அக்டோபர் 18, ஞாயிறு கிழக்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் நண்பர் பா. தீனதயாளனோடு நானும் பேசுகிறேன். சாண்டோ சின்னப்பா தேவர், எம்.ஆர். ராதா இருவரது வாழ்க்கை குறித்த நிகழ்ச்சி. சென்னையில் இருப்பவர்கள் கேட்டுவிட்டு கருத்துகளைச் சொல்லுங்கள்.
நாம் அடிக்கடி எதிர்கொள்ளும் ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் சொல்வதென்பது அதிக சலிப்பைத் தரும். பதில் சொல்லுவதற்கே அவ்வளவு அலுப்பாக இருக்கும்.
என்ன வேலை பார்க்குறீங்க? – புதியவர்களோ, சொந்தங்களோ என்னைக் கேட்பார்கள்.
எடிட்டரா இருக்கேன் – பதில் சொல்லுவேன்.
எடிட்டர்னா? என்ன பண்ணுவீங்க? – அடுத்த கேள்வி வந்து விழும்.
ஒரு பப்ளிகேஷன்ல வேலை பார்க்குறேன் – இந்த பதிலோடு திருப்தியடைந்துவிடுவார்கள் என்று சொல்லிப் பார்ப்பேன். விடமாட்டார்கள். அடுத்த கேள்வி ஏடாகூடமாக வந்துவிழும்.
அப்படின்னா என்ன? ப்ரிண்டிங் பிரஸ்ஸா?
புஸ்தகங்கள் போடுற கம்பெனி.
வாரப்பத்திரிகையா?
இல்ல. பொதுவான புத்தகங்கள்.
கதை புஸ்தவமா? நாவல் மாதிரியா?
அரசியல், வரலாறு, மருத்துவம், ஆன்மிகம்னு பல தரப்பட்ட புஸ்தகங்கள் பண்ணுறோம்.
மாசா மாசம் வருமா? அங்க நீங்க என்ன வேலை பண்ணுறீங்க?
கேள்விகள் வளர்ந்துகொண்டே போகும். அதென்னவோ தெரியவில்லை. ‘சாஃப்ட்வேர் கம்பெனில வேலை பார்க்குறேன்’ என்று சொன்னால் அடுத்த கேள்விகள் எழுவதில்லை. ‘மார்க்கெட்டிங்ல இருக்கேன்’, ‘இன்ஜினியரா இருக்கேன்’, ‘மெடிகல் ரெப்பா இருக்கேன்’ – இந்த பதில்களுக்கெல்லாம் எதிர்கேள்வி எழுவதில்லை. எடிட்டராக இருக்கிறேன் என்றால் எதிரெதிரெதிர் கேள்விகள் முளைத்துக் கொண்டே போகின்றன. பொறுமையாக உட்கார்ந்து பலருக்குத் தெளிவாக விளக்கியும் இருக்கிறேன். ம்ஹும். அப்படியும் கேள்வி கேட்பவர்களின் முகத்தில் சந்தேகம் பாவனை காட்டிக் கொண்டிருக்கும். ஒருவித அதிருப்தியோடுதான் எழுந்து செல்வார்கள்.
யாரைச் சொல்லியும் குற்றமில்லை. இந்தத் துறை பற்றிய புரிந்துணர்வு வெகுஜன புரிதலுக்கு அப்பாற்பட்டதாகத்தான் இருக்கிறது.
இன்று காலையில் எடிட்டிங் துறை பற்றிய அடிப்படை விஷயங்களை விளக்கும் கட்டுரை ஒன்றை தி ஹிந்து – Education Plusல் படித்தேன். கட்டுரை இங்கே. இனிமேல் என் வேலை பற்றி கேட்பவர்களிடம் இந்தக் கட்டுரையை அச்செடுத்துக் கொடுக்கலாம் என்றிருக்கிறேன்.
டெயில்பீஸ் : எனக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பெண் வீட்டுக்காரர்களிடம் எனது துறையைப் பற்றியும் வேலையைப் பற்றியும் எனது அப்பா, அம்மா விளக்குவதற்குப் படும்பாடு இருக்கிறதே.. அது தனி புராணம்.
திருமங்கலத்தில் பதிவான வாக்கு சதவீதம் பற்றி சொல்லவில்லை. இரண்டாவது நாளின் இறுதியில் சென்னை புத்தகக் காட்சியின் ஏற்பாடுகள் அத்தனை சதவீதம் முடிந்திருக்கின்றன. இன்னமும் தச்சர்கள் ரம்பாவோடு (ரம்பத்தோடு என்றும் சொல்லலாம்) திரிந்துகொண்டிருக்கிறார்கள்.
