அப்பன் மவனே! அருமை யுவனே!

இன்னும் கொஞ்ச நாள்களில் தில் படத்தில் ‘உன் சமையலறையில்’ பாடல்போல இந்தப் பாடலும்  மூலை, முடுக்களில் எல்லாம் நீக்கமற நிறைந்து அருள்பாலிக்கப் போகிறது. எந்தப் பாடல்? அது  கட்டுரையின் கடைசியில்.

சமீப வாரங்களில் ஏகப்பட்ட படங்களுக்கான பாடல்கள் வெளியாகிவிட்டன. உட்கார்ந்து  பொறுமையாக ரசித்து கேட்பதற்குத்தான் நேரம் இல்லை. கேட்ட, கேட்டுக்கொண்டிருக்கிற, கேட்கின்ற தரத்தில் இருக்கிற சில புதிய பாடல்கள் பற்றிய என் கருத்துகள்.

யுவனின் ஆதிக்கம் தொடருகிறது. ஆனால் வந்ததில் பாதிக்கும் மேற்பட்ட பாடல்கள் திரும்பக் கேட்கத் தோன்றவில்லை. முதலில் வாமனன். ஏதோ செய்கிறாய் (ஜாவித் அலி, சௌம்யா ராவ்), யாரைக் கேட்பது எங்கே போவது (விஜய் யேசுதாஸ்), ஒரு தேவதை (ரதோட்) – இந்த மூன்றும்  மெலடி மெகந்தி. (மெல்லிசை மக்ரூன், மெலடி ரசகுல்லா, தாலாட்டும் தக்காளி ரசம் – இப்படி  ஏதாவது போட்டுக்கொள்ளலாம் – இது விகடன் ஸ்டைல்!)

மூன்றாவது மட்டும் (ஒரு தேவதை) நிலைத்து நிற்கும் விதத்தில் இருக்கிறது. மற்றவை எல்லாம்  படம் ஹிட்டடித்தால் ஹிட் ஆகலாம்.

அடுத்தது முத்திரை. பதிக்கவில்லை யுவன். ஐந்து பாடல்களில் என்னைக் கவர்ந்தது ஓம் சாந்தி ஓம்  பாடல் மட்டுமே. அதுகூட நேகா பேஸினின் காந்தக் குரலுக்காக மட்டும். தந்தை ஷ்ரேயா கோஷலுக்கு ஆற்றும் உதவிபோல், மகன் நேகாவுக்கு ஆற்றுகிறார். தொடர்ந்து யுவனின் படங்களில் நேகாவைக் கேட்க முடிகிறது. மற்ற நான்கு பாடல்களும் பத்தோடு பதினான்கு. சர்வம்கூட யுவனால்  மியூஸிகல் ஹிட் ஆகவில்லை. (இசையின்) அப்பன் மவனே! அருமை யுவனே! ஆயிரத்தில் ஒருவனின்கூட நீ இல்லை. அடுத்த ஹிட் எப்போ ராசா?

ஓவர் டூ அப்பன்! வால்மீகி. இளையராஜா. பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம். அச்சடிச்ச  காசை பாடலில் ராஜா என் கண் முன்வந்து டப்பாங்குத்து ஆடுவதுபோல உணர்ந்தேன். என்னடா  பாண்டி – எது மாதிரியும் இல்லாத புதுமாதிரி. மற்ற நான்கு பாடல்களில் மூன்று வழக்கமான  இளையராஜா ரகம். சிலாகித்துச் சொல்வதற்கில்லை. ஆனால் இந்த வருடத்தின் சுகமான பாடலாக  ‘தென்றலும் மாறுது’ பாடலைச் சொல்லத் தோன்றுகிறது. பாடியிருப்பது வேறு யார், ஷ்ரேயா கோஷல்தான். பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை சற்றே அதிகமாக்கியிருக்கிறது என்று  சொல்லலாம்.

இந்த ஆண்டின் சிறந்த துள்ளலான பாடல்கள் எல்லாம் கந்தசாமிக்குள் அடங்கிவிட்டது. உபயம் தேவிஸ்ரீபிரசாத். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். பொதுவாக எனக்கு மெலடி ரகங்களில்தான் விருப்பம் அதிகம். ஆனால் கந்தசாமியில் அக்மார்க் மெலடி என்று எதுவும் கிடையாது. சோகப்பாட லும் கிடையாது. ஆறு பாடல்களுமே ஆட்டம் போட வைக்கக்கூடியவைதான். என் பேரு  மீனாகுமாரியில் மாலதியின் ஹைடெசிபல் குரலும் ரசிக்க வைக்கிறது. (நான் மாலதி  ரகப் பாடல்களை விரும்பியதில்லை.) எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி… சுசித்ராவும் விக்ரமும் ஜுகல்பந்தி நடத்தியிருக்கிறார்கள். பாடல் வரிகள் புதுசாக இருக்கின்றன.

