பாவம் ராவணன்! – போகோ கட்டுரை ;)

(இந்தக் கட்டுரை குழந்தைகளுக்கும் குழந்தை மனம் படைத்தவர்களுக்கு மட்டும். சுட்டி விகடனில் சில வருடங்களுக்கு முன்பு வெளியானது. குழந்தைகள் தின வாழ்த்துகள்!)

ராவணன் தெரியுமா உங்களுக்கு… ஆமா பத்து தலைகளோட ‘பந்தா’வா ராமாயணத்துல  வருவாரே, அவரேதான்! ராவணன் இன்னிக்கு நம்ம கூட வாழ்ந்தார்னா, ‘அய்யோ பாவம்  அந்த அங்கிள்’னு நீங்க ‘உச்’ கொட்டுவீங்க. ஏன் தெரியுமா?

* தினமும் காலைல 320 பற்களைத் தேடிப்புடிச்சு ‘ஈ’ தேய்க்கணுமா, பாவம், அதுக்கே  எவ்வளவு நேரமாகும்!

* செல்போன்ல யாராவது ராவணனைக் கூப்பிட்டாங்கன்னா, ‘எந்தக் காதுல வைச்சுப்  பேசலாம்’னு குழம்பிப் போயிடுவாரு!

* இப்ப ராவணனுக்கு முதல் தலையில இருக்குற மூக்குல ஜலதோஷம் பிடிச்சா  அவ்வளவுதான். அப்புறம் பத்து மூக்குக்கும் பரவிடும். ‘அச்’னு ஒரு தும்மல் வந்துச்சுன்னா,  தொடர்ந்து ஒரே தும்மல் சத்தமாத்தான் இருக்கும்!

* ராவணனுக்கு ‘ஷேவ்’ பண்ண எவ்ளோ நேரமாகும்! முதல் முகத்துல இருந்து வரிசையா ‘ஷேவ்’ பண்ணிக்கிட்டே கடைசி முகத்துக்கு வர்றதுக்குள்ள முதல் முகத்துல தாடி முளைச்சிருமோ?!

* ராவணனுக்கு ஒரு தலையில ‘பொடுகு’ வந்தா, எல்லாத் தலைகளுக்கும் பரவிடுமா?  ஹைய்யோ, அப்ப குளிக்கணும்னா எவ்ளோ ஷாம்பு ஆகும்?

* ஸ்கூல்ல மிஸ் ‘2 X 3’ எவ்வளவுன்னு ராவணனைக் கேட்கறப்போ, நாலாவது வாய்  ‘6’-ன்னும் அஞ்சாவது வாய் ‘8’ன்னும் சொல்லிச்சுன்னா அவரு என்ன பண்ணுவாரு!?

* நாம அடிக்கடி தலையில அடிச்சு ‘எல்லாம் என் தலையெழுத்து’ன்னு சொல்லுவோமே,  அதை ராவணன் எப்படிச் சொல்லுவாரு?

* தனக்கு பிடிச்சவங்களுக்கு ‘கிஸ்’ கொடுக்கணும்னா ராவணன் எந்த உதட்டால கொடுப்பாரு?

* ஒரு தலைக்கு ‘ஹேர்-கட்’ பண்ண 40 ரூபாய்னா, பாவம் ராவணனுக்கு முடிவெட்ட  மட்டுமே, 400 ரூபாய் செலவாகிடும்ல!

* ஸ்கூல் பஸ்ல போகணும்னா எப்பவுமே ராவணனுக்கு கடைசி சீட்தான். அங்கதானே  அவரால உட்கார முடியும்!

இப்ப, சொல்லுங்க, ராவணன் பாவம்தானே!

Leave a Comment