மணிகண்டன் மரியாதையாக இங்கே வரவும். எலெக்ட்ரீசியன் யாராவது எகிறிக்குதித்துவரவும். எழுத்தாளர் இன்பராஜா பப்பாசி அலுவலகத்துக்கு அலுத்துக்கொள்ளாமல் வரவும். ஒலிபெருக்கியில் கூவிக்கொண்டே இருக்கிறார்கள் – இடைவிடாமல். ‘முகிலைக் காணவில்லை’ என்று நானே நேரடியாகச் சென்று அறிவிப்பு கொடுத்துப்பார்க்கலாம் என்று ஒரு யோசனை.
உருப்படியாகப் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பவர்கள் – பாரதி புத்தகாலயம். உருப்படியில்லாத புத்தகங்களை அடுக்கி வைத்திருக்கும் பலரைப் பற்றி ஹிஹி.. நோ கமெண்ட்ஸ்.
நக்கீரன் ஸ்டாலில் நீயா நானா கோபியைச் சந்தித்தேன். சிரித்துக்கொண்டே இருந்தார், தனது கவிதைப் புத்தகம் ஒன்றின் அட்டையில். நண்பர்களின் தூண்டுதலால் இப்படி ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளதாக முன்னுரையில் அழுத்தமாகக் குறிப்பிட்டிருந்தார். வாசகர்களின் ஆசிர்வாதம் இருந்தால் அடுத்தடுத்த கவிதைத் தொகுப்புகளை வழங்குவேன் என்று அருள்வாக்கு சொல்லியிருந்தார். கிடைக்காமல் போகட்டும்.
இந்தமுறை அரங்குக்கு உள்ளேயே அம்சமான டீ (ரூ.5), அருமையான காபி (ரூ.7), அட போட வைக்கும் பஜ்ஜி, அழகழகான பழக்கலவை, அடிநாக்கில் இனிக்கும் பழச்சாறுகள் கிடைக்கின்றன. அரங்குக்கு வெளியே இருக்கும் கேண்டீனில் பாதியை மைசூர் பாகுக்காரர்கள் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள். 100மிலி அட்டு காபியின் விலை ரூ.10 என்றால் மற்ற பதார்த்தங்களின் விலைகளைக் கணக்கிட்டுக் கொள்ளவும்.
இந்த வருடம் வாங்க வேண்டிய புத்தகங்களை நோட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். அடுத்த வார இறுதியில் வாங்க வேண்டும். என் அக்காவுக்கு சமையல் குறிப்பு புத்தகங்களில் ஆர்வம் அதிகம். கண்ணதாசனில் அய்யங்கார் சமையல் என்று ஒன்று (அரதப்பழசாக) கண்ணில்பட்டது. எடுத்து பில்போடச் சென்றேன். அருகில் இன்னொரு புத்தகத்தோடு இருந்த நபர், ‘அவரே எழுதியிருக்கிறாரா?’ என்று கேட்டார். ‘எவர்?’ என்று சமையல் புத்தகத்தின் அட்டையைப் பார்த்தேன், ‘எல். சுஜாதா’ என்றிருந்தது.
இந்த ஆண்டில் வெளியான புத்தகங்களில் எந்தக் கடையிலுமே எப்போதுமே கிடைக்காத அளவுக்கு விற்பனை ஆகிக் கொண்டிருக்கும் சிறந்த 10 புத்தகங்களின் தரவரிசைப் பட்டியல்.
10 மனம் is a மனம்
ஆசிரியர் : சுவாமி சுனாமியானந்தா
மனம் என்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். மனதை அடக்கி ஆள்வது என்பது லாரிக்கு பின் நின்று கூட்டத்தில் முட்டி மோதி ஓட்டைக்குடத்தில் தண்ணீர் பிடிப்பதற்குச் சமம். மனிதர்களின் மனம் என்பது கார்ப்பரேஷன்காரன் தோண்டிப்போட்ட குழி போன்றது! பெரிய மனிதர்களின் மனம் என்பது குப்பை வண்டிக்காக ஏக்கத்துடன் காத்திருக்கும் ஒற்றைக் குப்பைத்தொட்டி போன்றது! – இது போன்ற சுவாமிஜியின் ஆழ்ந்த அனுபவ உரைகள் புத்தகம் முழுவதும் உப்பிக் கிடக்கிறது. ‘சத்சங்க அகாதெமி’ விருதுக்காக இந்தப் புத்தகம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
(இது ஓர் உள்ளீடு வெளியீடு, கீழ்ப்பாக்கம். பக்கம் : 238ல் ஆரம்பித்து 11ல் முடிகிறது. விலை : 17$.)
9 30 நாட்களில் தூய தமிழ் பேசுவது சுலபம்!
