பயணம்

* இயக்குநர் ராதாமோகனுக்கு வித்தியாசமான முயற்சி. தமிழ் சினிமாவின் வித்தியாசமான முயற்சி என்றெல்லாம் சொல்ல முடியாது.

* டைட்டில் சாங் தவிர வேறு பாடல்கள் கிடையாது. ஓரிரண்டு காட்சிகள் தவிர அநாவசியக் காட்சிகள் இல்லை. நகைச்சுவைக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமே இல்லை. தேவையான அளவு செண்டிமெண்ட்.

* நாகர்ஜுனுக்கு ஏற்ற கதாபாத்திரம். தேவைக்கு ஏற்ப அழகாக நடித்திருக்கிறார். ஆனால் ‘இந்தப் படம் தெலுங்கு டப்பிங்கா?’ என்று இன்று மட்டுமே என்னிடம் மூன்று பேர் கேட்டுவிட்டார்கள்.

* இஸ்லாமிய தீவிரவாதம் சார்ந்த காட்சிகள் வழக்கம்போல உறுத்துகின்றன. அதுவும் சில வசனங்களுக்காகவும், சில காட்சிகளுக்காகவும் ராதாமோகன் கடும் விமரிசனங்களைச் சந்திக்கப் போவது உறுதி.

* ஒரு மதத்தைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, ஒரு கதாபாத்திரம் மூலமாக இன்னொரு மதத்தைத் தூக்கிப் பிடிப்பது சரியல்ல என்று சுற்றி வளைத்து மறைமுகமாகச் சொல்லலாம். முந்தைய வரியைப் போலத்தான் இயக்குநரும் படத்தில் சில விஷயங்களை மென்று முழுங்கி விமரிசித்திருக்கிறார். இந்தப் பத்தியின் முதல் வரியை நேரடியாகச் சொல்ல வேண்டுமென்றால், இஸ்லாமிய மதத்தைக் கடுமையாகத் தாக்கிவிட்டு, கிறித்துவத்தைத் தூக்கிப் பிடித்திருக்கிறார் இயக்குநர்.

* சினிமா சூப்பர் ஹீரோவைக் கடுமையாகத் தாக்கித் தாளிக்கும் இயக்குநர், கடைசியில் காம்ப்ரமைஸ் செய்துகொள்கிறார். டிஆர்பி ரேட்டிங்குக்காக மீடியாக்கள் நடந்து கொள்ளும் விதத்தையும் கடுமையாகத் தாக்கும்படியான காட்சிகள் இருக்கின்றன. ஆனால் இன்னென்ன சேனல்கள் என்று நேரடியாகச் சொல்லாமல் பூசி மெழுகியிருக்கிறார்.

* படத்தில் கவரும் பயணி கதாபாத்திரங்கள் டாக்டர் ரிஷி, ஏர்ஹோஸ்டஸ் பூனம் கவுர், ரசிகன் பாலாஜி. ஒரு கட்டத்துக்குமேல் எரிச்சலூட்டும் கதாபாத்திரம் பாதிரியார் எம்.எஸ். பாஸ்கர்.

* நகைச்சுவை வசனங்களைப் பளிச்சென வெளிப்படுத்தும் புது வசனகர்த்தா, சீரியஸ் வசனங்களில் கோட்டை விட்டிருக்கிறார். மொழி, அழகிய தீயே படங்களில் விஜியின் வசனங்களை ரசிக்காதவர்களே இருந்திருக்க முடியாது.

* பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப அளவாக நடித்திருக்கிறார்.

* அடுத்து இன்னென்ன திருப்பங்கள் வரும் என்று பாமரர்களும் யூகித்துவிடக்கூடிய காட்சிகள்தாம். இருந்தாலும் சலிப்பையோ, கொட்டாவியையோ தரவில்லை.

* பயணம் – நிச்சயம் ஆதரிக்கப்பட வேண்டிய படம். குடும்பத்துடன் பார்க்கலாம், சில விஷயங்களைச் சகித்துக் கொண்டு.

