Making of Silk Smitha

சிலுக்கு.

இந்த ஒரு வார்த்தையை முன் வைத்தால் போதும். ஒவ்வொருவருக்கும் நினைவுகள் எங்கெங்கோ அலைமோதித் தள்ளாடும். ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவைக் கட்டி ஆண்ட பேரரசி. நிஜ வாழ்வில்?

சிலுக்கின் வாழ்க்கையை புத்தகமாகக் கொண்டுவர முடிவெடுத்தபோது, பாரா அதை எழுதும் பொறுப்பை நண்பர் பா. தீனதயாளனிடம் ஒப்படைத்தார். தீனதயாளன் என்ற நாற்பது வயது இளைஞரைப் பற்றி ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால் ‘கடந்த ஐம்பது கால தமிழ் சினிமாவின் என்சைக்ளோபீடியா.’

சிலுக்கு – ஒரு பெண்ணின் கதை என்ற புத்தகத்தை உருவாக்கும்போது தனக்குக் கிடைத்த அனுபவங்களை தீனதயாளனே தனது வார்த்தைகளில் பதிவு செய்துள்ளார்.
000
ஒரு பத்திரிகையாளனாக, சிலுக்கை பேட்டி எடுக்கக் கூட முயற்சி செய்திராத  எனக்கு, சிலுக்கின் வாழ்க்கை குறித்த புத்தகம் எழுதும் பணி வந்து சேரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

சிலுக்கின் மரணம் குறித்த காரசாரமான கட்டுரை பிரசுரமாகியிருந்த தினமணிகதிரின் பழைய இதழ் ஒன்று மிக நீண்ட நாள்களாக என்னிடம் இருந்தது. அதுதான் ஆரம்பம். சிலுக்கை அவரது மரணத்திலிருந்துதான் பின்னோக்கிப் பின் தொடர ஆரம்பித்தேன்.

சிலுக்கின் ‘தூக்குக் கயிறு’ விஷயம் கிடைத்து விட்டது. ‘தொப்புள் கொடி’ விஷயத்தை எங்கே தேடுவது? யார், யாரைச் சந்திக்கலாம் என்றொரு பட்டியலைத் தயார் செய்தேன்.

சிலுக்கின் காலத்தில் பிரபல கதாநாயகியாக இருந்த நளினியை முதலில் சந்தித்தேன்.
‘ஹலோ அளவில்தான் எங்கள் பழக்கம்’ என்று முடித்துக் கொண்டார். ஏமாற்றம். நளினியின் மேக்-அப் மேன் சிலுக்கின் மேக்-அப் மேன் பற்றிய தகவலைக் கூறினார். சிலுக்கு கண்ணன் என்றழைக்கப்படும் அவரைத் தேடிப் போனேன்.

சினிமாவும் பத்திரிகைகளும் அறிமுகப்படுத்திய சிலுக்கைவிட, கண்ணன் எனக்கு அறிமுகப்படுத்திய சிலுக்கு, ஒரு தேவதை போல் இருந்தார். ‘நீங்கள் சிலுக்கு பற்றித்தானே சொல்லுகிறீர்கள், சிவாஜி பற்றி இல்லையே?’ என்று பலமுறை ஆச்சரியத்துடன் கேட்டிருக்கிறேன்.

வினு சக்கரவர்த்தி சொன்ன விஷயங்கள் சிலுக்கு என்ற ‘மனுஷி’யைக் கண்முன் நிறுத்தியது. ஒளிப்பதிவாளர் என்.கே. விஸ்வநாதன் கூறிய பல தகவல்கள் சிலுக்கின் மறுபக்கத்தை விளங்க வைத்தது.

சிலுக்கு நல்லவரா, கெட்டவரா? தேவதையா, பிசாசா? – என்கிற கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில்தான். அவரை மனுஷியாகப் பார்த்த அத்தனை பேருக்கும் அவர் நல்லவராகவே இருந்திருக்கிறார். மற்றவர்களுக்கு அவர் ஒரு சிம்ம சொப்பனம்தான். சந்தேகமே இல்லை. நடித்துக் கொண்டிருந்த காலம் முழுவதும் திரையுலகில் அவர் யாராலும் நெருங்கமுடியாத ஒரு நெருப்புப் பந்தாகத்தான் இருந்திருக்கிறார். அது, அவர் வலுக்கட்டாயமாக ஏற்படுத்திக்கொண்ட இமேஜ் என்பது தெரியவந்தபோதுதான், அப்படியொரு இமேஜை உருவாக்கிக்கொள்ள நேர்ந்த அவசியம் என்ன என்று அறியும் ஆவல் ஏற்பட்டது.

அவருடன் பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் தேடித்தேடிச் சந்திக்கத் தொடங்கினேன்.

