புலி புராணம்!

தேசிய விலங்கு என்று சொல்லி பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் எந்த மிருகக் காட்சியில் எப்போது புலி குட்டி போடும் என்று காத்துக் கொண்டிருக்க வேண்டியதிருக்கிறது. வண்டலூரில் வெள்ளைப்புலி அனு, மூன்று குட்டிகள் போட்டதாக செய்தி. கேக் வெட்டி கொண்டாட வேண்டும் என்று தோன்றுகிறது.

சரி, நம் முன்னோர்கள் புலிகளை எப்படியெல்லாம் அழித்தார்கள்? வேட்டை என்று சொல்லிக்கொண்டு மகாராஜாக்களும் பிரிட்டிஷாரும் செய்த அழிச்சாட்டியங்கள் என்னென்ன?

***

வேட்டையாடுதல் என்பது இந்திய மகாராஜாக்களின் பொழுதுபோக்குகளில் முக்கியமான ஒன்று. அதை ஒரு கௌரவமாகக் கருதினார்கள். ‘போன வருசம் மட்டும் நான் பதினேழு காட்டுப்பன்றி, ஒன்பது சிறுத்தை, நாலு புலி கொன்னுருக்கேன்’ என்று சக சமஸ்தான மகாராஜாக்களிடம் பட்டியலிட்டுப் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். அத்தோடு தாங்கள் வேட்டையாடிய விலங்குகளை பாடம் செய்துவைத்து ஓர் அறை முழுவதையும் நிரப்பியிருப்பார்கள்.

குவாலியர் மகாராஜா மாதவ் ராவ் சிந்தியா
குவாலியர் மகாராஜா மாதவ் ராவ் சிந்தியா

சமஸ்தானத்தில் வனப்பகுதி இருந்தால் போதும். அதற்குள் சகல சௌபாக்கியங்களும் நிறைந்த ஒரு வேட்டை அரண்மனையை கட்டி வைத்திருப்பார்கள். அவ்வப்போது அங்கு சென்று குடும்பத்தோடு தங்கி, டுமீல்.. டுமீல்! இன்றும் குவாலியரில் மாதவ் தேசியப் பூங்காவில், சிவ்புரி என்ற வேட்டை அரண்மனை அப்படியே இருக்கிறது. அது மகாராஜா மாதவ் ராவ் சிந்தியா கட்டியது.

பொதுவாக வைஸ்ராய், ஒரு சமஸ்தானத்துக்கு வருடத்துக்கு ஒருமுறைதான் செல்லுவார். செல்லும் நேரத்தில் பலே விருந்து உண்டு. அது காட்டை ஒட்டிய சமஸ்தானமாக இருந்தால் வேட்டையும் இருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வேட்டை பிரசித்தம். உதய்பூர், ஜோத்பூர், குவாலியர், பஞ்சாப் பகுதிகளுக்குச் சென்றால் புலிகளை, புளியங்காய் அடிப்பது போல அடிக்கலாம். தோல்பூர், பரத்பூர் பகுதிகளுக்குச் சென்றால் விதவிதமான பறவைகளையும் கொத்துக் கொத்தாக வாத்துகளையும் அள்ளலாம். குஜராத் வனப்பகுதிகளில் சிறுத்தைகளுக்குக் குறிபார்க்கலாம். இந்தியா முழுவதிலுமே மான்களுக்குப் பஞ்சமிருந்ததில்லை. தெற்கே கேரள வனப்பகுதிகளுக்கு வந்தால் யானை வேட்டை சாத்தியம். இவைபோக கரடி, ஓநாய், மயில், காட்டுப்பன்றி, காட்டெருமை, காண்டாமிருக வேட்டைகளும் நடந்தன.

பிரிட்டிஷார், புலி வேட்டையாடுவதை கௌரவமான ஒன்றாகக் கருதினார்கள். சுட்ட புலியைக் குப்புறப்போட்டு, அதன்முன் லேடி வைஸ்ராயோடு நின்று, துப்பாக்கியுடன் சிரித்தாற்போல புகைப்படம் எடுத்துக் கொள்வது என்பதை அளப்பரிய சாதனையாக நினைத்தார்கள். தாங்கள் சுடும் புலி, குறைந்தபட்சம் பத்து அடி நீளமாவது இருக்க வேண்டும் என்பதிலும் கவனமாக இருப்பார்கள். புலி வேட்டையாடுவதில் மூன்று முறைகளைக் கடைபிடித்தார்கள்.