ஆசிரியர் : இங்கிலீஷ்காரன்
‘ஆக்சுவலி திஸ் புக் டெஸ்கிரைப் அபௌட் ஹௌ டூ ஸ்பீக் இன் ப்யூர் டமில். திஸ் புக் இஸ் டீப்லி டெஸ்கிரைப் ஆல் டமில் வேர்ட்ஸ் வித் மீனிங் அன்ட் புரௌனன்ஷேசன்’ – இப்படி அட்டை டூ அட்டை தமிழ் கற்றுக் கொடுப்பதாக ஆங்கிலத்திலேயே ஜல்லியடித்திருக்கிறார்கள். அட்டையில் தலைப்பைத் தவிர வேறேங்கும் தமிழ் தேடினாலும் கிடையாது. (வெளியீடு : ராமதாஸ் பதிப்பகம், சென்னை. பக்கம்: 420. விலை : ஏதாவது பாத்துப் போட்டுக் கொடுங்க.)
8 சாம்பார் வைப்பது எப்படி? –
ஆசிரியர் : முருங்கைப்ரியா
சாம்பார் வைப்பது எப்படி என ர்ர்ரொம்ம்ப்ப விரிவாக விளக்கும் நூல். சாம்பாருக்கு தேவையான பருப்பை, மிளகாய் வற்றலை, காய்கறிகளை எப்படி பயிர்செய்ய வேண்டும் என ஆ’ரம்ப’த்திலிருந்தே ஆரம்பித்து, அணு அணுவாக விளக்குகிறது. சாம்பார் வைக்கும் சட்டியின் விட்டம், உயரம், கரண்டியின் நீளம் எல்லாம் எவ்வளவு இருக்க வேண்டுமென தெளிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது இதில்! இந்த நூலைப்படித்துப் பொறுமையாக உங்கள் ஆயுசு முடிவதற்குள் ஒரு முறையாவது சாம்பார் வைத்து விடலாம். ஆனால் கடைசியில் சாம்பாருக்கு உப்பு போட மறந்துவிட்டார்கள். (வெளியீடு : பருப்பு பதிப்பகம், காரைக்குடி. பக்கம் : 222 விலை : ரூ.100)
7 பிரேக்கூ கவிதைகள்
ஆசிரியர் : ஜுஜுபி
ஒரு புதிய வகை கவிதை எழுதும் முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர். பிரேக்கே இல்லாமல் இஷ்டத்துக்கு வார்த்தைகளை வாரித் தெளிப்பதுதான் ‘பிரேக்கூ’ என்கிறார் கவிஞர்.
‘துப்பாக்கியின் கொட்டாவியில்
சுளுக்கெடுக்கும் பட்டாம்பூச்சியின்
சட்டைப் பொத்தானுக்கு’
என ஆரம்பிக்கும் ஒரு கவிதை பிரேக்கே இல்லாமல் 22 பக்கங்கள் கழித்து ‘வாலில்லா வாசலில்
வந்து நிற்கும் டவுன்பஸ்!’ என்று முடிவதாக நம்பப்படுகிறது! (வெளியீடு : எடக் மடக் பதிப்பகம், சென்னை. பக்கம் : 534, விலை : ரூ.94.15)
6 உடம்பை வளர்க்க உபயோகமான வழிகள்
ஆசிரியர் : தொப்பையப்பன்
இது மனிதர்களின் உடல்நலம் சம்பந்தப்பட்ட புத்தகமல்ல. நீங்கள் யானை வளர்த்தால் அதனை எப்படி ஆரோக்கியமாக வளர்ப்பது என விளக்கும் நூல். யானைக்கு எப்படி பல் தேய்ப்பது, யானையின் தொப்பையை எப்படிக் குறைப்பது என புகைப்படங்களுடன் அருமையாக விளக்கப்பட்டுள்ளது. (வெளியீடு : யாரென்று போடவில்லை. பக்கம் : 120, யானை விலை.)
5 வாஸ்து உங்கள் தோஸ்து!
ஆசிரியர் : வாஸ்தவா
வாஸ்து சாஸ்திரப்படி இந்தப் புத்தகத்திற்கு அட்டை கிடையாது. வீட்டின் ஈசான மூலையில் படுத்துத்தூங்கினால் ‘பீஸான’ மூளையும் இயங்க ஆரம்பிக்கும், வடதென்மேல்கிழக்குத் திசையில் பச்சை நிற கிழிந்த பாயின்மேல் 35டிகிரி சாய்வாக டீ.வி.யை தலைகீழாக வைத்துப் பார்த்தால் செல்வம் பெருகும் என்பது போன்ற பல பயனுள்ள வாஸ்துக் குறிப்புகள் புத்தகம் முழுவதும் வாஸ்துப்படி தலைகீழாக அச்சிடப்பட்டுள்ளது. நம் வீட்டுக்குள் ஆமை புகுந்தால் ஆமையின் வீட்டுக்குள் நாம் புகுந்துவிட வேண்டும் என பல அரிய யோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. (வெளியீடு : செங்கல் பதிப்பகம், கலவையூர். பக்கம் : 84 1/2 பக்கம் விலை : ஒரு லோடு மணலின் விலை.)
