சுஜாதாவின் கொலைகள்

சென்னை புத்தகக் காட்சி 2011 – கடந்த நான்கு நாள்கள் ஒரு பார்வை.

* ‘வானுயர்ந்த சோலையிலே… நீ நடந்த பாதையெல்லாம்…’ பாடலை பாடிக்கொண்டே செல்வது உத்தமம். நடக்கும் பாதையில் கீழே பொருத்தப்பட்டுள்ள மரப்பலகைகள் எப்போது உடைந்து நம்மை உள்ளிழுக்குமோ என்ற பயம் கண்காட்சிக்குள் நுழைந்து சில அடிகள் எடுத்து வைத்தவுடன் உங்களுக்கு ஏற்படப்போவது சர்வ நிச்சயம். தனுஷுக்குத் தம்பிபோன்ற உடல்வாகுடன் இருக்கும் நானே பயப்படுகிறேன் என்றால், பிரபுவுக்கு அண்ணன்போல இருக்கும் பாரா, ஹரன் பிரசன்னா போன்றோர் நிலைமையை நினைத்துப் பாருங்கள்.

* இந்தமுறை வள்ளுவர் பாதை, ஷெல்லி பாதை, கம்பர் பாதை, சேக்ஸ்பியர் பாதை என்ற ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு பெயர் கொடுத்திருக்கிறார்கள். நல்ல யோசனைதான். ஆனால் ‘ஓளவையார் பாதை’ என்று தவறாக அச்சிட்டு நம் தமிழ் மூதாட்டியை அவமானப்படுத்தியிருக்க வேண்டாம். தவிர, பபாஸி வழங்கும் ஸ்டால் வரைபடத்தில் ‘பாரதியார் பாதை’ என்று அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் நிஜத்தில் அங்கே இருப்பது ‘மகாத்மா காந்தி பாதை.’ அதற்குப் பக்கவாட்டில் இருக்கும் நீண்ட வரிசைதான் பாரதியார் பாதை. எனவே வாசகர்கள் வரைபடத்தைப் பார்த்துக் குழம்ப வேண்டாம்.

* இங்கே ஒரு கண்டனத்தைப் பதிவு செய்ய விரும்புகிறேன். திராவிட அரசியலில் எவ்வளவோ விஷயங்களுக்குப் பாதை போட்டுக் கொடுத்தவரும், இளைஞன் வரை இடையறாது எழுத்துச் சேவை ஆற்ற்ற்ற்ற்றிக் கொண்டிருக்கும் கலைஞரின் பெயரில் பாதை ஏன் வைக்கவில்லை? இந்தவார ஆ.வி.யில் கலைஞருக்காக வரிந்துகட்டிக் கொண்டு ஜிங்ஜக் அடித்திருக்கும் இயக்குநர் இமய்யம் பாரதிராஜா சார்பில் இந்தக் கண்டனத்தை முன் வைக்கிறேன்.

CLOSED

* கடந்த செவ்வாய் முதல் வெள்ளிவரை கண்காட்சியில் கூட்டம் இல்லை, அவ்வளவாக இல்லை, இல்லவே இல்லை. வெளியில் அமைக்கப்பட்டுக்கும் (நான்கோ, ஐந்தோ) டிக்கெட் கௌண்டர்களில் இரண்டு மட்டுமே இயங்கின (சில சமயம் ஒன்று மட்டும்). மற்றவை ‘CLOSED’  என்ற அறிவிப்புடன் காணப்பட்டன. ‘HOUSE FULL’ என்று பலகை மாட்டும் காலமெல்லாம் பு.கண்காட்சிக்கு வருமா என்ன?

* சென்ற வருடம் கிழக்கில் ‘ராஜீவ் கொலை வழக்கு’தான் பெஸ்ட் செல்லர் என்று ஓரிரு நாள்களிலேயே சொல்ல முடிந்தது. இந்தமுறை அப்படி எதுவும் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புத்தகம் ஹீரோயிஸம் காட்டுகிறது. சனி, ஞாயிறு கடந்தால்தான் தெரியும். பந்தயத்தில் முன்னணியில் உள்ள கிழக்கு புத்தகங்கள் :  காஷ்மீர், ஸ்பெக்ட்ரம், திராவிட இயக்க வரலாறு, ஆர்எஸ்எஸ், ராஜ ராஜ சோழன், முதல் உலகப் போர்.