கர்ஸன், லேடி கர்ஸன், புலி
கர்ஸன், லேடி கர்ஸன், புலி

புலி நடமாட்டமுள்ள பகுதிகளை புக்கிகள் கண்டறிந்து சொல்லுவார்கள். அதற்கு அருகிலுள்ள பகுதியில் மகாராஜா, மரத்தில் மேலேறி மேடையில் துப்பாக்கியோடு காத்திருப்பார். கீழே சற்று தொலைவில் ஒரு ஆடோ, மாடோ, மானோ உயிரோடு கட்டப்பட்டிருக்கும். சாயங்கால வேளையில் புலிக்குப் பசி எடுக்க ஆரம்பிக்கும். தன் இடத்தில் இருந்து எழுந்து, சோம்பல் முறித்து, இரையை மோப்பம் பிடித்து வரும். கட்டப்பட்டிருக்கும் விலங்கு கத்த, புலி பாய, மகாராஜாவின் துப்பாக்கியிலிருந்து குண்டும் பாயும். இது முதல் முறை.

அதிகாலையிலேயே புலிக்கு இரை வைத்துக் காத்திருப்பார்கள். புலி, இரையை அடித்து இழுத்துச் சென்று சாப்பிட ஆரம்பிக்கும். அப்போது யானைமீது சென்று புலியைச் சுற்றி வளைத்துச் சுடுவது இரண்டாவது முறை. இந்த முறையில் மகாராஜாவின் குறி தப்பினால், வேறு யாராவது சுட்டு விடுவார்கள். ஏனெனில் புலி, பூ பறித்துக் கொண்டிருக்காதே.

மூன்றாவது முறை மகாராஜாக்கள் கொஞ்சமும் நோகாமல் நொங்கெடுக்கும் முறை. அதாவது மகாராஜா காட்டில் ஒரு பகுதியில் தனக்கான மேடையில் சௌகரியமாக உட்கார்ந்து கொள்ளுவார். யானைகளோடும் தீப்பந்தங்களோடும் முரசு கொட்டுபவர்களோடும் ஒரு படையினர் புலியின் இருப்பிடத்துக்கே சென்று, அதனை மிரள வைத்து மகாராஜா காத்திருக்கும் பகுதிக்கு ஓட்டி வருவார்கள். மகாராஜா அதை டுமீல் செய்வார்.

ஆனால் ரேவா சமஸ்தான மகாராஜா, புலி வேட்டைக்கு நான்காவதாக ஒரு புதிய முறையை உபயோகப்படுத்தினார். அவரிடம் பழக்கப்படுத்தப்பட்ட குரங்கு ஒன்று இருந்தது. வேட்டைக்கான மேடையில் அவர் இருக்கும்போது, அந்தக் குரங்கு மரத்தின் உச்சியில் இருக்கும். மகாராஜா, ஜாலியாக புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பார். புலி அந்தப் பக்கமாக வந்தால், அந்தக் குரங்குக்குத் தெரிந்துவிடும். உடனே இறங்கிச் சென்று மகாராஜாவிடம் சத்தம் எழுப்பும். மகாராஜாவும் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு துப்பாக்கியைத் தூக்குவார்.

மிரள வைக்கும் வேட்டை புள்ளி விவரங்களில் சில. கூச் பிகார் மகாராஜா நிருபேந்திர நாராயண், தன் வாழ்நாளில் 365 புலிகள், 438 காட்டெருமைகள், 207 காண்டாமிருகங்கள், 311 சிறுத்தைகளை வேட்டையாடியிருக்கிறார். சர்குஜா சமஸ்தான ராஜா, ராமானுஜ் சரன் சிங், தம் வாழ்நாளில் சுட்ட புலிகளின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்தைத் தாண்டும். ரேவா சமஸ்தான மகாராஜா குலாப் சிங்கில் புலி ஸ்கோர் தொள்ளாயிரத்துச் சொச்சம்.

(குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதி வரும் அகம் புறம் அந்தப்புரம் தொடரிலிருந்து ஒரு சிறு பகுதி.)

ரோல்ஸ்-ராய்ஸ் நினைவுகள்!

ரோல்ஸ் ராய்ஸ். பெயரை உச்சரிக்கும்போதே புருவம் உயர வைக்கும் ராயல் வாகனம். கௌரவத்தின் அடையாளம். அழகும் கம்பீரமும் சரிவிகிதத்தில் கலந்த கட்டமைப்பு. வேகத்திலும் சளைக்காதது. RR என்று சுருக்கமாவும் கீழே Rolls Royce என்று முழுமையாகவும் பொறிக்கப்பட்ட முத்திரை. முகப்பில் வெள்ளியால் செய்யப்பட்ட சிறகு விரித்துப் பறக்கும் தேவதை. பளபளா உடல்.

இப்படிப்பட்ட ரோல்ஸ்-ராய்ஸ்களை வைத்துக் கொண்டு நம் இந்திய மகாராஜாக்கள் செய்த அழிச்சாட்டியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

Pearl of India என்று பெயரிடப்பட்ட ஒரு ரோல்ஸ்-ராய்ஸை குவாலியர் மகாராஜா இரண்டாம் மாதவ்ராவ் சிந்தியா வாங்கினார். அதுவே முதல் போணி. பெருமை பொங்க அதனைத் தன் சமஸ்தானமெங்கும் ஓட்டி பவுசு காட்டினார். பிற சமஸ்தான மகாராஜாக்களுக்கும் இந்தச் செய்தி பரவியது.

