வேட்டைக்காரன்!

‘வேட்டைக்காரனில்’ எம்.ஜி.ஆரை ‘கௌபாய்’ டிரஸ்ஸிலும் நாலு வயது பையனுக்கு அப்பா வேஷத்திலும் நடிக்க வைக்க முடிவு செய்தார் தேவர். அத்தனை வருடங்கள் எம்.ஜி.ஆரின் தாயாக, பாசம் பொழிந்த கண்ணாம்பா காலமாகியிருந்தார். புதிய அன்னை எம்.வி. ராஜம்மா.

விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவரும் பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும் பாடல்களால் உச்சாணிக் கொம்பில் இருந்தனர். தேவர் பிலிம்ஸிலும் அவர்கள் இசை அமைக்கட்டும் என்றார் எம்.ஜி.ஆர். கே.வி.மகாதேவன் இசையில் ட்யூன்கள் ஏறக்குறைய ஒரே மாதிரி கேட்பதாக ரசிகர்கள் அபிப்ராயம் சொன்னார்கள். எந்தப் பாட்டு எந்தப் படத்திலிருந்து ஒலிக்கிறது என்று சட்டென்று உணரமுடியாதபடி தேவரின் ‘தா’ வரிசைப் பாடல்கள் இருந்தன.

எதிலும் ஒரு மாற்றத்தை விரும்பியவர் எம்.ஜி.ஆர். அவர் கருத்தை மறுக்கும் சூழலில் தேவர் அன்று இல்லை. எம்.எஸ்.விஸ்வநாதனைப் பார்க்கச் சென்றார். விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசைக்கு விநியோகஸ்தர்களும் அதிக விலை கொடுத்தார்கள். அதை ஏன் இழக்க வேண்டும். தேவர் தன் மடியிலிருந்த பணம் முழுவதையும் விஸ்வநாதன் முன்பு வாரி இறைத்தார். ‘ஆண்டவனே என் முதல் படத்துலருந்து உங்களுக்காகக் காத்துக்கிட்டு இருக்கேன். இப்ப வேட்டடைக்காரனுக்கும் வந்துருக்கேன். நீங்கதான் இசையமைச்சித் தரணும்.’

ஏற்கெனவே விஸ்வநாதனுக்கு அகன்ற கண்கள். அவை இன்னும் பெரிதாகி விரிந்தன. எவ்வளவு பணம்! அதற்கு முன்பு யாரும் அப்படிக் கொண்டு வந்து கொட்டியது கிடையாது. தேவரின் மடி என்ன குபேர விலாஸா? ஒப்புக் கொள்ளலாம் என்று அவர் நினைத்த தருணத்தில் ‘அடேய் விசு’ என்று உள்ளிருந்து தாயார் அழைக்கும் குரல். விஸ்வநாதன் உள்ளே சென்றார். அவர் திரும்பி வந்தபோது தேவர் காணாமல் போய் விட்டார்.

‘நம்ம மாமாதான் (கே.வி. மகாதேவன்) உனக்கு குரு. அவர் செய்த உதவிகளை மறந்துட்டு அவர் பொழப்பை நீ கெடுக்கலாமான்னு விசுவநாதன் கன்னத்துல அவங்க அம்மா ஓங்கி அறைஞ்சுட்டாங்கண்ணே!’
தேவர் சொல்லச் சொல்ல எம்.ஜி.ஆர். அதிர்ந்தார். தன் கன்னங்களைப் பதறியபடி தடவிக் கொண்டார். ‘சரிங்கண்ணே, இது நமக்குள்ளயே இருக்கட்டும்’ எம்.ஜி.ஆர். தேவருக்கு உத்தரவிட்டார்.

மகாதேவன், வேட்டைக்காரன் படத்தில் மெட்டுப் போட்ட பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு நிரந்தரப் புகழையும் பெருமையையும் தேடித் தந்தன. எம்.ஜி.ஆர். அவரே முயன்றும் வற்புறுத்தியும்கூட விஸ்வநாதன் கடைசி வரையில் தேவர் பிலிம்சில் இசை அமைக்கவில்லை. ஆனால் எம்.ஜி.ஆரே எதிர்பாராமல் அவரது சிறந்த ஜோடியாக ரசிகர்கள் கொண்டாடிய சரோஜா தேவி வேட்டைக்காரன் படத்தில் நடிக்க முடியாமல் போனது.
தமிழ் சினிமாவில் பத்மினி, பானுமதி, அஞ்சலிதேவி, சாவித்ரி போன்ற சிறந்த கதாநாயகிகளுக்குப் பாமர மக்களின் மனத்தில் நிரந்தர இடம் கிடைக்காமல் போய்விட்டது. ஒட்டுமொத்த பாட்டாளித் தமிழர்களும் தங்களின் கனவுக் கன்னியாகக் கருதியது சரோஜா தேவியை மட்டுமே. அதனால் எம்.ஜி.ஆரும், சரோஜா தேவி தாமதமாக வந்தால் கோபிக்க மாட்டார்.

