லோடியின் கையாலாகாத்தனம்!

தூத்துக்குடி ரயில்வே ஸ்டேஷனில் இதற்கு முன்பு இத்தனை போலீஸை நான் பார்த்ததில்லை. ‘பயணிகள் தவிர யாருக்கும் உள்ளே அனுமதி கிடையாது’ என்ற அறிவிப்பு இரு நிமிடங்களுக்கு ஒருமுறை ஒலித்துக் கொண்டிருந்தது. யாருக்கும் பிளாட்பார டிக்கெட் வழங்கப்படவில்லை. பயணிகளின் மெகா பெட்டிகள் முதற்கொண்டு சாப்பாட்டுப் பொட்டலங்கள் வரை, ‘ மெட்டல் நாய்கள்’ மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தன.

வயதான பெண்மணி ஒருவர், இரண்டு கனமான பெட்டிகளை வைத்துக் கொண்டு தவித்துக் கொண்டிருந்தார். ரயிலேற்றி விட வந்த பெண்மணியின் டிரைவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. போர்ட்டர்களும் கண்களில் தென்படவில்லை.

‘எங்க தாத்தாவுக்கு பெட்டி நம்பரு, சீட் நம்பெரல்லாம் சரியா பாத்து ஏறத் தெரியாதுங்க … ஏத்தி விட்டுட்டு உடனே வந்துடுறேன்’ என ஒரு பேரன் போலீஸிடன் கெஞ்சிக் கொண்டிருந்தான்.

என் முதுகில் ஒரு பை; கைகளில் இரண்டு. முதல் பை சோதனையிடப்பட்டது. பீப் பீப் பீப்….

‘என்ன இருக்கு உள்ள?’ – மீசைக்கார போலீஸ் முறைத்தபடி கேட்டார்.

‘ஹேண்டி கேமரா…’

அடுத்தது முதுகுப்பை. மீண்டும் பீப் பீப் பீப்….

‘இதுல என்ன?’

‘லேப்-டாப் இருக்கு.’

மீண்டும் முறைப்பு. மூன்றாவது பை. பிரித்து மேய்ந்தார்.

‘இது என்னப்பா ஒரே வயரா இருக்குது?’

‘லேப்-டாப் சார்ஜர். அது கேமரா சார்ஜர்…’

‘ஏம்ப்பா ஒரே வயரா கொண்டு வந்து தாலியறுக்கிறீங்க… ரெண்டு நாளைக்கு யாரும் வயர் கியர்லாம் கொண்டு வராதீங்க. ரோதனையா இருக்குது. எடுத்துட்டுப் போங்க…’

என் மூன்று பைகளும் அள்ளிக் கொண்டு பிளாட்பாரத்தில் நடக்க ஆரம்பித்தேன். எனக்கான பெட்டி கட்டக்கடைசியில் இருந்ததால் நன்கு பழகிய முத்துநகர் எக்ஸ்பிரஸே முதன் முதலாக மிக பிரமாண்டமாகத் தெரிந்தது. எனக்கான  பெட்டியில் ஏறினேன். உள்ளே, பயணிகளின் எண்ணிக்கையைவிட போலீஸாரின் எண்ணிக்கை அதிகமாகத் தெரிந்தது. ரயில் கிளம்பியது. பொதுவாக மதுரையில்தான் பெட்டிகள் பயணிகளால் பூரணத்துவம் அடையும். அதுவரை பல இருக்கைகள் காலியாகத்தான் கிடக்கும்.

‘…வானத்து இந்திரரே  வாருங்கள் வாருங்கள்… பெண்ணுக்குள் என்ன இன்பம் கூறுங்கள் கூறுங்கள்…’  – நான் அமர்ந்திருந்த பெட்டிக்கு அருகிலிருந்து பாடல் சத்தமாக ஒலித்துக் கொண்டிருந்தது. ஒரு போலீஸ்கார இளைஞரின்  மொபைல் அது. கால் மேல் போட்டு படுத்தபடி ஏகாந்தமாக பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். நரை மீசை போலீஸ் ஒருவர் கையில் சாப்பாட்டு பார்சலுடன் அங்கே வந்தார். ‘..இப்பவே தின்னுருவோம். சாத்தூர் தாண்டியாச்சுனா கூட்டம் குமிய ஆரம்பிச்சுரும்.’