சமர்ப்பணம் சொக்கனுக்கு..

* கிழக்கின் சினிமா புத்தகங்களில் இந்த வருடமும் தீனதயாளனின் ‘கமல்’ அதிகம் விற்பனையாகிறது. அதனுடன் போட்டி போடுவது ‘நான் நாகேஷ்.’ (கல்கியில் தொடராக வந்த நாகேஷின் அதிகாரபூர்வ வாழ்க்கை. தொகுப்பு எஸ். சந்திரமௌலி.) கடந்த ஐந்து வருடங்களாக ‘சொல்லிக்கொள்ளும்படியாக’ விற்பனையான சந்திரபாபு இந்தவருடம் விற்பனைக்கு இல்லை. வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறேன்.

* கடந்த சில வருடங்களாக வரலாற்றுப் புத்தகங்களுக்கு கிடைக்கும் வரவேற்பு மகிழ்ச்சி கொடுக்கிறது. மாயவலையையும், அகம் புறம் அந்தப்புரத்தையும் வாசகர்கள் விலையைப் பொருட்படுத்தாமல் வாங்கிச் செல்லும்போது…. ஓர் எழுத்தாளனுக்கு வேறென்ன சந்தோஷம் இருக்கக்கூடும்.

*  நேற்று கிழக்கில் ஓர் அம்மணி ஆர்வமாக நுழைந்தார். சுஜாதாவின் புத்தகங்கள் குறித்து கேள்விப்பட்டு வந்திருப்பார்போல. உள்ளே செல்லவில்லை. நேராக பில் கௌண்டருக்கு வந்து நின்றார். தன் கையிலிருந்த சிறு நோட்டைப் பிரித்து வாசிக்க ஆரம்பித்தார். ‘கொலையுதிர் காலம், மீண்டும் ஒரு கொலை எடுங்க. மேற்கே ஒரு குற்றம் இருக்கா?’ – இதுபோன்ற ‘கொலை’வெறி வாசகர்கள் இருக்கும்வரை சுஜாதா வாழ்வார்.

* கண்ணதாசனில் ‘வனவாசம்’ அழகான கட்டமைப்பில் கொண்டு வந்திருக்கிறார்கள். ‘மனவாசம்’ புத்தகமும் அருமையாக அச்சிடப்பட்டுள்ளது. முதல் வாசம் ரூ. நூறுக்கும், இரண்டாவது ரூ. எழுபதுக்கும் கிடைக்கிறது. மேலும் சில கண்ணதாசனின் புத்தகங்களும் புதிய கட்டமைப்புடன் கவரும் விதத்தில் வெளிவந்துள்ளன.

* கடந்த நான்கு நாள்களில் நான்கு புத்தகங்கள் மட்டுமே வாங்கினேன். நான் மிகவும் நேசிக்கும் எழுத்தாளர் ரேவதியின் ‘அப்பள ராஜா’, ‘இசையைக் கேட்குமா பாம்பு?’ – சிறுகதை நூல்கள். இரண்டுமே நடைபாதைக் கடையில் கிடைத்தன. ஹோவர்ட் ஃபாஸ்டின் ‘ஸ்பார்ட்டகஸ் ’ (தமிழில் ஏ.ஜி. எத்திராஜுலு) – என்.சி.பி.ஹெச்சில் வாங்கினேன். இன்னொரு நூல், அசோகமித்திரன் தொகுத்துள்ள ‘புதிய தமிழ்ச் சிறுகதைகள்’ – அதிலிருந்து சா. கந்தசாமியின் ‘ஒரு வருடம் சென்றது’ சிறுகதை நேற்றிரவு படித்தேன். இன்னும் மனத்துக்குள் ஏதோ செய்துகொண்டிருக்கிறது.

அமைதிப் பேச்சாளர் நாஞ்சில்

* நேற்று கண்காட்சியில் நண்பர் தளவாய் சுந்தரம் ஓரிடத்தில் நின்று கொண்டிருந்தார். அவர் அங்கே நிற்கிறார் என்றால் அருகில் ‘இலக்கிய நிகழ்வு’ ஏதோ நடப்பதாக அர்த்தம். எட்டிப் பார்த்தேன். உயிர் எழுத்து ஸ்டாலில் நாஞ்சில் நாடனின் கவிதைத்தொகுப்பு ஒன்றை வெளியிட்டார்கள். மனுஷ்யபுத்திரனின் முன்னிலையில் நாஞ்சில் நாடன் வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தார். என்ன ஓர் அமைதியான குரல். பேசியது நிச்சயமாக அருகில் நின்றவர்களுக்குக்கூட கேட்டிருக்காது. இந்த அடக்கத்துக்காகவே இவருக்கும் வருடந்தோறும் சாகித்ய அகாடமி கொடுக்கலாம்.