அது என்ன கார், எங்கு கிடைக்கும், விலை எவ்வளவு இருக்கும் என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். ‘அதென்ன அவரால மட்டும்தான் வாங்க முடியுமா என்ன? நாங்களும் வாங்குவோம்ல!’ என்று தேடித் தேடி ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்க ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் சமஸ்தானத்தின் மகாராஜாவாகப்பட்டவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருந்தால்தான் கௌரவம் என்ற நிலை உருவானது. மகாராஜாக்களைத் தவிர, பணக்காரர்களும் அந்தக் கார்களை வாங்க ஆரம்பித்தனர்.

அதனால் மகாராஜாக்களைத் தவிரவும் ரோல்ஸ் ராய்ஸ் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை பெருகியது. என்ன செய்யலாம் என்று யோசித்த மகாராஜாக்கள், ஒன்றுக்கு மேற்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் கார்களை, தங்கள் விருப்பப்படி வடிவமைக்கச் சொல்லி ஆர்டர்கள் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

விருப்படியென்றால்? பொதுவாக ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் அலுமினியத்தால் செய்யப்பட்டன. அலுமினியமா சேச்சே, எனக்கு வெள்ளியால் செஞ்ச கார் வேணும். அந்த மகாராஜா வெள்ளிக் கார் வைச்சிருக்கானா, அப்படின்னா எனக்கு தங்க முலாம் பூசிய கார் வேணும். இப்படி டிசைன் டிசைனாக யோசித்து படு ஆடம்பரமாக, டாம்பீகமாக, தங்கள் விருப்பப்படி, வசதிப்படி ரோல்ஸ் ராய்ஸ் கார்களை இறக்குமதி செய்து, ஃபிலிம் காட்டினார்கள்.

ஒருமுறை லண்டனிலிருந்த ரோல்ஸ் ராய்ஸ் இந்தியப் பிரிவு அலுவலகத்துக்கு ஒரு பார்சல் வந்தது. அதைப் பிரித்துப் பார்த்த ஊழியருக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. காரணம் அதில் ஒரு செருப்பு இருந்தது. பிங்க் நிற வலதுகால் செருப்பு. கூடவே ஒரு கடிதமும்.

‘இந்த செருப்பின் நிறத்தில் எனக்கு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் உடனே தேவை. என் மகாராணிக்கு பரிசளிக்க விரும்புகிறேன். எப்போது கிடைக்கும்?’

அனுப்பியிருந்தவர் ஜாம்நகர் சமஸ்தானத்தின் மகாராஜா.

அல்வார் மகாராஜா ஜெய்சிங், ஒருமுறை லண்டன் சென்றிருந்தபோது அங்கிருந்த ரோல்ஸ் ராய்ஸ் ஷோரூமுக்குச் சென்றார். புதிதாக கார் வாங்குவதுதான் அவரது எண்ணம். ஆனால் அங்கிருந்த விற்பனைப் பிரதிநிதி அவரைச் சரியாகக் கவனிக்கவில்லை. ‘இந்த ஆளெல்லாம் எங்க கார் வாங்கப் போறான்’ என்ற எண்ணம். ஜெய்சிங்கின் கேள்விகளுக்கு அலட்சியமாகப் பதில் சொன்னான்.

ஜெய்சிங் கடும்கோபக்காரர். விற்பனைப் பிரதிநிதி கூனிக் குறுகி மரியாதை கொடுக்கும்படியாக அந்த இடத்திலேயே ஏழு ரோல்ஸ் ராய்ஸ் கார்களுக்கு ஆர்டர் கொடுத்தார். அவரது சமஸ்தானத்துக்கு ஏழு கார்களும் அனுப்பப்பட்டன. அவற்றை உபயோகப்படுத்த ஜெய்சிங்கின் ஈகோ ஒப்புக்கொள்ளவில்லை. விலை உயர்ந்த அந்த ஏழு ரோல்ஸ் ராய்ஸ் கார்களையும் சமஸ்தானத்தில் குப்பை அள்ளும் வண்டிகளாக உபயோகிக்கச் சொல்லி கட்டளையிட்டார். அவை குப்பை அள்ளின.

