‘கையெழுத்து வாங்கி என்ன பண்ணப் போறீங்க?’

சென்ற வாரம் (22 ஜூலை, 2010) இந்த நேரத்தில் அந்த அருமையான பள்ளிக்கூடத்தில் இருந்தேன். பூம்புகார் அருகில் மேலையூரில் அமைந்துள்ள சீனிவாசா மேல்நிலைப்பள்ளி அது. மாணவர்கள் படித்தே தீர வேண்டிய புத்தகங்கள் என்ற தலைப்பில் பேசினேன். இதே தலைப்பில் பேசுவதற்கு முதலில் என். சொக்கன் செல்வதாக இருந்தது. அவர் பெங்களூரிலிருந்து வந்து செல்வதற்கு டிக்கெட் பிரச்னை இருந்ததால், நான் சென்றேன்.

விருந்தினராகச் சென்று மாணவர்களிடையே இதுதான் எனக்கு முதல் அனுபவம். மிக நல்ல அனுபவம். சொக்கனுக்கு நன்றி. அந்தப் பள்ளியின் அருமை குறித்து ஏற்கெனவே பாரா பதிவு செய்துள்ளார்.  சென்ற வாரம் நடந்த விழா குறித்து பத்ரி தன் வலைப்பதிவில் வீடியோ இணைத்துள்ளார். ஆர். முத்துக்குமார் தனது அனுபவங்களை அழகாகப் பகிர்ந்துள்ளார்.எனவே நான் விழா குறித்து விலாவாரியாகப் பேசாமல் சில விஷயங்களை மட்டும் இங்கே சொல்கிறேன்.

* பேசும்போது நாம் ஏதாவது கேள்வி கேட்டால், கேள்விக்கான வாக்கியம் கேள்விக்குறியைத் தொடுவதற்கு முன்பே, மாணவர்கள் ஏதாவது ஒரு பதிலைச் சொல்லி விடுகிறார்கள்.

* பள்ளி தாளாளர் பெரியவர் ராஜசேகரனுக்கு மாணவர்களை கதையல்லாத, அறிவு சார்ந்த பிற புத்தகங்களைப் படிக்க வைப்பதில் பெரும் விருப்பம். ஆனால் நான் பேச ஆரம்பிக்கும்போதே, கதைப் புத்தகங்கள் படிக்க ஆரம்பியுங்கள். நிறைய, விதவிதமான கதைகள் படியுங்கள். வாசிப்பில் ஈடுபாடு வளரும். பிறகு மற்ற புத்தகங்களை வாசிக்க ஆரம்பிக்கலாம் என்று சொன்னேன். சொல்வதற்கு முன் தாளாளரது அனுமதியையும் பெற்றுக் கொண்டேன்.

* நீங்கள் பார்க்கும் காமெடி சேனல் எது என்று கேட்டேன். ஒரே குரலில் மைதானம் அதிர மாணவர்களின் குரல் ஒலித்தது, ‘ஆதித்யா.’

* ‘உங்கள் ஊரில் டிஸ்கவரி சேனல் தமிழில் வருகிறதா?’

‘வருகிறது.’

‘டிஸ்கவரி பார்ப்பீர்களா? ஆதித்யா பார்ப்பீர்களா?’

‘ரெண்டுமே!’

‘சும்மா சொல்லாதீங்க. டிஸ்கவரில என்ன பார்ப்பீங்கன்னு சொல்லுங்க.’

‘சர்வைவர் மேன், லைஃப், டைம் வார்ப், வைல்ட் டிஸ்கவரி…’

தங்கள் பள்ளியில் இத்தனை மாணவர்கள் டிஸ்கவரி சேனல் பார்க்கிறார்கள் என்கிற விஷயமறிந்து தாளாளர் சந்தோஷப்பட்டார்.

* மதியம் பத்ரி, ‘பளஸ் டூவுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?’ என்ற தலைப்பில் பேசினார். சீர்காழி நேஷனல் ஹைஸ்கூல் ப்ளஸ் டூ மாணவர்களும் அதைக் கேட்க வந்திருந்தார்கள். அந்தப் பள்ளியின் ஆசிரியர் அறிவுடை நம்பியிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவருடைய பள்ளிக்கும் வந்து பேசுமாறு அழைப்பு விடுத்தார். வரும் காலத்தில் கிழக்கு ஆசிரியர்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பள்ளிகளில் சென்று பேசத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னேன்.

* மதிய உணவு இடைவேளையில் எங்களை மாணவர்கள் தனித்தனியாகச் சூழ்ந்து கொண்டார்கள். விதவிதமாகக் கேள்வி கேட்டார்கள். தங்கள் நோட்டுகளை எடுத்துக் கொண்டுவந்து ஆட்டோகிராப் கேட்டார்கள். ‘சயின்ஸ் நோட்டு, மேத்ஸ் நோட்டுல எல்லாம் கையெழுத்து போட மாட்டேன். ரஃப் நோட்டு கொண்டு வாங்க’ என்று பலரது நோட்டையும் சரிபார்க்க வேண்டியதிருந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் கூட்டத்தைச் சமாளிக்க முடியாது போனது. பத்ரியும் முத்துக்குமாரும் தனித்தனியே திணறிக் கொண்டிருந்தார்கள். இருந்தாலும் ஆசையோடு நோட்டை நீட்டும் அந்த மாணவர்கள் ஏமாற்றமடையக் கூடாது என்பதற்காகக் கையெழுத்துப் போட்டுக் கொண்டிருந்தோம். ஒரு மாணவன் என் அருகில் வந்து தன் சக மாணவர்களிடம் நல்ல கேள்வி ஒன்றைக் கேட்டான், ‘இவர்கிட்ட கையெழுத்து வாங்கி என்ன பண்ணப் போறீங்க?’

* பள்ளியில் ஒரு பத்திரிகை வெளியிடுகிறார்கள். அதில் இடம்பெற்றிருந்த ஓர் ஐடியா அனைத்து மாணவர்களுக்கும் பயன்படக்கூடியது. ‘தினமும் உங்கள் உண்டியலில் ஒரு ரூபாய் போடுங்கள். ஒரு வருடம் முடிந்ததும் 365 ரூபாய் சேர்ந்திருக்கும். புத்தகக் கண்காட்சிக்குச் செல்லும்போது அதன்மூலம் புத்தகங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்.’