4 குருதிக் கோட்டுக் குருவிகள்!
ஆசிரியர் : ரௌத்ரப்பித்தன்
இந்நூல் பின் நவீனத்துவக் கட்டுரைகளின் தொகுப்பு. மொத்தம் 222 கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரையும் குறைந்தது 25 பக்கங்கள். எந்தக் கட்டுரையிலும் தான் சொல்லவருவது எந்த ஒரு வாசகனுக்கும் புரிந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக செயல்பட்டிருக்கிறார் ஆசிரியர். ‘நான் சொல்ல வருவது புரிதலையும் தாண்டிய புனிதம். நான் எழுதிய சில விஷயங்கள் எனக்கே புரியவில்லை’ என்ற ஆசிரியரின் முன்னுரையைப் படிக்கும்போது மயிர்க்கூச்சம் ஏற்படுகிறது. (வெளியீடு : பிச்சைப்பாத்திரம், தர்மபுரி. பக்கம் : எண்ண முடியவில்லை. விலை : ரூ.800)
3 108 வகைக் கோலங்கள்
ஆசிரியர் : புள்ளிராணி
விதமிதமான புள்ளிக் கோலங்களை போடக் கற்றுக் கொடுப்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கமே. நூலாசிரியர் காதல் வயப்பட்டிருப்பதால் ‘புள்ளி வைச்சுக் கோலம் போட மறந்து’ விட்டார். அதனால் கோலப் புத்தகம் அலங்கோலப்புத்தகமாகிவிட்டது. (வெளியீடு, பக்கம், விலை : ரொம்ப முக்கியம்!)
2 எலக்கன பிலையின்ரி எலுதுவது எப்டி?
ஆசிரியர் : தமிழ்க்கோடாரி
‘இலக்கணப் பிழையின்றி எழுதுவது எப்படி?’ என வந்திருக்க வேண்டிய புத்தகம், பக்கத்திற்குப் பக்கம் ஏராளமான எழுத்துப் பிழைகளுடன் இப்படி வந்திருக்கிறது. நூலாசிரியருக்கு தமிழில் பெரிய ‘ழ’ என்னுமொரு எழுத்து இருப்பதே தெரியாது போல! ‘ஆ’ என்பதை ‘அ¡’ எனவும், ‘ஈ’ என்பதை ‘இ¡’ எனவும், மேலும் ‘உ¡’, ‘எ¡’, ‘ஒ¡’ என பல புதிய எழுத்துக்களை கண்டுபிடித்து தமிழுக்கு பெரும் தொண்டு ஆற்றியிருக்கிறது இந்நூல். (வெளியீடு : நியூ பதிப்பகம், செம்மொழியூர். பக்கம் : 120 (எழுத்துப் பிழையின்றி ஒரே ஒரு வெற்றுப்பக்கம்.) விலை : ரூ. 33)
1 காணாமல் போனவர்களைப் பற்றிய அறிவிப்பு!
ஆசிரியர் : சதக் செல்லப்பா
இது ஒரு நாவல் (என்று நம்பப்படுகிறது.) கதையின் முதல்பக்கத்தில் திடீரென காணாமல் போய்விடும் அப்புசாமியைத் தேடிப்போகும் சுப்புசாமி காணாமல் போய்விடுகிறான். சுப்புசாமியைத் தேடிப்போகும் ராமசாமியும் காணாமல் போய்விட, ராமசாமியைத் தேடிப் போகும் கோயிந்தசாமியும் காணாமல் போய்விட, கோயிந்தசாமியைத் தேடிப்போகும் அப்புசாமியும் (சுப்புசாமி தேடிப்போகும் ஆள்தான்) காணாமல் போய்விடுகிறான் என கடைசிப் பக்கத்தில் கூறுகின்றார் ஆசிரியர். ‘மீண்டும் முதல் பக்கத்தில் இருந்து கதையைத் தொடர்ந்து படிக்கவும்’ என ஒரு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் புத்தகத்தை படித்தே முடிக்கவே முடியாமல் வாசகர்கள் ஆனந்தக் கூத்தாடுகின்றனர். (வெளியீடு : காற்புள்ளி பதிப்பகம், நாவலூர். பக்கம் : 171. விலை : போடவில்லை.)
எனது முதல் புத்தகத்தை வெளியிட்டவர் யார்?
எனக்கு சுஜாதா அனுப்பிய பதில்
டிசம்பர் 11க்கான எனது கட்டுரை.
(மேலுள்ளவற்றில் எந்தத் தலைப்பு உங்களை ஈர்க்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு தொடர்ந்து படிக்க ஆரம்பிக்கவும். சுருங்கச் சொன்னால் நான் எனது முதல் கவிதைப் புத்தகத்தை வெளியிட்ட அனுபவம் இந்தக் கட்டுரை. சற்றே பெரியது.)
