பிரபஞ்சனின் புதிய தொடர்

இரும்பு, பயன்பாட்டுக்கு வந்தபின் ஆற்றங்கரை ஓர மக்கள், காடழித்து விவசாயத்தில் ஈடுபட்டார்கள். நெற்பயிர், பயன்பாட்டுக்கு வந்தபின் மக்கள் வளம் அடையத் தொடங்கினர். வெளிநாட்டு வர்த்தகமும் சேர சொத்து சேரத் தொடங்கியது. வாழ்க்கைக்குத் தேவையான மாடுகளைக் கொள்ளையடிக்கத் தொடங்கினர். கொள்ளையில் அதிக வீரம் காட்டி, அதிக மாடுகளைக் கொள்ளையடித்தவன் அரசன் ஆகிறான். அதிகாரம் அவனிடம் குவியத் தொடங்கியது. உபரி செல்வம் அல்லது சொத்துக்குத் தம் பிள்ளைகள் வாரிசாயினர். தம் பிள்ளைகள்தான் என்பதற்கான உத்தரவாதத்தைக் குடும்பமும், படி தாண்டாத மனைவியும் தந்தார்கள். ஆகவே குடும்ப அமைப்பு மகிமைப்படுத்தப்பட்டது.

நிலமற்ற விவசாயி முதன் முதலாக ‘வினைவலன்’ அல்லது வேலையாள் உருவாகிறான். குழுத் தலைவர்கள் அல்லது குறுநில மன்னர்களுடன் நெருங்கிய உறவும் நட்பும் கொண்ட பாணர்கள் என்கிற இசை நடன, நாடகக் கலைஞர்கள் காமத் தரகர்களாக மாறுகிறார்கள். கலைஞர்களாகிய பாணர்களின் மனைவிமார்கள் அல்லது கலைத் தோழர்கள், பல வேளைகளில் பரத்தையர்களாகிறார்கள். பாணர்கள் இருந்த இடங்களில் பார்ப்பனர்கள் மன்னர் அவைகளில் அமர்கிறார்கள். தமிழ்ச் சமூகத்தில், தொழில் வழிப் பிரிவுகள், பிறப்பு வழிச் சாதிகளாகின்றன. உழைக்கும் மக்களை இழிசனர்கள், புலையர்கள், துணி வெளுக்கும் பெண்கள் புலத்தியர்கள் ஆகிறார்கள். உழவுப் பெண்கள் ‘கடைசியர்கள்’ ஆகிறார்கள். போரில் தோற்றவர்கள் அடிமைகள் ஆகிறார்கள்.

…..

எல்லையற்ற அதிகாரத்தைக் குவித்துக் கொண்ட மன்னர்களைத் தம் சாதுர்யத்தால் வளைத்துப் போட்ட பார்ப்பனர்கள், தங்கள் ஆரிய வருணாசிரம விஷத்தைத் தமிழர் வாழ்க்கையில் கலந்தார்கள்.

மானுட குலத்துக்குள்ளேயே ஒரு பகுதியினர் தீண்டத்தகாதவர்கள் என்று ஒதுக்கப்பட்ட கொடுமை, சுமார் 1500 ஆண்டுகளாகவே இங்கே நீடிக்கிறது.

இப்படிப் பெரும்பான்மை உழைக்கும் மக்களைப் புறக்கணித்து, சொத்துள்ளவர்களை மட்டுமே பாடிய தமிழ் இலக்கியம் தமிழர் இலக்கியம் ஆகுமா? என்பதே என் கேள்வி. இன்றைய சொல்லாடலில், பிற்பட்ட, மிகப் பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்கள் ஆகியோர்களைப் புறக்கணித்து மிச்சம் உள்ள பார்ப்பன மற்றும் ஆதிக்கச் சாதி இந்துக்களை மட்டும் ஒரு மொழியின் இலக்கியம் பதிவு செய்யுமானால், அதை அந்த தேசிய இனத்தின் இலக்கியம் என்று எவ்வாறு சொல்ல முடியும்?

0

எழுதப்படாத சரித்திரம் – பிரபஞ்சன் எழுதும் புதிய தொடர். தமிழக அரசியல் இதழில் கடந்த இரு வாரங்களாக விறுவிறுப்பாக வெளிவந்து கொண்டிருக்கிறது.