நேற்று கற்றுக்கொண்ட பாடம்!

சிநேகிதிக்குத் திருமணம். திருப்பூரில். நண்பன் சொக்கலிங்கத்தோடு நேற்று காலை 5.45க்கு திருப்பூர் ரயில் நிலையைத்தில் இறங்கினேன். (திருப்பூரில் இறங்காமல் தூங்கிவிடக்கூடாதே என்ற பயத்திலேயே சரியாகத் தூங்கவில்லை. திருப்பூர் வந்துவிட்டது என சொக்கலிங்கம் ஈரோட்டிலேயே என்னை எழுப்பிவிட்டது தனி காமெடி.) ரயில் 45 நிமிடங்கள் தாமதம். இன்னொரு நண்பன் முருகேஷ், பெங்களூரிலிருந்து திருப்பூருக்கு 6 மணிக்கு வந்து இறங்கினான்.

திருமணம் முகூர்த்த நேரம் காலை 7.00 – 8.00 என்பதால் ரயில் நிலையத்துக்கு அருகிலேயே லாட்ஜுல் ரூம் போட முடிவுசெய்தோம். சிலவற்றில் கிடைக்கவில்லை. ஒரு டொக்கு லாட்ஜில் கிடைத்தது. மணி 7.00 ஆயிற்று. ‘கடமைகளை’ முடித்துவிட்டு கிளம்பினோம். மணி 7.45.

சிநேகிதிக்கு மாப்பிள்ளை தாலி கட்டும் காட்சியை ‘கற்பனை’ செய்து பார்த்துக்கொள்ள வேண்டியதுதான் என்று முடிவுசெய்துவிட்டு ‘பெருமாநல்லூருக்கு’ பஸ் ஏறினோம். பஸ்ஸில் கண்டக்டர் முதற்கொண்டு பலரிடமும் ‘பெருமாநல்லூர் வந்தா சொல்லுங்க’ என்று சொல்லிவைத்து, ஒருவழியாக அங்கே இறங்கினோம். கல்யாண மண்டபத்தின் பெயரைச் சொல்லி வழி கேட்டபோது ஆளாளுக்குக் குழப்பினார்கள். ஒருவர் போலீஸ் ஸ்டேசனுக்கு வழி சொன்னார். கடைசியாக ஒரு ஆட்டோ டிரைவர் ‘நல்வழி’ நல்கினார். ‘இங்கிருந்து ரெண்டு கிலோமீட்டர் இருக்கும். அதோ வர்ற டவுன் பஸ்ல ஏறுங்க. அடுத்த ஸ்டாப்பிங்தான்.’

மண்டபத்துக்குள் செல்லும்போது மணி 8.20. பந்திக்கு முந்திக் கொண்டிருந்தார்கள். ‘சிநேகிதியை அப்புறம் பார். முதலில் என்னைக் கவனி’ என்றது அரைஜான். எப்போது இடம் காலியாகும் என்று காத்திருந்து இடம் பிடித்து அமர்ந்தோம். அருமையான மெனு. அல்வா, பொங்கல், பூரி சென்னா, வெங்காய தோசை, இட்லி, இரண்டு வகை சட்னிகள், சாம்பார்.

ஆனால் எல்லாம் அளவோடுதான் (ஒன்றே ஒன்று) வைத்தார்கள். மறுமுறை வேண்டுமா என்று கேட்க யாரும் வரவே இல்லை. ‘அரைக்கிணறுதான் தாண்டியிருக்க மவனே’ என்று அறைகூவல் விட்டது அரைஜான். அதற்குள் ‘இந்த வரிசைக்கு வடையே வரல’ என்று இலையை மூடிவைத்துவிட்டு முறுக்கியபடி சண்டைக்குக் கிளம்பினார் ஒரு சகலை. ‘சாப்பிட ஆரம்பிக்கறதுக்குள்ளயே பந்தி முடிச்சுட்டாங்களே’ என புலம்ப ஆரம்பித்தான் முருகேஷ்.

