டைம் அட்டையில் ஒரு கஞ்ச மகாபிரபு!

‘எவ்வளவுதான் தரமுடியும்?’

‘முப்பது ரூபாய்’

‘சரி, பணத்தைக் கொடுத்துவிட்டு அழைத்துச் செல்லுங்கள்.’ என்று வியாபாரத்தை முடித்தார் ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலிகான் என்ற ஏழாம் அஸஃப் ஜா (1886 – 1967).

நிஜாமாகப் பதவிக்கு வந்ததும் (1911) அவர் செய்த முக்கியமான காரியம் இதுதான். ஆறாவது நிஜாம்  மெஹபூப் அலிகான் இறந்த பிறகு அவரது துணைவிகளை விற்றுவிட்டார். ‘எனக்கு ஆகவே ஆகாத தந்தை, சேர்த்துக் கொண்ட துணைவிகளுக்கெல்லாம் நான் ஏன் சோறும் சிக்கனும் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்?’ என்ற எண்ணத்தால் நிகழ்த்தப்பட்ட சிக்கன நடவடிக்கை அது. சில துணைவிகளை விற்று, பணத்துக்குப் பதிலாக மாங்காய்களாகப் பெற்றுக் கொண்டார் என்றுகூட குறிப்புகள் இருக்கின்றன.

அநாவசியச் செலவுகளை எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என்ற சிந்தனையே ஒஸ்மானின் மனத்தில் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். அதன் மாறுபட்ட பரிமாணங்களே பல விஷயங்களில் கஞ்சத்தனமாக வெளிப்பட்டன.

‘நிஜாம், உங்கள் சால்வை மிகவும் பழசாகிவிட்டது. புதிதாக ஒன்றை எடுத்துக் கொள்ளலாமே?’ என்றார் அமைச்சர் ஒருவர். அதற்கு ஒஸ்மான் அளித்த பதில், ‘எடுக்கலாம். ஆனால் நான் அதுக்கு பதினெட்டு ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறேன். புதிய சால்வை இருபது ரூபாய் ஆகிறதே.’

ஒருமுறை வைஸ்ராய் லின்லித்கோ, ஒஸ்மானைச் சந்தித்தபோது அவரது வாக்கிங் ஸ்டிக்கைக் கவனித்தார். இரண்டாக உடைந்த அது, ஒட்டப்பட்டு நூலால் சுற்றப்பட்டிருந்தது. அதை வைத்துக் கொண்டே எந்தவித கூச்சமும் இன்றி வெளியிடங்களுக்குச் சென்று கொண்டிருந்தார் ஒஸ்மான். தன்னுடன் பேச வரும் ஒரு சமஸ்தானத்தின் நிஜாம், இப்படி ஒடிந்த ஸ்டிக்குடன் வருகிறாரே என்று வைஸ்ராய்க்குத்தான் கூச்சமாகப் போய்விட்டது. அடுத்தமுறை ஒஸ்மானைச் சந்தித்தபோது ஒரு புதிய உயர்தரமான வாக்கிங் ஸ்டிக்கைப் பரிசளித்தார். வாய் நிறையப் புன்னகை வழிய, அதனை வாங்கி வைத்துக் கொண்டார் ஒஸ்மான்.

அப்போதைய இந்திய அரசின் முதன்மை ஆலோசகராக வி.பி. மேனன் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் ஒருமுறை ஒஸ்மானைச் சந்திக்கச் சென்றார். பல்வேறு விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர். ஒஸ்மான் தன் சார்மினார் சிகரெட் பாக்கெட்டை எடுத்தார். மேனனிடம் நீட்டினார். அதுதான் அப்போதைய மலிவான சிகரெட். பாக்கெட் பன்னிரண்டு பைசாதான். பத்து சிகரெட் இருக்கும்.

மேனனுடைய பிராண்ட் வேறு. போயும் போயும் சார்மினாரைப் புகைத்து வாய் நாற்றத்துடனா அலைய முடியும் என்று யோசித்த அவர், ‘வேண்டாம்’ என்று மறுத்தார். ஒஸ்மான் வற்புறுத்தவெல்லாம் இல்லை. தம் வாயில் ஒரு சிகரெட்டை வைத்துப் பற்ற வைத்தார். மேனனுக்கும் வாய் நமநமத்தது. தன் சட்டைப் பையில் இருந்து விலையுயர்ந்த சிகரெட் பாக்கெட் ஒன்றை எடுத்து உடைத்தார்.

நாகரிகமாக ஒஸ்மானிடம் நீட்டினார். வாயில்தான் புகைந்துகொண்டிருக்கிறதே என்று மறுத்திருக்கலாம். ஆனால் ஒஸ்மான் அதிலிருந்து நான்கைந்தை எடுத்துத் தன் சார்மினார் பாக்கெட்டுக்குள் வைத்துக் கொண்டார். அறையிலிருந்து புகை கலைந்து முடிந்த சில நொடிகளில் அவர்களது சந்திப்பும் முடிந்தது.