* இன்றும் நாளையும் புத்தகக் கண்காட்சியில்தான் இருப்பேன். சந்திக்கலாம்.

கவிதைப் புத்தகம் வெளியிட விரும்புவோர் கவனத்துக்கு

சுஜாதா, பா.விஜய் மற்றும் பலர்

எனது முதல் புத்தகத்தை வெளியிட்டவர் யார்?

எனக்கு சுஜாதா அனுப்பிய பதில்

டிசம்பர் 11க்கான எனது கட்டுரை.

(மேலுள்ளவற்றில் எந்தத் தலைப்பு உங்களை ஈர்க்கிறதோ அதைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு தொடர்ந்து படிக்க ஆரம்பிக்கவும். சுருங்கச் சொன்னால் நான் எனது முதல் கவிதைப் புத்தகத்தை வெளியிட்ட அனுபவம் இந்தக் கட்டுரை. சற்றே பெரியது.)

பருவ வயது மாணவன் அல்லது மாணவியின் நோட்புக்கை அல்லது உட்கார்ந்திருக்கும் டெஸ்க்கைப் பாருங்கள். குறிப்பாக கடைசி பக்கம். ஏதாவதொரு சினிமாவின் பாடல்வரி அல்லது சொந்தத்தில் எழுதிய சில வரிகள் இருக்கும். ஒன்றன் கீழ் ஒன்றாக வார்த்தைகளை உடைத்து எழுதி யிருந்தால் அது கவிதை என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கும்.

நானும் அப்படிப்பட்ட கவிஞனாகத்தான் தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். சில டைரிகளில் என்னுடைய சமூகக் கோபங்கள், ஏக்கங்கள், தேசப்பற்று,  அப்புறம் பருவப்பற்று எல்லாமே மோனை தப்பாத வார்த்தைகளில் அடுக்கடுக்கு வரிகளில் ‘கவிதையாக’த் தவழ்ந்தன. அந்தப் பாவத்தில் வைரமுத்துவுக்குப் பெரும்பங்கு உண்டு. (என்னைப்போல பலரும் தங்களைக் கவிஞர்களாக உருமாற்றிக் கொண்டு உருவகப்படுத்திக் கொண்டு திரிவதற்குக் காரணமும் அவர்தான் என்றே நினைக்கிறேன்.)

பத்தாம் வகுப்பில் நான் படித்த தூத்துக்குடி செயின்ட் சேவியர்ஸ் பள்ளியில் நடந்த ஒரு கவிதைப் போட்டியில் எனது நண்பன் மைக்கேல் ஞானராஜ் முதல் பரிசு பெற்றான். என்னைவிட அவன்  எதுகை, மோனைகள் நன்றாகப் போடுவான், கூடவே கையெழுத்தும் அழகாக இருக்கும். ஆகவே என்னுடைய மாடர்ன் ஆர்ட் கையெழுத்தில் எழுதப்பட்ட கவிதைக்கு இரண்டாம் பரிசே கிடைத்தது. அதற்கே வானத்தில் மிதந்தேன், இந்தச் சமூகம் என்னையும் ஒரு கவிஞனாக அங்கீகரித்துவிட்டது என்று.

கல்லூரியில் எனது கவிதை வேட்கைக்கு வெறித்தனமாகத் தீனி போட்டார்கள். ‘கோவில்பட்டியில்  ஒரு கவிதைப்போட்டி. நீ போயிட்டு வா. தலைப்பு இதுதான் – சும்மா கிடைத்ததா சுதந்தரம்! காலேஜ் ஆபிஸ்ல சொல்லி பணம் வாங்கிக்கோ. ஆல் தி பெஸ்ட்’ – ஆர்வமாகக் கலந்துகொள்வேன். பல போட்டிகளுக்கு கவிதை எழுதி தபாலில் அனுப்ப வேண்டியதிருக்கும். செய்திருக்கிறேன். வாங்கிய பரிசுகள் வெகுசிலவே. இருந்தாலும் வெளிஉலக, மேடை அனுபவங்களைச் சம்பாதித்தேன். அந்தச் சமயங்களில் என்னை நம்பி ஊக்கப்படுத்திய பேராசிரியர் (அமரர்) நம்பி நாராயணனுக்கு என் வணக்கங்கள்.

