ஆரண்ய காண்டம்

* ‘இது ஒரு வித்தியாசமான படம். தமிழில் இதுவரை செய்யப்படாத முயற்சி’ – என்றெல்லாம் டைரக்டர் எங்கேயும் பேட்டி கொடுத்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் அதுவே நிஜம்.

* ஒரு கதாபாத்திரம் எப்படி எல்லாம் இருக்க வேண்டும், எப்படிப் பேச வேண்டும், சிரிக்க வேண்டும், என்ன உடல்மொழி தேவை, என்ன மேனரிஸம் – எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து மெனக்கிட்டுச் செதுக்கியிருக்கும் இயக்குநரின் உழைப்பு அபாரம். கதாபாத்திரங்களுக்கான நடிகர்கள் தேர்வுக்கென தனி விருது இருந்தால் இந்தப் படத்துக்குக் கொடுக்கலாம்.

* வசனங்கள் பல இடங்களில் கைதட்டல் அள்ளுகின்றன. (வசனம் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா, ஓரம்போ வசனகர்த்தா.) சில முக்கியமான இடங்களில் புரியவில்லை. வசனம் புரியாமல் போனதால் படத்தின் கதை ஓட்டமே பலருக்குப் புரியவில்லை என்பதை தியேட்டரில் உணர முடிந்தது.

* வர வர சினிமாக்களில் சிறுவர், சிறுமியராக நடிக்கும் சைல்ட் ஆர்ட்டிஸ்களிடம் மாஸ் ஹீரோக்கள் எல்லாம் டியூசன் போக வேண்டும்போல. இந்தப் படத்தில் கொடுக்காப்புள்ளியாக வரும் சிறுவன் அசால்ட்டாக அசத்துகிறான். டயலாக் டெலிவரியிலும், முக பாவனைகளிலும் ஏக உயரத்தில் நிற்கிறான், ஸாரி நிற்கிறார்.

* காலையில் ஆரம்பித்து மாலைக்குள் முடியும் கதை என்பதால் படத்தை முதல் ஸீனிலிருந்து பார்த்தால் மட்டுமே கதையைப் புரிந்து படத்தோடு ஒன்றிப் போக முடியும். அரைமணி நேரம் கழித்து சாவகாசமாக தியேட்டருக்குள் நுழைந்த பின்வரிசை நபர்கள், ‘கதையே இல்லாம என்னத்தை படம் எடுத்திருக்கானுக…’ என்று டைரக்டரை கொஞ்சிக் கொண்டிருந்தார்கள்.

* படத்தில் விறுவிறுப்பைத் தாங்கிப் பிடிக்கும் முக்கியமான கதாபாத்திரம் பின்னணி இசை. பாடல்களே இல்லாத ஒரு படத்தில் யுவன் ஷங்கர் ராஜா. வாழ்த்துகள். ரத்தம் தெறிக்கும் காட்சிகளில் சித்தம் கலங்கடிக்கும் இடிஇசையைத் திணிக்காமல், புத்தம்புது விதமாக வயலினும் பிற வாத்தியங்களும் அந்தக் குரூரத்தை மென்மைப்படுத்துகின்றன. இம்மாதிரியான முயற்சிகளை யுவன் தொடர வேண்டும்.

* கேமரா வினோத். புதியவர் என்று நினைத்தேன். வசந்தின் ரிதம், அப்பு படங்கள் செய்துவிட்டு, பின் ஹிந்திக்குச் சென்றவர் என்றது கூகுள். பல காட்சிகள் இருள் சூழ்ந்தவை இருந்தும் மணிரத்னத்தனமாக இல்லாதது பெரிய ப்ளஸ்.

* சிறிய படம்தான். இருந்தாலும் எடிட்டர்கள் (பிரவீன், ஸ்ரீகாந்த்) சில காட்சிகளை இன்னும் வேகப்படுத்தியிருக்கலாம் என்று தியேட்டரில் ரசிகர்கள் பொறுமையிழந்து கத்தும்போது தோன்றுகிறது. இடைவேளைக்குப் பிறகு வரும் காட்சியில், சம்பத் உயிர் பிழைக்க ஓடும் காட்சியில் ஏதோ வித்தியாசமாகச் சொல்ல வருகிறார்கள் என்று மட்டும் புரிகிறது. அது என்னவென்று என் பாமர அறிவுக்குப் புரியவில்லை.

* படத்தில் மெல்லிய நகைச்சுவையை வசனங்கள் மூலமாகவே ஆங்காங்கே கிரீம்போல தடவியிருப்பது இறுக்கத்தைக் குறைக்கிறது.