ஹிட்லர் பேத்தியே, ஹிட்லர் பேத்தியே, காதல் ஒன்றும் யூதன் இல்லை, கொல்லாதே!
லிங்கன் பேரனே, லிங்கன் பேரனே,
தத்துவங்கள் பேசிப் பேசிக் கொல்லாதே!
…கடவுள் இல்லை சொன்னது அந்த ராமசாமி
காதல் இல்லைன்னு சொல்றது இந்த கந்தசாமி
– இப்படி பளிச் வரிகள் நிறைய. கவிஞர் விவேகாவுக்கு கந்தசாமி ஒரு லிஃப்ட். ஆனால் எல்லாப் பாடல்களுமே தாற்காலிக ஹிட் ஆகும். நீடித்த ஆயுளுக்கு உத்தரவாதம் இல்லை.

நாடோடிகள். நிறைய எதிர்பார்த்தேன். சித்திரம் பேசுதடி சுந்தர் சி பாபு இசை. சங்கர் மகாதேவனின்  இசையில் சம்போ சிவ சம்போ (நான் கடவுள் ஓம் பாடல்போல) கவனம் ஈர்க்கிறது. உலகில் எந்தக்  காதல் உடனே ஜெயித்தது – வரிகளுக்காக ரசிக்கலாம். வாலி என்று நினைக்கிறேன். மற்ற எதுவும்  சட்டெனக் கவரவில்லை. டிரைலர் மிரட்டுகிறது. படத்தோடு சேர்ந்து பார்த்தபின்பே சொல்ல  முடியும்போல.

கார்த்திக் ராஜா ஈஸ் பேக் – என்று சொல்லுமளவுக்கு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். கண்ணில் தாகம் – பாடகி சௌம்யாவின் குரலில் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகிறது.

மோதி விளையாடு – ஸாரி கலோனியல் கஸின்ஸ். சொல்வதற்கு ஒன்றுமில்லை. விண்ணைத்  தாண்டி வருவாயா பாடல்கள் என்று இரண்டு வெளிவந்துள்ளன. எந்தன் நெஞ்சில் ஒரு சுகம் –  என்ற பாடல் அழகு. இன்னொன்று மனத்தில் நிற்கவில்லை. ஆனால் ஏ.ஆர். ரஹ்மானை இரண்டு  பாடல்களிலுமே என்னால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. பொக்கிஷம் – சபேஷ் முரளியின் இசையில் ஏகப்பட்ட மெலடி பாடல்கள். பச்சக்கென்று எதுவும் ஒட்டவில்லை என்பதே உண்மை.

ஆயிரத்தில் ஒருவன் – யுவனோடு கா விட்டு செல்வராகவன் ஜிவிபிரகாஷோடு கைகோர்த்துள்ள படம். எனக்கு முதன் முதலில் பாடல்களைக் கேட்கும்போது ஆர்வம் எல்லாம் இருக்கவில்லை, பயம்தான் இருந்தது. குசேலன் புகழ் ஜிவி, செல்வாவைக் கவிழ்த்துவிடக் கூடாதென்று. கதாநாயகி ஆண்ட்ரியா, இரண்டோ மூன்றோ பாடல்கள் பாடியுள்ளார். அவரது குரல் என்னை ஈர்க்கவில்லை. ஓ ஈசா என்ற பாடல் க்ளப் மிக்ஸ், கம்போஸர்ஸ் மிக்ஸ் என்று இருமுறை வருகிறது. எங்கள் ஊர் பெருமாள் கோயிலில் சாயங்கால வேளைகளில் அதைக் கேட்டிருக்கிறேன்.. வேங்கட ரமணா கோவிந்தா, ஸ்ரீநிவாசா கோவிந்தா… – அதுதானா இது?

தனுஷ் அவர் பொஞ்சாதி எல்லாம் சேர்ந்து ஒரு குடும்ப (மூட்) பாடல் பாடியுள்ளார்கள். சிறப்பில்லை. செலிபரேஷன்ஸ் ஆஃப் லைஃப், தி கிங் அரைவ்ஸ் என்று இரண்டு தீம் ம்யூஸிக்ஸ். இரண்டுமே புதுப்பேட்டை ‘வர்றியா’ முன் நிற்க முடியாது.