‘என்னிடம் சிவாஜி பற்றிக் கேளுங்கள், கலைஞர் பற்றிக் கேளுங்கள், காமராஜர் பற்றிக் கேளுங்கள். சிலுக்கைப் பற்றிக் கேட்கலாமா?’ என்று தொலைபேசியிலேயே ஒதுங்கிக் கொண்டார் முக்தா சீனிவாசன்.

நாசரைச் சந்தித்தேன். ‘சிவாஜிக்கு அப்புறம் சிலுக்கு பற்றியா எழுதப் போகிறீர்கள்? என்ன வரிசை உங்களுடையது? சிலுக்கு பற்றி என்ன எழுதப் போகிறீர்கள்? அவரை உங்கள் புத்தகத்தில் எப்படிக் காட்டப் போகிறீர்கள்? நம் நாட்டில் எந்த சுயசரிதையும் வாழ்க்கை வரலாறும் நிஜமான விஷயங்களை அப்பட்டமாகச் சொல்வதில்லை’ என்று விசனப்பட்டார்.

வில்லனாக இருந்து ஹீரோவாகி, இன்று தன் மகன் காலத்திலும் தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வரும் ஒரு நடிகரிடம் பேசினேன். உடனே வரச் சொன்னவர், அடுத்த ஓரிரு நொடிகளில், ‘சிலுக்கு தற்கொலை செய்து கொண்டு இறந்த நடிகை. எனவே பேட்டி வேண்டாம்’ என்று தொலைபேசியை வைத்து விட்டார்.

‘சிலுக்கு ஒரு கவர்ச்சி நடிகை. அவரைப் பற்றி என்ன எழுதப் போகிறீர்கள்? வேண்டாமே அந்தப் பாவம்’ என்றார் ஒரு சீனியர் நடிகர்.

பல சினிமா ஆண்கள் இப்படி ஒதுங்கிக் கொண்டனர். ஆனால் பல சினிமா பெண்கள் மனம் திறந்து பேசினர்.

‘சிலுக்கு பற்றி என் கருத்துகள் இல்லாமல் இந்தப் புத்தகம் வரக்கூடாது’ என்று கண்ணீருடன் பல விஷயங்களைப் பேசினார் மனோரமா. புலியூர் சரோஜா, வடிவுக்கரசி, சிலுக்கின் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஹேமமாலினி ஆகியோரும் மறுக்காமல் பல தகவல்களைப் பகிர்ந்து உதவினர்.

இந்தப் புத்தகத்துக்காக தகவல்கள் தந்து உதவிய எஸ்.பி. முத்துராமன், கங்கை அமரன், பாண்டியராஜன், ஒளிப்பதிவாளர் பாபு, ஒளிப்பதிவாளர் அசோக்குமார் ஆகியோருக்கு என் நன்றி.

சிலுக்கோடு சமகாலத்தில் போட்டி போட்ட நடிகை அனுராதா வீட்டுக்குப் போனேன். நான் அங்கே அனுராதாவைக் காணவில்லை. ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ படத்தில் கணவர் ஜெமினிக்குப் பணிவிடை செய்யும் அஞ்சலி தேவியையைப் போல் தன் கணவருக்குப் பார்த்துப் பார்த்துப் பணிவிடை செய்துகொண்டிருந்த ஒரு அன்பான மனைவியைக் கண்டேன். பல ஆண்டுகளுக்கு முன் விபத்தில் சிக்கி இன்னும் முழுமையாகக் குணம் அடையாத தன் கணவர் சதீஷுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார் அனுராதா. இன்று தெலுங்கு சினிமாக்களில் கவர்ச்சி நடனம் ஆடும் அவர்களது மகள் அபிநயஸ்ரீ, உள்ளிருந்து வந்து தன் அப்பாவின் காலருகே அமர்ந்து கொண்டார். அனுராதா சிலுக்கின் கடைசி நாள்கள் குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

சமூகத்தின் கண்ணோட்டத்தில் மட்டுமே பதிவாகியிருக்கும் ஒருவரைப் பற்றிய எண்ணங்கள் பெரும்பாலும் நிஜமானதாக இருப்பதில்லை.

சிலுக்கின் விஷயத்திலும் அப்படித்தான். என்னால் முடிந்தவரை ‘நிஜமான சிலுக்கை’ இந்தப் புத்தகத்தில் வரைந்துகாட்ட முயற்சி செய்திருக்கிறேன். இம்முயற்சிக்கு உதவிய அத்தனை பேருக்கும் என் நன்றி.

பா. தீனதயாளன்
16-02-2007.

000

சிலுக்கு ஒரு பெண்ணின் கதை : புத்தகத்தை வாங்க