* நடிப்பில் முதலிடம் பசுபதியாக வரும் சம்பத்துக்கு. அடுத்தது கொடுக்காப்புள்ளியாக அந்தச் சிறுவனுக்கு. மூன்றாவது கஜேந்திரன் பாத்திரத்தில் வரும் ராம்போ ராஜ்குமாருக்கும், சப்பையாக வரும் ரவிகிருஷ்ணாவுக்கும்.

* இந்தப் படம் தியேட்டரில் தாக்குப் பிடித்து ஓடினால் ரசனை மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று மகிழலாம். குழந்தைகளை அழைத்துப் போவதைத் தவிர்க்கலாம். ஆண்கள் மட்டுமே பார்க்கக்கூடிய படம் என்றெல்லாம் சொல்ல மாட்டேன். பெண்கள் இம்மாதிரி படங்களை ரசிக்க மாட்டார்கள் என்று நாம் என்ன சொல்வது?

* தியேட்டரில் சென்று பார்த்தால் மட்டுமே ஆரண்ய காண்டத்தை உணர்ந்து ரசிக்க முடியும். டிவிடியிலோ, பிற்காலத்தில் டீவியில் ஒளிபரப்பாகும்போதோ பார்த்தால் நிச்சயம் பொறுமையைச் சோதிக்கவே செய்யும். ஆகவே நல்ல சினிமா ரசிகர்களே…

டாப் ஒன்பதரை பாடல்கள்

தற்போது ரசித்துக் கொண்டிருக்கும் இனி வெளியாகவிருக்கும் தமிழ் பட பாடல்களின் தர வரிசை. அதென்ன ஒன்பதரை? சொல்கிறேன்.

குறிப்பு : சமீபத்தில் வெளியான் யுவனின் இசையில் தீராத விளையாட்டு, ஜிவி இசையில் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம், இமான் இசையில் கச்சேரி ஆரம்பம் படங்களில் பாடல்கள் எதுவும் எனக்குப் பிடித்தமாதிரி இல்லை.

ஒன்பதரை

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில், கார்த்திக்கின் இதமான குரலில் ‘ஊனே உயிரே உனக்காகத் துடித்தேன், விண்ணைத் தாண்டி வருவாயா…’ – சின்னதாக ஒரு பாடல் (அரைப்பாடல்தான். ரஹ்மான் முழு பாடலே போட்டிருக்கலாம்.) – கிடார் இசை சுகம்.

ஒன்பது

பழைய பரத்வாஜ் மீண்டும் கிடைக்கவே மாட்டார்போல. அசல் படத்தில் அசலான பாடல்கள் எதுவும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டியதிருக்கிறது. ஆஹா எஃப் எம் நண்பர் ஒருவர் எனக்கு ஒவ்வொரு பாடலையும் போட்டுக் காட்டி, எது எது எங்கிருந்து எடுத்தது என்று சொன்னார். இருந்தாலும் ஒரே ஒரு பாடல் மட்டும் எஃப் எம் புண்ணியத்தால் மனத்தில் நன்கு பதிந்துவிட்டது. துஷ்யந்தா – இதுவும் புதிய பறவையின் பார்த்த ஞாபகம் இல்லையோ பாடலின் ரீமிக்ஸ்தான். படம் அசலா, இல்லை ஏதாவது ஒரு படத்தின் நகலா என்று இனிமேல்தான் (முடிந்தால்) பார்க்க வேண்டும்.

எட்டு

தன் ‘குடும்ப’ படம் என்றால் மெனக்கிடல் அதிகம் இருக்கும்தானே. கோவாவில் யுவன் மீண்டும் விருந்து படைத்திருக்கிறார். அண்ணன், தம்பி, அப்பா, பெரியப்பா என குடும்பத்தினர் எல்லோரும் சேர்ந்து பாடியிருக்கும் ஏழேழு தலைமுறை பண்ணைபுர பாடல் ரசிக்கும்படியாக இருக்கிறது. பின்னால் அவர்கள் குடும்பத்தில் யாராவது அரசியலில் இறங்கினால் கட்சிப் பாடலாக உபயோகித்துக் கொள்ளலாம்.

ஏழு

சதீஷ் சக்கரவர்த்தியின் இசையில் லீலையின் பாடல்கள் காதுகளைப் பதம் பார்க்காமல், இதமாக இருப்பது சிறப்பு. உன்னைப் பார்த்த பின்பு – காதல் சோகப்பாடல் ஸ்பெஷலிஸ்ட் ஹரிசரனின் குரலில். நிச்சயமாக வரவேற்பைப் பெறும். இந்தப் படத்தின் நம்பர் 1 பாடல் இதுவே.

