பாராவின் ‘அப்பன்’ மனசு!

சென்னை புத்தகக் கண்காட்சி 2011, ஜனவரி 8, 9 – சில குறிப்புகள்.

* வேர்ல்ட் கப் கிரிக்கெட் பைனல் மேட்ச் பார்க்க வந்த கூட்டம்போல, சனி ஞாயிறு இரண்டு தினங்களும் சென்னை புத்தகக் கண்காட்சி களை கட்டியது. பார்க்கிங் இடம் கிடைக்காமல் பல கார்கள் திணறிக் கொண்டிருந்தன. என்னதான் கூட்டம் கூடினாலும் நாங்கள் இரண்டு டிக்கெட் கௌண்டர்களுக்கு மேல் திறக்கவே மாட்டோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பபாஸி, வாசகர்களை வாசலிலேயே நீண்ட க்யூவில் நிற்க வைத்து கடுப்படித்தது.

* வெளியே ப்ளாட்பார கடைகளிலும் ஜேஜேவெனக் கூட்டம். பழைய ஆங்கில நாவல்களும், புகழ்பெற்ற புத்தகங்களின் போலிகளும் சக்கைபோடு போட்டுக் கொண்டிருந்தன. சட்டென என் கவனத்தைக் கவர்ந்த ஒரு புத்தகம் – தமிழர் நோபல் பரிசு பெற வழிகள். புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டேன். கையில் எடுத்துப் பார்க்கவில்லை. எனக்கு நோபல் ஆசையில்லாததால், புத்தகத்தை வாங்கத் தோன்றவில்லை.

* இந்த இரு தினங்களிலும் பெங்களூரு வாசகர்கள் அதிகம் வந்திருந்தார்கள். ஞாயிறு இரவு சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றிருந்தால், பெங்களூரு தமிழர் பலர் புத்தக மூட்டைகளோடு ரயிலேறும் அற்புதக் காட்சியைக் கண்டிருக்கலாம். கொசுறு செய்தி : பெங்களூருவின் ஆதி தமிழர், தற்போதைய ‘காந்தி கொலை வழக்கு’ புகழ் எழுத்தாளர் என். சொக்கன், ஜனவரி 11, 12 தினங்களில் சென்னை விஜயம் செய்கிறார்.

* கிழக்கு பதிப்பகத்துடன் கடந்த ஆறு ஆண்டுகளாக நெருக்கமாகப் புழங்கிக் கொண்டிருக்கும் பல வாசகர்கள், எவையெல்லாம் புதிய புத்தகங்கள், எவை பழைய புத்தகங்கள் என்று பெரும்பாலும் தெரிந்து வைத்துக் கொண்டுதான் உள்ளே நுழைகிறார்கள். தங்களுக்குத் தேவையானவற்றை வேகமாக தேடி எடுத்துவிட்டு, விருட்டென பில் போட்டு, கார்டு தேய்த்துவிட்டு போய்க்கொண்டே இருக்கிறார்கள். ‘இதோ இருக்கிறது கிழக்கு’ என்று நேரே கிழக்கு தேடி வந்து புத்தகம் வாங்கும் வாசகர்களையும் பார்க்க முடிகிறது.

* பொன்னியின் செல்வன் ரசிகர்கள் அனைவரையும் ஈர்க்கிறது ராஜ ராஜ சோழன். கிழக்கின் தற்போதைய நெம்பர் ஒன் புத்தகம் இதுவே. எழுதிய நண்பர் ராஜ ராஜ கண்ணனுக்கு வாழ்த்துகள்.

* என்னுடைய இந்த வருடப் புத்தகமான கிளியோபாட்ராவும் வரவேற்பைப் பெற்றுள்ளது. சனியன்று டாப் டென்னில் இருப்பதாக ஹரன் பிரசன்னா தகவல் சொன்னார். கடந்த செவ்வாய் அன்றே புத்தகத்தை வாங்கிச் சென்ற நண்பர் ரகு (உதவி இயக்குநர்), ஞாயிறு அன்று கண்காட்சி வந்தார். கிளியோபாட்ரா குறித்த தன் விமரிசனத்தைச் சொன்னார். (இதுவே எனக்குக் கிடைத்த முதல் விமரிசனம்.) ‘ஒரே நாளில் ஒரே மூச்சில் படித்துவிட முடிந்தது. புத்தகத்தின் மூலம் கிளியோபாட்ராவின் வாழ்க்கைக்கு ஈடாக, சீஸரின் வாழ்க்கையையும், ஆண்டனியின் வாழ்க்கையையும் தெரிந்துகொள்ள முடிகிறது. மொத்தத்தில் எகிப்தில் உட்கார்ந்துகொண்டு ரோமின் வரலாற்றைப் படித்ததுபோல உள்ளது.’