ஏப்பம் எல்லாம் வரவில்லை. இலையெடுக்க வந்துவிட்டார்கள். மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள எழ வேண்டியாதாயிற்று. கைகழுவிவிட்டு, காப்பி குடித்துவிட்டு, நிதானமாக சிநேகிதியைப் பார்க்கச் சென்றோம். ஒவ்வொருவராக மொய் செய்துவிட்டு  கேமராவுக்கு முகம் காட்டிக் கொண்டிருந்தார்கள். அடுத்து போய்விடலாம், அதற்கடுத்து போய்விடலாம் என்று நாங்கள் மூவரும் ஒரே இடத்திலேயே நின்று கொண்டிருந்தோம். அரைமணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு, ஒருவழியாக கேமராவுக்குக் குறுக்கே பாய்ந்து எங்கள் உரிமையை நிலைநாட்டி, சிநேகிதியிடம் பரிசைக் கொடுத்து, மாப்பிள்ளைக்கு ‘வாழ்த்துகள்’ சொல்லி, புகைப்படத்துக்கு ‘இளிச்சவாய்’ காட்டிவிட்டு வந்தோம்.

வந்த வேலை முடிந்தது. இரவுதான் ரயில். சேரன் எக்ஸ்பிரஸ். ஈரோடிலிருந்து சென்னைக்கு முன்பதிவு செய்திருந்தேன்.  சொந்த வேலைகளைப் பார்க்க, கிளம்பினோம். லாட்ஜுக்கு வந்து, லக்கேஜ் எடுத்துவிட்டு, வாடகையாக ரூ. 275 மனசில்லாமல் கொடுத்தோம். ‘அடுத்து எப்போ வருவீங்க?’ என புன்னகை ஒழுகக் கேட்டார் லாட்ஜ்காரர். ‘வர்றதாவே இல்ல’ இது மைன்ட் வாய்ஸ். ‘வந்தா வர்றோம்’ இது உதடுகளின் அவுட்புட்.

முருகேஷ் கோவைக்கு கிளம்பினான். நானும் சொக்கலிங்கமும் திருப்பூரில் நல்லூர் என்ற இடத்துக்குக் கிளம்பினோம். சொந்தக்காரர்கள் வீட்டுக்கு. அதற்கான பஸ் ஏறி உட்காரும்போது, எனக்குப் பிரியமாக ஜீன்ஸில் ஸீட்டிலுள்ள ஆணி குத்தி பொத்தல் விழுந்துவிட்டது. ரொம்ப நேரத்துக்கு அதையே பார்த்துக் கொண்டிருந்தேன். ‘நல்லூர் இதாம்பா, இறங்கு’ என்றார் பக்கத்து இருக்கை பெரியவர்.

சொந்தக்காரர்கள் வீட்டிலிருந்து கிளம்பி, மதிய உணவை அவர்களோடு வெளியில் முடித்துவிட்டு திருப்பூர் ரயில் நிலையத்தை அடையும்போது மணி 2.40. அடுத்து ஈரோடு செல்வதாகத் திட்டம். ரயிலில் சென்றால் நாற்பதே நிமிடங்கள். டிக்கெட்டுக்காக வரிசையில் நிற்கும்போது, இன்னும் சில நிமிடங்கள் கோவை இண்டர்சிட்டி, ப்ளாட்பார்ம் ஒன்றுக்கு வந்துசேரும் என்ற அறிவிப்பு டென்ஷனைத் தூண்டிவிட்டது. வரிசை கரைவதாகத் தெரியவில்லை. அடுத்த ரயில் எப்போது என்று தகவல் பலகைகளில் தேடினேன். எதுவும் தென்படவில்லை. பத்து நிமிடங்களில் ரயில் வருவதற்கும் சொக்கலிங்கம் டிக்கெட் வாங்க, கவுண்டரை (Counter, திருப்பூர் என்பதால் குழப்பிக்கொள்ள வேண்டாம்.) நெருங்கவும் சரியாக இருந்தது. ரயில் ப்ளாட்பாரத்தில் இருந்து கிளம்பும் நொடியில் தாவி ஏறினோம். கையில் அன்ரிசர்வ்ட் டிக்கெட், ஏறியது ரிசர்வ்ட் பெட்டி. காலியாகத்தான் இருந்தது. எனவே உட்கார்ந்துகொண்டோம், குறுகுறுப்புடன்.