பருவ வயது மாணவன் அல்லது மாணவியின் நோட்புக்கை அல்லது உட்கார்ந்திருக்கும் டெஸ்க்கைப் பாருங்கள். குறிப்பாக கடைசி பக்கம். ஏதாவதொரு சினிமாவின் பாடல்வரி அல்லது சொந்தத்தில் எழுதிய சில வரிகள் இருக்கும். ஒன்றன் கீழ் ஒன்றாக வார்த்தைகளை உடைத்து எழுதி யிருந்தால் அது கவிதை என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கும்.
நானும் அப்படிப்பட்ட கவிஞனாகத்தான் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். சில டைரிகளில் என்னுடைய சமூகக் கோபங்கள், ஏக்கங்கள், தேசப்பற்று, அப்புறம் பருவப்பற்று எல்லாமே மோனை தப்பாத வார்த்தைகளில் அடுக்கடுக்கு வரிகளில் ‘கவிதையாக’த் தவழ்ந்தன. அந்தப் பாவத்தில் வைரமுத்துவுக்குப் பெரும்பங்கு உண்டு. (என்னைப்போல பலரும் தங்களைக் கவிஞர்களாக உருமாற்றிக் கொண்டு உருவகப்படுத்திக் கொண்டு திரிவதற்குக் காரணமும் அவர்தான் என்றே நினைக்கிறேன்.)
பத்தாம் வகுப்பில் நான் படித்த தூத்துக்குடி செயின்ட் சேவியர்ஸ் பள்ளியில் நடந்த ஒரு கவிதைப் போட்டியில் எனது நண்பன் மைக்கேல் ஞானராஜ் முதல் பரிசு பெற்றான். என்னைவிட அவன் எதுகை, மோனைகள் நன்றாகப் போடுவான், கூடவே கையெழுத்தும் அழகாக இருக்கும். ஆகவே என்னுடைய மாடர்ன் ஆர்ட் கையெழுத்தில் எழுதப்பட்ட கவிதைக்கு இரண்டாம் பரிசே கிடைத்தது. அதற்கே வானத்தில் மிதந்தேன், இந்தச் சமூகம் என்னையும் ஒரு கவிஞனாக அங்கீகரித்துவிட்டது என்று.
கல்லூரியில் எனது கவிதை வேட்கைக்கு வெறித்தனமாகத் தீனி போட்டார்கள். ‘கோவில்பட்டியில் ஒரு கவிதைப்போட்டி. நீ போயிட்டு வா. தலைப்பு இதுதான் – சும்மா கிடைத்ததா சுதந்தரம்! காலேஜ் ஆபிஸ்ல சொல்லி பணம் வாங்கிக்கோ. ஆல் தி பெஸ்ட்’ – ஆர்வமாகக் கலந்துகொள்வேன். பல போட்டிகளுக்கு கவிதை எழுதி தபாலில் அனுப்ப வேண்டியதிருக்கும். செய்திருக்கிறேன். வாங்கிய பரிசுகள் வெகுசிலவே. இருந்தாலும் வெளிஉலக, மேடை அனுபவங்களைச் சம்பாதித்தேன். அந்தச் சமயங்களில் என்னை நம்பி ஊக்கப்படுத்திய பேராசிரியர் (அமரர்) நம்பி நாராயணனுக்கு என் வணக்கங்கள்.
பிஎஸ்சி கெமிஸ்ட்டிரி, எம்எஸ்சி தகவல்தொழில்நுட்பம் – ஐந்து வருட கல்லூரி காலம். வகுப்பை கட் அடிக்க மாட்டேன். ஆனால் என் நோட்டுகளில் கவிதை என்ற பெயரில் ஏதாவது நிரம்பிக் கொண்டே இருக்கும். என் கவிதைகளை ரசிக்க, ஊக்கப்படுத்தும் விதத்தில் நண்பர்களும் கிடைத்தார்கள். இடைப்பட்ட ஒரு வருடத்தில் எனது வ.உ.சி கல்லூரியின் பொன்விழா வந்தது. பல்வேறு விஷயங்களைக் கொண்டு கண்காட்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். எனது கவிதைகளைக் காட்சிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்தது. தெர்மாகோல், ஸ்கெட்ச், சார்ட், க்ரையான் சகிதமாக நண்பர்கள் என் கவிதைகளுக்காக பல இரவுகள் உழைத்தார்கள்.
