பாலா ஒரு யானை!

அவனப் பத்தி நான் பாடப் போறேன் – இவன பத்தி நான் பாடப் போறேன் – அவனும் சரியில்ல இவனுந்தான் சரியில்ல… யாரைத்தான் நான் இப்போ பாடப்போறேன்…

தெரிஞ்சேதான் யுவன், இப்படி ஒரு பாட்டை போட்டுக் குடுத்துருக்காருபோல! அதையும்புரிஞ்சுதான் பாலா, அந்தப் பாட்டை படத்துல உபயோகிக்கவும் இல்ல.

ஹி..ஹி...

படம் ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிசத்துல ‘டியா டியா டோலே’வென விஷால் குத்தாட்டம் போட ஆரம்பிச்சாரு. அடுத்து ஆர்யா தன் பங்குக்கு காதில் ஹெட்ஃபோனோடு.  அப்புறமா ஆர்யாவும் அவரு அம்மாவும் நாக்கை மடிச்சு ரொம்ப நேரத்துக்கு குத்தாட்டம் போட்டாங்க. ஆட ஆட நமக்குத்தான் மூச்சு வாங்குது. இந்தக் குத்தாட்டங்கள் க்ளைமாக்ஸ் வரை தொடர்ந்து வந்துகிட்டே இருக்குது (ஓ, இதுதான் கண்டினியூட்டியா!). இதனால் அறியப்படும் நீதியென்னென்னா, விளிம்புநிலை மனிதர்கள் தம் சோகத்தில், சந்தோஷத்தில், பசித்தால், தூக்கம் வந்தால், வயிறு கடமுடாவென்றால், வாந்தி வந்தால்கூட குத்தாட்டம் போடுவார்கள்.

அம்பிகா – பீடி வலிக்குறப்போ தியேட்டரில்  கைதட்டல், ஆர்யா – பூட்டைத் திறக்குறப்போ கைதட்டல், விஷால் – மேடையில நவரச ஆக்டிங் கொடுக்குறப்போ, மரமேறிகிட்டே அழுறப்போ கைதட்டல் – இப்படி படம் முழுக்க ஏகப்பட்ட இடங்கள்ல கைதட்டல். நான்கூட டைட்டில் கார்டுல டைரக்‌ஷன் பாலான்னு  போட்டதுல இருந்து, கிளைமாக்ஸ்ல  எ ஃபிலிம் பை பாலான்னு வர்ற வரைக்கும் விடாம கைதட்டிக்கிட்டே இருந்தேன், இண்டர்வெல்லகூட! ஏன்னா இது பாலா படமாச்சே!

படத்துல திடீர்னு சூர்யா நடிச்ச அவரோட வெளம்பரம் ஒண்ணு  பத்து நிமிஷத்துக்கு வந்துச்சு. அது அவரோட அகரம் பவுண்டேஷன் வெளம்பரம். அதுக்கடுத்ததா சரவணா ஸ்டோர்ஸ் வெளம்பரம், நவரத்னா தைல கூல்கூல் வெளம்பரம், ஜோதிகாகூட காப்பி குடிக்கிற வெளம்பரமெல்லாம் தொடர்ந்து வரும்னு நினைச்சு ஏமாந்துட்டேன். அந்த பத்து நிமிஷ அகரம் வெளம்பரம்கூட படத்தோட கதைய எந்த விதத்துலயும் பாதிக்கக்கூடாதுன்னுதான், பாலா படத்துல கதைன்னு ஒண்ணை கமிட் பண்ணிக்கவே இல்ல.

தலைகீழா நின்னு ஆர்யா, நான் கடவுள்ல அவார்டு பெர்பார்மென்ஸ் பண்ணிட்டாரு. ‘மச்சி எனக்கொரு பெர்பார்மன்ஸ் சொல்லேன்’னு விஷாலு அவருகிட்ட கேட்க… அப்புறம் நடந்ததெல்லாம் வரலாறு. இந்தப் படத்துல எதுக்காக விஷால் மாறுகண்ணோட நடிச்சாருன்னு நாமெல்லாம் அதே கண்ணோட்டத்துடன் படம் பார்த்தா ஒருவேளை புரியலாம். அதுல அவரோட உடல்மொழி, குரல்ல எல்லாம் பெண்மைத் தன்மைவேற! பின்நவீனத்துவமா இருக்குமோ? என்ன எழவுக்குன்னு யாமறியோம்; யாமம் அறியலாம்.