நந்தகான் சமஸ்தான மகாராஜா சர்வேஸ்வர தாஸ் புலி வேட்டைப் பிரியர். அவரது ரோல்ஸ் ராய்ஸ் காரில் அடர்ந்த காட்டுக்குள் பதுங்கியிருக்கும் புலிகளைத் தேடுவதற்கேற்ற சிறப்பு விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. காரின் வெளியே அம்மாவின் காருக்கு வெளியே அமைச்சர்கள் தொற்றிக் கொண்டு போவார்களே, அதுபோல பாதுகாவலர்கள் தொற்றிக் கொண்டு செல்வதற்கென வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங்கின் ரோல்ஸ் ராய்ஸ் கார்கள், அதி ஆடம்பரமானவை. தங்கம், வெள்ளியால் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்டவை. ஒவ்வொரு காருக்குமென்றே தனித்தனியாக ஏராளமான நகைகள் இருந்தன. அந்தக் கார்களை சர்வீஸுக்கு விடும்போது, அதைச் சுற்றி ஆயுதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்புக்கு நின்று கொண்டிருப்பார்கள்.

பவல்பூர் சமஸ்தான மகாராஜாவுக்கோ ஒரு விநோதப் பழக்கம் இருந்தது. அவர் ரோல்ஸ் ராய்ஸில் சாலைகளில் பவனி வருவதற்கு முன்பாக ஒருவர் இன்னொரு வாகனத்தில் ‘மகாராஜா வருகிறார்’ என்று அறிவித்துக் கொண்டே செல்வார். மறுகணமே சாலையிலிருக்கும் மக்களெல்லாம் முதுகைக் காட்டியபடி திரும்பிவிடுவார்கள். மகாராஜா பவுசாகக் கடந்து சென்றபின் தங்கள் வேலைகளைத் தொடருவார்கள். கண்பட்டு விடக்கூடாது என்பதால் இந்த ஏற்பாடு.

சைக்கிளின் கேரியரில் பிராய்லர் கோழிகளைத் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டுச் செல்வார்களே, அதேபோல தன் ரோல்ஸ் ராய்ஸ் காரில் கோழி, ஆடு, மான்களையெல்லாம் இறைச்சிக்காகக் கொண்டு செல்லும் பழக்கம் பம்பாயைச் சேர்ந்த அப்துல் அலி என்ற பெரும் பணக்காரருக்கு இருந்தது.

மைசூர் மகாராஜா வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ்களின் எண்ணிக்கை முப்பத்தைந்து. பாட்டியாலா மகாராஜாவிடமிருந்த கார்களின் எண்ணிக்கை முப்பத்தெட்டு. முதலிடம்? ஹைதராபாத் நிஜாம் ஒஸ்மான் அலிகானுக்கு. அவரிடமிருந்த ரோல்ஸ் ராய்ஸ் கார்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஐம்பது.

ஹைதராபாத்துக்குள் முதன் முதலில் ரோல்ஸ் ராய்ஸ் வாசம் வீசியது 1912ல். ஒஸ்மானின் தந்தை, நிஜாம் மெஹ்பூப் அலிகான் 1911ல் ஒரு காரை ஆர்டர் செய்தார். மெஹ்பூபின் விருப்பப்படி கார் பயணத்துக்குத் தயாராகி வந்தது. ஆனால் அதற்குள் அவரது வாழ்க்கைப் பயணம் முடிந்திருந்தது. அந்த மஞ்சள் நிற ரோல்ஸ் ராய்ஸ், மகன் ஒஸ்மானிடம் வந்து சேர்ந்தது.

கௌரவமாக அதனை வைத்துக் கொண்டார் ஒஸ்மான். எந்தவிதக் கஷ்டமும் அதற்குக் கொடுக்கவில்லை. அது பாட்டுக்கு அரண்மனை கார் ஷெட்டில் சிலை போல நின்றது. எடுத்து ஓட்டினால் டயர் தேய்ந்து விடுமே. 1947ல் அந்த மஞ்சள் நிற ரோல்ஸ் ராய்ஸ் காரின் ஸ்பீடோமீட்டர் காட்டிய மைல்கள் எவ்வளவு தெரியுமா?

வெறும் 347.

என் அரண்மனை வாழ்க்கை!

ப்போதுதான் முழுதாகச் செய்து முடித்த வீணை போல ஒருத்தி, பார்த்த உடனே எடுத்து வாசிக்கத் தோன்றும் வயலின் போல் ஒருத்தி, விரல்களால் விளையாட விளையாட இன்ப இசையைப் பரப்பும் கிடார் போல் ஒருத்தி, இவளைப் பார்த்துதான் தம்புராவையே வடிவமைத்திருப்பார்களோ என்று சந்தேகக் கேள்வியை எழச் செய்யும் ஒருத்தி, கொடியிடை கொண்ட கோட்டு வாத்தியம் போல் ஒருத்தி, சமபங்கு வளைவுகளாலும் சமபங்கு நெளிவுகளாலும் செய்த சாரங்கிபோல இன்னொருத்தி.

நாற்பது சுந்தரிகளில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் அழகு. பரத்பூர் மகாராஜா கிஷன்சிங் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்த சுந்தரிகள் என்றால் சும்மாவா?