காட்சிப்படுத்தினேன். கருத்துகளை எழுத நான் வைத்திருந்த நோட்புக் நிரம்பியது. பலர் நேரடியாகவே பாராட்டினார்கள். பிறவியிலேயே கண் தெரியாத ஒரு மனிதனின் மன உணர்வுகள் எப்படி இருக்கும் என்றொரு கவிதை எழுதியிருந்தேன். அப்படிப்பட்ட ஒரு சகோதரி அங்கு வந்தார்கள். நானே அந்தக் கவிதையை வாசித்துக் காண்பித்தேன். ‘என்னோட உணர்வுகளை எப்படி நீங்க சரியாப் புரிஞ்சுக்கீட்டிங்க?’ – அந்தச் சகோதரி நெகிழ்வுடன் கேட்டார்கள். இதுவரை நான் பெற்றதிலேயே மிகப்பெரிய பாராட்டு அது. ‘நீங்க கவிதை புக் போட்டிருக்கீங்களா?’ – நிறைய விசாரிப்புகள். இன்னும் ஒரே வருடத்தில் சொந்தக் காசிலேயே (அதாவது அப்பா காசில்) கவிதைப் புத்தகம் போட வேண்டுமென்ற ‘வேட்கை’ வேர்பிடித்து வளர்ந்தது.
விகடன் மாணவ நிருபராக ஒரு வருடம் பணியாற்றிய தெம்பு வேறு. எம்எஸ்சி முடித்துவிட்டு ( 2002 செப்டெம்பர்) நண்பர்களோடு தூத்துக்குடியில் வணிக நிறுவனங்களுக்கான சிறு சிறு ப்ரா ஜெக்ட்டுகள் மட்டும் செய்துகொண்டு இருந்தேன். அப்போதுதான் அந்த ஆபரேஷனை ஆரம்பித்தோம்.
எழுதுவதை ஊக்கப்படுத்துவதில் எனது அப்பாவுக்கு நிகர் வேறு யாரும் கிடையாது. பைனான்ஸ் பண்ண ‘ரெட்டை ரெடி’ என்றார்கள். யாருக்கு கிடைக்கும் இப்படி ஓர் அப்பா? கவிதை எழுதுவதற்காக நான் பயன்படுத்திய பெயர் ‘முகில்’ – என் அன்புச் சகோதரி அகிலா வைத்த பெயர். நண்பர்கள் எனது கவிதைகளை எல்லாம் படித்து ‘தரமான’ கவிதைகளை தேர்ந்தெடுத்தார்கள். பார்த்திபனின் கிறுக்கல்கள் வடிவமைப்பு எங்களை மிகவும் பாதித்திருந்தது. அதே மாதிரி ஒரு புத்தகம் போட எவ்வளவு செலவாகும் என்று விசாரித்துவிட்டு, சோடா குடித்தோம். இருந்தும் மயக்கம் தெளியவில்லை.
கவிதைகள் அடங்கிய டம்மி பிரதிகள் சிலவற்றை சில விஜபிக்களுக்கு அனுப்பினேன். அணிந்துரை இல்லாவிடில் அது என்ன கவிதைப் புத்தகம்? தாமரை மணாளன், தென்கச்சி சுவாமிநாதன், பா. விஜய் – அணிந்துரை தந்தார்கள்.
ஏதாவது வித்தியாசமாகச் செய்தால்தான் நம் புத்தகத்துக்கென்று ஓர் அடையாளம் கிடைக்கும். என்ன செய்யலாம்? நண்பர்கள் மீட்டிங். என் வீட்டு மாடியில்தான் பொதுவாக நிகழும். காரணம் என் வீட்டில் மட்டுமே அப்போது சிஸ்டம் உண்டு, டயல்-அப் நெட் இணைப்புடன். புத்தகத்துக்கான தலைப்பு முடிவானது. ஆ…
சரி பதிப்பகத்தின் பெயர்? நான், அருள், கோமதி நாயகம், ராஜவேல், பேச்சியப்பன், ஆனந்த், சொக்கலிங்கம், முருகேஷ் – ஆகியோர் அடங்கிய நண்பர்கள் குழுவுக்கு நாங்கள் வைத்திருந்த பெயர் Beats. அதுவே பதிப்பகத்தின் பெயரானது – துடிப்புகள் பதிப்பகம். அலுவலகம், தொலைபேசி எண் எல்லாம் எனது வீட்டினுடையதே.
‘நாம டூ-இன்-ஒன் புக் போடுவோம். ஒண்ணுதான், ஆனா ரெண்டு. ஆ… உணர்வுகளைக் காதலி ப்பவர்களுக்குன்னு ஒரு அட்டையில் இருக்கணும். அதுக்குள்ள போனா எல்லாம் சமூக, பொது கவிதைகள். அதே புக்கை அப்படியே புரட்டி, 180 டிகிரி சுத்துனா இன்னொரு முகப்பு அட்டை. ஆ… காதலை உணர்ந்தவர்களுக்கு அங்க இன்னொரு தலைப்பு. அந்த அட்டை வழியா உள்ளபோனா எல்லாமே காதல் கவிதைகள். ரெண்டு பகுதிகளுமே சந்திக்கிற நடுப்பக்கத்துல ஏதாவது வித்தியாசமா செஞ்சுக்கலாம்.’