காந்தியையும் அம்பேத்கரையும் வைத்து பிரபஞ்சன் எழுதிய முதல் அத்தியாயமே தொடர் குறித்த முழு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலே கொடுக்கப்பட்டுள்ளது இரண்டாவது அத்தியாயத்திலிருந்து சிறு பகுதி. இதுவரை பதிவு செய்யப்படாத புறக்கணிப்படும் மக்களின் சரித்திரத்தை பிரபஞ்சனின் ஆவேச எழுத்தில் வாசிக்க வாரந்தோறும் காத்திருக்கிறேன்.

இரண்டாவது அத்தியாயத்தை முழுமையாகப் படிக்க இங்கே.

அடச்சே, ராதா இல்லாமல் போய்விட்டாரே!

லஷ்மி காந்தன் – எம்.ஆர். ராதா போட்ட நாடகங்களில் ஒன்று. சமூக அவலங்களை, கலைஞர்கள் அடித்த கூத்துகளை வெட்ட வெளிச்சம்போட்டுக் காண்பிக்க நினைத்த லஷ்மி காந்தனின் கதை. ராதாதான் காந்தன். நாடகத்தில் காட்சிக்கு காட்சி குபீர் சிரிப்புதான்.

அந்த நாடகத்தில் ஒரு பாடல் காட்சியில் பெண் வேடமிட்டும் வந்தார் ராதா. அந்தப் பாத்திரத்தின் பெயர் ரங்கூன் கமலம். அது ஒரு டப்பாங்குத்து நடனம். ‘சிங்கார லஹரி சித்த கண சுப ஹரி’ என்று நீளும் அந்தப் பாடலுக்கு ராதா ஆடும் தளுக்கு மினுக்கு நடனத்துக்கு விசில் ரசிகர்களிடையே விசில் பறக்கும்.

லஷ்மி காந்தன் தன் பத்திரிகையில் தோலுரித்துக் காட்டிய விஷயங்களைவிட, ராதா தன் நாடகத்தில் வைத்திருந்த காட்சிகளும் வசனங்களும் வீரியம் மிக்கவையாக இருந்தன.

பொதுவாக ராதா தன் நாடகங்களில் வரும் வேலைக்கார கதாபாத்திரங்களின் பெயர்களை ராமன் அல்லது முருகன் என்றே வைத்துக் கொண்டார். லஷ்மி காந்தனில் வேலைக்காரன் ராமனோடு ஒரு காட்சி. அவன் தன் நெற்றியில் மாபெரும் நாமம் ஒன்றைப் போட்டிருக்கிறான்.

‘டேய் என்னடா இது?’

‘பேங்கு.’

‘இங்க யாருடா வருவாங்க?’

‘பணம் போடறவங்க.’

‘ஏன்டா பணம் போடுறவங்க உள்ளாற வரும்போதே வாசல்ல நீ இப்படி இருந்தா, எவன்டா நம்பி பணத்தைப் போடுவான். எதுக்காகடா இதைப் போட்டுக்கிட்டிருக்கே?’

‘பாதம், எம்பெருமான் பாதம்.’

‘ஓ.. எம்பெருமான் பாதத்தை நீங்க நெத்தியில போட்டுக்கிட்டிருக்கீங்களா. ஆமா அந்த எம்பெருமான் நெத்தியில போட்டிருக்கே அது யார் பாதம்டா? தெரிஞ்சுக்க. தெரிஞ்சுக்கிட்டு வந்து அப்புறம் போடு.’

0

தூக்குமேடை நாடகத்தில் ஒரு காட்சி. ராதா ஒரு பெண்ணைத் தன்னுடன் வைத்திருப்பார். வேலைக்காரன் வருவான்.

‘யாருண்ணே இது?’

‘அண்ணிடா.’

‘அண்ணி காலைப் பாருங்க.’

‘என்ன?’

‘யானைக்கால் மாதிரி இருக்கு.’

‘போடா, பிள்ளையாருக்கே யானைத்தலை இருக்கு. இதுவரைக்கும் ஒருபயலும் கேட்கலை. கால் யானைக்காலா இருக்கறதை சொல்ல வந்துட்டான்.’