பாராட்டுவதற்கு ஒன்றுமே இல்லையா? இருக்கிறதே. பெம்மானே, தாய் தின்ற மண்ணே. இரண்டு பாடல்கள். முதலாவது பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் ஒப்பாரி. அடுத்தது விஜய் யேசுதாஸின் முதிர்ச்சியான குரலில் சோகப்பாடல். PB ஸ்ரீநிவாஸுக்கு செல்வாவுக்கு என்ன பாசமோ தெரியவில்லை. 7ஜியில் இது என்ன மாயம் – அசத்தல் போல, பெம்மானேவின் இறுதியில் தாத்தா, உருக்குகிறார்.

தாய் தின்ற மண்ணே – வைரமுத்துவின் வரிகளின் பலத்தால் நிற்கும். ஆனால் எங்கள் அலுவலக நக்கீரர் (பாராதான்) அந்தப் பாடலின் மூலத்தையும் பிடித்துவிட்டார். விரைவில் அதுகுறித்து தன் வலைத்தளத்திலோ டிவிட்டரிலோ எழுதுவார். மொத்தத்தில் ஆயிரத்தில் ஒருவன் பாடல்கள் – படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.

அங்காடித் தெருவுக்குள் நுழையலாம். அனைத்துப் பாடல்களும் ஒன்றுக்கு மேற்பட்ட முறை கேட்கலாம் என்ற தரத்தில் இருக்கின்றன. கதைகளைப் பேசும் – பாடல் நீண்ட ஆயுள் கொண்ட மெலடி. உன் பேரைச் சொல்லும் – ஷ்ரேயா கோஷல், ஹரிசரண், நரேஷ் அய்யரின் கூட்டணியில்  அழகான மெல்லிசை (காதல் படத்தில் வரும் உனக்கென இருப்பேன் சாயல் தோன்றினாலும் ரசிக்கலாம்). கண்ணில் தெரியும் வானம் – வறுமைக்கோட்டில் வாழும் மக்களின் நிலையை சற்றே  வெஸ்டர்ன் கலந்து கொடுக்கிறது. தவிர்க்க முடியாத பாடல். கருங்காலி நாயே – என்றொரு பாடல் –  கல்லூரி படத்தில் வரும் பஸ் பாடல் போல வசனங்களால் நிறைந்தது. ஒருவேளை பாடல் காட்சிக ளோடு பார்த்தால் ரசிக்கலாம்போல. மேலுள்ள பாடல்களில் ஜி.வி. பிரகாஷ் முதல் வகுப்பில் பாஸ் ஆகிவிடுகிறார்.

அங்காடித் தெருவில் அடுத்த இரண்டு பாடல்கள் விஜய் ஆண்டனி உடையது. எங்கே போவேனோ  காதல் சோக ரகம். கேட்கலாம். அடுத்தது அவள் அப்படி ஒன்றும் அழகில்லை – பாடல்.  கட்டுரையின் முதல் வரி பில்ட்-அப் இந்தப் பாடலுக்காகத்தான். நாக்கமுக்க, ஆத்திச்சூடி என்று  தமிழ்த் திரை இசையில் தான் செய்த பாவங்களுக்கெல்லாம் விஜய் ஆண்டனி செய்த பிராயச்சித்தமே இந்தப் பாடல் என்று தோன்றுகிறது. ரஞ்சித், வினித் ஸ்ரீநிவாஸ், ஜானகி ஐயர் குரலில் இந்த வருடத்தின் டாப் 10 பாடல்களில் இந்தப் பாடலுக்கும் ஓர் இடம் நிச்சயமுண்டு. அழகிய வரிகளுக்குச்  சொந்தக்காரர் வேறு யார், நா. முத்துக்குமார்தான்.

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை – அங்காடித் தெருவின் முகவரி.

(ஒரு சந்தேகம் : கல்யாணி ராகத்துக்கும் பஞ்ச கல்யாணி ராகத்துக்கும் என்ன வித்தியாசம்?)

கண்ணம்மாபேட்டையில் ஔவையார்!

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சென்ற பாடல்  அது நாக்க முக்க. காதலில் விழுந்தேன் மூலம் நிச்சயமாக திரைத் துறையில் எழுந்துள்ளார் அவர்.

நல்லது. வாழ்த்துகள்.

ஏற்கெனவே அவர் அளித்த ‘டைலாமோ’ வகைப் பாடல்களுக்கு வரவேற்பும் கிடைத்துள்ளது.  அதனால் ஏற்பட்டுள்ள தெம்பில் கொஞ்சம் தவறாக யோசித்துவிட்டார் போலும். தான் எதைச்  செய்தாலும் ரசிக்க ரசிகர்கள் தயார் என்று.