சற்று நேரத்தில் டிக்கெட் பரிசோதகர் வந்தார். டிக்கெட்டைப் பார்த்துவிட்டு, முப்பது ரூபாய்க்கு அபராதம் போட்டார். உட்கார இரண்டு இருக்கைகள் ஒதுக்கிக் கொடுத்தார். சட்ட விரோதமாக எதுவும் செய்யவில்லை என்ற மிதப்பு உள்ளுக்குள் தானாக ஏற, நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்துகொண்டேன்.

ஈரோட்டில் என் சகோதரி ஒருத்தியின் வீடு. நீண்ட நாள்கள் கழித்து சந்தித்தோம். பொழுது வேகமாக ஓடியது. இரவு உணவை முடித்தபிறகு, ரயில் நிலையத்துக்கு எத்தனை மணிக்குக் கிளம்பவேண்டும் என்று கேட்டேன். ரயில் எத்தனை மணிக்கு என்று கேட்டார் சகோதரியின் கணவர் ரவி. ‘சேரன் எக்ஸ்பிரஸ்’ என்று சொல்லிவிட்டு டிக்கெட்டை எடுத்துப் பார்த்தேன். ரயில் ஈரோட்டிலிருந்து கிளம்பும் நேரம் ‘00:06′ என்றிருந்தது. பயண தேதி 25 அக். 09.

ஏதோ தவறு நடந்திருப்பதாகத் தோன்றியது. சேரன் எக்ஸ்பிரஸ் கோவையில் 22.20க்கு கிளம்பி, ஈரோட்டை அடையும் நேரம் 00.02. ஆக, அது அடுத்த நாள் ஆகிவிடுகிறது. அக். 26, 2009. எனில் என் கையில் நான் வைத்திருக்கும் அக். 25க்குரிய பயணச்சீட்டு செல்லுபடியாகுமா?

ரவியும் நானும் அவசர, அவசரமாக ஈரோடு ரயில் நிலையத்துக்கு விரைந்தோம். தகவல் மையத்தில் விசாரித்தோம். அங்கிருந்த நபர் சர்வ சாதாரணமாகச் சொன்னார், ‘ரயில் காலைலயே போயிருச்சு.’

IRCTC இணையதளம் மூலமாக மாதத்துக்கு சுமார் பத்து டிக்கெட்டுகளாவது முன்பதிவு செய்யும் எனக்கு இந்தப் பிரச்னை புதிது. இதெல்லாம் கவனிக்காமல் ரயிலில் ஏறியிருந்தால்? அப்படி ஏறிய எத்தனை பேர் இறக்கி விடப்பட்டிருப்பார்கள்? சரியாகக் கவனிக்காதது என் தவறுதான். டிக்கெட் கவுண்டரில் முன்பதிவு செய்திருந்தால் ஒருவேளை சரியாக வழிகாட்டியிருப்பார்களா? ஒருவேளை ரயில் ஈரோட்டுக்கு சீக்கிரமாக, 23.50க்கு வந்து 23.56க்கு கிளம்பினால் என் டிக்கெட் செல்லுபடியாகியிருக்குமா? (அல்ப ஆசை!) அல்லது சேரனுக்கு முன் வரும் வேறோரு ரயிலில் அத்துமீறி ஏறி, அபராதம் கட்டி பயணம் செய்ய இயலுமா? இந்த விஷயத்தில் IRCTC இணையதளம் மேல் தவறே இல்லையா?