ஆ... புத்தகம்
அடுத்தது கவிதைகளுக்கான போட்டோ. எனது எம்எஸ்சி அன்புத்தோழி குமுதா (இப்போது சென்னை ஹலோ எஃப்எம்மில் குல்ஃபி விற்றுக் கொண்டிருக்கிறாள்) புகைப்பட நிபுணி. அவளை அழைத்துக் கொண்டு எனது ஊர் சுற்றுவட்டாரங்களில் திரிந்தேன். சில புகைப்படங்கள் எடுத்தோம். ‘புத்தகத்தை நம்மளே டிசைன் பண்ணிட்டா செலவு மிச்சம்.’ நண்பன் அருள் ஐடியா கொடுத்தான். யாரங்கே, ஃபோட்டோஷாப்பையும் பேஜ்மேக்கரையும் இன்ஸ்டால் செய்யுங்கள். ‘ஐடியா கொடுத்த அன்பு நண்பா, உனக்கு தமிழ் டைப்பிங் தெரியுமல்லவா. வா, வந்து அடி!’
தன் மௌஸே தனக்குதவி – நான் ஃபோட்டாஷாப்புக்குள் புகுந்து மௌஸைத் தேய்க்க ஆரம்பித்தேன். சில நாள்களில் பேஜ் டிசைனராக எனக்கு நானே பதவி உயர்வு கொடுத்துக் கொண்டேன். வேறுவழியில்லை. ஆ புத்தகத்திற்கான அட்டை முதற்கொண்டு நான்தான் டிசைன் செய்தேன் என்பதெல்லாம் சரித்திரம். (குறிப்பு : அப்போது நான் RGB, CMYK, Resolution இந்த மூன்று அதிஅத்தியாவசியமான வார்த்தைகளைக் கேள்விப்பட்டதுகூட கிடையாது.)
எழுத்தாளர் சுஜாதாவுக்கு ஒரு மெயில் அனுப்பினேன். ‘அய்யா நான் ஒரு கவிதைப் புத்தகம் போடவிருக்கிறேன். அதன் தலைப்பு ஆ. நீங்களும் அப்படி ஒரு புத்தகம் போட்டிருக்கிறீர்கள். ஆட்சேபணை ஏதுமுண்டா?’ பதில் வந்தது. ‘நல்லது. தாராளமாகப் போட்டுக் கொள்ளவும். தயவு செய்து எனக்கு காப்பி அனுப்ப வேண்டாம்.’
அருகிலிருந்த சிவகாசி, கோவில்பட்டி, திருநெல்வேலி போன்ற ஊர்களுக்குச் சென்று ஒவ்வொரு பிரஸ் ஆக ஏறி இறங்கினோம். எஸ்டிமேட் வாங்கி வந்தேன். இறுதியாக கோவில்பட்டியில் ‘ஒரிஜினல் பிரிண்டிங் பிரஸ்’ஸைத் தேர்ந்தெடுத்தோம். ‘தம்பி, எத்தனை புஸ்தகம்? எத்தனை பக்கம்? பேப்பர் என்ன வேணும்? அட்டை ஆர்ட் போர்டா, எத்தனை ஜிஎஸ்எம்? சிவகாசியில அடிச்சிடலாம். உள்ள மல்டி கலர் வரணும்னா ஒரு பாரத்துக்கு இவ்வளவு வரும். பைண்டிங் இங்கயே செஞ்சுடலாம்.’ எல்லாம் கேட்டுத் தெளிவாகிவிட்டு ஒரு எஸ்டிமேட் போட்டுக் கொடுத்தார் முருகேசன் அண்ணாச்சி. ஒரு புத்தகம் பற்றிய அடிப்படை விஷயங்கள் பிடிபட ஆரம்பித்தன.
சுமார் ஒரு வாரகாலம். கிட்டத்தட்ட தினமும். நானும் நண்பன் சொக்கலிங்கமும் கோவில்பட்டிக்கு ஒரிஜினலுக்கு அலைந்தோம். கையில் கவிதைகள், பேஜ் டிசைன்கள், அட்டை எல்லாம் அடங்கிய பிளாப்பிகள், சிடிக்கள். எங்களது வித்தியாசமான (அல்லது புரிந்துகொள்ளமுடியாத) முயற்சியைக் கண்டு மெய்சிலிர்த்து (அல்லது தலைசுற்றி) அந்த பிரஸ்காரர்கள் ஒரு சிஸ்டத்தையே எங்களிடம் கொடுத்துவிட்டார்கள். நானும் சொக்கலிங்கமும் ஃபாண்ட் பிரச்னை முதற்கொண்டு எல்லாவற்றையும் தீர்த்து புத்தகத்தை ஃபைனல் செய்தோம். ஆயிரம் புத்தகங்கள். அச்சாக ஆரம்பித்தன.
