ஆயிரம் தீவுகள்

தமிழக அரசியல் இதழில் எழுதிவரும் புத்தம் புது பூமி வேண்டும் தொடரிலிருந்து ஓர் அத்தியாயம்.

ப்போது வானமும் பூமியும் ஒன்றாக ஒட்டித்தான் கிடந்தன. ரூ என்ற கடவுள்தான் வானத்தைத் தூக்கி உயரே நிறுத்தி வைத்தார். பின்பு ரூ, புதிதாக படகு ஒன்றைக் கட்டினார். எதற்கு? பூமி முழுவதும் பயணம் செய்ய வேண்டும் என்பதற்காக. அது, ரூவின் அழகான சகோதரி ஹினாவின் ஆசை.

இந்த பூமி எவ்வளவு பெரியது? எங்கே ஆரம்பித்து எங்கே முடிகிறது? எங்கெல்லாம் புதிதாக நிலங்கள் இருக்கின்றன? இப்படி அனைத்தையும் தெரிந்து கொள்வதற்காக இந்தப் பயணம். படகு கிளம்பியது. ஹினா, புதிய நிலப்பகுதிகளைக் கண்டு சொல்வதற்காக படகின் முன்புறம் இருந்துகொண்டாள். ரூ, படகின் பின்புறம் இருந்தபடி துடுப்பு போட்டார். ‘உலவும் கடல் காற்றினிலே’ என்று பகலில் பாடல்களோடு பயணம். இரவில் ரூ உறங்கினார்.

எட்டுத்திசைகளிலும் சுற்றி வந்தார்கள். புதிதாக பல தீவுகளைக் கண்டுபிடித்தார்கள். பயணம் நீண்டுகொண்டே சென்றது. ஒருநாள். சூரியன் மறையும் வேளை. எதிர்த்திசையில் கடலிலிருந்து நிலா பாதி வெளிப்பட்டு தெரிந்தது. அதன் ரம்மியத்தைக் கண்டு மயங்கி நின்ற ஹினாவுக்கு நிலவுக்குச் செல்ல ஆசை பிறந்தது. படகு நிலவை நோக்கி நகர்ந்தது.

அத்தனை அழகான நிலவில் சென்று இறங்கிய ஹினா, திரும்பிவர மனமின்றி அங்கேயே தங்கிவிட்டாள். ரூவின் பயணங்கள் தொடர்ந்தன. நிலவிலிருந்தபடியே தன் சகோதரனுக்கு வழிகாட்ட ஆரம்பித்தாள் ஹினா.

இது பல நூற்றாண்டுகளாக பாலிநேசியர்கள் சொல்லி வரும் புராணக் கதை. யார் அவர்கள்?

பாலிநேசியர்களின் பயணம்

பாலிநேசியர்கள், ஆதி உலகின் ஆகச் சிறந்த கடல் பயணிகள். தீவுகளில் வசித்தவர்கள். படகு கட்டுவதில் கில்லாடிகள். மீன்பிடித்தல் முக்கியத் தொழில். மீன் பிடிக்க கடலில் புது பகுதிகளைத் தேடி முன்னேறும்போது புதிய தீவுகள் தென்பட்டன. ‘நான் மீனைப் பிடிக்கப் போனேன். ஒரு தீவைப் பிடித்து வந்தேன்’ என்று சந்தோஷமாக பெண்டாட்டி, பிள்ளைகளோடு தீவு விட்டு தீவு தாவி குடியேற்றத்தைப் பரப்பினார்கள்.

அவர்களது படகுகள் மரம், கல், எலும்பு, தேங்காய் நாரால் திரிக்கப்பட்ட கயிறு ஆகியவற்றைக் கொண்டு கட்டப்பட்டவை. நீண்ட தூரப் பயணங்களுக்கென இரண்டு படகுகளுக்குக் குறுக்கே சில கட்டைகள் வைத்து இணைத்துக் கட்டினார்கள். இந்த இரட்டைப் படகுகளில் ஒன்று மனிதர்களுக்கு, கால்நடைகளுக்கு. இன்னொன்று உணவுப் பொருள்களுக்கு. குளிர், மழை எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு திறந்த படகில் பல நூறு மைல்கள் பயணம்.

சரி, பாதையை எப்படி நினைவில் வைத்துக் கொண்டார்கள்? இயற்கையே துணை. வானமே வழிகாட்டி. சூரியன், நிலவு, குறிப்பிட்ட இடத்தில் தோன்றும் நட்சத்திரங்களை வைத்து பாதைகளை யூகித்துக் கொண்டார்கள். கடல் நீரோட்டம், மேகங்கள் நகரும் திசை, பறவைகள் உள்பட இன்னும் சில விஷயங்கள் அவர்களை வழி நடத்தின. வானம் தெளிவாக இருக்கும்வரை எல்லாம் சரி. புயல் மழை நாள்களில்? பிழைத்துக் கிடந்தால் பயணம் தொடரும். இல்லையேல், ஜல சமாதி.

