வாகை சூட வா – விமரிசனம்

செங்கலோடு செங்கலாக சூளையில் வெந்து கொண்டிருக்கும் பாவப்பட்ட மக்களின் அறிவுக் கண்களை, கல்விக் கண்களைத் திறக்கப் போராடும் ஓர் இளைஞனின் கதையை செஃபியா டோனில் செதுக்கியிருக்கும் அற்புதப் படைப்பு.

கிராமத்துக்குச் சென்று பாடம் சொல்லிக் கொடுப்பதன் மூலம் கிடைக்கும் சர்டிபிகேட்டை வைத்து ‘சர்க்கார்’ வேலை வாங்கிவிடலாம் என்ற நிர்பந்தத்தால் ‘கண்டெடுத்தான்காடு’ கிராமத்துக்குள் வாத்தியாராக நுழைகிறார் விமல். அந்த அப்பாவி மக்கள், சூளை முதலாளியிடம் (பொன்வண்ணன்) வாங்கிய கடனுக்காக அடிமைப்பட்டு, அவரைக் கடவுளாக நினைத்துக்கொண்டு காலமெல்லாம் பிள்ளை குட்டிகளோடு கல் அறுத்துக் கொண்டிருக்கும் அவலத்தைப் பார்க்கிறார். அவர்கள் ஏமாற்றப்படுவதை ப் பெரும்பாடுபட்டு உணர வைக்கிறார். குழந்தைகளைக் கல்வியின் பக்கம் இழுக்கிறார். அதனால் ஏற்படும் விளைவுகளும் திருப்பங்களும், அந்த மக்களின் வாழ்க்கையில் மலர்ச்சியை உருவாக்குவதுதான் கதை.

கண்டெடுத்தான்காடு சூளையின் சூட்டை, ஏசி தியேட்டரின் ரசிகனும் உணருமளவுக்கு இயல்பான திரைப்படத்தைத் தந்த இயக்குநர் சற்குணத்தை காலத்துக்கும் பாராட்டலாம். களவாணியில் கிடைத்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இரண்டாவது படத்தில் கமர்ஷியலாக இறங்காமல், குழந்தைத் தொழிலாளர்கள் மேல் அக்கறை கொண்டு படம் எடுத்ததற்காக அவருக்கு ஓராயிரம் பூங்கொத்து. பாரதிராஜாவைப் போல, கிராமத்துக் காவியங்களைப் படைக்க கோலிவுட்டுக்கு இன்னொரு இயக்குநர் கிடைத்துவிட்டார்.

‘விவரங்கெட்டவர்’ என வெள்ளந்தி மக்களிடமே பெயரெடுக்கும் அச்சுபிச்சு வாத்தியார் கதாபாத்திரத்தில் பிசகின்றிப் பொருந்துகிறார் விமல். தன்னிடம் குறும்பு செய்யும் சிறுவர்களிடம் மாட்டிக் கொண்டு விழிப்பது, ஆடு துரத்த பயந்து ஓடுவது, கதாநாயகியிடம் சாப்பாட்டுக்கு காசு கொடுத்துவிட்டு ஏமாந்து தவிப்பது என எந்தவித ஹூரோயிஸமும் இல்லாத கேரக்டர். உடல்மொழியில் ஜெமினியை நினைவுபடுத்துகிறார். டயலாக் டெலிவரியிலும் வெரைட்டி காட்டினால் அடுத்தடுத்த உயரங்களுக்குச் செல்லலாம்.

அழகைக் குறைக்கும் ஒப்பனையிலும் அழகழகான பாவனைகளால் அம்சமாகக் கண்களில் நிறைகிறார் அறிமுக நாயகி இனியா. சோறு கொடுக்காமல் விமலைச் சுற்ற விட்டு, பின் காதல்கொண்டு விமலையே சுற்றிச் சுற்றி வரும் கிராமத்துக் குறும்புப்பெண் பாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். விருதுகள் நிச்சயம்.

கதாநாயகனின் அப்பாவாக வெகுசில காட்சிகளில் வந்து போனாலும் பாக்யராஜுக்கு நினைவில் நிற்கும் பாத்திரம். குருவிக்காரர், டூநாலெட்டு, வைத்தியர் என சின்னச் சின்ன கேரக்டர்களிலும் அத்தனை இயல்பு. இவர்கள் எல்லோருக்கும் மேலே போட்டியே இன்றி முதலிடம் பெறுபவர்கள் படத்தில் வாழ்ந்துள்ள சிறுவர்கள்தாம்.

1966ன் கிராமம் அச்சு அசலாகத் திரையில் விரிகிறது. களிமண் காடு, பனையேறும் மீன், அழுக்கு மக்கள், அகண்ட ஆகாயம், மின்சாரமறியாத இரவு, பாடல் காட்சிகள் என கேமராமேன் ஓம்பிரகாஷ் ரசித்து ரசித்துப் படமாக்கியிருக்கிறார். ரேடியோ, ஷேவிங் கத்தி, பவுடர் டப்பா, பாத்திர பண்டங்கள், தூண்டில், டப்பா பஸ் என ஒவ்வொரு விஷயத்தையும் உருவாக்கிய கலை இயக்குநர் சீனுவுக்கு இது முதல் படமாம். அசத்தல்.

‘செங்கசூளைக்காரா…’ என்ற ஆரம்பப் பாடலிலேயே தனித்துத் தெரிகிறார் அறிமுக இசையமைப்பாளர் ஜிப்ரான். எந்தப் பாடலும் சோடைபோகவில்லை. ‘போறானே’, ‘சாரக்காத்து’ பாடல்கள் எல்லாம் ‘என்றும் இனியவை’ பட்டியலில் இடம்பிடிக்கின்றன.

ப்ளாக் அண்ட் ஒயிட் பழைய பாடல்களை சூழ்நிலைக்கேற்ப பயன்படுத்தியிருப்பது ரசனை. ‘நான் பேச நினைப்பதெல்லாம்…’  – காதல் தூதுப் பாடலாகியிருப்பது கவிதை. சுட்டுவைக்கப்பட்டிருக்கும் செங்கல்களுக்கிடையில் ஒரே ஒரு செங்கலில் மட்டும் ‘அ’ எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது சிலிர்ப்பு. எந்தக் காட்சிகளும் ‘க்ளிஷே’வாக இல்லாமலிருப்பது பெரிய ப்ளஸ். ஆனால் சற்றே வேகம் குறைவான திரைக்கதையின் போக்கு மட்டும் மைனஸ். குழந்தைகளின் படிப்பறிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘பளீர்’ காட்சிகள் இல்லையென்பது ஏமாற்றம்.

இருந்தாலும் ஆயிரம் கருப்பு வெள்ளை சினிமாக்கள் செய்யாத தமிழர்களின் கலாசாரப் பதிவை இந்த ஒற்றைப் படம் அருமையாகச் செய்திருக்கிறது. சென்ற நூற்றாண்டில் தமிழ் கிராமங்கள் இப்படித்தான் இருந்தன என்று காட்சிப்படுத்தும் செல்லுலாய்ட் ஆவணம் இனி இதுவே. கமர்ஷியலாக ‘வாகை சூடா விட்டாலும்’, நல்ல திரைப்படம் என்ற வகையில் ரசிகர்களின் மனத்தில் நீங்காத இடம் பிடித்துவிட்டது.