வெறிகொண்டு முதல் புத்தகத்தைக் கொண்டு வருபவனுக்கு வெளியீட்டு விழா நடத்த ஆர்வமிருக்காதா? அப்பாவின் விருப்பமும் அதுவே. பிறகென்ன, நடத்திவிட்டால் போச்சு. வ.உ.சி. கல்லூரி அதற்கும் இடமளித்தது. ஹாலை இலவசமாகக் கொடுத்தது. யாரெல்லாம் சிறப்பு விருந்தினர்கள்? பலரை யோசித்து, பலரிடம் கேட்டு, சிலர் முடிவானார்கள். தாமரை மணாளன், தமயந்தி, ஏபிசிவி சண்முகம், குமரிக்கண்ணன், மகாதேவன். இவர்கள் எல்லோருமே புத்தகத்தைப் பெற்றுக் கொள்பவர்கள். சரி வெளியிடுபவர்?
அழைப்பிதழ்
அதில்தான் ஒரு சஸ்பென்ஸை வைத்தோம். விழாவுக்கான அழைப்பிதழ் முதற்கொண்டு எதிலுமே அவரது பெயரைக் குறிப்பிடவில்லை. கவிதைப் பிரபஞ்சத்தின் பிதாமகன் என்று மட்டும் ஒரு குறிப்பு கொடுத்தோம். விழாவுக்கான விருந்தினர்களிடம்கூட சொல்லவில்லை. எனது வீட்டில் அப்பா, அம்மா, உறவினர்களிடம்கூட சொல்லவில்லை. எனது நண்பர் பட்டாளம் மட்டுமே அறிந்த ரகசியம் அது. சுற்றுவட்டாரத்தில் பல இடங்களில் அழைப்பிதழைத் தாராளமாகப் பட்டுவாடா செய்தோம். (அழைப்பிதழையும்கூட விட்டுவைக்கவில்லை. அதிலும் வித்தியாசம். நான், அழைப்பிதைப் பெற்றுக் கொள்பவருடன் பேசுவதுபோன்ற உரையாடலிலேயே வடிவமைத்தேன்.)
விழா நாள் (2003, பிப்ரவரி 2, ஞாயிறு). மேடையின் பின்புறம் மிகப்பெரிய துணி. அதில் எல்லா உயிர் எழுத்துகளும் சிதறிக் கிடக்க, நடுவில் பிரமாண்டமாக ஆ. கீழே ஒரு பாரதியார் படம். வருபவர்களுக்கு நினைவுப்பரிசாகக் கொடுக்க, ‘ஆ’ என்ற எழுத்து பொறிக்கப்பட்ட ஒரு கண்ணாடிப்பெட்டி. காலையில் செம மழை. ‘ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ…’ என்று நான் வீறுகொண்டு பாடிவிடுவேனோ என்ற பயத்திலேயே மழை சற்றுநேரத்தில் நின்றது.
விழாவில் மைக்கேல்
எதிர்பார்த்ததைவிட அரங்கில் கூட்டம். எல்லாம் வித்தியாசமான அழைப்பிதழ் செய்த வேலை. ஒவ்வொருவராகப் பேசினார்கள். யார் புத்தகத்தை வெளியிடப்போகிறார்கள் என்று எல்லோருக்குள்ளும் எதிர்பார்ப்பு. எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே என்று எனக்குள் படபடப்பு. விஐபியை எங்கே ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று தேடக்கூட செய்தார்கள். புத்தக வெளியீட்டு நேரம். தொகுப்பாளர் சங்கரேஸ்வரன் என்ற நண்பர் புத்தகத்தை வெளியிடப்போகும் நபர் பற்றி சூடுபறக்கப் பேசி ஆவலைத் தூண்டினார். அவருக்கும்கூட அது யாரென்று தெரியாது.
அப்போது அரங்கத்தில் ஒரு வாசல் வழியே பிரசன்னமானார் மகாகவி. ஆரவாரம். கைதட்டல். வந்து ‘ஆ’வை எடுத்து வெளியிட்டார். ஆனந்தக் கண்ணீர் நிமிடங்கள். …தன் மகனை சான்றோன் என.. அதுவும்தான்.
மகாகவி புத்தகத்தை எடுத்து மேடையிலுள்ள அனைவருக்கும் கொடுக்க வேண்டும். ஆனால் மேடையேறிய பாரதியாருக்கு அவ்வளவு கூட்டத்தைப் பார்த்ததும் அந்தக் கணத்திலிருந்தே கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. ‘டேய் கோமதிநாயகம், உன் கை நடுங்குதுடா. மானத்தை வாங்கதடா!’ – அவனது காதில் கிசுகிசுத்தேன். பிரயோசனமில்லை. பாரதிக்குரிய கம்பீரத்தை எல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு மெள்ள கீழிறங்கிப் போனான் நண்பன் கோமதி நாயகம்.