அருகில் தீவு ஏதாவது தென்படுகிறதா என்பதைத் தெரிந்துகொள்வதற்காக பாலிநேசியர்கள் கடைபிடித்த உத்தி சுவாரசியமானது. பயணத்தில் ஃப்ரிகேட் என்ற கடல் பறவைகளையும் தங்களோடு கொண்டு சென்றார்கள். அவை நீண்ட தூரம் கடலில் பறக்கும் திறன் இல்லாதவை. நீரில் இறக்கைகள் நனைந்துவிட்டால் அவற்றால் பறக்க இயலாது. அருகில் நிலப்பரப்பு இருந்தால் மட்டுமே அவை நீர்மேல் பறக்கும். பாலிநேசியர்கள் தம் படகிலிருந்து ஃப்ரிகேட் பறவைகளைப் பறக்க விடுவார்கள். அவை வெகு சீக்கிரத்தில் படகுக்குத் திரும்பிவந்துவிட்டால் அருகில் நிலப்பரப்பு இல்லை என்று பொருள். அவை திரும்பவேயில்லை எனில், தீவை நெருங்கி விட்டதாக அர்த்தம். உணவு தேடி கூட்டமாகப் பறந்து செல்லும் பிற பறவைகளை வைத்தும் புதிய தீவுகளைக் கண்டடைந்தார்கள்.

இப்படி பாலிநேசியர்கள் கண்டடைந்த தீவுகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆயிரத்துச் சொச்சம் இருக்கலாம். பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பின், பசிபிக் கடலில் ஐரோப்பியர்களின் நெடும் பயணங்கள் ஆரம்பமாயின. அப்போது பாலிநேசியர்களின் தீவுகளைச் சென்றடைந்த ஐரோப்பியர்களுக்கு ஏகப்பட்ட அதிர்ச்சி, எக்கச்சக்க ஆச்சரியம்.

எத்தனை தீவுகள். அத்தனையிலும் மக்கள். ஆனால் இன்னும் கற்கால மனிதர்கள் போலவே இருக்கிறார்களே. எந்தவிதமான உலோகத்தையும் இவர்கள் பயன்படுத்துவதாகத் தெரியவில்லையே. பல மைல்கள் கடந்து ஒரு தீவை விட்டு இன்னொரு தீவுக்கு எப்படி இடம் பெயர்ந்திருப்பார்கள்? அடடா, எவ்வளவு பெரிய படகுகள்? எப்படி வடிவமைத்திருப்பார்கள்?

அட, கரும்பு, தென்னை, மூங்கில், வாழை, மலை ஆப்பிள் – இத்தனை விதமான பயிர்களை விளைவிக்கிறார்களே. எல்லா தீவுகளிலும் இந்தப் பயிர்கள் இருக்கின்றனவே, எப்படி? சர்க்கரை வள்ளிக் கிழங்கும் இருக்கிறதா? அது தென் அமெரிக்காவுக்கு சொந்தமானதல்லவா? அது எப்படி இங்கு வந்தது?

இன்னும் சொல்லப்போனால் அநேக பாலிநேசிய தீவுகளில் மக்கள் பேசும் மொழியும் ஏறக்குறைய ஒரேபோலத்தான் இருந்தது. அவர்களது கலாசாரம், வாழ்க்கை முறை, உணவு பழக்கம் – இப்படி பல விஷயங்கள் பொதுவாக இருந்தன. தங்கள் தீவைச் சுற்றியிருந்த பல தீவுகளோடு அவர்கள் தொடர்பு வைத்திருந்தார்கள். எந்தெந்த தீவுகள் எவ்வளவு தொலைவில் எந்தெந்த திசைகளில் அமைந்திருக்கின்றன என்று தெளிவாகப் புரிந்து வைத்திருந்தார்கள்.

கடல் பயணம் குறித்த பாலிநேசியர்களின் அறிவைக் கண்டு ஐரோப்பியர்களுக்குத் தலை கிறுகிறுத்தது. மெகல்லன், வாஸ்கோ ட காமா, கொலம்பஸ் இவர்களுக்கெல்லாம் தாத்தன்கள் இங்கே இருக்கிறார்களே என்று வாய்பிளந்து நின்றார்கள். ஐரோப்பியர்கள் அந்தத் தீவுகளில் கால்பதித்த பின்னரே பாலிநேசியர்களின் சிறப்பை உலகின் மற்ற பகுதியினர் அறிய ஆரம்பித்தார்கள். அதற்குப் பிறகே பாலிநேசியர்களின் பயணங்கள் குறித்த ஆராய்ச்சிகள் ஆரம்பித்தன.

