a film by…

எப்போதுமே குரங்கு சேட்டை செய்து கொண்டிருக்கும் ஒரு பையன். யாருக்குமே அடங்காதவன். அவனை யாருக்குமே பிடிக்காது. திடீரென்று அந்தப் பையன் சேட்டை எதுவும் செய்யாமல் அமைதியாக இருக்கிறான். ஒரே ஒரு நாள் மட்டும். அன்று அந்தப் பையனை பார்க்கும் எல்லோருமே, ‘அவன் நல்லவன்தான். தினமும் இப்படியே இருந்தா நல்லாயிருக்கும்’ என்று நினைக்கிறார்கள்.

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ சிம்புவை இப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. இந்தப் படத்தில் சிம்பு வழக்கமான அலட்டல்கள் இல்லாமல் அமைதியாக வந்து போவதையே பெரிதாகத் தெரிகிறது. ‘அபாரமான நடிப்பு, அமர்க்களமான ஃபெர்பார்மென்ஸ்’ என்று சொல்வதற்கெல்லாம் சிம்பு இன்னும் நிறைய தூரம் போக வேண்டியதிருக்கிறது.

இந்தப் படத்தில் நடித்ததினால் பங்குபெற்றதால் த்ரிஷாவுக்கு ப்ளஸ்ஸே தவிர, த்ரிஷாவினால் இந்தப் படத்துக்கு எந்தவிதமான ப்ளஸ்ஸும் இருப்பதாகத் தெரியவில்லை. சிம்புவைவிட த்ரிஷா ஒரு வயதல்ல, பல வயது மூத்தவர்போலத் தெரிகிறார். க்ளோஸ்-அப் காட்சிகளைத் தவிர்த்திருக்க முடியாது, த்ரிஷாவையே தவிர்த்திருக்கலாம்.

ஈரம் படம் நான் பார்க்கவில்லை. அதிலேயே மனோஜ் பரமஹம்ஸாவைப் பலரும் பாராட்டினார்கள். வி.தா.வ.-ல் பல காட்சிகள் அழகாக இருந்தன. ‘ஒரு காட்சியில் கேமரா இருப்பதே தெரியக்கூடாது. அதுதான் கேமரா மேனின் வெற்றி’ என்று சொன்னார் பாரா. அந்த அளவுக்கு நுட்பமாகப் பார்க்க, இப்போதுதான் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

ஏ.ஆர். ரஹ்மான் – பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது (கேட்க). பாடல்களுக்கான இசையில் பெரும்பகுதியை ரீரெகார்டிங்கிலும் உபயோகித்திருக்கிறார். பின்னணி இசையைச் சிலாகித்துச் சொல்லுமளவுக்கு எதுவும் தோன்றவில்லை.

சில பளிச் காதல் வசனங்களில் கௌதம் என்ற கௌதம் மேனன் என்ற கௌதம் வாசுதேவ் மேனன் தெரிகிறார். வழக்கமான ஆங்கில கெட்ட வார்த்தை வசனங்களிலும் சலிப்பு தருகிறார். வேறு வேறு லொகேஷன்களில் எடுத்தாலும் கௌதமின் பாடல்கள் எல்லாம் ஒரே போலத்தான் இருக்கின்றன. ஹீரோவுக்குப் பின்னால் நான்கு வெளிநாட்டுக்காரர்கள் ஆடும் டெம்ப்ளேட் இல்லாமல் கௌதமால் பாடல் எடுக்க முடியாதுபோல. பாடல் காட்சிகளில் மட்டுமல்ல, பல இடங்களில் கௌதமின் டெம்ப்ளேட்கள் பெரும் அலுப்பைத் தருகின்றன.

காதலை உணர்ந்தவர்களுக்கு படம் இழுவையாகத் தெரியாது. ரசிப்பார்கள் (அதுவும் நகரங்களில் மட்டும்). மற்றபடி, a film by karthick என்று க்ளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியில் திரையில் வரும்போது ரசிகர்கள் எழுந்து செல்வதைத் தவிர்க்க இயலாது. எனவே அந்த இடத்தில் ‘படம் இன்னும் முடியவில்லை. இனிமேல்தான் க்ளைமாக்ஸ்’ என்றொரு டைட்டில் கார்டையும் போடலாம். தப்பில்லை.

பாஸிட்டிவ் க்ளைமாக்ஸ், நெகடிவ் க்ளைமாக்ஸ் என்று வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு முடிவுகள் வருவதாகக் கேள்விப்பட்டேன். எப்படி இருந்தால் என்ன, இது எல்லா சென்டரிலும் ஓடப்போவதில்லை. நீண்ட நாள்கள் கழித்து வந்துள்ள முழு நீ….ள காதல் படம் என்ற விதத்தில் விண்ணைத் தாண்டி வருவாயா கவனம் பெறுகிறது.

***

என் தோழி ஒருத்திக்கு அவ்வப்போது உடல்நிலை சரியில்லாமல் போய்விடும். முந்தைய தினம் என்ன சாப்பிட்டாள் என விசாரிப்பேன். அப்போதெல்லாம் அவள் சிக்கனுக்குப் பிரசித்தி பெற்ற அந்த மூன்றெழுத்து கடைக்குச் சென்று வந்ததை அறிந்தேன்.

‘இனிமே நீ அங்க போய் சிக்கன் சாப்பிடக்கூடாது’ என்று சொல்லி வைத்திருந்தேன். வி.தா.வருவாயாவில் அந்த மூன்றெழுத்து சிக்கன் கடையில் ஒரு காட்சி வருகிறது.

நான் என் தோழியிடம் சொல்லிவிட்டேன். ‘நீ இந்தப் படத்தைப் பார்க்கக்கூடாது. உனக்கு உடம்புக்கு ஆகாது.’

***

சமீபத்தில் நண்பர்களோடு ஒரு பார்ட்டிக்குச் சென்றேன். பெரிய ஹோட்டல்தான். பறப்பன நடப்பன வகைகளோடு தயிர்சாதமும் இருந்தது.

எல்லோரும் சாப்பிட்டு முடிக்கும் நேரத்தில் நண்பர் ஒருவர் ரகசியம் ஒன்று சொல்வதாகச் சொன்னார். ‘இப்போது சொல்ல முடியாது. நாளை சொல்கிறேன்’ என்று பீடிகை வேறு போட்டார்.

மறுநாள் நண்பரை விசாரித்தபோது அந்த ரகசியத்தை வெளிப்படுத்தினார். ‘என் தட்டுல நான் போட்டுக்கறப்போ அந்த தயிர் சாதத்துல ஒரு கரப்பான் பூச்சி இருந்தது.’

ஜீரணிக்க முடியவில்லை. ஸ்டார் அந்தஸ்துள்ள ஹோட்டலின் தரத்தை நினைக்கும்போது என் மேனியெங்கும் கரப்பான் பூச்சியின் வருடல். ‘அங்கு வைத்திருந்த க்ரேவியில கோழி கிடந்துச்சு, பிரியாணில ஆடே கிடந்துச்சு. தயிர் சாதத்துல கரப்பான் பூச்சியெல்லாம் ஒரு மேட்டரா?’ என்று வலுக்கட்டாயமாக சமாதானப்படுத்திக் கொண்டேன்.

***

விண்ணைத் தாண்டி வருவாயாவுக்கும், மூன்றெழுத்து சிக்கன் ஹோட்டலுக்கும், தயிர்சாத கரப்பான் பூச்சிக்கும் எந்தவித பந்தமுமில்லை.