கண்டேன் இயக்குநரை!

கலைஞர் டீவியிலும் உருப்படியான, பிற சேனல்களிலிருந்து காப்பியடிக்காத ஒரு நிகழ்ச்சி வருகிறது. நாளைய இயக்குநர்.

சில வாரங்களாகத்தான் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறேன். டைரக்‌ஷன் கனவுகளோடு திரியும் இளைஞர்களுக்கான நல்ல களம் இந்த நிகழ்ச்சி. சில குறும்படங்கள் சப்பென்று இருந்தாலும், சில படங்கள் நன்றாக இருக்கின்றன. ஒரு சில படங்கள் ‘அட’ போட வைக்கின்றன.

மார்ச் 14, ஞாயிறு காலையில் (10.30 – 11.30) ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஒளிபரப்பான ஒரு படம் ஓஹோ ரகம். கார்த்திக் சுப்பாராஜ் என்ற இளைஞர் இயக்கிய பெட்டிகேஸ் என்ற ஒன்பது நிமிட குறும்படம்.

போலீஸில் பெரிய ஆளாக வரவிரும்பும் ஒரு கான்ஸ்டபிளின் கதை என்று சுருக்கமாகச் சொல்லலாம். ஆனால் அதற்குள் பல கிளைக்கதைகள். படம் முழுக்க நகைச்சுவை. அருமையான நடிகர் தேர்வு. அற்புதமான ஷாட்கள். ஒரு ஃப்ரேம்கூட அநாவசியமாக இல்லை. ஒரு குறும்படத்தில் இத்தனை விஷயங்களைக் கொடுக்க முடியுமா என்று அசர வைத்துவிட்டார் கார்த்திக். ஒன்பது நிமிடப் படத்தில் ஒரு முழு நீள திரைப்படம் பார்த்த திருப்தி.

‘Karthick, You are going to become a very Big Director’ என்று நடுவராக இருந்த பிரதாப் போத்தன் சொனனார். சத்தியமான வார்த்தைகள். நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்திருந்த இயக்குநர் வசந்த் தனக்கே உரிய மேதமைத்தனத்தோடு பேசினார். ரசிக்க முடியவில்லை.

இதற்கு முந்தைய சுற்றுகளில், கார்த்திக் இயக்கிய பிற படங்களைத் தேடிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நான் மட்டும் ஒரு தயாரிப்பாளராக இருந்தால் இந்நேரம் கார்த்திக்குக்கு அட்வான்ஸ் கொடுத்திருப்பேன்.

பெட்டி கேஸ் படத்தினைப் பார்க்க : இங்கே. (மூன்றாவது வீடியோவில் மூன்றாவது நிமிடத்திலிருந்து படம் ஆரம்பமாகிறது. நான்காவது வீடியோவிலும் தொடருகிறது.)