ஆறு

அரேபிக் ஸீ பாடல் அண்ட் ரீமிக்ஸ். கோவா. நல்ல ஸ்டைலான பாடல். பலரது ரிங்டோனாக இந்தப்பாடலில் ஆரம்ப இசை மாறிக் கொண்டிருக்கிறது.

ஐந்து

துளி துளி துளி மழையாய் வந்தாளே… ஹரிசரன் குரலில் யுவனின் இந்த வருடத்தின் முதல் ரொமாண்டிக் ஹிட். எங்கேயோ, ஏற்கெனவே கேட்டதுபோல லேசாக தோன்றினாலும் சலிக்கவே இல்லை. பையா பட ஆல்பத்தின் நம்பர் ஒன் பாடல். இந்த இடத்துக்கு என் காதல் சொல்ல நேரமில்லை (யுவன் குரலில்) பாடலையும் பகிர்ந்து கொடுக்கலாம்.

நான்கு

சித்து ப்ளஸ் டூ – பாடல் பூவே பூவே. தரணின் இசையில் யுவன் சங்கர் ராஜா, சின்மயி குரல்களில். பிற இசையமைப்பாளர்களின் ஆல்பத்தில் முன்னணி இசையமைப்பாளர்கள் பாடும் ஆரோக்கியமான டிரெண்ட் உருவாகி வருவதை வரவேற்கலாம் (பாடகர்கள் மன்னிக்க). எஃப் எம்களில் பாடல் ஏற்கெனவே ஹிட்! சித்து ப்ளஸ் டூ ஆல்பத்தின் நம்பர் ஒன் பாடல் இதுவே.

மூன்று

கோவாவில் இதுவரை இல்லாத உணர்விது – ஆன்ட்ரியா குரலில் கார்னெட்டோ கோனின் இனிமை. உடன் பாடும் அஜிஸுக்கு இது கன்னிப் பாடல். கேட்கும்போது விஜய் டீவி லோகோவோடு முகம் கண்ணில் தெரிவதைத் தவிர்க்க முடியவில்லை.

இரண்டு

முன்பே வா பாடலுக்குப் பிறகு ரஹ்மானின் இன்னொரு இசைக் கொடை. விண்ணைத் தாண்டி வருவாயாவில் மன்னிப்பாயா… ஷ்ரேயா கோஷல் உச்சரிக்கும்போது ஜிவ்வென்று இருக்கிறது. ரஹ்மானுக்கும் இளையராஜா போல ஷ்ரேயாவோடு டூயட் பாட நீண்ட நாள் ஆசை போல. இந்தப் பாடல் மூலம் அதை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். ரசனையான பாடல். அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்-ஐ உள்ளே நுழைத்திருப்பது அழகு. இந்த வருடத்தின் நம்பர் ஒன் மெலடி ஆகியிருக்க வேண்டிய பாடல் இது. ஆனால்… தாமரையின் வரிகள் முழுமையான கவிதையாக இல்லாமல் சில இடங்களில் உறுத்தலாக இருக்கிறது. அந்த (வசன) வரிகளை வளைத்து நெளித்துப் பாடுவதற்குப் பாடகர்கள் அதிகம் மெனக்கிட்டிருப்பார்கள் போல. இருந்தாலும் பலரது வாழ்நாள் விருப்பப் பாடலாக மாறிவிடும்.

ஒன்று

ஒரு படத்தில் பாடல்கள் கேட்கும்போதுகூட சிரித்துக் கொண்டே இருக்க முடியுமா? தமிழ் படம் பாடல்கள் அந்த இன்பத்தைக் கொடுக்கின்றன. இந்த வார இறுதியில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தை பொங்கலுக்கே எதிர்பார்த்தேன். ஹரிஹரன், ஸ்வேதா குரலில் ஓ மஹ ஸீயா பாடலை எக்கச்சக்கமாக ரசித்துக் கொண்டிருக்கிறேன். இத்தனை மெலடியான பாடலில்கூட எல்லோரையும் சிரிக்க வைத்திருக்கும் இசையமைப்பாளர் கண்ணனுக்கு வாழ்த்துகள். வார இறுதியில் இந்தப் படம் பார்க்கலாம் என்றிருக்கிறேன். கோவாவெல்லாம் பிறகுதான்.