பல கேள்விகள். அதற்கெல்லாம் விடைதேட நேரமில்லை. எப்படியாவது சென்னைக்குச் செல்லவேண்டும். கோவையில் இருந்து வரும் ரயிலில், ஈரோட்டில்  அன்ரிசர்வ்ட் பெட்டியில் ஏறி வருவதெல்லாம் சாத்தியமே அல்ல. ஞாயிறு இரவு என்பதால் கூட்டத்துக்கு கேட்கவே வேண்டாம். வெளியே வந்து பிரைவேட் பஸ்களில் விசாரித்தோம். இடம் இல்லை. மீண்டும் சகோதரியின் வீட்டுக்கு வந்தேன். சொக்கலிங்கத்தை அழைத்துக்கொண்டு, லக்கேஜை எடுத்துக் கொண்டு பேருந்து நிலையத்துக்கு வந்தேன்.

மணி இரவு 11.30.சென்னை பேருந்துகளெல்லாம் கிளம்பியிருந்தன. சேலத்துக்கு வண்டி ஏறினேன். அங்கு இறங்கும்போது 12.45. அந்த இரவில் அங்கே காத்திருந்த கூட்டம் மிரள வைத்தது. ஒரு வழியாக சென்னைக்குச் செல்ல சாதாரண பேருந்து கிடைத்தது. அடித்துப் பிடித்து ஏறியதால் இடமும் கிடைத்தது. ஏற்கெனவே மிகவும் களைத்துப் போயிருந்தோம். உட்கார்ந்து தூங்குவதற்கு வசதியில்லாத இருக்கை. பேருந்துகளின் சேனலான பூம் டீவி முழு சத்தத்தோடு தன் ஒளிபரப்பை ஆரம்பித்தது.

‘தாய் மீது சத்தியம்’ படம். பா. தீனதயாளனின் புத்த்தகத்தில் நான் ரசித்து வியந்த சாண்டோ சின்னப்பா தேவர் மீது கோபம் கோபமாக வந்தது. எட்டு மணி நேர அவஸ்தை. வீட்டுக்கு வந்து அலுவலகத்துக்கும் வந்தாயிற்று.

பண இழப்பு. உடல் அசதி. மனக்கஷ்டம். பயணம் செய்யாத டிக்கெட்டுக்கு 24 மணி நேரங்கள் கழித்து, IRCTC தளத்திலேயே TDR விண்ணப்பிக்கலாம் என்று அண்ணாச்சி முத்துகணேஷ் சொன்னார். செய்திருக்கிறேன். பார்க்கலாம்.

சரி எதற்கு இந்தக் கட்டுரை எழுதியிருக்கிறேன் என்றால்… ஆவ்.. எனக்கு தூக்கம் தூக்கமா வருது… உங்களுக்கு?

சார், வண்டி இருவது நிமிசம் நிக்கும் சார்…

சார்… வண்டி இருவது நிமிசம் நிக்கும் சார்… டீ, காப்பி, டிப்பன் சாப்பிடுறவங்கள்ளாம் எறங்கி சாப்பிடலாம் சார்..’

ஏய்… எந்திரிடா வெண்ணை… நைட்டு ரெண்டு மணிக்கு கொட்டுற பனியில ஒருத்தன் கா கா-னு கத்திக்கிட்டிருக்கேன். பஸ்சுல சன்னலோரமா சீட்டு கிடைச்சவுடனே, எதோ பரலோகத்துலயே சீட்டு கிடைச்சாப்புல பவுசா தூங்கிருவீங்களே.. அடச்சீ எந்திரி…

தப்பா நெனைச்சுக்காதீங்க. இந்த சாலையோர ஓட்டலுதான் எனக்கு எல்லாம். இந்த ரூட்டுல ஒரு மணி நேரத்துக்கு அம்பது வண்டி போச்சுதுன்னா, அதுல பத்து, பதினைஞ்சுதான் எங்க மொபசல் ஓட்டலுக்குள்ள வருது. ஏன்னா போட்டிக்கு நிறைய ஓட்டலு பக்கத்துலயே இருக்கு. பஸ்சு டிரைவரு, கண்டக்டரை சரிகட்டி, வண்டியை நம்ம ஓட்டலு பக்கமா நிப்பாட்ட வைக்குறதுக்குள்ள நாங்க படுற பாடு எங்களுக்குத்தான தெரியும். நிக்குற வண்டியில பாதி பேரு, உள்ளே ஒக்காந்து உலக மகா தூக்கம் தூங்கிட்டு இருந்தாங்கன்னா, எங்க பொழைப்பு என்னாவறது?