பயணச்சீட்டு பரிசோதகர் வந்தார். ஒவ்வொருத்தர் பெயராக வாசித்து ‘அட்டெண்டெஸ்’ எடுத்தார். ‘உள்ளேன் ஐயா’ உச்சரித்தோம். எல்லோரிடமும் அடையாள அட்டை கேட்டு நிதானமாகப் பரிசோதனை செய்தார். ‘ஒரிஜினலா?’ என்ற துணைக் கேள்வியையும் கேட்கத் தவறவில்லை.  கொஞ்ச நேரத்தில்இன்னொரு அதிகாரி வந்தார். அவரும்  அடையாள அட்டையைப் பிடுங்கிப் பிடுங்கிப் பார்த்தார். இன்னும் கொஞ்ச நேரத்தில் முறுக்கு மீசை ரயில்வே போலீஸ் ஒருவர் வந்து சம்பந்தமில்லாமல் அடையாள அட்டை கேட்டார். ஒரு கயிறு கிடைத்திருந்தால் எனது PAN அட்டையை கழுத்தில் கட்டித் தொங்க விட்டிருப்பேன் (என் கழுத்தில்தான்).

சில பெட்டிகள் கடந்து சென்று இன்னொரு நண்பனைப் பார்த்துவிட்டு வந்தேன். எந்தப் பெட்டியிலுமே இஸ்லாமியர்கள் யாரும் தென்படவில்லை. ஒரு பெட்டியின் வாசலுக்கருகில் வட இந்திய இளைஞன் ஒருவனிடம் பரிசோதகர் கத்திக் கொண்டிருந்தார். ‘யுவர் டிக்கெட் ஈஸ் இன்வேலிட். இட் ஈஸ் ஈடிக்கெட். அண்ட் இட் ஈஸ் இன் வெயிட்டிங் லிஸ்ட் தேர்ட்டி ஃபைவ்…’

அந்த இளைஞன் என்னென்னமோ சொல்லிப் பார்த்தான். இன்னொரு போலீஸ்காரர் அங்கே வந்தார். பரிசோதகரிடம் இருந்து டிக்கெட்டை வாங்கி, இளைஞன் கையில் திணித்தார்.

‘நோ மோர் ஸ்பீச்… கெட் டவுன் கம்மிங்  ஸ்டேஷன்…’

இளைஞன் வாயடைத்துப் போனது அவரது மிரட்டலினாலா அல்லது ஆங்கிலத்தாலா என்பது எனக்குப் புரியவில்லை.

சாப்பிட்டு முடித்தேன். விருதுநகரில் நின்ற ரயில் புறப்பட்டது. ஓர் அம்மணி என் இருக்கைக்கு அருகிலுள்ள சைட் லோயரில் வந்து அமர்ந்தார். பரிசோதகர் வந்தார். அம்மணி டிக்கெட்டையும் தனது அடையாள அட்டையையும் அவசரமாக நீட்டினார்.

‘குணசீலன் யாரு?’

‘என் வீட்டுக்காரரு. அவரு வரலை.’

‘இது தட்கல் டிக்கெட். அவரு ஐடிதான் ரிசர்வ் பண்றப்ப கொடுத்திருக்காரு. அவரு வரலேன்னா இந்த டிக்கெட் செல்லாது.’

‘அவரால வர முடியல. நான் வந்திருக்கேன். என்கிட்ட ஐடி கார்ட் இருக்குது.’

‘என்னமா நீ புரியாம பேசற? அவருல்ல வரணும்’ – பரிசோதகரின் குரல் உயர்ந்தது.

‘அவரால வர முடியலீங்க. அதான் நான் வந்திருக்கேன்ல. டிக்கெட்ல எம்பேரு இருக்குல ‘ – அம்மணியின் குரலும் அதிர்ந்தது.

‘ரூல்ஸ்லாம் மாத்தியாச்சு. அவரு வந்தாத்தான் டிக்கெட்டு செல்லும்’

‘அதென்னங்க அநியாயம்? ஒருத்தர் வரமுடியேலேன்னா அதுக்கான காசையும் பிடுங்கிக்கீறீங்க. மத்தவங்களும் அந்த டிக்கெட்ல போவ முடியாதுன்னா என்ன அர்த்தம்?’

