‘கூத்தடிக்க வேண்டாம்’ – எஸ்.எஸ். வாசன்

ஆனந்த விகடனில் வேலை பார்த்தவர்கள் சிலருக்கு ஒரு நாடகக் குழு ஆரம்பித்தால் என்ன என்ற ஓர் எண்ணம் தோன்றியது. ஆனந்த விகடன் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப் என்ற பெயரில் ஒரு  நாடகக் குழுவை ஆரம்பித்தார்கள். முதல் முயற்சியாக தேவன் எழுதிய மிஸ்.மைதிலியை அரங்கேற்றுவது என முடிவு செய்யப்பட்டது.

நாரதர் ஸ்ரீனிவாச ராவ்தான் நாடகத்தின் கதாநாயகன், எழுத்தாளர் எஸ்.வி.வி.யின் மகன் எஸ். வி. ரங்கா, விகடனில் சர்குலேஷன் இலாக்கா மேனேஜராக  பணியாற்றினார். அவருக்கு வில்லன் வேடம். கதை எழுதிய தேவனுக்கும் ஒரு கேரக்டர் கொடுக்கப்பட்டது. அவர்தான் கதாநாயகி  மிஸ். மைதிலியின் தந்தை.

விகடன் ஆர்ட் ஸ்டூடியோ இருந்த  பங்களாவின் மாடியில் உதய சங்கரின் கல்பனா படத்தின் நடன ஒத்திகை நடக்கும்  என்று சொன்னேன் அல்லவா? அவர் படப்பிடிப்பு முடிந்து புறப்பட்டுப் போய்விட்டதால்,  அந்த மாடி காலியாகத்தான் இருந்தது. அங்கேதான் எங்களுடைய நாடகத்தின் ஒத்திகை நடக்கும் எல்லோரும் தினமும் அலுவலக வேலை நேரம் முடிந்தவுடன் கரெக்ட்டாக ஒத்திகைக்கு ஆஜராகி விடுவார்கள். எங்களின்  தவறாத வருகைக்கு எங்களுடைய நடிப்பு ஆர்வம் மட்டுமே காரணமில்லை. தினமும் ரிகர்சலின் போது சுடச்சுட போண்டா சப்ளை ஆகும். அந்த போண்டாவும் சேர்த்துதான் எங்களை ஒத்திகைக்கு இழுத்தது.

நாடக அரங்கேற்ற தேதி நெருங்க நெருங்க எங்களுக்கு ஆர்வம் அதிகரித்தது. எல்லாரும்  ஈடுபாட்டுடன் நாடக அரங்கேற்றத்துக்காக உழைத்தோம். ஜெமினி, விகடன் அதிபரான வாசனைத்தான் அரங்கேற்றத்துக்கு தலைமை தாங்க அழைத்திருந்தோம். குடும்பத்துடன் வந்திருந்து நாடகத்தைப் பார்த்து  ரசித்து, எங்களை ஊக்கு விக்க  வேண்டும் என்று அவரைக்  கேட்டுக் கொண்டோம். சம்மதித்தார். அரங்கேற்ற நாள் வந்தது.

சென்னை மைலாப்பூர் ரசிக ரஞ்சனி சபாவில்தான் அரங்கேற்றம். குறித்த நேரத்தில் வாசன் தனது குடும்பத்தினருடன்  நிகழ்ச்சிக்கு வந்துவிட்டார். நாடகக் குழு ஆரம்பிக்க ஆர்வம் காட்டி, முன்னின்று ஏற்பாடுகளைச் செய்தவர்  விகடன் அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்ட்டில் இருந்த   வைத்யநாதன். நாடகம் ஆரம்பித்தது. நடிகர்கள் அனைவருக்கும் மேடை நடிப்பில் முன் அனுபவம் ஏதுமில்லை என்பதால் சிலர் வசனம் பேசத் தடுமாறினார்கள். சிலர் வசனங்களை ஒப்பிப்பதுபோலப் பேசினார்கள். இன்னும் சிலரது நடிப்பு மிகவும் செயற்கையாக இருந்தது. நாடகத்தைப் பார்த்த வாசன், மேடை ஏறி ஏதோ இரண்டொரு வார்த்தைகள் சம்பிரதாயமாகப் பேசிவிட்டுப் புறப்பட்டுப் போய்விட்டார்.

மறுநாள் அலுவலகத்துக்கு வந்தவுடன் நாடகக் குழுவினர் அனைவரையும் கூப்பிட்டு அனுப்பினார். நேற்று எங்கள் நாடக முயற்சியைப் பற்றி பப்ளிக்காக ரொம்ப பாராட்டாவிட்டாலும், இப்போது நாலு வார்த்தை பாராட்டிச் சொல்லப்போகிறார்  என்ன நினைப்போடு சென்றோம். அனைவரும் வாசன் முன்னால் நின்று கொண்டிருந்தோம்.  பேச ஆரம்பித்தார் வாசன்.

‘ஆனந்த விகடன் மக்களுக்குச் செய்து கொண்டிருக்க நகைச்சுவைத் தொண்டே போதுமானது. நீங்கள் இப்படி எல்லாம் நடித்து, மேடையில் நகைச்சுவை என்று கூத்தடிக்க வேண்டாம். இத்துடன்  நாடகம் போடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.’

****

விகடனில் எல்லாமுமாக நிறைந்து விளங்கியவர் கோபுலு.  சொல்லப்போனால் தமிழ் வாசகர்கள் பலர், ஹாஸ்யத்தை உணர்ந்துகொண்டதே கோபுலுவின் கார்ட்டூன்களில் இருந்துதான் என்றுசொல்லலாம்.

ஓவியத்தில் ஆர்வமுள்ள குறும்பான சிறுவன், கும்பகோணம் ஓவியக்கல்லூரியின் மாணவன், மாலியின் சீடர், ஜோக் காட்டூனிஸ்ட், பக்தி ரசம் சொட்டும் ஓவியர், அரசியல் கார்ட்டூனிஸ்ட், வாசனின் மனம் கவர்ந்தவர், அட்வர்டைசிங் ஆர்ட் டைரக்டர், அட்வேவ் நிறுவனர், மென்மையான மனிதர் – கோபுலுவின் வாழ்க்கையை இப்படி தசாவதாரமாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு அவதாரத்திலும் அவரது அனுபவங்கள் அனைத்தும் மறக்க முடியாத இனிமையான பதிவுகள். வரலாறு என்றுகூட சொல்லலாம்.

ஓவியர் கோபுலுவின் வாழ்க்கையை அவரது எழுத்திலேயே படிப்பதென்பது, ஓர் அருமையான கருப்பு-வெள்ளை திரைப்படத்தை நீண்ட நாள் கழித்துப் பார்க்கும் ஏகானுபவம்! 2009 சென்னை புத்தகக் கண்காட்சிக்கு கிழக்கு பதிப்பகம் கொண்டுவரும் மிக முக்கியமான பதிவு – எஸ். சந்திரமௌலி தொகுத்துள்ள ஓவியர் கோபுலுவின் கோடுகளால் ஒரு வாழ்க்கை!