சில நாள்களிலேயே இருவரும் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். பேச்சின் இடையே, ஒஸ்மான் தன் சார்மினார் பாக்கெட்டை எடுத்தார். மேனனிடமிருந்து எடுத்த புதிய பிராண்ட் சிகரெட்டுகள் எண்ணிக்கை குறையாமல் அப்படியே இருந்தன.

அதிகாரிகளோ விருந்தினர்களோ ஒஸ்மானை சந்திக்கச் சென்றால் அவர் உபசரிக்கும் விதமே தனியானது. வருபவர்களை உட்காரச் சொல்லுவார். அவர்கள் தனக்கு ஏதாவது கொண்டு வந்திருக்கிறார்களா என்று பார்ப்பார். எது கொடுத்தாலும் வாங்கி வைத்துக் கொள்வார். பேசத் தொடங்குவார்கள்.

சில நிமிடங்கள் கழித்து அரண்மனைப் பணியாள் கையில் ஒரு தட்டுடன் வருவார். அதில் முக்கால்வாசி நிரம்பிய நிலையில் இரண்டு கோப்பைகளில் டீ, இரண்டு பிஸ்கட்டுகள் மட்டுமே இருக்கும். ஆளுக்கு ஒரு கோப்பை டீ, ஒரே ஒரு பிஸ்கட். அவ்வளவுதான். பெட்டி பெட்டியாக தங்க பிஸ்கட் வைத்திருந்தால் என்ன, சாப்பிடக்கூடிய பிஸ்கெட்டை வீணாக்கக்கூடாது என்பது ஒஸ்மானின் உயரிய எண்ணம்.

ரத்தத்தோடு கலந்துவிட்ட குணம் அது. வாழ்நாளில் எந்த நிலையிலும் ஒஸ்மான் தனது குணத்தை மாற்றிக் கொள்ளவே இல்லை. அப்படிப்பட்ட நிஜாம் ஒஸ்மான் அலிகானைப் பற்றி, டைம் வாரப் பத்திரிகை ஒரு கட்டுரை வெளியிட்டது. அட்டையில் ஒஸ்மானின் ஓவியம் கம்பீரமாகக் காட்சியளித்தது. (1937, பிப்ரவரி 22)

கட்டுரை அவரது கஞ்சத்தனத்தைப் பற்றியல்ல.‘உலகின் மாபெரும் பணக்காரர்’ என்பதற்காக. HIS EXALTED HIGHNESS THE NIZAM OF HYDERABAD என்று தலைப்பிட்டிருந்தது.

இன்றைய தேதியில் முகேஷ் அம்பானிக்கு அந்த பாக்கியம் கிடைத்ததோ இல்லையோ, அன்றைய தேதியில் நிஜாம் ஒஸ்மான் அலிகானுக்கு அந்தப் பேறு கிடைத்தது. டைம் பத்திரிகை மட்டுமல்ல, உலகில் பல பெரிய பத்திரிகைகள் அப்போது அந்தச் செய்தியை வெளியிட்டு நிஜாமின் சொத்துக் கணக்கை விதவிதமாகக் கூறின.

நிஜாமின் தினப்படி வருமானம் சுமார் ஐயாயிரம் அமெரிக்க டாலர்கள். அவர் கொத்துக் கொத்தாகச் சேர்த்து வைத்துள்ள நகைகளின் மொத்த மதிப்பு குத்துமதிப்பாக பதினைந்து கோடி அமெரிக்க டாலர்கள். அவர் உப்புப் போட்டு கெட்டுப் போகாமல் பாதுகாப்பாக வைத்துள்ள தங்கக் கட்டிகளின் மதிப்பு இருபத்தைந்து கோடி அமெரிக்க டாலர்கள் இருக்கும். அதையும் சேர்த்து நிஜாமின் ஒட்டுமொத்த சொத்தின் மதிப்பு தோராயமோ தோராயமாக நூற்று நாற்பது கோடி அமெரிக்க டாலர்கள் இருக்கலாம் என்று வியந்து எழுதியிருந்தது டைம் பத்திரிகை. இந்தக் கணக்கில் ஒஸ்மான் சேர்த்து வைத்திருக்கும் வைர, மரகதக் கற்களின் மதிப்பு சேர்க்கப்பட்டவில்லை என்பது கவனிக்கப்படவேண்டியது.

சரி, முதலிடம் ஒஸ்மானுக்கு. இரண்டாவது இடம்?

வெற்றிகரமாக கார்களைத் தயாரித்து வந்த ஹென்றி ஃபோர்டுக்கு. ஆனால் என்ன, அவரது மொத்த சொத்து மதிப்பு, ஒஸ்மான் சேர்த்து வைத்திருந்த நகைகளின் மதிப்பில் பாதிகூட இல்லை என்பதே உண்மை.

(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதிய அகம் புறம் அந்தப்புரம் தொடரில் இருந்து ஒரு சிறு பகுதி. இன்னும் சில மாதங்களில் அகம் புறம் அந்தப்புரம் குண்டு புத்தகமாக வெளிவர இருக்கிறது.)

Leave a Comment