‘ரூல்ஸ் ரூல்ஸ்தான். நான் ஒண்ணும் பண்ண முடியாது’

வாக்குவாதம் தொடர்ந்தது.

*

சமீபத்தில் ரயில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் சில பொன்னான, அருமையான, மெச்சத்தகுந்த விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன.

* பயணத்துக்கு முந்தைய தினத்தில்தான் பதிவு செய்ய முடியும். (அன்றைக்கு ரயில் கிடைக்கவேண்டுமென்றால் நாம் பூர்வஜென்மத்தில் சில டன்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அல்லது உங்களுக்கு உச்சநடிகரின் மருமகன்போல அதிர்ஷ்டம் இருக்கவேண்டும் அல்லது குறைந்தபட்சம்  ஏழுமலையானுக்கு ஒரு மொட்டையாவது வேண்டிக் கொள்ள வேண்டும். தட்கலில்  டிக்கெட் கிடைக்காத பட்சத்தில் நாம் மீட்டர் வட்டிக்குக் கடன்வாங்கிக் கொண்டோ அல்லது சொந்த வீட்டை அடமானம் வைத்துவிட்டோ பேருந்து நிலையத்துக்கு ஓட வேண்டியதுதான். டிக்கெட் வாங்க வக்கிருக்க  வேண்டுமல்லவா!)

* தட்கலில் ஒரு டிக்கெட்டில் அதிகபட்சம் நான்கு பயணிகள் பயணம் செய்ய முடியும். (ஐந்தோ, ஆறோ நபர்கள் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படக்கூடாது. ஏற்பட்டால் ஐந்தாவது ஆறாவது நபரைக் கழட்டி விடுங்கள்; முடிந்தால் கொன்று விடுங்கள். அந்த ஐந்தாவது நபருக்கு தனி டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தீர்கள் என்றால் அந்த ஆணவமே உங்களை அழித்துவிடும்.)

* தட்கல் டிக்கெட் எடுக்கும்போது எந்தப் பயணியின் அடையாள அட்டையின் பிரதியை சமர்ப்பித்திருக்கிறோமோ அந்நபர் நிச்சயம் பயணம் செய்ய வேண்டும். அந்தப் பயணி வராதபட்சத்தில் அந்த டிக்கெட் செல்லாது. பிற பயணிகளும் அந்த டிக்கெட் மூலம் பயணம் செய்ய முடியாது. (ஆகவே முன்பதிவில் அடையாள அட்டை சமர்ப்பித்துள்ள பிரகஸ்பதி, ரயில் ஏறுவதற்கு முன் கோமாவில் விழுந்தாலோ, லாரியில் அடிபட்டுச் செத்தாலோகூட பிரச்னையில்லை. அடையாள அட்டையுடன் சேர்த்து அந்நபரையும் தூக்கிக் கொண்டு போய்விடுங்கள். அந்தப் பிரகஸ்பதி ரயில் ஏறுவதற்கு முன் காணாமல் போய்விட்டால்கூட எப்படியோ தேடிப் பிடித்து இழுத்துவந்துவிடுங்கள். இல்லையேல் உங்கள் டிக்கெட் செல்லாது. நீங்கள் அந்த ரயிலில் பயணம் செய்ய அருகதை அற்றவர். தேசத் துரோகி!)

*

வாக்குவாதம் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.

பரிசோதகர், சில நூறு ரூபாய் அபராதம் எழுதி, ரசீது நீட்டி, அம்மணியிடம் பணத்தை வாங்கிக் கொண்டு நகர்ந்தார். அம்மணி என்பதால் இந்தக் கரிசனம். ஒருவேளை வேறு ஆணாக இருந்திருந்தால் அடுத்த ரயில் நிலையத்தில் இறக்கிவிடப்பட்டிருக்கலாம்.

ரயில் மதுரையை அடைந்தது. பத்து நிமிடங்களாவது நிற்கும் என்பதால் பிளாட்பாரத்தில் இறங்கி நின்றேன். பக்கத்து பெட்டிக்கு உள்ளேயும் வெளியேயும் போலீஸாரும் ரயில்வே ஊழியர்களும் பரபரப்புடன் நின்று கொண்டிருந்தார்கள்.