நிலைமை அப்படியிருக்க சரோஜா தேவியின் தாயாரிடம் வேட்டைக்காரன் படத்துக்காக கால்ஷீட் கேட்டார் தேவர். எப்போதும்போல் மொத்தமாகத் தேதிகளைத் தனக்கு ஒதுக்கி வைத்திருப்பார்கள் என்று எண்ணினார். நம்பிக்கையோடு அடையாறு காந்தி நகருக்குப் புறப்பட்டார். சரோஜா தேவி தேவர் மீது அளவில்லாத மதிப்பு உடையவர். தேவருக்கு ஜனவரி 7 முக்கியம். அன்று அவரது ஆஸ்தான கதாநாயகி சரோவின் பிறந்த நாள்! தேவர் ஒவ்வொரு ஆண்டும் அத்தினத்தில் சரோஜா தேவிக்குப் பொற்காசுகளால் அபிஷேகம் செய்வார். அத்தனைச் சிறந்த நட்பும் பரஸ்பர மரியாதையும் அவர்களுக்குள் நிலவியது.
வேட்டைக்காரன், அந்த சிநேகத்தில் விரிசல் விழ வைத்து விட்டது. சரோஜா தேவியின் தாயார் ருத்ரம்மா. கண்டிப்புக்கும், கறாருக்கும் புகழ் பெற்றவர். அவர் சரோஜா தேவியின் வாழ்க்கையை கால்ஷீட்டுகளாகவே கணக்கெடுத்தார். தேவருக்கும் ருத்ராம்மாவுக்கும் நடைபெற்ற காரசாரமான மோதலை சரோஜா தேவி பயந்தபடியே நோக்கினார்.

‘வேட்டைக்காரன் கதை வசனமெல்லாம் ரெடியாயிடுச்சு. ஆரூர்தாசு எழுதிக்கிட்டு வராரு. உங்க தேதி தெரிஞ்சா பூஜையை நடத்திடுவேன்.’

‘முன்ன மாதிரி ஒரேயடியா கொடுக்க முடியாதுங்க. பாப்பாவுக்கு நிறைய படம் புக் ஆகுது. டே அன்ட் நைட் வேல செஞ்சாலும் போதல. நாகி ரெட்டியார் கூடக் கேட்டிருந்தார். எம்.ஜி.ஆர். மேனேஜர் வீரப்பன் படம் ஆரம்பிச்சிருக்காரு.’

‘எம்.ஜி.ஆர். கால்ஷீட்டை மொத்தமாக் கொடுத்திட்டாரு. வர்ற பொங்கலுக்குப் படம் ரிலீஸ். அவர் தேதியை நான் வேஸ்ட்டு செய்ய முடியாதே.’

‘சரவணா பிலிம்ஸ் படம் வேறே கலர்ல முதன்முதலா எடுக்கறாங்க. யார் கலர்ல தயாரிக்கணும்னாலும் எடுத்தவுடன் பாப்பாகிட்ட வந்து கால்ஷீட் கேக்குறாங்க’ – ருத்ரம்மாவின் குரலில் அலட்சியம். தேவர் அதை எதிர்பார்க்கவில்லை.

தேவருக்குப் புரிந்தது. சினிமா உலகில் கண்ணதாசனிடம் சென்று பலர் புகார் செய்திருந்தார்கள். அவர் மாடர்ன் தியேட்டர்ஸ் காட்டு ரோஜா படத்துக்காக எழுதிய பல்லவியை மாற்றி எழுதும் படி. ‘ஏனடி ரோஜா என்னடி சிரிப்பு – எவரைக் கண்டாயோ’ என்கிற பல்லவியைத் தங்கள் எரிச்சலைத் தணித்துக் கொள்ளும் விதமாக, ‘ஏனடி சரோஜா என்னடி கொழுப்பு – எவரைக் கண்டாயோ’ என்று. அந்த அளவு சரோஜா தேவியின் மார்க்கெட் ஓஹோ. சரோவின் மார்க்கெட்டில் தனக்கு இல்லாத உரிமையா என்று எண்ணினார் தேவர். அதில் சிறுத்தை விழுந்தது.

‘எம்.ஜி.ஆர். கொடுத்த கால்ஷீட்டுல சரோஜா வந்து நடிக்குமா, இல்லையா?’ – தேவர் வழவழா ஆசாமி கிடையாது.

