இனிமேலாவது நல்லவழி காட்டணும்.’

*

தன்னை ஷங்கர் என்று நினைத்து சுசி கணேசன் போட்டுக் கொண்ட சூடு – கந்தசாமி. (அதற்காக ஷங்கர் புலியா என்ற விவாதத்துக்குள் இப்போது இறங்க வேண்டாம்.)

என்ன கதை?

அந்தப் புடலங்காயில் பெரிய வித்தியாசமோ, அழுத்தமோ எந்த எழவுமில்லை. மக்களுக்கு நல்லது செய்யும் சூப்பர் ஹீரோ. (சமூகத்துக்கு அவன் ஒரு சிபிஜ ஆபிஸர்.) சூப்பர் ஹீரோ யார் என விழி பிதுங்கத் தேடும் போலீஸ். யார் என்று தெரியாமலே அவனைக் கடவுளாக நினைக்கும் அப்பாவி ஜனம். வில்லன்களின் தில்லாலங்கடிகள். வில்லன் மகளின் (ஷ்ரேயா) காதல் கண்றாவிகள். சூப்பர் ஹீரோவின் முகமூடி கிழியும்போது, ‘அவரைக் கைது பண்ணாதீங்க. எங்களைக் கைது பண்ணுங்க’ என்று மக்களாகிய துணைநடிகர்கள் காலம் காலமாகப் பேசும் அதே புளித்த டயலாக். ஹீரோவுக்குச் சேதாரமில்லாமல் நீதி காப்பாற்றப்படுவது. கட்டக் கடைசி காட்சியில்கூட புதிதாக எதுவும் யோசிக்காத டைரக்டருக்கு சபாஷ்!

விக்ரம் என்ற ஒரு நல்ல நடிகர், இப்படிப்பட்ட மெகா சொதப்பல் படங்களில் மாட்டிக் கொண்டு கால விரயம் செய்வதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. ஒரு சூப்பர் ஹீரோவாக, கொக்கரக்கோ சேவல் மனிதனாக அவர் அறிமுகமாகும் ஆரம்பக் காட்சி – அசத்தல் எல்லாம் கிடையாது. அதில் மனிதர் சேவலின் உடலசைவு மொழியை தன் நடிப்பில் அச்சு அசலாகக் கொண்டு வந்திருப்பார். அப்புறம் பெண் வேடத்தில் நடனமாடிக் கொண்டே ஒரு சண்டைக் காட்சி. அம்புட்டுதான். கந்தசாமியில் விக்ரமின் ஃபெர்பார்மென்ஸ் என்று குப்புறப்படுத்து கொட்டாவியை அடக்கிக் கொண்டு யோசித்தால்கூட வேறு ஒன்றும் நினைவுக்கு வரவில்லை.

ஷ்ரேயா? ஒரு காட்சியில் பாத்-டப்பில் இருந்து எழுந்து வருவார். அந்தக் காட்சியில் மட்டும்தான் அவருக்கு உடை ஜாஸ்தி. கட்டிக் கொள்ள சற்றே பெரிய டர்க்கி டவலாகக் கொடுத்திருக்கிறார்கள். அதுபோக படம் முழுக்க பல காட்சிகளில் (வில்லியாக, கதாநாயகியாக) வருகிறார். என்ன, அந்த மொகரக்கட்டையில் என்னமோ சொல்வாங்களே, அதாம்பா.. சட்டுனு மறந்துபோச்சே… ஆங்… எக்ஸ்பிரஸன்ஸ்… ஜென்மத்துக்கும் வராதுபோல.

பிரபு இந்தப் படத்திலும் இருக்கிறார். பில்லாவில் வருவதுபோல ஒரு கேரக்டர். வெறுப்பாக இருக்கிறது. Behind the Screen காமெடியனாக தயாரிப்பாளர் இருக்க, திரையில் காமெடி வேண்டுமென வடிவேலுவைத் திணித்திருக்கிறார்கள். ஐந்து காட்சிகள். அதில் போலீஸ் விசாரணையில் அவர் செய்யும் காமெடி மட்டும் டபுள் ஓகே. படத்தின் நான் ரசித்த ஒரே ஸீன் அதுமட்டுமே.

திரைக்கதையில் ஏகப்பட்ட திருப்பங்கள் வைத்திருப்பதாக இயக்குநர் நினைத்திருக்கிறார். அட போங்க சார், காசு கொடுத்து படத்துக்கு வர்ற ரசிகர்களை இனிமேலாவது கேணையானா நினைக்காதீங்க. படத்துல நீங்க (சுசி கணேசன்) வர்ற (வெட்டி) ஸீன்ஸ் முதற்கொண்டு எதுலயுமே சஸ்பென்ஸ் சத்தியமா இல்லை.

