மாலை மலர் ஸ்பெஷல் எடிஸன்…

ப்ளஸ் டூ ரிசல்ட்… டென்த் ரிசல்ட்…

ஒன்பது மணிக்கே பொட்டிக்கடை வாசல்ல காத்திருப்போம். ஏஜெண்ட் அண்ணாச்சி சைக்கிள்ல வேகமா வந்து, கேரியர்ல இருந்துஅம்பது அறுபது பேப்பரை எடுத்துக் கொடுத்துட்டு அடுத்த கடைக்கு ஓடுவாரு. மாலை மலர் ஸ்பெஷல் எடிஷன். பொட்டிக்கடைக்காரர் கையில காசைத் திணிச்சிட்டு, பேப்பரை வாங்கிட்டு அங்கிட்டும் இங்கிட்டும் பொரட்டுவோம்.

அவ்ளோ நேரம் மனப்பாடமா இருந்த ரெஜிஸ்டர் நம்பரு, அப்பத்தான் மறந்துபோன மாதிரி இருக்கும். ‘தூத்துக்குடில பாருலே… நீ என்ன கோவில்பட்டிய வெச்சுக்கிட்டிருக்க…’ – நண்பன் பதறுவான். கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டிருக்கும் ‘தூத்துக்குடி’, அப்போது நம் கண்ணில் படாது.

ஒருவழியாக பேப்பரின் சகல பரிமாணங்களையும் ஆராய்ந்த பிறகு, தூத்துக்குடி கண்ணில் படும். ‘ஏலேய்… நானூத்து பத்தொம்பது சீரியலை மட்டும் காணல’ – பதட்டம் மேலும் தொடரும்.

சில நொடிகள் நெஞ்சு அடைப்பதுபோல தோன்றும் உணர்வுக்குப் பிறகு, ‘419’ல் தொடங்கும் சீரியல் எண் அகப்படும். ‘இந்தாருக்கு என் நம்பரு… நான் பாஸூ’ என்று குதூகலிப்பான் ஒரு நண்பன்.

‘எங்கிட்டுலே?’ – பதட்டம் அதிகமாகும்.

‘அந்தா.. கீழ பாருலே…’

419344…. கண்கள் தேடும். முந்நூறில் தேடும்போது, 42, 43க்குப் பிறகு 44 மட்டும் காணாமல் போனதாக ஒரு தோற்ற மயக்கம் சட்டென வந்து காணாமல் போகும். ‘நாப்பத்து நாலு… நானும் பாஸு’ – முகத்தில் சங்கமித்திருந்த பதட்டம், பரவசமாக உருமாறிக் கொண்டிருக்கும் தருணம் அது. இருந்தாலும் அது தூத்துக்குடிதானா, சீரியல் நம்பரை ஒழுங்காகப் பார்த்திருக்கிறோமா என்ற பயம் ஒருமுறை வந்துபோக, மீண்டும் ரிசல்டைச் சரி பார்ப்போம். நம் எண்ணைச் சுற்றி பேனாவால் வட்டமிடுவோம்.

‘நம்பர் நாப்பத்தேழு இல்லேல… நம்ம கிளாஸுல யாருலே அது… சுதர்ஸனா, சுடலையா?’

‘எனக்கு அடுத்து சுடலை, அப்புறம் சுதர்ஸன்… நாப்பத்தேழு சுரேஷ்ல… பாவம்… சைன்ஸ் அன்னிக்கு அவனுக்கு காய்ச்சல் வந்துருச்சுல்ல….’

கடையில் மிட்டாய் பாக்கெட்டுகளை வாங்கிக் கொண்டு வீடுகளுக்குக் கிளம்புவோம். அப்பா, அம்மாக்களின் முகத்திலும் நம் முக பரவசம் பரவும். பக்கத்து வீடுகள், உறவினர் வீடுகளுக்கெல்லாம் மிட்டாய் சப்ளை.

பாஸ் ஆயாச்சு. மார்க் என்ன வரும்? கொஞ்ச நேரத்திலேயே அடுத்தகட்ட டென்ஷன் மனத்தை ஆக்கிரமித்திருக்கும். அன்றிரவு தூக்கம் வராது. காலை எழுந்தவுடன், பரபரவெனக் கிளம்பி பள்ளிக்கு ஓடுவோம்.

ஒரு ஹால். ஹாலுக்கு வெளியிலிருந்து ஜன்னல் வழியாக மார்க்குகளைப் பார்க்கலாம். ஜன்னல் எப்போது திறக்கும் என காத்திருக்க வேண்டும். இதில் என்ன கொடுமை என்றால், மாணவர்களின் தலையைவிட ஜன்னல் உயரமானது. அது திறக்கப்பட்டவுடன், ஜன்னல் கம்பியைப் பிடித்து குரங்கு போல ஏறி, நெரிசலில் கீழே விழாமல்தான் மார்க்குகளைத் தேடிப் பிடித்துப் பார்க்க வேண்டும். அது தேர்வு எழுதுவதைவிட கஷ்டமான வேலை. ஒருவேளை இதன் மூலம் ‘வாழ்க்கைப் பாடம்’ எதையாவது உணர்த்துவதற்காக, பள்ளி நிர்வாகம் அந்த ஜன்னலைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்போல.

ஜன்னல் எப்போது திறக்கும்? நேரம் ஆக ஆக காதுக்குள் சம்பந்தமில்லாமல் ‘நிலை மாறும் உலகில்…’ பாடல் எல்லாம் கேட்கும். ‘தோல்வி நிலையென நினைத்தால்…’ என்று செந்தில் வந்து தைரியம் கொடுத்துச் செல்வார். ஜன்னல் வெளிப்பக்கமாகத் திறக்கப்பட்ட நொடியில் பலமானவர்கள் தாவி ஜன்னல் கம்பிகளை ஆக்கிரமிப்பார்கள்.

பல நிமிட தள்ளு முள்ளு போராட்டங்களுக்குப் பிறகு, மார்க்கை அறிந்து கொண்ட நிமிடத்தில் குறைந்தபட்சம் சட்டைப் பையாவது கிழிந்திருக்கும். அடுத்தவன் மார்க் என்ன என்ற விசாரிப்புகளில் அன்றைய பொழுது போகும். ஸ்டேட் பர்ஸ்ட் எவனாக இருந்தால் என்ன? ஸ்கூல் பர்ஸ்ட் பற்றியும் கவலையில்லை. கிளாஸ் பர்ஸ்ட் யார், வகுப்பில் என்னென்ன சப்ஜெட்டில் யார் யார் பர்ஸ்ட் என்ற விதமான புள்ளிவிவர ஆராய்ச்சியில் பொழுது கழியும்.

வேறென்ன சொல்ல… ‘அந்தக் காலத்துல நாங்கள்ளாம்…’னு நானும் பேச ஆரம்பிச்சுட்டேன். வயசாயிருச்சு போல!