எடிட்டிங்னா என்ன செய்வீங்க?

நாம் அடிக்கடி எதிர்கொள்ளும் ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் சொல்வதென்பது அதிக சலிப்பைத் தரும். பதில் சொல்லுவதற்கே அவ்வளவு அலுப்பாக இருக்கும்.

என்ன வேலை பார்க்குறீங்க? – புதியவர்களோ, சொந்தங்களோ என்னைக் கேட்பார்கள்.

எடிட்டரா இருக்கேன் – பதில் சொல்லுவேன்.

எடிட்டர்னா? என்ன பண்ணுவீங்க? – அடுத்த கேள்வி வந்து விழும்.

ஒரு பப்ளிகேஷன்ல வேலை பார்க்குறேன் – இந்த பதிலோடு திருப்தியடைந்துவிடுவார்கள் என்று சொல்லிப் பார்ப்பேன். விடமாட்டார்கள். அடுத்த கேள்வி ஏடாகூடமாக வந்துவிழும்.

அப்படின்னா என்ன? ப்ரிண்டிங் பிரஸ்ஸா?

புஸ்தகங்கள் போடுற கம்பெனி.

வாரப்பத்திரிகையா?

இல்ல. பொதுவான புத்தகங்கள்.

கதை புஸ்தவமா? நாவல் மாதிரியா?

அரசியல், வரலாறு, மருத்துவம், ஆன்மிகம்னு பல தரப்பட்ட புஸ்தகங்கள் பண்ணுறோம்.

மாசா மாசம் வருமா? அங்க நீங்க என்ன வேலை பண்ணுறீங்க?

எடிட்டரா இருக்கேன். புஸ்தகங்கள் எடிட் பண்ணுவேன். எழுதுவேன்.

எடிட் பண்ணுறதுன்னா?

கேள்விகள் வளர்ந்துகொண்டே போகும். அதென்னவோ தெரியவில்லை.  ‘சாஃப்ட்வேர் கம்பெனில வேலை பார்க்குறேன்’ என்று சொன்னால் அடுத்த கேள்விகள் எழுவதில்லை. ‘மார்க்கெட்டிங்ல இருக்கேன்’, ‘இன்ஜினியரா இருக்கேன்’, ‘மெடிகல் ரெப்பா இருக்கேன்’ – இந்த பதில்களுக்கெல்லாம் எதிர்கேள்வி எழுவதில்லை. எடிட்டராக இருக்கிறேன் என்றால் எதிரெதிரெதிர் கேள்விகள் முளைத்துக் கொண்டே போகின்றன. பொறுமையாக உட்கார்ந்து பலருக்குத் தெளிவாக விளக்கியும் இருக்கிறேன். ம்ஹும். அப்படியும் கேள்வி கேட்பவர்களின் முகத்தில் சந்தேகம் பாவனை காட்டிக் கொண்டிருக்கும். ஒருவித அதிருப்தியோடுதான் எழுந்து செல்வார்கள்.

யாரைச் சொல்லியும் குற்றமில்லை. இந்தத் துறை பற்றிய புரிந்துணர்வு வெகுஜன புரிதலுக்கு அப்பாற்பட்டதாகத்தான் இருக்கிறது.

இன்று காலையில் எடிட்டிங் துறை பற்றிய அடிப்படை விஷயங்களை விளக்கும் கட்டுரை ஒன்றை தி ஹிந்து – Education Plusல் படித்தேன். கட்டுரை இங்கே. இனிமேல் என் வேலை பற்றி கேட்பவர்களிடம் இந்தக் கட்டுரையை அச்செடுத்துக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.

டெயில்பீஸ் : எனக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெண் வீட்டுக்காரர்களிடம் எனது துறையைப் பற்றியும் வேலையைப் பற்றியும் எனது அப்பா, அம்மா விளக்குவதற்குப் படும்பாடு இருக்கிறதே.. அது தனி புராணம்.