‘எவனோ ஒருத்தன் டாய்லெட்குள்ள போய்ட்டு ரொம்ப நேரம் வெளிய வரலியாம்.’ ஒரு பயணி சொன்னார்.

‘வர்றப்பவே என்னத்தையாவது இழுத்துக்கிட்டு வாங்க… இருக்கற பிரஷர் போதாதுன்னு இது வேறயா!’ – ஒரு போலீஸ்காரர் அங்கலாய்த்தார்.

‘ரயிலைக் கிளப்பிற வேணாம். சொன்னதுக்கு அப்புறம் கெளப்புனா போதும்’ – ஒரு போலீஸ்காரர் சொல்ல,  ஊழியர் ஒருவர் ஓடினார்.

அந்த டாய்லெட்டின் கதவு தட்டு தட்டென்று தட்டப்பட்டது. திறக்கப்படவில்லை. நல்லவேளை, இடைப்பட்ட நேரத்தில் ‘ரயிலில் தீவிரவாதி பதுங்கல்’ என்ற ப்ளாஷ்நியூஸ் எந்த சேனலிலும் ஓடியிருக்காது என்று நம்புகிறேன்.

பெட்டிக்கு வெளியே இருந்த சன்னல் வழியாக, உள்ளே இருக்கும் நபரை நோட்டம் விட்டார்கள்.

‘ஏ.. போதைல கெடக்குறாம்பா… எழவு…’

‘ஒரு பெரிய கொம்பா எடுத்துட்டு வாப்பா’

‘இரும்புத் தடி ஏதாவது இருக்குமா?’

‘கதவை ரெண்டு தட்டு தட்டி, நெம்பித் தெறங்கப்பா..’

சில நிமிட போராட்டத்துக்குப் பிறகு கதவு திறக்கப்பட்டது. போதை ஆசாமியை இழுத்துக் கொண்டு வந்து வெளியே தள்ளினார்கள். ரயில் கிளம்புவதற்கான ஹார்ன் ஒலித்தது. ஏறினேன். போலீஸார் அவனது போதையைத் தெளிவிக்க மண்டகப்படியை ஆரம்பித்திருந்தனர்.

அதற்கு மேலும் கண் விழித்திருந்தால் உலகம் என்னைச் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் என்பதால் எனக்கான அப்பர்-பெர்த்தில் ஏறி படுத்துக் கொண்டேன். தூக்கம் வரவில்லை. மணி பன்னிரண்டைத் தொட்டது. என் கைக்கடிகாரத்தில் தேதி மாறியது. டிசம்பர் 6.

சிறிது நேரத்தில் என்னையறியாமலேயே தூங்கிப் போனேன்.

திடீரென ஓர் உருவம் என் கண் முன் தோன்றியது. அந்நபரை எங்கேயோ, ஏதோ ஓவியத்தில் பார்த்தது போல இருந்தது. யாரென்று பிடிபடவில்லை. என் முன் வந்த அவர், குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தார். ‘யார் நீங்கள்?’ – கேட்டேன்.

‘என்னைத்தான் உனக்குத் தெரியுமே. உனது முகலாயர்கள் புத்தகத்தில்கூட எழுதியிருக்கிறாயே. டெல்லியின் கடைசி சுல்தான்…’

‘இப்ராஹிம் லோடியா நீங்கள்?’

‘ம்…

‘ஏன் அழுகிறீர்கள்?’

‘என்னை மன்னித்து விடு. நான் மட்டும் அன்றைக்கு பானிபட் போரில் தோற்றுப் போகாமல் இருந்திருந்தால், பாபர் உள்ளே வந்து கோலோச்சியிருக்க முடியாது. இந்தியாவில் முகலாயப் பேரரசே அமைந்திருக்காது. மசூதியும் கட்டியிருக்க மாட்டார்கள். டிசம்பர் ஆறுக்காக பலரும் அவதிப்படும் நிலை உருவாகியிருக்காது.’

லோடியின் அழுகை நிற்கவில்லை. அவருக்கு ஆறுதல் சொல்லலாம் என்று அருகில் சென்றேன்…

தாம்பரம் வந்துவிட்டதென நண்பன் எழுப்பினான்.