அந்த மஞ்சள் ஒளியில் நாற்பது தங்க விக்கிரகங்கள் முளைத்து நின்றது போல இருந்தது. ஒவ்வொரு விக்கிரகமும் மெதுவாக, வரிசையாக நீச்சல் குளத்தில் இறங்க ஆரம்பித்தது. மையப்புள்ளி போல மகாராஜா, சுற்றி வட்டமாக இளம்பெண்கள். உல்லாசத்தின் சிரிப்போசை.

ஆட்டத்தின் முக்கியமான கட்டம் ஆரம்பமானது.

‘என்ன தயாரா?’ மகாராஜாவின் கேள்விக்கு நாற்பது குயில்களும் ஒருமித்த குரலில் ‘ம்’ என்றன. மகாராஜா  ‘சொல்லிக் கொடுத்தபடியே’ எல்லாப் பெண்களும் தங்கள் வசதிக்கேற்ப மெழுகுவர்த்திகளை அங்கங்களுக்கிடையில் வைத்துக் கொண்டனர். ஒவ்வொரு பெண்ணையும் தன் மனம் போன போக்கில் குரலாலும் பின்பு விரலாலும் வருணிக்க ஆரம்பித்தார் கிஷன்சிங்.

‘ஆடி வா, பாடி வா, ஆணழகைத் தேடி வா, பேரின்பம் காணலாம் வா!’

தாமரைகள் தத்தளித்தன. நீர் தெறித்தோ, தண்ணீரில் மூழ்கியோ, தவறி விழுந்தோ மெழுகுவர்த்திகள் ஒவ்வொன்றாக அணைய ஆரம்பித்தன. அணைந்த மெழுகுவர்த்திக்கு உரிய பெண்கள், ஆட்டத்திலிருந்து அவுட். அவர்கள் நீச்சல் குளத்தின் சுற்றுச் சுவரிலும், சந்தன மரப்படிக்கட்டுகளிலும் சென்று உட்கார்ந்து கொண்டனர்.

முப்பத்தெட்டு, இருபத்தியொன்பது, இருபது, பதிமூன்று, ஆறு, மூன்று…

குளத்தின் உள்ளே இரண்டே இரண்டு பெண்கள் மட்டுமே பாக்கி. அவர்களுக்கு மூச்சு வாங்கியது. திரியில் துடித்துக் கொண்டிருந்த தீபம் போல உள்ளே அவர்களின் மனமும் துடித்துக் கொண்டிருந்தது. ஜெயிக்கப் போவது யார்? மஜாராஜாவும் சே, மகாராஜாவும் தன்னைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டார். சிறிய இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் மீண்டும் ஆரம்பமானது. சுற்றியிருந்த முப்பத்தியெட்டு பேரும் டென்ஷனில் நகம் கடித்துக் கொண்டிருந்தார்கள். நீர் நெருப்பைத் தேடிக் கொண்டிருந்தது.

இறுதியில் ஒருத்தி அணைந்துபோனாள். அணையாதவளை அணைத்துக் கொண்டார் மகாராஜா.

****

ருமுறை லண்டனிலிருந்த ரோல்ஸ் ராய்ஸ் இந்தியப் பிரிவு அலுவலகத்துக்கு ஒரு பார்சல் வந்தது. அதைப் பிரித்துப் பார்த்த ஊழியருக்குக் கொஞ்சம் அதிர்ச்சி. காரணம் அதில் ஒரு செருப்பு இருந்தது. பிங்க் நிற வலதுகால் செருப்பு. கூடவே ஒரு கடிதமும்.

‘இந்த செருப்பின் நிறத்தில் எனக்கு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் கார் உடனே தேவை. என் மகாராணிக்கு பரிசளிக்க விரும்புகிறேன். எப்போது கிடைக்கும்?’

அனுப்பியிருந்தவர் ஜாம்நகர் சமஸ்தானத்தின் மகாராஜா.

பவல்பூர் சமஸ்தான மகாராஜாவுக்கோ ஒரு விநோதப் பழக்கம் இருந்தது. அவர் ரோல்ஸ் ராய்ஸில் சாலைகளில் பவனி வருவதற்கு முன்பாக ஒருவர் இன்னொரு வாகனத்தில் ‘மகாராஜா வருகிறார்’ என்று அறிவித்துக் கொண்டே செல்வார். மறுகணமே சாலையிலிருக்கும் மக்களெல்லாம் முதுகைக் காட்டியபடி திரும்பிக்கொள்வார்கள். மகாராஜா பவுசாகக் கடந்து சென்றபின் தங்கள் வேலைகளைத் தொடருவார்கள். கண்பட்டு விடக்கூடாது என்பதால் இந்த ஏற்பாடு.