அதான் தூங்குறவனை எழுப்புறதுல தயவு தாட்சண்யமே பாக்குறது கிடையாது. வண்டி வந்து நின்னாப் போதும். உலக்கையை வைச்சு இடிக்குற மாதிரி என் கையால பஸ்ஸைச் சுத்தித் தடதடனு தட்டிக்கிட்டே ‘டீ… காப்பி… டிப்பன்’னு கத்த ஆரம்பிச்சுருவேன். தட்டுற, தட்டுல அவனவன் அரண்டு, மிரண்டு பதறி அடிச்சுக்கிட்டு முழிப்பான். ஒண்ணுமே புரியாம இறங்கி வந்துருவான்.

ஆனா, சில பேரு இருக்கான் பாருங்க, ஏதோ வாழ்க்கையில அன்னிக்குத்தான் மொத மொதலா தூங்குறாப்புல போஸ் கொடுத்துட்டு இருப்பானுங்க! அது என்னை அவமானப்படுத்துற மாதிரி இருக்கும். விடுவேனா… என்னோட வால்யூமை ஃபுல்லா ஏத்திக்கிட்டு, பஸ் சன்னல்கிட்ட போயி கத்தோ கத்துன்னு கத்துவேன். பஸ்சு மேல முட்டோ முட்டுன்னு முட்டுவேன். அப்புறமென்ன, எவனாயிருந்தாலும் இறங்கித்தான் ஆவணும்.

இந்த மொபசல் ஓட்டல் வளாகத்துல சம்பந்தமேயில்லாத ஆடியோ கேசட் கடை ஒண்ணு துருத்திக்கிட்டிருக்கும். அது எதுக்குன்னு தெரியுமா! தூங்குறவங்களை எழுப்ப இன்னொரு டெக்னிக். கேசட்டைப் போட்டு, பெருசாக் கத்த விட்டுருவோம்.

‘பார்த்த முத நாளே.. உன் மூஞ்ச
பார்த்த முத நாளே..
டாஸ்மாக் போனேனே – நாந்தான்
டாஸ்மாக் போனேனே!’

இந்த ரேஞ்சுலதான் பாட்டெல்லாம். இதைப் பாடுறதுக்குன்னே கொடூர குரல்களோட ஒரு குரூப் இருக்குது. இதைக் கேட்டா, செத்துப்போனவனே கூட எந்திரிக்க சான்ஸ் இருக்கு. இந்தக் கேசட்டையும் சில ‘நல்ல மனுசங்க’ காசு கொடுத்து வாங்கிட்டுப் போவானுங்க தெரியுமா!

பஸ்சை விட்டு இறங்குன உடனே பாதி பேரு அப்படியே அங்கிட்டும் இங்கிட்டு நோட்டம் விடுவாங்க. அதாவது டாய்லெட்டுக்குப் போகாம, அப்படியே ஓரமா ஒதுங்கிடலாம், ஒரு ரூவாயை மிச்சப்படுத்தலாமுன்னு உலக மகா திட்டம் போடுவாங்க. வா மவனே வா, நீ உற்சாகமா திறந்தவெளி புல்கலைக்கழகத்துல போறதுக்கா, நாங்க காசைப் போட்டு கருமத்தைக் கட்டி வெச்சிருக்கோம்னு மரியாதையாச் சொல்லுவேன். அப்படியும் சில பேரு கேட்க மாட்டான். இன்னும் கொஞ்சம் தள்ளிப் போயி இருக்கலாமுன்னு அறிவுபூர்வமா திட்டம் போடுவானுங்க. நான் விடுவேனா.

‘எப்பா.. நீ உள்ள போயி இருக்க வேணாம். எங்கிட்டு வேணும்னாலும் போய் இரு. ஆனா ஒரு ரூவாக் காசைக் கொடுத்துரு’ன்னு கட் அண்டு ரைட்டாச் சொல்லுவேன். அப்புறமென்ன, ஒரு ரூவாயக் கொடுத்துட்டு, மூக்கைப் புடிச்சிக்கிட்டு உள்ளயே போயிருவான்.

