மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்…

முத்துநகர் எக்ஸ்பிரஸ். மூன்றாம் வகுப்பு குளிர்சாதனப் பெட்டி. நேற்றிரவு சென்னை நோக்கி மனைவி, மகள், மனைவியின் பெற்றோருடன் பயணம். எத்தனையோ வருடங்கள் இதே ரயிலில்தான் சென்று வந்து கொண்டிருக்கிறேன். இரண்டாம் வகுப்பில் டிக்கெட் கிடைக்கவில்லையென்றால், அடுத்த நாளில் டிக்கெட் கிடைக்குமா என்று மனம் அனிச்சையாக யோசிக்குமே தவிர, மூன்றாம் வகுப்பு ஏசி என்றொரு பிரிவு உண்டு என்றெல்லாம் என்றைக்குமே நினைவில் தோன்றியதில்லை. அதென்னமோ தெரியவில்லை, மகள்கள் வந்து அப்பாக்களின் இயல்பை எல்லாம் இல்லாமல் செய்து விடுகிறார்கள். மகளுக்கு என்றால் மனம் கணக்குப் பார்ப்பதை மறந்துவிட்டு மகளை மட்டுமே பார்க்கிறது.

சரி விஷயம் அதுவல்ல. எங்களோடு வந்த சக பயணிகள் குறித்தது. புதிதாக திருமணம் ஆன இளம்ஜோடி, உடன் அந்தப் பெண்ணின் அண்ணன் என மூவர். வழியனுப்ப வந்த குடும்பத்தினரின் தலையை எண்ண முடியவில்லை. தூத்துக்குடியில் நேற்றிரவு 7.50 அளவில் ரயில் நிலைய நடைமேடையில் மட்டும் 2 மிமீ மழை பதிவாகியிருக்கக் கூடும். புதுப்பெண்ணும் ரயில் பெட்டிக்குள் மழை பொழிந்தாள். அந்த சோக மேகங்கள் எல்லாம் கலைந்து ஜோடி இயல்பு நிலைக்குத் திரும்ப சில நிமிடங்கள் பிடித்தன. குழந்தை ஒன்று எதிரில் ஏதேதோ பேசி விளையாடிக் கொண்டிருந்தால் மனம் எந்தக் கஷ்டத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தாலும் கரையேறி விடுமல்லவா!

இங்கு நான் பேச விரும்பும் குணசித்திரம் அந்தப் பெண்ணின் அண்ணன். தன் தங்கையையும், தனது புதிய பளபளா அத்தானையும் விழுந்து விழுந்து கவனிக்க ஆரம்பித்தார் அந்த அண்ணன். உணவுப் பொட்டலத்தைப் பிரித்து வைத்து, அதில் சப்பாத்திக்கான ‘தொட்டுக்க’ வகையறாக்களை ஊற்றோ ஊற்றென்று ஊற்றி, தரம், சுவை, திடம், மணம் பற்றியெல்லாம் அக்கறையுடன் விசாரித்து… ஊட்டித்தான் விடவில்லை. அதற்கும் அவர் தயாராகத்தான் இருந்தார். ‘அப்பா உங்களை கவனிக்கச் சொன்னாங்க…’ – இந்த வார்த்தைகள் அவ்வப்போது அண்ணனிடமிருந்து ஒலித்தன. சப்பாத்திக்குப் பின் ஜாம் பன், அதற்குப் பின் பழம். (இத்தனையையும் நான் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கவில்லை என்பது இங்கே தகவலுக்காக.) ஏவ்வ்வ்… சாப்பிடாமலேயே எனக்கு பசி அடங்கியது.

தன் தங்கையும், தகதகா அத்தானும் அடுத்து உறங்கச் செல்ல வேண்டும் அல்லவா. நாங்கள் எத்தனை மணிக்கு உறங்குவோம், குழந்தை எப்போது தூங்கும், தொட்டில் கட்டுவீர்களா?, எந்த இடத்தில், எந்தக் கோணத்தில், எதைக் கொண்டு கட்டுவீர்கள்?, லைட்டை எப்போது அணைப்பீர்கள்? ஏசி ஓடுவதால் ஃபேன் இரவில் தேவையா? – சீரான இடைவெளியில் இப்படி கேள்விகளைத் தொடுத்துக் கொண்டே இருந்தார். என் தங்கைக்குக் குளிரும், லைட் எரிந்தால் அத்தானுக்குத் தூக்கம் வராது – ஆக அத்தனையும் அணைத்துவிட்டு படுங்கள் போன்ற பாசக் குறிப்புகளுக்கும் குறைவில்லை. ஆயிரம் குறிப்புகள் கொடுத்தாலும் குழந்தை, குழந்தையாகத்தான் இருக்குமென்பது பாவம் அவருக்குப் புரியவில்லை. ஆனால், அந்த இளம்ஜோடி அந்த தெய்வ மச்சானின் பாசப் போராட்டம் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. சைட் லோயர் பர்த்துக்கு இடம் மாறி, விண்ணைத் தாண்டி வருவாயா சிம்பு – த்ரிஷாவைப் பிரதிபலிக்க முயன்று கொண்டிருந்தார்கள்.

தொட்டிலைத் தயார் செய்தேன். சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு மகளைத் தூங்க வைத்தேன். (’நல்லாப் பாத்துக்கோங்க… நீங்கதான் நம்ம குழந்தையையும் தூங்க வைக்கணும். என்னால பாட்டெல்லாம் பாட முடியாது’ என்று அந்த புதுப்பெண், தன் கணவனிடம் சொல்லிக் கொண்டாள் என்பது இங்கே கொசுறு. மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குத்தான் தெரியும்….)