****

காராஜாவுக்கு முதுகில் அரிப்பெடுக்கிறதா? சுகமாகச் சொறிந்துவிட ஒரு ஆளைப் போடு. பல் துலக்க சலிப்பாக இருக்கிறதா? பக்குவமாகத் தேய்த்துவிட ஒரு பையனைப் போடு. காலைக் கடனை முடித்த பின்பு இடது கையால் கழுவ எரிச்சலாக இருக்கிறதா? இதமாகக் கழுவி விட ஓர் இளஞ்சிட்டை பணியில் அமர்த்து. அட, நீளமான கூந்தலில் பேன் தொல்லையா? தேடிப் பேன் பிடித்து, தீர்த்துக் கட்ட தேர்ந்த வீரன் ஒருவனுக்கு வேலை கொடு.

எது எதற்குத்தான் வேலைக்கு ஆள் வைக்க வேண்டும் என்ற விவஸ்தையே இல்லாமல், எதற்கெடுத்தாலும் பிரத்யேகப் பணியாளர்களை நியமனம் செய்திருந்த மகாராஜாக்கள் அநேகம். கபுர்தலா மகாராஜா ஜெகத்ஜித் சிங்கும் அப்படிப்பட்டவரே. சிறிய வயதிலிருந்தே மகா ‘கணம்’ பொருந்தியவராக இருந்ததால், ஜெகத்ஜித் சிங் உடைகளை அணிய, கழற்றி மாற்ற பெரும் சிரமப்பட்டார் ஜெகத்ஜித் சிங். குறிப்பாக பைஜாமா அணியும்போது அவரது பாடு திண்டாட்டமாகிவிடும். பைஜாமா இடுப்பிலிருந்து நழுவி கீழே விழுந்துவிடாதபடியாக அதன் நாடாவை எப்படி இறுக்கிக் கட்டவேண்டும் என்ற வித்தை மட்டும் ஜெகத்ஜித் சிங்குக்குப் பிடிபடவே இல்லை.

நாடாவில் முடிச்சுப் போடுவதென்பது அவருக்கு நாடாள்வதைவிட கஷ்டமான விஷயமாகத் தோன்றியது. முடிச்சு போடுவது மட்டுமல்ல, அதனை அவிழ்ப்பதுகூடத்தான். உலகத்திலிருக்கும் ஒட்டு மொத்த சிக்கலும் அவரது பைஜாமா நாடாவின் முடிச்சில் இருப்பதாகவே தோன்றியது. சிறுவனாக இருக்கும்போது பரவாயில்லை. வேலையாள்கள் நாடாவை கட்டியோ, அவிழ்த்தோ விடுவார்கள். வளர்ந்த பின்பு?

ஜெகத்ஜித் சிங், அதற்கெல்லாம் கூச்சப்படவே இல்லை. தனக்கு பைஜாமா நாடாவைக் கட்டி விடுவதற்கென்றும், அவிழ்த்து விடுவதற்கென்றும் தனியாக ஒருவரை வேலைக்கு வைத்துக் கொண்டார். அவர்தான் டிரவுசர் ஆபிசர்.

அந்த ஆபிசரின் பெயர் முஷாஹிப். தன் தலையாய பிரச்னையை எந்தவித தடங்கலுமின்றித் தீர்த்து வைக்கும் ஆபத்பாந்தவனாக இருந்ததால், ஜெகத்ஜித் சிங்குக்கு முஷாஹிப் மீது பிரியம் அதிகம். தான் எங்கு சென்றாலும் உடன் முஷாஹிப்பும் இருக்கும்படி பார்த்துக் கொள்வார். வெளிநாடுகளுக்குச் சென்றால்கூட. அந்தப்புரத்தில் சேவை செய்ய மற்றவர்கள் இருந்ததால், மகாராஜாவுக்கு முஷாஹிப் தேவைப்படவில்லை….

****

‘எவ்வளவுதான் தரமுடியும்?’

‘முப்பது ரூபாய்’

‘சரி, பணத்தைக் கொடுத்துவிட்டு அழைத்துச் செல்லுங்கள்.’ என்று வியாபாரத்தை முடித்தார் ஹைதராபாத்தின் ஏழாவது நிஜாம் ஒஸ்மான் அலிகான்.

பதவிக்கு வந்ததும் அவர் செய்த முக்கியமான காரியம் இதுதான். ஆறாவது நிஜாம்  மெஹபூப் அலிகான் இறந்த பிறகு அவரது துணைவிகளை விற்றுவிட்டார். ‘எனக்கு ஆகவே ஆகாத தந்தை, சேர்த்துக் கொண்ட துணைவிகளுக்கெல்லாம் நான் ஏன் சோறும் சிக்கனும் போட்டுக் கொண்டிருக்க வேண்டும்?’ என்ற எண்ணத்தால் நிகழ்த்தப்பட்ட சிக்கன நடவடிக்கை அது. சில துணைவிகளை விற்று, பணத்துக்குப் பதிலாக மாங்காய்களாகப் பெற்றுக் கொண்டார் என்றுகூட குறிப்புகள் இருக்கின்றன.

