நான் கடவுளும் மெண்டோஸ் குரங்கும்!

உதயம் தியேட்டரில் டிக்கெட் புக்கிங் ஆரம்பமான உடனேயே நான்கு டிக்கெட் வாங்கியாயிற்று. குடும்பத்தினரோடு அல்ல, நண்பர்களோடு பார்ப்பதாகத் திட்டம். சனிக்கிழமை  (பிப்ரவரி 7) மாலைக்காட்சிக்கு உரிய நேரத்தில் சென்றாயிற்று.

சொர்க்க வாசலைத் திறந்து பக்தர்களை உள்ளே அனுமதிக்க ஆரம்பித்தார்கள். எனக்குமுன் வரிசையில் சென்ற ஒருவர் கையில் பெரிய ஊதுபத்தி பாக்கெட். ‘ஓம் நமசி வாயம்’ என்று அதில் இருந்தது. அந்த நபரோடு ஒட்டி நின்றிருந்த பிறர் கையில் ஏதாவது தென்படுகிறதா என்று பார்த்தேன். தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, சாம்பிராணி… நல்லவேளை. எதுவுமில்லை.

படம் ஆரம்பிப்பதற்கு முன் நிறைய விளம்பரங்கள். குரங்கு, கழுதை. மெண்டோஸ் மிட்டாய் சாப்பிட்ட குரங்கு, ஆதி மனிதனாக பரிணாம வளர்ச்சிபெற்று, கழுதையை அடிமையாக்கும் கான்செப்ட். எனக்கென்னவோ அந்த விளம்பரமே ஆர்யா நடித்ததுபோல  இருந்தது.

பின் வரிசையில் குடும்பத்தோடு ஒருவர் வந்திருந்தார். ஆறு வயது மதிப்புமிக்க பெண்  குழந்தை ஒன்றும் வந்திருந்தது. அதன் கையில் டெடி பியர். கிஷ்கிந்தாவுக்கு பிக்னிக்  போவதுபோல நினைத்து அழைத்து வந்துவிட்டார்போல. ‘தேவனே! இந்த வாதைகளிலிருந்து அவர்களை ரட்சியும்!’

தேசிய விருதை வாங்கப்போகும் ஆர்யாவே! நடிப்பு உலகில் லவம் வரும் நம்பிக்கை நட்சத்திரமே! (வலம் அல்ல, லவம்தான்.) இப்படியெல்லாம் வெளியே ரசிகக் கண்மணிகள்  ஃப்ளக்ஸ் பேத்தல்கள். படத்தில் டைட்டில் கார்டு போடும்போது ‘ஆர்யா’ என்று மட்டும்  போட்டார்கள். நிறைவாக இருந்தது.

எல்லோரும் படத்தோடு ஒன்றிப் போயிருந்தார்கள். பிச்சைக்காரர்களை வைத்து அதிர வைக்கும் ஒரு காட்சி. என் பக்கத்து சீட் நண்பர் தலையைக் குனிந்து கொண்டிருந்தார்.  பின் வரிசையைத் திரும்பிப் பார்த்தேன். தந்தையும் தாயும் தலையைக் குனிந்துகொண்டிருக்க, ஆறுவயது குழந்தை மட்டுமே ‘தேமே’வெனப் பார்த்துக் கொண்டிருந்தது.

இடைவேளை. தியேட்டரின் விராண்டாவில் நிற்க முடியாத அளவுக்கு சிகரெட் புகை யாகம். ஓம் சிவோஹம். அங்கே நிற்பதற்குப் பதில் ஆர்யாவிடமிருந்து கஞ்சா பைப்பை  வாங்கி ஒரு இழு இழுத்துவிடலாம் என்றே தோன்றியது.

ஆர்யா வரும் காட்சிகளே குறைவு. அதிலும் அவர் பேசும் வசனங்கள் மிகக்குறைவு.  அதிலும் தமிழ் வார்த்தைகள் மிகச் சொற்பமே. சமஸ்கிருதமே மிகுதி. ஹரன் பிரசன்னா வோடு சேர்ந்து இன்னொரு முறை படம் பார்க்க வேண்டும் நினைத்துக் கொண்டேன்.

க்ளைமாக்ஸில் பூஜாவின் நடிப்புக்கு கைதட்டு. ‘சூடா ஒரு தேசிய விருது பார்சல்!’ எ  பிலிம் பை பாலா என்று திரையில் வரும்போது கைதட்டு. அடுத்த பாலா படம் வருவதற்குள் 2011ல் முதல்வர் யார் என்று தெரிந்துவிடும்.

வெளியே வந்தேன். பக்கவாட்டில் நடந்துவந்த ஒருவர் என்னென்னமோ சொல்லிக்கொண்டு வந்தார். திடீரென என் முகத்தைப் பார்த்து, ‘ஓ ஸாரி. என் ஃப்ரெண்டு நினைச்சு  பேசிக்கிட்டு வந்தேன்’ என விலகினார். தவறு அவர் மீதில்லை. எல்லாப் புகழும் பாலாவுக்கே.

அடுத்த காட்சிக்காக மக்கள் தயாராகியிருந்தார்கள். பக்கத்து தியேட்டரில் செம தில்லாக வில்லு விட்டுக்கொண்டிருந்தார் விஜய். மந்தையிலிருந்து விலகிய ஆடாக பாலா தெரிந்தார். ஆட்டுமந்தைக் கூட்டத்தில் ரசிப்பதற்கு ஒன்றுமில்லை.

அப்பாவும் புள்ளையும் பின்ன ஹாரிஸூம்

(முன்குறிப்பு : எனக்கு இசைபற்றி எதுவும் தெரியாது. இசையை விமரிசிக்கத் தெரியாது.)