பிஎஸ்சி கெமிஸ்ட்டிரி, எம்எஸ்சி தகவல்தொழில்நுட்பம் – ஐந்து வருட கல்லூரி காலம். வகுப்பை  கட் அடிக்க மாட்டேன். ஆனால் என் நோட்டுகளில் கவிதை என்ற பெயரில் ஏதாவது நிரம்பிக் கொண்டே இருக்கும். என் கவிதைகளை ரசிக்க, ஊக்கப்படுத்தும் விதத்தில் நண்பர்களும் கிடைத்தார்கள். இடைப்பட்ட ஒரு வருடத்தில் எனது வ.உ.சி கல்லூரியின் பொன்விழா வந்தது. பல்வேறு விஷயங்களைக் கொண்டு கண்காட்சி ஏற்பாடு செய்திருந்தார்கள். எனது கவிதைகளைக் காட்சிப்படுத்த ஒரு வாய்ப்பு கிடைத்தது. தெர்மாகோல், ஸ்கெட்ச், சார்ட், க்ரையான் சகிதமாக நண்பர்கள் என் கவிதைகளுக்காக பல இரவுகள் உழைத்தார்கள்.

காட்சிப்படுத்தினேன். கருத்துகளை எழுத நான் வைத்திருந்த நோட்புக் நிரம்பியது. பலர் நேரடியாகவே பாராட்டினார்கள். பிறவியிலேயே கண் தெரியாத ஒரு மனிதனின் மன உணர்வுகள் எப்படி இருக்கும் என்றொரு கவிதை எழுதியிருந்தேன். அப்படிப்பட்ட ஒரு சகோதரி அங்கு வந்தார்கள். நானே அந்தக் கவிதையை வாசித்துக் காண்பித்தேன். ‘என்னோட உணர்வுகளை எப்படி நீங்க சரியாப் புரிஞ்சுக்கீட்டிங்க?’ – அந்தச் சகோதரி நெகிழ்வுடன் கேட்டார்கள். இதுவரை நான் பெற்றதிலேயே மிகப்பெரிய பாராட்டு அது. ‘நீங்க கவிதை புக் போட்டிருக்கீங்களா?’ – நிறைய விசாரிப்புகள். இன்னும் ஒரே வருடத்தில் சொந்தக் காசிலேயே (அதாவது அப்பா காசில்)  கவிதைப் புத்தகம் போட வேண்டுமென்ற ‘வேட்கை’ வேர்பிடித்து வளர்ந்தது.

விகடன் மாணவ நிருபராக ஒரு வருடம் பணியாற்றிய தெம்பு வேறு. எம்எஸ்சி முடித்துவிட்டு ( 2002 செப்டெம்பர்) நண்பர்களோடு தூத்துக்குடியில் வணிக நிறுவனங்களுக்கான சிறு சிறு ப்ரா ஜெக்ட்டுகள் மட்டும் செய்துகொண்டு இருந்தேன். அப்போதுதான் அந்த ஆபரேஷனை ஆரம்பித்தோம்.

எழுதுவதை ஊக்கப்படுத்துவதில் எனது அப்பாவுக்கு நிகர் வேறு யாரும் கிடையாது. பைனான்ஸ்  பண்ண ‘ரெட்டை ரெடி’ என்றார்கள். யாருக்கு கிடைக்கும் இப்படி ஓர் அப்பா? கவிதை எழுதுவதற்காக நான் பயன்படுத்திய பெயர் ‘முகில்’ – என் அன்புச் சகோதரி அகிலா வைத்த பெயர். நண்பர்கள் எனது  கவிதைகளை எல்லாம் படித்து ‘தரமான’ கவிதைகளை தேர்ந்தெடுத்தார்கள். பார்த்திபனின் கிறுக்கல்கள் வடிவமைப்பு எங்களை மிகவும் பாதித்திருந்தது. அதே மாதிரி ஒரு புத்தகம் போட எவ்வளவு செலவாகும் என்று விசாரித்துவிட்டு, சோடா குடித்தோம். இருந்தும் மயக்கம் தெளியவில்லை.