அநாவசியச் செலவுகளை எப்படியெல்லாம் தவிர்க்கலாம் என்ற சிந்தனையே ஒஸ்மானின் மனத்தில் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும். அதன் மாறுபட்ட பரிமாணங்களே பல விஷயங்களில் கஞ்சத்தனமாக வெளிப்பட்டன.

‘நிஜாம், உங்கள் சால்வை மிகவும் பழசாகிவிட்டது. புதிதாக ஒன்றை எடுத்துக் கொள்ளலாமே?’ என்றார் அமைச்சர் ஒருவர். அதற்கு ஒஸ்மான் அளித்த பதில், ‘எடுக்கலாம். ஆனால் நான் அதுக்கு பதினெட்டு ரூபாய்தான் ஒதுக்கியிருக்கிறேன். புதிய சால்வை இருபது ரூபாய் ஆகிறதே.’

****

ங்கிலாந்து அரச பரம்பரையில் அதுவரை முடிசூட்டு விழா என்பது லண்டனில் மட்டும்தான் நடைபெற்றுவந்தது. ஜார்ஜும் 1911, ஜூன் 22ல் லண்டனில் முடிசூட்டிக் கொண்டார். ஆனால் இந்தியாவின் பேரரசராக இங்கு டெல்லி தர்பாரிலும் தனியாக முடிசூட்டிக் கொள்ள விரும்பினார். அவரது விருப்பத்துக்காக ராஜ பரம்பரை விதிகள் தளர்த்தப்பட்டன. ஜார்ஜுக்காகப் புதிய கீரிடம் ஒன்றைத் தயார் செய்யப்பட்டது.

லண்டனின் பிரபல நகை நிறுவனமான Garrard & Co-வினர் தயாரித்த அந்த கீரிடத்தின் மதிப்பு அறுபதாயிரம் பவுண்ட், எடை சுமார் ஒரு கிலோ. கீரிடத்துக்கு வைக்கப்பட்ட பெயர் Imperial Crown of India. 1911ல் டெல்லி தர்பாருக்காக எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்ட பிறகுதான் ஜார்ஜுக்கு ஒரு விஷயம் உறுத்த ஆரம்பித்தது.

இந்தியா, இந்துக்களும் இஸ்லாமியர்களும் நிறைந்த நாடு. அங்கு சென்று கிறிஸ்துவ மத முறைப்படி முடிசூட்டிக் கொள்வது முறையல்ல. வேறென்ன, செய்யலாம்?

ஒன்றும் செய்ய முடியாது. முடிசூடும் நாளும் வந்தது. டிசம்பர் 12, காலை நேரம். எந்தவித சடங்குகளும் இன்றி, கிங் ஐந்தாம் ஜார்ஜ் தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்டார். குயின் மேரியோடு தர்பாருக்குக் கிளம்பினார்.

****

‘அருமை மக்களே, மருவாதையா புள்ளைங்கள இஸ்கூலுக்கு அனுப்புங்கோ, இல்லாக்காட்டி ரெண்டு அணா அபராதம் கட்டணும். இது மகாராசாவோட உத்தரவு.’

பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் வாசம் வீச ஆரம்பித்தது. வருகைப் பதிவை அதிகரிக்க, அபராதக் கட்டணத்தை ஒரு ரூபாய் என்று உயர்த்தினார். அந்நாளில் எவ்வளவு பெரிய தொகை அது? அவ்வளவெல்லாம் அபராதம் கட்ட முடியுமா என்ன? எங்கே மகாராஜாவின் வீரர்கள் வந்து தங்களைக் கைது செய்துவிடுவார்களோ என்று பெற்றோர்கள் பயந்தார்கள். ‘ராசா நீ பள்ளிக்கூடத்துக்கே போயிருப்பா’ என்று பிள்ளைகளை வலுக்கட்டாயமாக அனுப்ப ஆரம்பித்தார்கள். பள்ளிக்கூட வளாகங்களில் ஓரொன் ஒண்ணு ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது.

அடுத்த பிரச்னை. ‘பொம்பளப் புள்ளைக்கெல்லாம் படிப்பெதற்கு?’ மீண்டும் சாயாஜி ராவ் மிரட்டலைத்தான் முன்வைக்க வேண்டியதிருந்தது. ஆகவே பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே பரோடாவில் பெண் குழந்தைகள் பள்ளிகளுக்குச் செல்ல ஆரம்பித்தார்கள்.

இன்னொரு பிரச்னை. தீண்டாமை. ‘ஹரிஜன்களோடு எங்க பிள்ளைங்களும் சேர்ந்து படிக்கிறதா?’ சில சாதிக்காரர்கள் கூவ ஆரம்பித்தார்கள். பள்ளிக்கூடம் எல்லோருக்கும் பொதுவான இடம். எல்லா பிள்ளைகளும் அங்கு சேர்ந்துதான் படிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார் சாயாஜி ராவ். அவரது பகீரத பிரயத்தனங்களால், 1910ல் பரோடா சமஸ்தானம் முழுவதும் இயங்கிக் கொண்டிருந்த ஆரம்பப் பள்ளிகளின் எண்ணிக்கை 2938.