சமீபத்தில் வெளியான ஐந்து புதிய படப்பாடல்களை அடிக்கடி கேட்டுக் கொண்டிருக்கிறேன். நான் கடவுள் & நந்தலாலா (இளையராஜா). குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும் & சிவா மனசுல சக்தி (யுவன்சங்கர் ராஜா). அயன் (ஹாரிஸ் ஜெயராஜ்).

முதலில் நான் கடவுள். சிறிய பிட் பாடல் உள்ளிட்ட ஆறு பாடல்களையும் ஸ்கிப்  செய்யாமல் கேட்கத்தோன்றுகிறது. குறிப்பாக மதுபாலகிருஷ்ணன் பிச்சைப் பாத்திரம்  ஏந்திவந்து மனத்தைப் பிசைகிறார். ஒரு காற்றில் அலையும் சிறகாக இளையராஜாவின்  வருடல் என்னுடைய என்72வை அடிக்கடி உருக்குகிறது. இப்போதெல்லாம் அடிக்கடி  ரியாலிட்டி ஷோக்களில் ‘கெமிஸ்ட்டிரி’ என்ற வார்த்தையைக் கேட்டு பழகியிருப்போம்.  என்னைப் பொருத்தவரை இசையுலகில் இளையராஜாவுக்கும் ஷ்ரேயா கோஷலின்  குரலுக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்டிரி இருப்பதாகவே உணர்கிறேன் (சாதனா சர்கத்தைவிடவும்).

அடுத்தது நந்தலாலா. நீண்ட நாள் கழித்து இளையராஜாவிடமிருந்து ஒரு அருமையான  தாலாட்டு. ‘தாலாட்டு கேட்க நானும்..’ பாடலுக்குள் மூழ்கிவிட்டால் மீள்வது கடினமாகத் தான் இருக்கிறது. குரலா அது, குளோரோஃபார்ம். சரோஜா அம்மாளின் குரலில் குறத்திப்பாட்டு என்னவோ செய்கிறது. அருமையான ஆறு பாடல்களில் பலவற்றை மிஷ்கின்  படத்தில் பயன்படுத்தவில்லை, இளையராஜா கோபத்திலிருக்கிறார் என்றெல்லாம் செய்திகள் படித்தேன். ஆகவே பாடல்களைப் பார்க்கமுடிகிறதோ இல்லையோ, கேட்கத் தவற வேண்டாம்.

அப்பாவைப் பார்த்தாயிற்று. இனி பிள்ளை. முதலில் ஷிவா மனசுல சக்தி. ஒரு கல், ஒரு  கண்ணாடி தவிர யுவனின் எந்தப்பாடலும் என் மனத்தில் நிற்கவில்லை. நிலைத்து நிற்கும் தரத்தில் அமையவில்லை. ஏழாவதாக வரும் ‘ஒரு பார்வையில்..’ குறும்பாடலுக்கு 99 மார்க்.

அடுத்தது குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும். இதையும் கெமிஸ்ட்டிரி என்றுதான் சொல்லவேண்டும். எஸ்பிபி சரணுக்கும் யுவனுக்குமான கெமிஸ்ட்டிரி. எஸ்பிபியின் குரல்  அதிரும் ‘நான் தருமன்டா’ பாடல்தவிர மற்ற பாடல்கள் அனைத்தும் சுகம். இதம். சின்னஞ்சிறுசுக – பாடலில் ஒலிக்கும் ஒரு பெண் குரல் (Bela Shende) தவிர மற்ற அனைத்திலும் ஆண்குரலாதிக்கம். ‘கடலோரம்’ பாடலை யுவனும் தனியாகப் பாடியிருக்கிறார்.  சரணும் பாடியிருக்கிறார். இரண்டாமவருக்குத்தான் முதலிடம். ‘முட்டுக்காடு பக்கத்துல’ –  நாகரிகமான குத்து. பாடல்கள் – வாலி, கங்கை அமரன். பல இடங்களில் நச்.  பெரும்பாலான காட்சிகளை தூத்துக்குடியில் எடுத்திருக்கிறார்களாம். பார்க்க ஆவலாக  இருக்கிறேன்.

ஐந்தாவது படம் அயன். வாரணம் ஆயிரத்தில் தொன்னூறுக்கும்மேல் மார்க் வாங்கிய ஹாரிஸுக்கு இதில்  ஐம்பதுதான் கொடுக்க முடியும். ஹனி ஹனி – என்றொரு பாடல். சயனோரா என்றொரு  பெண் பாடியிருக்கிறார். மின்காந்தக் குரல் என்று சொல்லலாம். படு வித்தியாசம். பாடல்  சுமார்தான். அடுத்து குறிப்பிடத்தகுந்த பாடல் ‘விழி மூடி..’ – எல்லாப் பாடல்களிலும்  சரணங்களுக்கு இடையில் வரும் இசை ஈர்க்கிறது. கட் செய்து மொபைல் ரிங்டோனாக வைத்துக்கொள்ளலாம்.

இந்த ஐந்தைத் தவிர சொல்ல வேண்டிய ஆறாவது படம் – ஆனந்த தாண்டவம். அதில்  குறிப்பிடத்தகுந்த பாடல் ‘கனா காண்கிறேன்’. ஜிவி பிரகாஷ் – எப்போதாவதுதான்  வெளியே தெரிகிறார்.

(பின்குறிப்பு : மேலே உள்ளவற்றை இசை விமரிசனமாகக் கருதி நீங்கள் படித்தால்  நான் பொறுப்பல்ல.)