கவிதைகள் அடங்கிய டம்மி பிரதிகள் சிலவற்றை சில விஜபிக்களுக்கு அனுப்பினேன். அணிந்துரை இல்லாவிடில் அது என்ன கவிதைப் புத்தகம்? தாமரை மணாளன், தென்கச்சி சுவாமிநாதன், பா.  விஜய் – அணிந்துரை தந்தார்கள்.

ஏதாவது வித்தியாசமாகச் செய்தால்தான் நம் புத்தகத்துக்கென்று ஓர் அடையாளம் கிடைக்கும்.  என்ன செய்யலாம்? நண்பர்கள் மீட்டிங். என் வீட்டு மாடியில்தான் பொதுவாக நிகழும். காரணம்  என் வீட்டில் மட்டுமே அப்போது சிஸ்டம் உண்டு, டயல்-அப் நெட் இணைப்புடன். புத்தகத்துக்கான தலைப்பு முடிவானது. ஆ…

சரி பதிப்பகத்தின் பெயர்? நான், அருள், கோமதி நாயகம், ராஜவேல், பேச்சியப்பன், ஆனந்த்,  சொக்கலிங்கம், முருகேஷ் – ஆகியோர் அடங்கிய நண்பர்கள் குழுவுக்கு நாங்கள் வைத்திருந்த  பெயர் Beats. அதுவே பதிப்பகத்தின் பெயரானது – துடிப்புகள் பதிப்பகம். அலுவலகம், தொலைபேசி எண் எல்லாம் எனது வீட்டினுடையதே.

‘நாம டூ-இன்-ஒன் புக் போடுவோம். ஒண்ணுதான், ஆனா ரெண்டு. ஆ… உணர்வுகளைக் காதலி ப்பவர்களுக்குன்னு ஒரு அட்டையில் இருக்கணும். அதுக்குள்ள போனா எல்லாம் சமூக, பொது  கவிதைகள். அதே புக்கை அப்படியே புரட்டி, 180 டிகிரி சுத்துனா இன்னொரு முகப்பு அட்டை. ஆ…  காதலை உணர்ந்தவர்களுக்கு அங்க இன்னொரு தலைப்பு. அந்த அட்டை வழியா உள்ளபோனா எல்லாமே காதல் கவிதைகள். ரெண்டு பகுதிகளுமே சந்திக்கிற நடுப்பக்கத்துல ஏதாவது வித்தியாசமா செஞ்சுக்கலாம்.’

ஆ... புத்தகம்
ஆ... புத்தகம்

அடுத்தது கவிதைகளுக்கான போட்டோ. எனது எம்எஸ்சி அன்புத்தோழி குமுதா (இப்போது சென்னை  ஹலோ எஃப்எம்மில் குல்ஃபி விற்றுக் கொண்டிருக்கிறாள்) புகைப்பட நிபுணி. அவளை அழைத்துக் கொண்டு எனது ஊர் சுற்றுவட்டாரங்களில் திரிந்தேன். சில புகைப்படங்கள் எடுத்தோம். ‘புத்தகத்தை நம்மளே டிசைன் பண்ணிட்டா செலவு மிச்சம்.’ நண்பன் அருள் ஐடியா கொடுத்தான்.  யாரங்கே, ஃபோட்டோஷாப்பையும் பேஜ்மேக்கரையும் இன்ஸ்டால் செய்யுங்கள். ‘ஐடியா கொடுத்த அன்பு நண்பா, உனக்கு தமிழ் டைப்பிங் தெரியுமல்லவா. வா, வந்து அடி!’

தன் மௌஸே தனக்குதவி – நான் ஃபோட்டாஷாப்புக்குள் புகுந்து மௌஸைத் தேய்க்க ஆரம்பித்தேன். சில நாள்களில் பேஜ் டிசைனராக எனக்கு நானே பதவி உயர்வு கொடுத்துக் கொண்டேன். வேறுவழியில்லை. ஆ புத்தகத்திற்கான அட்டை முதற்கொண்டு நான்தான் டிசைன் செய்தேன் என்பதெல்லாம் சரித்திரம். (குறிப்பு : அப்போது நான் RGB, CMYK, Resolution இந்த  மூன்று அதிஅத்தியாவசியமான வார்த்தைகளைக் கேள்விப்பட்டதுகூட கிடையாது.)