படத்துல ஏதாவது நல்ல விஷயங்களைச் சொல்லுவோம்னு யோசிச்சா… ஆங்.. மேக்கிங்? அதுவும் வேஸ்ட். எம்புட்டோ செலவுன்னு சொன்னாங்க, ஒரு ஸீன்லகூட பிரம்மாண்டம், பணக்காரத்தனம், மிரட்டல் – ம்ஹூம். கேமரா? அய்யோ, கண் வலிக்குது. பத்து செகண்டுக்குள்ள முப்பது ப்ரேம் மாறுனா கடுப்புதான் வருது. படத்துல அங்கங்க கலர்டோனும் மாறுது. என்னாத்துக்குன்னு தெரியல. குறிப்பா மெக்சிகோல படம் அரைமணி நேரம் போவுது. அங்க நடக்குற பல காட்சிகள் மஞ்ச கலர் டோன்ல வருது. படுத்தல். (இப்படி ஒரு தயாரிப்பாளர் கிடைச்சா அவரு செலவுல மெக்சிகோல போய் மஞ்சக் குளிக்கலாம்னு சொல்லாம சொல்லுறாங்க போல!) பாடல்? கேட்க மட்டும்தான் நல்லாருக்கு. தேவிஸ்ரீபிரசாத்தின் உழைப்பு, காட்சிகளைப் படமாக்குவதில் பஞ்சர் ஆக்கப்பட்டிருக்கிறது. சண்டை? அட, விக்ரம் பாதி நேரம் வில்லன்களை அடிக்கவே மாட்டேங்கிறாரு. அவனுங்களா ஓடி வந்து விக்ரம்மேல பாயறாங்க. இவரு புத்திசாலித்தனமா நகர்ந்துக்கிறாரு. விழுந்து மூஞ்சிய உடைச்சுக்கிறாங்களாம்.

கரி பூசப்பட்டது இவர்கள் முகத்தில் மட்டுமல்ல...
கரி பூசப்பட்டது இவர்கள் முகத்தில் மட்டுமல்ல...

நிறையவே எழுதிட்டேன். போதும்னு நினைக்கிறேன். மொத்தத்தில் கந்தசாமி – கந்தல்சாமி. (ஆளவந்தான் என்னை அழிக்கவந்தான்னு தாணு ஒரு காலத்துல குமுறனது நினைவிருக்கலாம். கந்தசாமியால் நான் நொந்தசாமி ஆகிவிட்டேன்னு இன்னொரு பேட்டி கொடுத்தாலும் கொடுப்பாரு.)

*

சற்று நேரத்துக்கு முன்புதான் என் வீட்டில் தினசரி காலண்டரைப் பார்த்தேன். காலை 11.30 முதல் மாலை 3.15 வரை ராகுகாலம் என்று இருந்தது. யோசித்துப் பார்த்தேன். அந்த நேரத்தில் நான் அபிராமி தியேட்டரில் இருந்தது நினைவுக்கு வந்தது. சாமியோவ், மூணேகால் மணிநேரம் உள்ள வைச்சு… வேணாம், அழுதுருவேன்.

*

(படத்தின் பப்ளிசிட்டிக்காக) இரண்டு கிராமங்களைத் தத்தெடுத்தது எல்லாம் நல்ல விஷயம்தான். இப்படி ஒரு படத்தை எடுக்காமலிருந்தால் எத்தனையோ கிராமங்களைத் தத்தெடுத்திருக்கலாமே!

*
தாணு சார், என்கிட்டகூட முதல்வன், ரமணா, அந்நியன், இந்தியன் பட டிவிடிலாம் இருக்குது. நானும் ஒரு படம் டைரக்ட் பண்ண ஆசைப்படறேன். நீங்க ரொம்ப நல்லவராச்சே. ஒரு சான்ஸ் கொடுத்துப் பாருங்களேன்.

*

எக்ஸ்க்யூஸ் மீ, மிஸ்டர் கந்தசாமி – தியேட்டருக்கு வந்ததற்காக!

சோனியா எஸ்கேப்பு!

அலைகடலாய் வாமவனே என்று சொல்லி
கலைஞரய்யா கட்டில்போட்டுப் படுத்துக்கொண்டார்
கொலைப்பசிடா பேமானி! கொண்டா அந்த
கொத்துக்கடலை சட்னியுடன் இட்லி என்றார்
வலை தொடங்கி நிலமெல்லாம் வாய்க்கு வந்த
வார்த்தையினால் வைததுபார் தமிழ்நாடிங்கே
தலைவலியாப் போச்சென்று தலைவர் இன்று
தலைவியுடன் தோன்றுவதை கேன்சல் செய்தார்

எலிகாப்டர் ஏறியங்கு வாரேன் என்று
எக்குத்தப்பா சொல்லிவைத்த அன்னையம்மா
கிலி பிடிச்சிப் போனதனால் கிட்டத்தட்ட
கீத்துக்கொட்டா காலியென்று புரிந்துகொண்டார்
சளிபுடிச்சிப் போச்சப்பா சனியன் இந்த
சண்டேவரை ப்ரோக்ராம்கள் டைட்டு என்று
வலியெடுத்த வேகத்தில் சொல்லிவிட்டு
வந்தவழி போனதுபார் க்ரேட் எஸ்கேப்பு.

குறிப்பு : நியூஸைக் கேள்விப்பட்டதும் குரோம்பேட்டை கவிராயர் ஜிடாக்குல தட்டுன கவித! கழுத!

ஹிட்லரின் குழந்தை முகம்

யாரோ ஒரு குழந்தைக்கு ஹிட்லர் மீசை வைத்து கொடுமைப்படுத்தியிருக்கிறேன் என்றெல்லாம் தப்பாக நினைக்க வேண்டாம். இது ஹிட்லர் குழந்தையாக இருக்கும்போது எடுத்த புகைப்படம்தான். மீசை வைத்துப் பார்க்கத் தோன்றியது. 😉

நன்றி : விக்கிமீடியா காமன்ஸ்

எம்.ஆர். ராதாயணம் விமர்சனம் – உண்மை இதழில்

உண்மை ஏப்ரல் (1-25) இதழில் வெளிவந்துள்ள எம்.ஆர். ராதாயணம் புத்தக விமர்சனம்.

நூல் குறித்து குமரன் குடில் தளத்தில் வெளியாகியுள்ள விமர்சனம்.