***

மான்க்டென் தலைமையிலான அணிக்கும், உள்ளூர் அணிக்கும் மேட்ச். மைதானத்தில் மக்கள் திரண்டிருந்தார்கள். உள்ளூர் பண்ணையார் ஒருவரது மகளான அவளும் வந்திருந்தாள். மைதானத்துக்குள் மான்க்டென் ‘டாஸ்’ போட்டுக் கொண்டிருக்க, அவரது அணியில் இடம்பெற்றிருந்த கூச் பிகாரின் மகாராஜா ஜெகத்திபேந்தர் அவளுக்கு ‘ரோஸ்’ கொடுக்கலாமா என்று எண்ணிக்கொண்டிருந்தார். டாஸில் வென்ற மான்க்டென், ‘பேட்டிங்’ என்றார். ஆனால் ஜெகத்திபேந்தரின் கண்களில் ‘டேட்டிங்’ கனவுகள்.

மான்க்டெனும் இன்னொரு வீரரும் களமிறங்கினார்கள். ஜெகத்திபேந்தர் அணியின் முக்கிய பௌலர். பேட்டிங் வரிசையில் நம்பர் ஒன்பது. ஆகவே மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தார். ஒவ்வொரு வீரராக அவுட் ஆகிக் கொண்டிருந்தார்கள். ஓரளவு போராடி ஆடிய மான்க்டெனும் அவுட்டாகி வந்து அமர்ந்தார். நான்கு விக்கெட்டுகள் சரிந்திருந்தன. ‘எங்கே கூச்?’ (ஜெகத்திபேந்தரை ஐரோப்பியர்கள் செல்லமாக அழைப்பது அப்படித்தான்.) தேடினார் மான்க்டென். ‘இங்கேதான் எங்காவது இருப்பார். வந்துவிடுவார்’ என்றார் ஒரு வீரர்.

அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகள் விழுந்தன. மான்க்டெனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. தானே கூச்சைத் தேட ஆரம்பித்தார். ‘அடுத்து அவர்தானே களமிறங்க வேண்டும். எங்கே போய்த் தொலைந்தார்?’ வெளியில் சென்று தேடுவதற்காக சிறுவன் ஒருவனை அனுப்பினார்.

அந்தச் சிறுவன் வருவதற்குள் ஒன்பது விக்கெட்டுகள் விழுந்திருந்தன. கடைசி பேட்ஸ்மேன் கூச்சுக்காக எல்லோரும் காத்திருந்தார்கள். மான்க்டெனுக்கு ரத்தக் கொதிப்பு ஜிவ். ‘எங்கடா அவரு?’

பதில் சொல்லத் தயங்கினான் சிறுவன். அவன் முகமெல்லாம் சிவந்திருந்தது. வெட்கம் வழிய சிரிக்கவேறு செய்தான். ‘அவரு அங்க ஒரு வீட்டுல, மேல் மாடியில..’

‘மேல் மாடியில?’

‘அது வந்து.. அவரு.. பண்ணையாரு பொண்ணுகூட…’

****

அகம், புறம், அந்தப்புரம். குமுதம் ரிப்போர்ட்டரில் எழுத ஆரம்பித்து ஒன்றரை வருடங்கள் பூர்த்தியாகிவிட்டன. இதோ இன்று, வெள்ளிக்கிழமை வெளியாகிருக்கும் (25-12-2008) ரிப்போர்ட்டர் இதழில் 150வது அத்தியாயம் வெளியாகியிருக்கிறது. ஆகவே ‘மலரும் நினைவுகளாக’ மேலே சில பகுதிகளைக் கொடுத்துள்ளேன்.

பரோடா, அல்வார், கூச் பிகார், பாட்டியாலா, பரத்பூர், ஹைதராபாத், நபா, தோல்பூர், இந்தூர், கபுர்தலா, புதுக்கோட்டை, குவாலியர், ஜுனாகத் (மேலும் சில) சமஸ்தானங்களின் வரலாறை, மகாராஜாக்களின் வாழ்க்கையைத் திரட்டித் தந்துள்ளேன். அதன் ஊடாக விவரிக்கப்பட்ட பின்னணி விஷயங்கள் ஏராளம். சுருங்கச் சொல்வது இயலாது.

இப்போது மைசூர் மகாராஜாக்களின் கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன். இன்னும் சில முக்கியமான சமஸ்தானங்களின் வரலாறு காத்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தொடரின் பின்னணியில் எனக்குக் கிடைத்த அனுபவங்களை பிறிதொரு சமயம் பதிவு செய்கிறேன்.

தொடர்ந்து ஆதரவளித்துவரும் வாசகர்களுக்கு என்றும் என் மனமார்ந்த நன்றி.