அடிமாடைக் கடத்துறாங்க. அதைவைச்சு அடிவயித்தைப் பிசையுற மாதிரி எதாவது சொல்லுவாங்களோன்னு நினைச்சேன். அந்த நேரத்துலதான் செம ட்விஸ்ட் ஒண்ணு வந்தது. ப்ளூ கிராஸ்காரங்க வந்து மாடுங்களையெல்லாம் அவுத்து உட்டுட்டாங்க. மாடுங்க எல்லாம் பட்டிக்குள்ள இருந்து கூட்டமா வெளியேறுன சமயத்துல, ரசிகர்களும் அதேமாதிரி வெளியேறி இருக்கணும். அஞ்சறிவு ஜீவனுங்களுக்கு இருந்த அறிவு, ஆறறிவு ரசிகர்களுக்கு இல்ல. ஏன்னா இது பாலா படமாச்சே!

விஷாலோட நடிப்பு? அதையெல்லாம் பாராட்டலாம். ஆனா இங்க என்ன ‘தனிநடிப்பு போட்டியா’ நடக்குது. அவரு ஸ்டேஜ் ஏறி ஸோலோவா திறமையைக் காட்டுறதுக்கு. கதையே இல்லாத படத்துல அவரு கதறிக் கதறி நடிச்சாலும் எதுவுமே ஒட்டலியே. ஆர்யா வேற தன் பங்குக்கு பாறைமேல நின்னு பத்து நிமிஷத்துக்கு திறமை காட்டுறாரு. அந்த பெரிய மனுஷன் ஹைனஸும்  (பேரென்ன, ஆங்.. எம்.ஜே. குமாரு!) ஒட்டுத்துணியில்லாம வாழ்க்கையோட எல்லைக்கே ஓடி பொணாமாகுறாரு. அப்பதானே ரசிகர்களை ரணகளமாக்குற க்ளைமாக்ஸ் வைக்க முடியும். எல்லாம் எதுக்கு?  ரெண்டு தேசிய விருது பார்சேல்ல்ல்ல்ல்ல்!!! (அட, போங்கப்பு. அது பாலா படத்துக்குத்தான் கொடுப்பாங்க. பாலா பேரு போடுற படத்துக்கெல்லாம் கொடுக்க மாட்டாங்க!)

பலகோடி மதிப்புள்ள மரம் உள்ள லாரியை எடுத்துக்கிட்டு விஷால் போனாரே, அப்புறம் என்ன ஆச்சுன்னு கேட்காதீங்க. நான் கடவுள்ல ஆர்யா, வில்லனை புதர் மறைவுல எடுத்துட்டுப் போயி என்ன பண்ணுனாரோ, அதையேத்தான் இதுல விஷாலும் பண்ணிருக்காருன்னு புரிஞ்சுக்கணும். ஆர்கே எதுக்கு, ஹைனஸோட ப்ளாஷ்பேக் என்ன, காதலிகளோட தேவை என்ன – இப்படி கேள்வி கேட்டுக்கிட்டே போகலாம். ஆனா பாலா பட கதாநாயகப் பாத்திரம் யாராவது வந்து என் குரல்வளையைக் கடிச்சுத் துப்பிருவாங்களோன்னு பயப்படுறதால…

தியேட்டரை விட்டு வெளியேவரும்போது, என்னோட சக ரசிகர்கள் எல்லாரோட முகத்தையும் பார்த்தேன். வெள்ளைத்துணியால தாடையோட சேர்த்து தலைல ஒரு கட்டு போட்டுருந்துச்சு. நெத்தியில ஒத்த ரூபாயும் தெரிஞ்சுது. நான் என் கட்டை அவுத்துட்டு, என்  நெத்தியில இருந்த ஒத்த ரூபாய எடுத்து பாக்கெட்ல போட்டுட்டு வீட்டுக்கு நடந்தேன்.

ஒல்லியாகவே இருந்தாலும் பாலா ஒரு  யானை. யானைக்கும்…

(பின்குறிப்பு : இதுவரை பாலாவின் படங்களை நான் விமரிசனத்துக்கு அப்பாற்பட்டவையாகத்தான் பார்த்திருக்கிறேன். அவன் இவன் தந்த ஏமாற்றத்தின் விளைவே இந்த விமரிசனம்.)

நான் கடவுளும் மெண்டோஸ் குரங்கும்!

உதயம் தியேட்டரில் டிக்கெட் புக்கிங் ஆரம்பமான உடனேயே நான்கு டிக்கெட் வாங்கியாயிற்று. குடும்பத்தினரோடு அல்ல, நண்பர்களோடு பார்ப்பதாகத் திட்டம். சனிக்கிழமை  (பிப்ரவரி 7) மாலைக்காட்சிக்கு உரிய நேரத்தில் சென்றாயிற்று.

