கண்டேன் பாட்டியை!

இளநீர்ப் பாட்டியை மீண்டும் கண்டுகொண்டேன். புரியாதவர்கள் சிரமம் பாராமல் இங்கே சென்று வரவும்.

அதே சிபி ஆர்ட் கேலரி பேருந்து நிறுத்தத்தில்தான் பார்த்தேன். காணாமல் போன இளநீர் வண்டிக்கு பதிலாக, பேருந்து நிறுத்தத்திலேயே தரையில் கடை விரித்திருந்தாள்.

ஸ்கூட்டியை விட்டு இறங்கி, ஹெல்மெட்டை கழட்டிவிட்டு ஆர்வமாக பாட்டியை நெருங்கினேன். மொட்டையடிக்கப்பட்டு, சற்றே முடிவளர்ந்த தலையோடு பாட்டி. நிமிர்ந்து பார்த்தாள். என்னைக் கண்டதும் அவள் முகத்தில் ஒரு பிரகாசம். ‘வந்துட்டியா ராசா. என்னைத் தேடுனியா?’ – குரலில் ஏக்கம்.

‘தேடுனேன் பாட்டி. ஆனா யார்கிட்ட விசாரிக்கிறதுன்னு தெரியல. என்ன ஆச்சு?’

‘அதயேன் கேக்குற. இந்தா மேலருந்து விளம்பர போர்டு என் தலைல வுழுந்து, அப்படியே சரிஞ்சுட்டேன். இங்கேயே ரெண்டு பாட்டில் ரத்தம் போயிருக்கும். ஆசுபத்திரில ரொம்ப நாள் கெடந்தேன். எம் புள்ளைங்க பாத்துக்கிட்டாங்க. திரும்ப வந்ததே மறுபொறப்புதான்.’

சொல்லிக்கொண்டே ஒரு பெரிய இளநீரை வெட்டி நீட்டினாள். பேருந்து நிறுத்தத்தின் மேலே பார்த்தேன். வெறும் கம்பிகள் மட்டும் நீட்டிக்கொண்டிருந்தன.

‘நான் வந்து நாலு நாளாச்சு. நீ ஏன் வரலை?’

‘இல்ல பாட்டி, இன்னிக்குத்தான் உங்களைப் பார்த்தேன்.’

பதினைந்து ரூபாயை நீட்டினேன். ஸ்கூட்டியில் ஏறி ஹெல்மெட்டை அணிந்தேன். ‘நீகூட வண்டிலலாம் போற. பாத்து கவனமா போ ராசா…’

Leave a Comment