0

ராதா ரத்தக்கண்ணீர் நாடகம் தொடங்குவற்கு முன்னால் அன்றைய செய்தித்தாளை படிக்கச் சொல்லி கேட்பார். பின்பு மேக்-அப் ரூமுக்குச் செல்வார். மேக்-அப் போட்டு முடிந்தவுடன், உட்கார மாட்டார். குறுக்கும் நெடுக்குமாக அலைந்து கொண்டே இருப்பார். அவருக்குள் புதிய வசனம் ஒன்று உருவாகியிருக்கும்.

அதற்கு நியூஸ் பேப்பர் ஸீன் என்று பெயர். காந்தா வீட்டு வேலைக்காரன், மோகனிடம் நியூஸ் பேப்பரைக் கொடுப்பான். அதிலுள்ள செய்தியைப் படித்து கருத்து சொல்லுவான் மோகன். அது அன்றைய செய்தியாக இருக்கும். அதற்கு ராதா அடிக்கும் கமெண்ட், சம்பந்தப்பட்டவர்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்வதுபோல இருக்கும். இந்த நியூஸ் பேப்பர் ஸீனைக் காண்பதற்காகவே தினமும் நாடகத்துக்கு வந்த ரசிகர்களும் உண்டு.

மோகன் தன் மாமனாரிடம் பேசும் காட்சி ஒன்று. ரத்தக்கண்ணீர் படத்தில் இந்த வசனங்கள் பல இடம் பெற்றிருக்காது. சென்ஸாரிடம் சிக்கியிருக்கலாம்.

‘என்ன மேன்?’

‘மேன் மேன்னு கூப்பிடாத தம்பி’

‘வொய்?’

‘நான் உன் மாமனாராச்சே.’

‘எந்த நாராயிருந்தாலும் நான் இப்படித்தான் கூப்பிடுவேன். என்ன மேன் உடம்பு பூரா கோடு கோடா போட்டிருக்க?’

‘இது பட்டை.’

‘ஓ… நீ பட்டை அடிக்கிற சாதியா?’

‘இல்லல்லை தம்பி, இது விபூதிப்பட்டை.’

‘ஓ… அது என்ன மேன் கழுத்துல கொட்டை?’

‘தம்பி தப்பாப் பேசாதே, இது ருத்திராட்சக் கொட்டை.’

‘இதை எதுக்கு மேன் போட்டுக்கிட்டிருக்கிறே?’

‘தம்பி உனக்குத் தெரியாது. இதுல கடவுள் இருக்காரு.’

(மோகன் பாய்ந்து தன் மாமனார் கழுத்தில் தொங்கு ருத்திராட்சக் கொட்டையைப் பிடித்துக் கொண்டே கத்துகிறான்)

‘ஏய்… போலிஸூக்குப் போன் பண்ணு. அவனவன் கடவுளைக் காணும், கடவுளைக் காணும்னு தேடிக்கிட்டிருக்கான். கடவுள் என்னடான்னா இந்தக் கொட்டையில ஒளிஞ்சிக்கிட்டு இருக்கான்.’

0

‘நாடக நடிகர்கள் எல்லாம் தூங்கக்கூடாது. தூங்கறப்பகூட காலாட்டிக்கிட்டே தூங்கணும். இல்லேன்னா செத்துப் போயிட்டான்னு வேற யாரையாவது போட்டுருவாங்க.’

இதுதான் ராதா தன் நாடகக்குழுவினரிடம் அடிக்கடி சொல்லும் வசனம். இன்றைய சூழலில் பல விஷயங்களில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, பலரது முகத்திரைகளைக் கிழிக்க ராதா போன்ற ஒரு கலைஞர் இல்லையே என்று நினைக்கும்போது ஏக்கமாகத்தான் இருக்கிறது. இன்றைய தமிழக அரசியல் சூழலில் ராதா இருந்திருந்தால் நிஜமாகவே அவருக்குப் பல துப்பாக்கிக் குண்டுகள் தேவைப்பட்டிருக்கலாம்.

எம்.ஆர். ராதாயணம் – கிழக்கு வெளியீடு