சொர்க்க வாசலைத் திறந்து பக்தர்களை உள்ளே அனுமதிக்க ஆரம்பித்தார்கள். எனக்குமுன் வரிசையில் சென்ற ஒருவர் கையில் பெரிய ஊதுபத்தி பாக்கெட். ‘ஓம் நமசி வாயம்’ என்று அதில் இருந்தது. அந்த நபரோடு ஒட்டி நின்றிருந்த பிறர் கையில் ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்தேன். தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, சாம்பிராணி… நல்லவேளை. எதுவுமில்லை.

படம் ஆரம்பிப்பதற்கு முன் நிறைய விளம்பரங்கள். குரங்கு, கழுதை. மெண்டோஸ் மிட்டாய் சாப்பிட்ட குரங்கு, ஆதி மனிதனாக பரிணாம வளர்ச்சிபெற்று, கழுதையை அடிமையாக்கும் கான்செப்ட். எனக்கென்னவோ அந்த விளம்பரமே ஆர்யா நடித்ததுபோல  இருந்தது.

பின் வரிசையில் குடும்பத்தோடு ஒருவர் வந்திருந்தார். ஆறு வயது மதிப்புமிக்க பெண்  குழந்தை ஒன்றும் வந்திருந்தது. அதன் கையில் டெடி பியர். கிஷ்கிந்தாவுக்கு பிக்னிக்  போவதுபோல நினைத்து அழைத்து வந்துவிட்டார்போல. ‘தேவனே! இந்த வாதைகளிலிருந்து அவர்களை ரட்சியும்!’

தேசிய விருதை வாங்கப்போகும் ஆர்யாவே! நடிப்பு உலகில் லவம் வரும் நம்பிக்கை நட்சத்திரமே! (வலம் அல்ல, லவம்தான்.) இப்படியெல்லாம் வெளியே ரசிகக் கண்மணிகள்  ஃப்ளக்ஸ் பேத்தல்கள். படத்தில் டைட்டில் கார்டு போடும்போது ‘ஆர்யா’ என்று மட்டும்  போட்டார்கள். நிறைவாக இருந்தது.

எல்லோரும் படத்தோடு ஒன்றிப் போயிருந்தார்கள். பிச்சைக்காரர்களை வைத்து அதிர வைக்கும் ஒரு காட்சி. என் பக்கத்து சீட் நண்பர் தலையைக் குனிந்து கொண்டிருந்தார்.  பின் வரிசையைத் திரும்பிப் பார்த்தேன். தந்தையும் தாயும் தலையைக் குனிந்துகொண்டிருக்க, ஆறுவயது குழந்தை மட்டுமே ‘தேமே’வெனப் பார்த்துக் கொண்டிருந்தது.

இடைவேளை. தியேட்டரின் விராண்டாவில் நிற்க முடியாத அளவுக்கு சிகரெட் புகை யாகம். ஓம் சிவோஹம். அங்கே நிற்பதற்குப் பதில் ஆர்யாவிடமிருந்து கஞ்சா பைப்பை  வாங்கி ஒரு இழு இழுத்துவிடலாம் என்றே தோன்றியது.

ஆர்யா வரும் காட்சிகளே குறைவு. அதிலும் அவர் பேசும் வசனங்கள் மிகக்குறைவு.  அதிலும் தமிழ் வார்த்தைகள் மிகச் சொற்பமே. சமஸ்கிருதமே மிகுதி. ஹரன் பிரசன்னா வோடு சேர்ந்து இன்னொரு முறை படம் பார்க்க வேண்டும் நினைத்துக் கொண்டேன்.

க்ளைமாக்ஸில் பூஜாவின் நடிப்புக்கு கைதட்டு. ‘சூடா ஒரு தேசிய விருது பார்சல்!’ எ  பிலிம் பை பாலா என்று திரையில் வரும்போது கைதட்டு. அடுத்த பாலா படம் வருவதற்குள் 2011ல் முதல்வர் யார் என்று தெரிந்துவிடும்.

வெளியே வந்தேன். பக்கவாட்டில் நடந்துவந்த ஒருவர் என்னென்னமோ சொல்லிக்கொண்டு வந்தார். திடீரென என் முகத்தைப் பார்த்து, ‘ஓ ஸாரி. என் ஃப்ரெண்டு நினைச்சு  பேசிக்கிட்டு வந்தேன்’ என விலகினார். தவறு அவர் மீதில்லை. எல்லாப் புகழும் பாலாவுக்கே.

அடுத்த காட்சிக்காக மக்கள் தயாராகியிருந்தார்கள். பக்கத்து தியேட்டரில் செம தில்லாக வில்லு விட்டுக்கொண்டிருந்தார் விஜய். மந்தையிலிருந்து விலகிய ஆடாக பாலா தெரிந்தார். ஆட்டுமந்தைக் கூட்டத்தில் ரசிப்பதற்கு ஒன்றுமில்லை.