என் குடும்பத்தினர் ஒவ்வொருவராக தூங்க ஆரம்பித்தார்கள். அந்த அண்ணன், தன் தங்கைக்கு, அத்தானுக்கு தொட்டில் கட்ட மனத்தளவில் ஏங்கியிருக்க பிரகாச வாய்ப்புள்ளது. அவர்களுக்கு விரித்துக் கொடுத்து படுக்கச் சொன்னார். அவர்கள் சைட் லோயர் ரொமாண்டிக் கடலை மூடில் இருந்து மாறுவதாக இல்லை. ‘அப்பா உங்களைச் சீக்கிரம் தூங்க வைக்கச் சொன்னார்’ என்றும் சொல்லிப் பார்த்தார் அண்ணன். அவர்கள் அசரவில்லை. அண்ணன் வேறு வழியின்றி தன் அத்தானுக்கான மிடில் பர்த்தில் வந்து படுத்துக் கொண்டார். ‘அவங்க வந்து படுத்ததும் லைட் அணைச்சிடனும். ஃபேன் அணைச்சிடனும்’ என்று எனக்கு மீண்டும் குறிப்பு கொடுத்தார். ஃபேன் இல்லாவிட்டால் குழந்தைக்கு காற்று வராது. விடிவிளக்கு எதுவும் இல்லாததால் ட்யூப் லைட்டை அணைத்தபோது கும்மிருட்டு. மகள் சிணுங்கினாள். லைட்டைப் போட்டுக் கொண்டேன். அந்த அண்ணனது தங்கை பாசம் பெரியதா, அல்லது இந்த அப்பாவின் மகள் பாசம் பெரியதா என்று ஒரு போராட்டம் நள்ளிரவில் வெடிக்கக்கூடும் என்று மனம் எச்சரித்தது.

ஒரு மணி நேரம் கடந்திருக்கும். அந்த இளம் ஜோடி தத்தம் பெர்த்களில் வந்து அடைக்கலமாகினர். அண்ணன் நான் லைட்டை அணைக்கிறேனா என்று பார்த்துவிட்டு, தனக்கான சைட் லோயருக்கு இடம் பெயர்ந்தார். குழந்தை அசந்து தூங்கிவிட்டதால் லைட் அணைப்பதில் எனக்குச் சங்கடம் இருக்கவில்லை. அந்தத் தங்கையும், தளதளா மச்சானும் படுத்த அடுத்த நொடி அப்படி இப்படி அசையவில்லை. லைட்டோ, ஃபேனோ, காய்கறி விலை உயர்வோ, காங்கிரஸ் அரசின் கணக்கு வழக்கில்லாத ஊழல்களோ எதுவும் அவர்களைத் தொந்தரவு செய்ய வாய்ப்பில்லாத அசல் உறக்கம். எங்கள் பகுதிக்கான திரை போட்டுக் கொண்டேன்.

மகளுடனான பயணங்களில் நான் பெரும்பாலும் உறங்குவதில்லை. என் மகள் நள்ளிரவு ஒன்றிலிருந்து இரண்டுக்குள் தொட்டிலிலிருந்து தனது அம்மாவின் அரவணைப்புக்குத் தாவுவாள். அது நிகழ்ந்தது. அச்சமயம் முதல் லைட் தேவைப்பட்டது. ஃபேனும். அன்பு அண்ணனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. திரைக்குள் தலையை விட்டார். என்ன நடக்கிறதென்று பார்த்தார். குழந்தையின் அழுகை, அருமை அத்தானின் துயிலை, பாச மலரின் கண்ணுறக்கத்தைத் தொந்தரவு செய்துவிடுமோ என்ற பயம் அவருக்கு. ஆனாலும் குழந்தை என்பதால் அவர் தம் கட்டுக்கடங்காத பாசத்தைக் கட்டுப்படுத்தி கக்கத்தில் சொருகிக் கொண்டு என்னைப் பார்த்தார். நானும் பதிலுக்கு வெறும் பார்வை ஒன்றை வீசினேன். தலை மறைந்தது.

அடுத்த மூன்று மணி நேரமும், குழந்தை சிணுங்க, அழ, கத்த – லைட்டை அணைக்க முடியவில்லை. அண்ணனின் தலை திரைக்குள் அடிக்கடி நுழைந்தது. என் பார்வையைச் சந்தித்துக் குரலின்றி வெளியேறியது. ஆனால், என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்கிற ரீதியில்தான் அந்த ஜோடி தூங்கிக் கொண்டிருந்தது என்பதே உண்மை. ஆக எனக்கும் உறுத்தல் இல்லை. ஐந்து மணிக்குமேல் குழந்தை மீண்டும் தொட்டிலுக்கு மாறி, அசந்து தூங்க ஆரம்பிக்க, ரயில் இரைச்சலையும் தாண்டி அண்ணனின் பெருமூச்சு என் செவிகளில் மோதியது, கூடவே அத்தானின் தேன்மதுரக் குறட்டையொலியும்.

விடிந்தது. அண்ணனின் முகத்தில் தூங்காத களைப்பு. இருந்தாலும் தங்கையும் அத்தானும் ஃப்ரெஷ்ஷாக எழுந்ததில் அவருக்கு ராஜ்யசபா எம்.பி. ஆன திருப்தி.

அம்மூவரும் சென்னைக்கு வந்து யாரையோ பார்த்துவிட்டு, பின் பெங்களூர் செல்கிறார்கள். ஜோடி இனி வசிக்கப் போவது பெங்களூரில்தான். அண்ணன் குடிவைக்கச் செல்கிறார். இன்னும் சில தினங்களில் பெங்களூரில் ஏதாவது ரயில் நிலையத்தில் மட்டும் மழை பொழியக் கூடும்.

 

Leave a Comment