சினிமாவின் எதிர்காலம் – நம் கையில்!

இன்று பாடல் பதிவுடன் இனிதே ஆரம்பிக்கிறோம் – அடிக்கடி புதிய சுவரொட்டிகள்  கண்களில் தென்படும். வெகு சில போஸ்டர்களைப் பார்க்கும்போது மட்டும் ‘இந்தப் படம் வர்றப்போ கண்டிப்பா தியேட்டர்ல போய்ப் பார்க்கணும்’ என்று மனத்துக்குள் பச்சை விளக்கு எரியும். வெண்ணிலா கபடி குழுவின் படபூஜை போஸ்டரும் எனக்குள்  பச்சை ஒளி பரப்பியது. சென்ற வாரம் ஏவிஎம் ராஜேஸ்வரியில் குடும்பத்துடன் சென்று  பார்த்தேன்.

வெள்ளந்தி மனிதர்களின் வெகு இயல்பான வாழ்க்கை. ஆரம்ப காட்சிகளிலிருந்தே சின்னச் சின்னதாக நிசர்சனக் கவிதைகள். பார்த்துப் பழகிய பக்கத்து கிராம மனிதர்களின் மண்வாசனைப் பேச்சு.

பஸ் ஓட்டும் டிரைவர் அண்ணாச்சி. பஸ்ஸின் வேகத்துக்கு இணையாக ஒற்றையடிப் பாதையில் சைக்கிள் மிதிக்கும் கதாநாயகன். ஹார்ன், சைக்கிள் பெல்லால் சத்தம் எழுப்பி அவர்கள் பேசிக்கொள்ளும் அழகு. திருவிழாவுக்கு வரும் மதுரைப் பெண்ணின் வெட்கம். காதலுக்குரிய முதல் சலனத்தை உண்டாக்கும் தெருநாய். கதாநாயகன்  எதிரே வந்து சடாரென முகத்தில் மஞ்சளைப் பூசிவிட்டு ஓட, அதிர்ந்து, அடுத்தநொடி  வெட்கப்படும் கதாநாயகியின் நளினம். கதாநாயகியின் கொலுசின் ஓசையைக் காதில்  வாங்கியபடியே சரியாக நகர்ந்து வந்து உரியடிக்கும் கண்கள் கட்டப்பட்ட கதாநாயகன். இப்படி படம் நெடுகிலும் குட்டிக் குட்டியாக ரசிக்க நிறைய விஷயங்கள்.

படத்தில் கிட்டத்தட்ட எல்லாக் கதாபாத்திரங்களும் வந்து அவர்களது இயல்புக்கேற்ப  இருந்துவிட்டுப் போயிருக்கிறார்கள். யாருமே கேமராவை நேரடியாகப் பார்த்து சொடுக்குப் போட்டு தொண்டை கிழியக் கத்தவில்லை.

காட்சிகளோடு காட்சிகளாக நகைச்சுவையும் சென்டிமெண்டும் இரண்டறக் கலந்தி ருக்கின்றன. கிராமத்தில் மக்கள் சூழ்ந்துநிற்க கபடி விளையாடியே பழகியவர்கள், கேலரியில் ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்து இருக்கும் கபடி மைதானத்துக்குள் நுழையும்போது அவர்களது கண்களில் இருக்கும் மிரட்சி. ‘நம்மளையெல்லாம் இதுக்குள்ள விளையாட விடுவாய்ங்களா..’ என்று கேட்கும் யதார்த்தம். ஒரு போட்டியில் வெற்றி  பெற்றதும், மக்கள் எழுந்து நின்று ஆரவாரம் எழுப்ப, ‘இதெல்லாம் நமக்குதானாடா?’  என்று சந்தேகம் வழிய அழுதபடியே கேட்கும் அப்பாவித்தனம். இன்னும் நிறைய சொல்லலாம்.

இந்தப் படத்திலும் சில சினிமாத்தனங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் என்னைப்  பொருத்தவரையில் எல்லாமே ஜீரணிக்கக்கூடியவை. முதல்பாதி சற்றே நீளம்தான். இரண்டாவது பாதியில் கேலரியில் உட்கார்ந்து விளையாட்டைப் பார்க்கும் உணர்வைக் கொண்டுவந்துவிடுகிறார்கள். சற்றே நாடகத்தனம் பூசப்பட்ட க்ளைமேக்ஸ் என்றாலும் ஒரு சோகக்கவிதை படித்துமுடித்துவிட்டு, சற்றுநேரம் அமைதியாக இருப்போமே – அந்த மனநிலை வாய்க்கிறது.

உலகின் ஒட்டுமொத்த அபத்தங்களையெல்லாம் அள்ளிச் செதுக்கிய காட்சிகளால் மட்டுமே ஆன சினிமாக்கள்தானே  அதிகம் வருகின்றன. அவற்றோடு ஒப்பிடும்போது.. சேச்சே, தப்பு தப்பு. அந்த அபத்தங்களை இந்தக் குழுவோடு ஒப்பிடவே கூடாது.

இந்த மாதிரியான அழகான, எளிமையான, யதார்த்தமான படங்களை, தியேட்டருக்குச் சென்று, மனமார ரசிப்பது ஆதரிப்பதே, வருங்காலத்தில் நல்ல தமிழ் சினிமாக்களும் முளைப்பதற்கு நாம் விதைக்கும் விதை. இல்லையென்றால் வில்லு, சிலம்பாட்டம், பெருமாள், திருவண்ணாமலை ரக விஷச் செடிகள் மட்டுமே நமக்குக் கிடைக்கும் அபாயம் நிச்சயம்.

Leave a Comment