எழுத்தாளர் சுஜாதாவுக்கு ஒரு மெயில் அனுப்பினேன். ‘அய்யா நான் ஒரு கவிதைப் புத்தகம் போடவிருக்கிறேன். அதன் தலைப்பு ஆ. நீங்களும் அப்படி ஒரு புத்தகம் போட்டிருக்கிறீர்கள். ஆட்சேபணை ஏதுமுண்டா?’ பதில் வந்தது. ‘நல்லது. தாராளமாகப் போட்டுக் கொள்ளவும். தயவு செய்து எனக்கு காப்பி அனுப்ப வேண்டாம்.’

அருகிலிருந்த சிவகாசி, கோவில்பட்டி, திருநெல்வேலி போன்ற ஊர்களுக்குச் சென்று ஒவ்வொரு பிரஸ் ஆக ஏறி இறங்கினோம். எஸ்டிமேட் வாங்கி வந்தேன். இறுதியாக கோவில்பட்டியில் ‘ஒரிஜினல் பிரிண்டிங் பிரஸ்’ஸைத் தேர்ந்தெடுத்தோம். ‘தம்பி, எத்தனை புஸ்தகம்? எத்தனை பக்கம்?  பேப்பர் என்ன வேணும்? அட்டை ஆர்ட் போர்டா, எத்தனை ஜிஎஸ்எம்? சிவகாசியில அடிச்சிடலாம். உள்ள மல்டி கலர் வரணும்னா ஒரு பாரத்துக்கு இவ்வளவு வரும். பைண்டிங் இங்கயே  செஞ்சுடலாம்.’ எல்லாம் கேட்டுத் தெளிவாகிவிட்டு ஒரு எஸ்டிமேட் போட்டுக் கொடுத்தார் முருகேசன் அண்ணாச்சி. ஒரு புத்தகம் பற்றிய அடிப்படை விஷயங்கள் பிடிபட ஆரம்பித்தன.

சுமார் ஒரு வாரகாலம். கிட்டத்தட்ட தினமும். நானும் நண்பன் சொக்கலிங்கமும் கோவில்பட்டிக்கு ஒரிஜினலுக்கு அலைந்தோம். கையில் கவிதைகள், பேஜ் டிசைன்கள், அட்டை எல்லாம் அடங்கிய பிளாப்பிகள், சிடிக்கள். எங்களது வித்தியாசமான (அல்லது புரிந்துகொள்ளமுடியாத)  முயற்சியைக் கண்டு மெய்சிலிர்த்து (அல்லது தலைசுற்றி) அந்த பிரஸ்காரர்கள் ஒரு சிஸ்டத்தையே எங்களிடம் கொடுத்துவிட்டார்கள். நானும் சொக்கலிங்கமும் ஃபாண்ட் பிரச்னை முதற்கொண்டு எல்லாவற்றையும் தீர்த்து புத்தகத்தை ஃபைனல் செய்தோம். ஆயிரம் புத்தகங்கள். அச்சாக  ஆரம்பித்தன.

வெறிகொண்டு முதல் புத்தகத்தைக் கொண்டு வருபவனுக்கு வெளியீட்டு விழா நடத்த ஆர்வமிருக்காதா? அப்பாவின் விருப்பமும் அதுவே. பிறகென்ன, நடத்திவிட்டால் போச்சு. வ.உ.சி. கல்லூரி அதற்கும் இடமளித்தது. ஹாலை இலவசமாகக் கொடுத்தது. யாரெல்லாம் சிறப்பு விருந்தினர்கள்? பலரை யோசித்து, பலரிடம் கேட்டு, சிலர் முடிவானார்கள். தாமரை மணாளன், தமயந்தி, ஏபிசிவி சண்முகம், குமரிக்கண்ணன், மகாதேவன். இவர்கள் எல்லோருமே புத்தகத்தைப் பெற்றுக் கொள்பவர்கள். சரி வெளியிடுபவர்?