வரைபடத்தில் பாலிநேசியாவின் அமைவிடம் எது?

ஆஸ்திரேலியாவுக்கு வடகிழக்கில்  மீன்களுக்கு அள்ளிப்போட்ட பொரிபோல, ஆயிரத்துச் சொச்ச தீவுகள் உள்ளன. ஆரம்ப கதையில் வந்த அண்ணனும் தங்கையும் பயணம் செய்ததாகச் சொல்லப்படுவது இங்குதான். இந்தப் பகுதிகளில் கி.மு.வில் ஆரம்பித்த குடியேற்றங்கள், மெள்ள மெள்ள கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை தொடர்ந்திருக்கின்றன. எந்த எல்லைவரை? ஆஸ்திரேலியாவுக்கு நேர்கிழக்கில் ஈஸ்டர் தீவுகள் வரை. தென்கிழக்கில் நியு ஸிலாந்து வரை. வடகிழக்கில் ஹவாய் (Hawai) தீவுகள் வரை.

இந்த மூன்றையும் வரைபடத்தில் கோடுகளால் இணைத்துப் பார்த்தால் குடும்பக் கட்டுப்பாட்டுச் சின்னம் தெரியும். அந்த முக்கோணத்துக்குள் அடங்கிய தீவுகள் சேர்ந்த பகுதிதான் பாலிநேசியா (Polynesia, கிரேக்க மொழியில் ‘பல தீவுகள் சேர்ந்த பகுதி’ என்று பொருள்). அங்கே குடியேற்றத்தை ஏற்படுத்தியவர்களே பாலிநேசியர்கள் (Polynesians).

சரி, பாலிநேசியர்களின் முன்னோர்கள் எந்தப் பகுதியிலிருந்து வந்திருக்கக் கூடும்?

உலகின் முதல் கடல் கடந்த குடியேற்றம் பிலிப்பைன்ஸில் நடந்திருக்கலாம்.  கி.மு. 50000 சமயத்தில் இந்தோனேஷியாவின் தெற்குப் பகுதிகளில் காணப்படும் குட்டிக் குட்டித் தீவுகளுக்கு மனிதன் இடம் பெயர்ந்திருக்கலாம். அப்போது அந்தக் குட்டித் தீவுகளுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையேயான கடல் மட்டம் இப்போது இருப்பதைவிட சுமார் நூறு மீட்டர் வரை குறைவாக இருந்திருக்கலாம். ஆனால் என்ன, பாலம் கட்டிக் கொடுக்க இதிகாச ராமருக்கு அனுமன் அமைந்ததுபோல, அந்த மக்களுக்கு யாரும் கிடைக்கவில்லை. ஆக, படகுகள் மூலம்தான் அவர்கள் ஆஸ்திரேலியாவிலும் நியு கினியாவிலும் குடியேறியிருக்க வேண்டும். பின் அங்கிருந்து அருகிலுள்ள தீவுகளுக்கு குடியேற்றங்கள் பரவியிருக்க வேண்டும்.

கிறித்துவுக்கு முன்னரே ஹவாய் தீவுகளை பாலிநேசியர்கள் அடைந்திருக்க வேண்டும். கி.பி. 440ல் ஈஸ்டர் தீவில் குடியேறியிருக்க வேண்டும். கி.பி. 1150ல்தான் நியு ஸிலாந்தில் கால் பதித்திருக்க வேண்டும். இவை எல்லாம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் தகவல்கள்.

ஆனால் வரலாறு பாலிநேசியர்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இன்ன பெயருடைய பாலிநேசியர், இந்த ஆண்டில், இன்ன தேதியில் இந்தத் தீவைக் கண்டடைந்து தம் ரைட் லெக்கைப் பதித்தார் என்று எழுதப்பட்ட ஆதாரங்கள் எதுவுமே கிடையாது. பாலிநேசியர்கள் குறித்து நமக்குக் கிடைக்கும் தகவல்கள் எல்லாமே கடந்த நான்கு நூற்றாண்டுகளாக நடக்கும் ஆராய்ச்சிகள் வழி கிடைப்பவையே.

நிலவில் பெண் உருவமாகத் தெரியும் ஹினா (நமக்கு வடை சுடும் பாட்டி), பாலிநேசியர்கள் செய்யும் கடல் பயணங்களுக்கெல்லாம் ரூட் மேப் போட்டுக் கொடுக்கிறாள் என்பது பாலிநேசியர்கள் நம்பிக்கை. இம்மாதிரியான புராண கதைகளும், நாடோடிக் கதைகளும் பதிவு செய்யப்படாத பாலிநேசியர்களின் சாகசப் பயணங்களை இன்றுவரை உயிரோடு வைத்திருக்கின்றன.

Leave a Comment