பக்கத்துல நாலு மைலு தொலைவுல இருக்குற பசுமரத்துப்பட்டிதான் என் சொந்த ஊரு. நான் இந்த ஓட்டல்ல எட்டு வருசமா இப்படி எடுபுடி வேலைகளைப் பாத்துக்கிட்டிருக்கேன். எல்லா வேலையும் செய்வேன். இப்படி வந்து நிக்குற வண்டிங்க மத்தியிலதான் இந்த டேவிட்டோட வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு.

நேத்து வடநாட்டுக்காரன் ஒருத்தன் வந்தான். செம கடுப்பைக் கிளப்பிட்டான். ஆம்னி பஸ்ல இருந்து இறங்குனான். கேவலமா ஒரு கொட்டாவி விட்டுக்கிட்டே படு பங்கரையா சோம்பல் முறிச்சான். இளநி எவ்ளோன்னு இங்கிலீஷ்ல விசாரிச்சான். வாங்கல. அடுத்து கூல்டிரிங்ஸ் எவ்ளோன்னு ஹிந்தியில விசாரிச்சான். வாங்கல. அடுத்து டீ எவ்ளோன்னு சைகையிலேயே விசாரிச்சான். அதையும் குடிக்கல. இப்படி கொலை கேஸை விசாரிக்க வந்த இன்ஸ்பெக்டர் மாதிரி எல்லாத்தையும் விசாரிச்சிட்டு ஓரமா போய் ஒக்காந்துட்டான்.

எனக்குள்ள டென்ஷன் தாண்டவமாடிடுச்சு. அவன்கிட்ட போய், ஒரு ரசீதை நீட்டி ‘டென் ரூபிஸ்’னு மிரட்டலா சொன்னேன். ‘கியா?’ன்னு முழிச்சான். ‘டிக்கி பார்க்கிங் சார்ஜ்’னு சொன்னேன். ஒண்ணும் புரியாம பத்து ரூபாயைக் கொடுத்துட்டு பஸ்சுக்குள்ள ஏறிப் பதுங்கிட்டான்.

போன வாரம் இன்னொரு காமெடி நடந்துச்சு. ஒரு கவர்மெண்டு பஸ்சு வந்துச்சு. உள்ளயிருந்து வந்த ஆம்பிளைங்க எல்லாம், படு சோகமா நாலு நாள் தாடியோட இறங்குனாங்க. ஒருத்தர் மட்டும் எங்கிட்ட வந்து, ‘ஏம்ப்பா, இங்க சலூன்லாம் கெடையாதா?’ன்னு கேட்டாரு. ‘இல்லை’ன்னு சொன்னவுடனே, ‘முடிஞ்சா ஒரு சலூனையும் வைச்சிருங்க அப்பு. பாதயாத்திரையா கெளம்பியிருந்தாக் கூட இந்நேரம் ஊரு போய்ச் சேர்ந்திருப்பேன். கட்டையில போறவன்… இந்த பஸ்சுல நான் என்னிக்கு ஏறி ஒக்காந்துன்னு எனக்கே நியாபகத்துல இல்ல. இன்னும் ஊரு போய்ச் சேரல’ன்னு கண்ணீர் மல்க கதறிட்டாரு. அப்ப, அந்த பஸ் கண்டக்டரு வந்து, ‘ஏம்ப்பா, எல்லாரும் வண்டியில ஏறியாச்சா? நேராவுது. காலாகாலத்துல போய்ச் சேர வேணாமா’ன்னாரே பாக்கலாம்.

