அனகா Vs அல்கா

மலர்களே மலர்களே பாடலை வேறு யார் பாடினாலும் கேட்கப் பிடிக்கவில்லை. எல்லாம் அனகா குரல் கொடுத்த மயக்கம். நடந்து கொண்டிருக்கும் விஜய்டீவி சூப்பர் சிங்கர் ஜூனியரில் பலராலும் அதிகம் கவனிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அல்கா இந்த வாரம் ‘பூ’ சம்பந்தமான சுற்றில் பாடிய பாடல் மலர்களே மலர்களே!

பெருத்த ஏமாற்றம். குழந்தைகளுக்குள் ஒப்பீடு கூடாதுதான். இருந்தாலும் அனகாவின் பக்கம்கூட அல்காவால் வர இயலவில்லை. அனகா பாடியபோது பின்னணி இசை அபாரமாக இருந்ததும் பெரிய ப்ளஸ். விஜய் டீவி இசை பெரும்பாலும் சொதப்பலாகவே தெரிகிறது.

ஏழு வயது முதலே புகழ் வெளிச்சம் பெற ஆரம்பித்த அல்காவிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறேன். குட்டி சூப்பர் ஸ்டார் ஸ்ரீகாந்த் தேர்ந்தெடுத்த பாடல் – ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ – சொதப்பல்.

இந்த வாரம் ஸ்ரீநிஷா என்ற குட்டிப் பெண் பாடியதை ரசித்தேன். மற்றபடி இந்த நிகழ்ச்சியில் வாரா வாரம் சுவாரசியம் குறைந்து வருவதாகவே தோன்றுகிறது.

அல்கா – குட்டி சித்ரா!

நடந்து கொண்டிருக்கும் விஜய் டீவி சூப்பர் சிங்கர் ஜூனியர் 2 – தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகள் பாடுவதால் ரசிப்பதற்குரிய அம்சங்கள் நிறையவே இருக்கின்றன. பயம், வெட்கம் ஏதுமின்றி அசால்ட்டாக வந்து பாடிவிட்டுப் போகும் சிறுவர்களையும் சிறுமிகளையும் பார்க்கும்போது, ‘நாமெல்லாம் சிறுவயதில் எவ்வளவு தத்தியாக இருந்திருக்கிறோம்’ என்று நினைத்து ஏங்குவதை ஏனோ தடுக்க முடியவில்லை.

ஆனாலும் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு, ‘அந்தப் பொண்ணு எல்லாம் எப்படி தைரியமா பாடுது.. நீயும் இருக்கியே? எப்பப்பார்த்தாலும் கேம்ஸ் மட்டும்தானா? பாட்டுக் கத்துக்கச் சொன்னா கத்துக்கறியா?’ என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கொடுமைப்படுத்தாமல் இருந்தால் சரி.

இந்த ஸீஸனில் என்னைக் கவர்ந்த குழந்தைகள் மூவர். மூன்றாவது குழந்தை நித்யஸ்ரீ. தைரியமாகப் பாடும் குணமே இந்தக் குழந்தையின் பெரிய ப்ளஸ். குத்துப் பாட்டு ரகங்களுக்குப் பொருத்தமான கணீர்க் குரல். துறுதுறுவென ஆடிக் கொண்டே பாடுவது தனி அழகு. மேலும் சில சுற்றுகள் வரை நித்யஸ்ரீ தாக்குப் பிடிக்கும் என்பது என் கணிப்பு.

நித்யஸ்ரீயை ரசிக்க.

இரண்டாவது – ஒரு சிறுவன். ஸ்ரீகாந்த். இந்த ஸீஸனில் எல்லாருக்குமே செல்லம் இந்தச் சிறுவன்தான். போட்டியாளர்களிலேயே ஜூனியர். கடினமான பாடல்களையும் அசால்ட்டாகப் பாடும் ஸ்ரீகாந்தை சலிக்காமல் ரசித்துக் கொண்டே இருக்கலாம். அவன் பாடும்போது பிசிறுகள் தெரிந்தால்கூட அது கேட்பவர்களுக்கு உறுத்துவதில்லை. தங்கள் மகன் பாடும்போதும் சுட்டியாகப் பேசும்போது அந்தப் பெற்றோர்கள் பெருமிதத்தில் வெளிப்படுத்தும் முக பாவனைகள் அழகு. இந்தப் போட்டியில் இறுதிச் சுற்றுவரை மிகவும் ஜூனியரான ஸ்ரீகாந்த் வருவான் என்று சொல்ல முடியாது. ஆனால் வருங்காலத்தில் ஸ்ரீகாந்த் நிச்சயமாக ஒரு நட்சத்திரம்தான். (ஸ்ரீகாந்த் பாடிய பாடல் ஒன்று)

இந்த ஸீஸனில் நான் அதிகம் ரசிக்கும் பெண் குழந்தை அல்கா அஜீத். இன்னொரு அனகா என்றுதான் சொல்வேன். வாராவாரம் அல்கா எப்போது பாடுவாள் என்று ஆவலோடு காத்திருக்கிறேன். எனது மொபைலை இப்போது அல்கா பாடிய வீடியோ க்ளிப்பிங்ஸ்தான் ஆக்கிரமித்திருக்கின்றன. கண்டிப்பாக இறுதிச் சுற்றுவரை வரக்கூடிய திறமை கொண்ட பெண். மேற்கொண்டு நான் சொல்வதைவிட, அல்கா பாடுவதை நீங்களே கேளுங்கள்.

பாடல் 1

பாடல் 2

மேலும் இரண்டு வீடியோ – டௌன்லோட் செய்ய.

நிகழ்ச்சியின் நடுவர்கள் மனோ, சித்ரா, மால்குடி சுபா. குழந்தைகளை முதலில் பாராட்டிவிட்டு, அவர்களைக் காயப்படுத்தாதபடி விமரிசனங்களை முன் வைக்கிறார்கள். குறைகள் சொல்லுவதைவிட, குழந்தைகள் தங்களை மேம்படுத்திக் கொள்வதற்காக யோசனைகள் சொல்கிறார்கள். குறிப்பாக மனோ, நிகழ்ச்சியைக் கலகலப்பாக கொண்டு செல்கிறார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இதுவரை வந்தவர்களிலேயே சூப்பர் ஜட்ஜ் மனோதான்.