* புரட்சிக்குக் குறைவாக எதையும் சம்மதிக்காதே! என்ற வாசகத்தில் மேலே லெனினில் ஓவியம். அருகில் பகத் சிங் ஓவியம். இரண்டுமே சுவரில் மாட்டக்கூடியவை. கீழைக்காற்றில் கிடைக்கின்றன. அருகிலேயே ‘நாகரிக கோமாளி’ விசிடி கிடைக்கிறது. இந்தப் படம் பற்றி நல்லவிதமாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். வாங்கிப் பார்க்க வேண்டும். கூடவே சார்லி சாப்ளின் டிவிடிக்களும் கிடைக்கின்றன. The Great Dictator இருக்கிறதா என்று தேடினேன். இல்லை.

* சில புத்தகங்களைப் பார்த்தாலே எடுத்துப் பார்க்க வேண்டும் என்று  தோன்றும். அந்த வரிசையில் கிழக்கில் பலரும் எடுத்துப் பார்க்கும் புத்தகம் ‘பேய்.’ ஓரளவு விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. சில புத்தகங்களை பார்த்தாலே வாங்க வேண்டும் என்று தோன்றும். அந்த வரிசையில் வந்துள்ள இந்த வருடப் புத்தகம் ‘தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி.’ (ஆசிரியர் – தழிழ் பேப்பரின் ‘பெண்மனம் புகழ்’ தமிழ் சுஜாதா). அழகான கட்டமைப்புடன், தெளிவான அச்சுடன் வந்துள்ள இந்தப் புத்தகத்தைப் பரிசாக பலருக்கும் வாங்கிக் கொடுக்கலாம் என்பது என் சிபாரிசு.

* சென்ற கண்காட்சியில் ஒரு கடையில் சில காமிக்ஸ் புத்தகங்கள் கிடைத்தன. இந்தமுறை இதுவரை என் கண்ணில் படவில்லை. பத்ரி, சனி அன்று பெரிய சைஸ் லயன் காமிக்ஸ் தொகுப்புடன் (விலை ரூ. 200) வந்தார். யாரிடமோ சொல்லிவைத்து வாங்கியதாம். லக்கிலுக் வழியாக அவர் கைக்கு வந்ததாம். அந்த காமிக்ஸ் தொகுப்பு புத்தகக் கண்காட்சியில் கிடைக்கவில்லை.

* ரெண்டு புள்ளைங்க. ரெண்டு பேரும் ஓட்டப்பந்தயத்துல வேகமா ஓடுறாங்க. அதைப் பார்க்குற அப்பனோட மனசு, எந்தப் புள்ளை முதல்ல வந்து ஜெயிக்கணும்னு நெனைக்கும்? அப்படிப்பட்ட அப்பன் மனசுடன் கிழக்கில் இருவர்  திரிந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவர் பாரா. ஒருநாள் அவருடைய புள்ளை ஆர்எஸ்எஸ் முதலில் ஓடி வந்தால், மறுநாள் காஷ்மீர் ஓவர்டேக் செய்கிறது. இன்னொருவர் ஆர். முத்துக்குமார். திராவிட இயக்க வரலாறு பாகம் ஒன்றுக்கும் இரண்டுக்கும் இடையே கடும்போட்டி (பெரும்பாலான வாசகர்கள் இரண்டு பாகங்களையும் வாங்கிச் செல்வது மகிழ்ச்சிக்குரிய விஷயம்). மருதனுக்கு அந்தப் பிரச்னையே இல்லை. சென்ற முறை இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்டவர்கள், இந்தமுறை தானாகவே முதல் உலகப் போரில் குதித்துவிடுகிறார்கள்.

* இந்தக் கண்காட்சியிலும் கதவு திறந்துதான் கிடக்கிறது. காத்து வரவில்லை. கண்ட கண்ட…