சமீபத்தில் தநா07அல 4777 படத்தின் பாடல்கள் குறித்து சில பத்திரிகைகளில் படித்தேன். குறிப்பாக ஔவையார் அருளிய ஆத்திச்சூடியை இந்தத் தலைமுறைக்கும் சேர்க்கும்படியாக என் ஸ்டைலில்  கொடுத்துள்ளேன் என்று ஆண்டனி தெரிவித்திருந்தார்.

அந்தப் பாடலைக் கேட்டேன். மீண்டும் ஒருமுறை கேட்கத் தோன்றவில்லை. வருத்தம் மேலிட இந்தக் கட்டுரையை எழுத ஆரம்பித்துவிட்டேன்.

ஆத்திச்சூடி சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் இயற்றிய நீதி நூல். சிறுவர், சிறுமியர் சொல்லிச்  சொல்லி மனத்தில் பதியவைத்துக்கொள்ளும் வகையில் சின்னச் சின்ன வரிகளால் எளிமையாக  அமைக்கப்பட்டது. ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அன்று வழக்கத்திலிருந்த  திண்ணைப்பள்ளிகள் குருகுலங்கள் முதல், இன்று பின்பற்றப்படுகிற மெக்காலே கல்வி முறை வரை  பயன்பாட்டில் இருக்கிறது. குறிப்பாக தமிழ் கற்கும்போது தமிழின் உயிரெழுத்துக்களைச் சொல்லி த்தருகின்ற பொருட்டு அவ்வையின் ஆத்திச்சூடியைக் கொண்டு கற்பிப்பதை தமிழாசிரியர்கள்  கடைபிடித்து வருகின்றார்கள்.

ஆத்திச்சூடியின் அருமை, தொன்மை என்னவென்று விஜய் ஆண்டனிக்குத் தெரிந்திருக்கலாம்.

என்ன சூழ்நிலையோ அல்லது யார் ஆசைப்பட்டார்களோ அல்லது அவருக்கே தோன்றியதா  என்னவென்று தெரியவில்லை. நியூ ஏஜ் ஆத்திச்சூடி என்ற பெயரில் ஔவையாரைக் கண்ணம்மா பேட்டையில் நிறுத்திவிட்டார் விஜய் ஆண்டனி. அதுவும் ராப் குத்து என்ற பெயரில்  ஆத்திச்சூடியின் அகர வரிசையை கன்னாபின்னாவென்று கலைத்துப் போட்டுள்ளார்.

அதுவும் ஆத்திச்சூடி என்ற வார்த்தை இடையிடையே மலச்சிக்கலுடையவனின் குரலில் வெளிவருகிறது. பாடலில் தமிழ் வார்த்தைகளை விட ஆங்கிலம் அதிகம். தான் புரியாத வார்த்தைப்  பாடல்களை உருவாக்குவதன் காரணத்தையும் சொல்லியுள்ளார். ‘கேளு மவனே கேளு, நீ வாயை  மூடிட்டு கேளு.’

பாடலின் இடையே தமிழ்த்தாயின் (அவலக்)குரல் ஒலிக்கிறது. ‘அய்யய்யோ இது என்னயா பாட்டா  படிக்கிறாங்க.. கொலை வெறி புடிச்சு அலையறாங்க…’ – அந்தக் குரலுக்குச் சொல்லப்படும் பதில்  ‘போடி!’ சகிக்கவே முடியாதபடி பாடலில் இறுதியில் சாவுக்குத்து.

ஆக, ஒரு கலைஞராக தான் செய்வதை அந்தப் பாடலிலேயே நியாயப்படுத்திவிட்டார் விஜய் ஆண்டனி. ரசிகர்கள் இந்தப் பாடலையும் ரசிக்கலாம். இருந்தாலும் சராசரி திரை இசை ரசிகனாக  நான் விஜய் ஆண்டனிக்குச் சொல்ல விரும்புவது இதுதான்.

‘சார், சர்க்கரைப் பொங்கலுக்குத் தொட்டுக்கொள்ள கோழிக் குழம்பு சரிப்படாது.’

****

இந்தப்பாடலின் ரிஷிமூலம் நதிமூலம் குறித்து நிமல் அவர்கள் ஒரு கருத்தைப் பதிவு செய்துள்ளார்கள். அதன்படி இரண்டு சுட்டிகளை மட்டும் கொடுத்துள்ளேன்.

திரைப்படத்திலுள்ள ஆத்திச்சூடி பாடல் :

http://tinyurl.com/a9cu7s

நிமல் குறிப்பிடும் தினேஷ் கனகரத்தினம் பாடலைக் கேட்க – சுராங்கனி எம்பி3 பாடல்.