ஒரு வழியா அந்தக் கட்டை வண்டி கெளம்பிப் போச்சுது. அடுத்த அஞ்சு நிமிஷம் கழிச்சு, ஒரு ஆளு ‘குய்யோ முய்யோ’ன்னு கத்திக்கிட்டே ஓடியாந்தாரு. ‘இங்கிட்டுருந்த மஞ்சக் கலரு வண்டியெங்க? அய்யய்யோ.. நான் அதுல போனுமே’ன்னு அழுதாரு. ‘அதான் போயிருச்சே. போனும் போனும்னா என்னாத்த பண்ணுறது’ன்னு கேட்டேன்.

‘அய்யா.. வவுத்தக் கலக்குச்சுன்னு வெளிய போனேன். போயிட்டு வந்தவுடனே, பசிக்குற மாதிரி இருந்துச்சேன்னு போய்ச் சாப்பிட்டேன். மறுபடியும் வவுத்தக் கலக்குச்சுதுன்னு வெளிய போய்ட்டு வந்தேன். மறுபடியும் பசிச்சிருமோன்னு பயந்து இன்னொரு தடவைக் கொஞ்சமா சாப்பிட்டேன். பஸ்ல ஏறினா திரும்ப வவுத்தக் கலக்குமோன்னு பயம் வந்துருச்சு. அதான் மறுபடியும் வெளிய போய்ட்டு வந்து, பார்சல் ஒண்ணு வாங்கிட்டு வந்து பாக்குறேன். பஸ்சைக் காணோமே’ன்னு அழுதாரு.

‘யோவ்.. நீ உன் இஷ்டத்துக்கு ‘உள்ளே-வெளியே’ விளையாண்டுக்கிட்டு இருந்தேன்னா பஸ்சு வெயிட் பண்ணுமா? சரி, அடுத்த வண்டி இந்தா நிக்குது. டிக்கெட் வெச்சிருக்கேல்ல. சொல்லி ஏத்தி உடுறேன். கவலைப்படாத, நீ வந்த வண்டி போற ஸ்பீடுக்கு அங்கப்பிரதட்சணம் பண்ணிக்கிட்டே போனாக்கூட ஓவர்டேக் பண்ணிடலாம்’னு சமாதானப்படுத்தி அடுத்த வண்டியில அனுப்பி விட்டேன்.

ம்.. இப்படியே ‘டீ.. காப்பி.. டிப்பன்’னு கூவிக்கிட்டு, வர்ற வண்டிக்கெல்லாம் கண்ணாடி துடைச்சு விட்டுக்கிட்டே பொழைப்பை எவ்வளவு நாள்தான் ஓட்ட முடியும்? நானும் எனக்குன்னு சில கனவுகளை வெச்சிருக்கேன். எடுபிடியா நான் வேலை பாக்குற இந்த ஓட்டல் வளாகத்துலயே ஒரு சின்னக் கடையைப் போடணும். அப்படியே சினிமாவுல வர்ற மாதிரி மளமளன்னு முன்னேறணும். கடைசியில ஒருநாள் இந்த ஓட்டல் வளாகமே எனக்குச் சொந்தமா இருக்கணும். எப்படி, சூப்பரா இருக்குல்ல!

வருங்காலத்துல நான் நடத்தப்போற ஓட்டல்ல பஸ்சு மட்டும் வந்து நிக்காது. ஸ்பெஷலா டிராக்கு போட்டு டிரெயினெல்லாம் உள்ளாற வந்து டீ சாப்பிட்டு போற மாதிரி வசதி செய்வேன். அவ்வளவு ஏன், ரன் வே-லாம் போட்டு ஏரோ-ப்ளேனே வந்து இறங்கி இட்லி சாப்பிட்டுட்டு போகும்னா பாத்துக்கோங்க! அவ்வளவு ஹை-டெக்! நான் முதலாளியாவே இருந்தாலும், வர்றது ஏரோ-ப்ளேனாவே இருந்தாலும், பழசை மறக்க மாட்டேன். அப்பவும் நான் தட்டி எழுப்புவேன்.

‘சார்… ஏரோப்ளேன் பதினைஞ்சு நிமிசம் நிக்கும் சார்… டீ, காப்பி, டிப்பன் சாப்பிடுறவங்களெல்லாம் இறங்கி வந்து சாப்பிடலாம் சார்…’