அழைப்பிதழ்
அழைப்பிதழ்

அதில்தான் ஒரு சஸ்பென்ஸை வைத்தோம். விழாவுக்கான அழைப்பிதழ் முதற்கொண்டு எதிலுமே அவரது பெயரைக் குறிப்பிடவில்லை. கவிதைப் பிரபஞ்சத்தின் பிதாமகன் என்று மட்டும் ஒரு குறிப்பு கொடுத்தோம். விழாவுக்கான விருந்தினர்களிடம்கூட சொல்லவில்லை. எனது வீட்டில் அப்பா,  அம்மா, உறவினர்களிடம்கூட சொல்லவில்லை. எனது நண்பர் பட்டாளம் மட்டுமே அறிந்த ரகசியம் அது. சுற்றுவட்டாரத்தில் பல இடங்களில் அழைப்பிதழைத் தாராளமாகப் பட்டுவாடா செய்தோம். (அழைப்பிதழையும்கூட விட்டுவைக்கவில்லை. அதிலும் வித்தியாசம். நான், அழைப்பிதைப் பெற்றுக் கொள்பவருடன் பேசுவதுபோன்ற உரையாடலிலேயே வடிவமைத்தேன்.)

விழா நாள் (2003, பிப்ரவரி 2, ஞாயிறு). மேடையின் பின்புறம் மிகப்பெரிய துணி. அதில் எல்லா  உயிர் எழுத்துகளும் சிதறிக் கிடக்க, நடுவில் பிரமாண்டமாக ஆ. கீழே ஒரு பாரதியார் படம்.  வருபவர்களுக்கு நினைவுப்பரிசாகக் கொடுக்க, ‘ஆ’ என்ற எழுத்து பொறிக்கப்பட்ட ஒரு கண்ணாடிப்பெட்டி. காலையில் செம மழை. ‘ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ…’ என்று நான் வீறுகொண்டு பாடிவிடுவேனோ என்ற பயத்திலேயே மழை சற்றுநேரத்தில் நின்றது.

விழாவில் மைக்கேல்
விழாவில் மைக்கேல்

எதிர்பார்த்ததைவிட அரங்கில் கூட்டம். எல்லாம் வித்தியாசமான அழைப்பிதழ் செய்த வேலை.  ஒவ்வொருவராகப் பேசினார்கள். யார் புத்தகத்தை வெளியிடப்போகிறார்கள் என்று எல்லோருக்குள்ளும் எதிர்பார்ப்பு. எல்லாம் சரியாக நடக்க வேண்டுமே என்று எனக்குள் படபடப்பு. விஐபியை எங்கே ஒளித்து வைத்திருக்கிறார்கள் என்று தேடக்கூட செய்தார்கள். புத்தக வெளியீட்டு நேரம். தொகுப்பாளர் சங்கரேஸ்வரன் என்ற நண்பர் புத்தகத்தை  வெளியிடப்போகும் நபர் பற்றி சூடுபறக்கப் பேசி ஆவலைத் தூண்டினார். அவருக்கும்கூட அது யாரென்று தெரியாது.

அப்போது அரங்கத்தில் ஒரு வாசல் வழியே பிரசன்னமானார் மகாகவி. ஆரவாரம். கைதட்டல்.  வந்து ‘ஆ’வை எடுத்து வெளியிட்டார். ஆனந்தக் கண்ணீர் நிமிடங்கள். …தன் மகனை சான்றோன்  என.. அதுவும்தான்.

மகாகவி புத்தகத்தை எடுத்து மேடையிலுள்ள அனைவருக்கும் கொடுக்க வேண்டும். ஆனால் மேடையேறிய பாரதியாருக்கு அவ்வளவு கூட்டத்தைப் பார்த்ததும் அந்தக் கணத்திலிருந்தே கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. ‘டேய் கோமதிநாயகம், உன் கை நடுங்குதுடா. மானத்தை வாங்கதடா!’ – அவனது காதில் கிசுகிசுத்தேன். பிரயோசனமில்லை. பாரதிக்குரிய கம்பீரத்தை எல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு மெள்ள கீழிறங்கிப் போனான் நண்பன் கோமதி நாயகம்.

(இன்று டிசம்பர் 11. மகாகவியே, உமது ஜனன நாளில் கோமதி நாயகத்தை மன்னித்துவிடவும். இப்போது அவன் புள்ளகுட்டிக்காரன். வெளீயிட்டுவிழாவில் பாரதியைக் காண இங்கே க்ளிக்கவும்.)