‘இப்படிப் பேசினா எம் பொண்ணு உங்க படத்துல நடிக்காது.’

தேவருக்குக் கொதிப்பு. ‘உங்க மக என் படத்துல நடிக்கறதா வேணாமான்னு நீங்க முடிவு செய்யக்கூடாது. அதைத் தீர்மானிக்க வேண்டியவன் நான்.’ எரிமலையாக வெடித்தபடியே தன் அங்க வஸ்திரத்தை இழுத்துப் போர்த்திக் கொண்டு வெளியேறினார். சினிமா காட்சிபோல் சரோஜா தேவி ஓடிவந்து தடுத்தார். அதைச் சட்டை செய்யாமல் கார் கிளம்பியது.

எம்.ஜி.ஆரே வந்து வற்புறுத்தினாலும் இனி சரோ நடிக்க மாட்டார் என்று திட்டவட்டமாக அறிவித்தார் தேவர். 1963 தீபாவளி அன்று வெளியானது ‘பரிசு’. எம்.ஜி.ஆரும், சாவித்ரியும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்து படம் வெற்றிகரமாக ஓடியது. டி. யோகானந்தின் படம் அது. தேவரும் வேட்டைக்காரனில் அதே ஜோடியைப் பயன்படுத்த முடிவு செய்தார். சரோவுக்குப் பதில் சாவித்ரி வந்தார்.

வேட்டைக்காரன் படத்தில் சாவித்ரி நடிப்பதற்காகக் காட்சிகள் வலுவூட்டப்பட்டன. அதை எம்.ஜி.ஆர். வரவேற்றார். சரோஜா தேவிக்கும் கூடுதலாகவே கவர்ச்சியாக எம்.ஜி.ஆருடன் சாவித்ரி ஆடிப்பாடினார். ‘மெதுவா மெதுவா தொடலாமா – உன் மேனியிலே என் கை படலாமா…’

தேவருக்கு அதிலும் திருப்தி இல்லை. அப்போதுதான் திரையுலகில் தடம் பதிக்க ஆரம்பித்திருந்த  நாகேஷுக்கு முக்கியத்துவம் கொடுத்து மனோரமாவுடன் ஒரு காமெடி பாடல் வைத்தார். ஒரே நாளில் ஊட்டியில் முழுப் பாடலையும் எடுத்து முடித்தார். மனோரமாவுக்கு முதன் முதலில் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் தந்து அதிரச் செய்தார். சீட்டுக்கட்டு ராஜா என்ற பாடல் பட்டி தொட்டி முதற்கொண்டு எங்கும் பிரபலம்.

எம்.ஜி.ஆரின் புதிய கெட்-அப் அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது. சென்னை சித்ரா தியேட்டர் அல்லோலகல்லோலப்பட்டது. திரையிலும் தியேட்டருக்குள்ளேயும் எல்லாம் தொப்பிகளாகவே தெரிந்தன.

தேவர் எம்.ஜி.ஆருக்காகவும் தன் எண்ணங்களை மாற்றிக் கொள்ளாதவர். பிரமாண்டமான செட்களில் அவரது படங்களில் ‘கனவு’ பாடல் காட்சிகள் வரவே வராது. ‘செட்டை எவன்டா பாக்குறான், அண்ணனத்தான்டா ரசிக்க வரான்’ என்பார்.

வேட்டைக்காரனுக்காக சித்ரா தியேட்டர் வாசலில் ரசிகர்களே காடும் மலையும் சூழ்ந்த அரங்கம் அமைத்தார்கள். அதில் வேட்டைக்காரன் தோற்றத்தில் எம்.ஜி.ஆருக்குச் சிலை. ஏறக்குறைய ஒன்றே கால் லட்சம் ரூபாய் செலவானது. தீ அணைப்பு எஞ்சின்களுக்கு மட்டும் ஏழாயிரம் கொடுத்தார்கள்.
வாள் வீச மட்டுமே எம்.ஜி.ஆருக்குத் தெரியும். அவர் பேன்ட் ஷர்ட் அணிந்து நடித்தால் படம் ஓடாது என்கிறக் கருத்து கோடம்பாக்கத்தில் நிலைபெற்றிருந்தது. தேவர் அதை மாற்றிக் காட்டினார். சமூகப் படங்களிலும் எம்.ஜி.ஆர். சாதிக்க முடியும் என்று நிரூபித்தார்.

(பா. தீனதயாளன் எழுதிய சாண்டோ சின்னப்பா தேவர் புத்தகத்திலிருந்து)

Leave a Comment