நாடோடிகள் – 2009ன் சுப்ரமணியபுரம்!

தனது மூன்றாவது முயற்சியிலும் வெற்றி பெற்றிருக்கிறார் சசிகுமார், கதாநாயகனாக. இயக்குநராக சமுத்திரக்கனிக்கு இந்தப் படம் பெருவாழ்வு. எல்லா சென்டர்களிலும் வசூலை அள்ளப்போகிறது நாடோடிகள்.

படத்தின் கதையை விலாவாரியாகச் சொல்லமாட்டேன். அது திரையில் ரசிக்க வேண்டியது. என்  நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன். படத்தில் ஒரு வரி இதுதான். நண்பனின் (நண்பன்) காதலைச் சேர்த்து வைப்பதற்காகப் போராடும் நண்பர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் இழப்புகளைச் சுளீரென எடுத்துக்  காட்டியிருக்கிறது இந்தப்படம். அந்தக் காதலர்கள் நன்றி மறந்து நண்பர்களுக்குத் துரோகம் செய்தால்? அதற்குப் பின் அந்த நண்பர்களின் எதிர்வினை என்ன? அதுவே கதை.

நட்பை ஏக உயரத்தில் ஏற்றி வைத்திருக்கும் இந்தப்படம், இன்று மலிந்து கிடக்கும் போலி  காதல்களையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.

படத்தின் முதல்பாதி – அத்தனை விறுவிறுப்பு, அவ்வளவு சுறுசுறுப்பு. அதுவும் இடைவேளைக்கு முந்தைய சேஸிங் காட்சிகள் – செம வேகம். ஒளிப்பதிவாளர் கதிர் – அசத்தல். முதல் பாதி சிறுத்தை வேகத்தில் செல்வதால் இரண்டாவது பாதி கொஞ்சம் மெதுவாகச் செல்வதாகத் தோன்றுகிறது என  நினைக்கிறேன். ஆனால் இரண்டாவது பாதியிலும் விறுவிறுப்பு, சோகம், நகைச்சுவை எதற்கும் தட்டுப்பாடு இல்லை.

கதாபாத்திரங்களுக்கு வருவோம். கருணாகரனாக சசிகுமார் – ஒரு தேர்ந்த இயக்குநரால்தான் கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப நடிக்க முடியும் சொல்லிக் காட்டியிருக்கிறார். மிகை நடிப்பு இல்லை. ஆக்ரோஷமான  காட்சிகளிலும், சோகமான காட்சிகளிலும் அப்ளாஸ்! அடுத்த இடம் பாண்டியாக வரும் கல்லூரி  பரணிக்கு. நகைச்சுவையில் கஞ்சா கருப்பை ஓரம்கட்டி விடுகிறார். ஆக்ரோஷமான காட்சிகளிலும்  ஆள், தூள். சென்னை 28ல் நடித்திருக்கும் விஜய்க்கு இதில் அழுத்தமான பாத்திரம்.

பெண் கதாபாத்திரங்களில் முதலிடம் கு. நல்லம்மாவுக்கு. குந்தாணி என்று செல்லப்பெயரோடு  அறிமுகமாகியிருக்கும் அனன்யா. முகபாவனைகளில் ஜோதிகாதான். சு.புரம் சுவாதி எட்டடி  என்றால் இவர் பதினெட்டு அடி. ஆள்தான் கொஞ்சம் குள்ளம். அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு  எப்படி அமையுமோ? சசிகுமாரின் தங்கையாக அபிநயா. ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு. இந்தச் சிறப்புப் பெண்ணை நடிக்க வைத்ததில் ஜெயித்திருக்கிறார் சமுத்திரக்கனி.

தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் ப்ளக்ஸ் வைக்கும் கலாசாரத்தை சின்னமணி (பார்ப்பதற்கு மன்சூர் அலிகான் போலவே இருக்கிறார்) என்ற கதாபாத்திரம் மூலம் நையாண்டி செய்திருக்கிறார்கள். அதற்கு  தியேட்டரில் செம கைதட்டல். தியேட்டருக்கு வெளியே இவருக்குத் தனியாக ப்ளக்ஸ் வைத்திருக்கிறார்கள் என்பது தனிக்கதை.

சசிகுமாரின் பாட்டி, ரெண்டாவது பொண்டாட்டிக்குப் பயந்து முதல் தாரத்தின் மகன் மீது வெளிப்படையாகப் பாசத்தைப் பொழிய முடியாமல் மருகும் பாண்டியின் அப்பா, தனது மகனது காதலுக்காகத் தூது செல்லும் விஜயின் அப்பா – இப்படி யதார்த்தமாகப் படைக்கப்பட்ட பல கதாபாத்திரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஒவ்வொன்றிலும் அவ்வளவு  அழுத்தம் (சில பாத்திரங்கள் தவிர).

சம்போ சிவ சம்போ – பாடல் பின்னணி இசையின் உயிர்நாடி போல படத்தில் உதவியிருக்கிறது.  கண்கள் இரண்டால் போல ஒரு ஹிட் அமையாதது மட்டுமே குறை. மற்றபடி, ஒரு திருவிழா பாட லும், யக்கா யக்கா பாடலும் செருகல், உறுத்தல். அதுவும் யக்கா, யக்கா பாடலை நீக்கினால் அது இயக்குநர் ரசிகர்களுக்குச் செய்யும் நன்றிக்கடன். இசையமைப்பாளர் சுந்தர் சி. பாபு பின்னணி  இசையால் ஜெயித்திருக்கிறார்.

வசனங்கள் பல இடங்களில் பளிச். சத்யம் தியேட்டர் ரசிகர்களும் விசிலடித்துக் கைதட்டும்  அளவுக்கு. நட்பு குறித்த வசனங்களுக்கும் சசிகுமாரும் பாண்டியும் ஆக்ரோஷமாகப் பேசும் வசனங்களுக்கும் படு வரவேற்பு.

சில காட்சிகளில் சுப்ரமணியபுரம் நினைவுக்கு வருகிறது. புதிதாக யோசித்திருக்கலாம். மேலும் சில குறைகளையும் எடுத்துவைக்கலாம். படத்தின் ஓட்டத்தில் அவை தெரியாது.  விட்டுவிடலாம்.

கோடிக்கணக்கில் தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைக்கும் வெத்துவேட்டு மாஸ் ஹீரோக்கள் தேவையில்லை. கதை, திரைக்கதைதான் நிஜ ஹீரோ. அதைக் கொடுக்கவேண்டிய விதத்தில் கலந்துகொடுத்தால், எந்தப் படத்தையும் ரசிகர்களின் ஆதரவோடும், பெரும் வசூலோடும் ஜெயிக்க வைக்கலாம் என்று மூன்றாவது முறையாக நிரூபித்துக்  காட்டியிருக்கிறார்கள் சசிகுமார் கூட்டணியினர். நல்ல சினிமாவை ரசிக்கும் ரசிகர்களின் மனத்தில்  சசிகுமாருக்கு நிரந்தர இடம் உண்டு.

டைரக்டர் சமுத்திரக்கனியின் ‘உன்னைச் சரணடைந்தேன்’ – தியேட்டரில் பார்த்திருக்கிறேன். எனக்குப் பிடித்திருந்தது. நீண்ட போராட்டத்துக்குப் பின் சமுத்திரக்கனி நாடோடிகள் மூலமாக தனக்கான உயரத்தை அடைந்துவிட்டார். சமுத்திரக்கனி, சசிகுமாரின் நிஜ நட்பு ஜெயித்துவிட்டது.

இனி இவர்களை கோடம்பாக்கத்து மசாலா கோமாளிகள் அண்ணாந்து பார்க்கக் கடவதாக!