லவ்வைச் சொல்ல சில ஜிவ் வழிகள்!

அ,ஆவை தலைகீழா சொல்ல முடியுமா? 4576347 X 537.82733 = எவ்வளவுன்னு கால்குலேட்டர் இல்லாம சொல்ல முடியுமா? கந்த சஷ்டி கவசத்தை இங்கிலீஷ்ல சொல்ல முடியுமா? ‘கோலங்கள்’ சீரியல்கில்லர் என்னிக்கு முடியும்னு சொல்ல முடியுமா? ‘இது என்னவே பெரிய விசயமாக்கும், சொல்லிடலாம்’னு மல்லுக்கு நிக்கிறீங்களா! உங்க காதலை உங்க காதலிக்கிட்ட தைரியமா சொல்ல முடியுமா? என்ன தயங்குறாப்ல தெரியுது. இதுக்காகவே புதுசா ஒரு பொஸ்தகம் வந்திருக்கு. ‘லவ்வைச் சொல்ல சில ஜிவ் வழிகள்!’ இதான் அதோட டைட்டில்! இதை எழுதுனவரு பேரை அடிக்க மறந்துட்டாங்க! அட, விலையைக் கூட போடலைன்னா பாத்துக்கோங்களேன். ஆனா, இப்போ சந்தையில டான் ப்ரௌனுக்கு பொஸ்தகளுக்கு அப்புறமா இதுதான் சக்கைப்போடு போடுது! அந்த பொஸ்தகத்திலிருந்து.

லவ் @ லாஸ்ட் நிமிடம்!

உங்க காதலி என்னிக்காவது எங்கேயாவது வெளியூருக்கு கிளம்பலாம், அது என்னிக்கு, எப்படின்னு தெரிஞ்சு வைச்சுக்கோங்க. இப்ப உதாரணத்துக்கு உங்க காதலி சொப்னா, கும்மிடிப்பூண்டிக்கு ‘கூ குச் குச்’ வண்டியில கிளம்பலாம். இன்னும் ரெண்டே நிமிசம்தான் இருக்கு ரயிலு கெளம்ப. ‘நான் போயி தண்ணி புடிச்சிட்டு வாரேன்’னு பாட்டிலோட நீங்க எங்கியாவது தள்ளி போயி நின்னுக்கணும். ரெட்டு லைட்டு, ஆரஞ்சாகி, பச்சையா பல்லைக்காட்டும். ரயிலு நகர ஆரம்பிக்கும். நீங்க ‘ச்ச்சொப்புனாஆஆ…’ன்னு கத்திக்கிட்டே தண்ணி பாட்டிலோட அங்கேயிருந்து ஸ்டைலா ஓடி வர ஆரம்பிக்கணும். நாலு பேர் மேல மோதணும், ரெண்டு தடவ லக்கேஜ் தட்டி விழணும். நீங்க இப்படி பரபரப்பா ஓடி வர்றதை உங்க காதலி படபடப்பா பாக்கணும். ‘இந்தா புடிச்சுக்கோ’ன்னு பாட்டிலை அந்தக் கடைசி நிமிசத்துல அவ கையில கொடுக்கறப்போ, ‘ஐ லவ் யூ’ன்னு ஒரு குட்டி பேப்பர்ல (ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம) எழுதிக் கொடுத்துரணும். அந்த ‘லவ் @ லாஸ்ட் நிமிட்’ல காதல் குபீர்னு பத்திக்க 99% சான்ஸ் இருக்குன்னு ‘லவ்வாயணம்’ சொல்லுது. சொப்னா சட்டுன்னு செயினைப் புடிச்சி இழுத்து ரயிலை நிறுத்தி இறங்கி வந்து கையை நீட்டி…. ‘நாலு அறை’ கூட விடலாம். யாரு கண்டா!

ரெமோ நமஹ!

பஸ் ஸ்டாப்ல சொப்னா நிக்கிறா! உங்க காதலியை விட அதிகமான முடியை நீங்க வைச்சிக்கிட்டு, 300கிலோ வெயிட் உள்ள பைக்ல ஸ்டைலா (உருட்டிட்டு போயாவது) நிக்கணும். அவ கண்ணை நேருக்கு நேரா, 90டிகிரியில பார்த்து, அவ முகத்து பக்கத்துல உங்க முகத்தை கொண்டு போயி (கண்டிப்பா பல் தேய்ச்சிருக்கணும்) ‘இருக்கு. புடிச்சிருக்கு. உன்னை. மனசை. காதலை. எல்லாம். புடிச்சிருக்கு. காதலிக்கிறேன்’னு அவளுக்கு மட்டுமாவது கேக்குற மாதிரி சொல்லணும். அவ அதிர்ந்து நிக்கிறப்போ, ‘நம்பலேல. நீ என்னை நம்பலேல..’ன்னு சொல்லிக்கிட்டே அப்படியே திரும்பாம ரெமோ ஸ்டைல்ல ரோட்டை பின்பக்கமா நடந்தே கிராஸ் பண்ணனும். (ரெட் சிக்னல் விழுந்திருக்குற நேரம் பாத்து கிராஸ் பண்ணனும். இல்லேன்னா மவனே சட்னிதான்!) இப்படியே குறைஞ்சது பதினாலு தடவையாவது செஞ்சா லவ் சிக்னல் கெடைக்க வாய்ப்பிருக்கு. இல்லாட்டி, அவளுக்கு பஸ் கிடைச்சிருக்கும், ஏறிப் போயிருப்பா!

கவிதையே தெரியுமா!

கவிப்பித்தன், காதல் அடியாள், ரொமான்ஸ்தாசன், ரோமியோநேசன் இப்படி யார்கிட்டயாவது போய் கடன் கேளுங்க. பணம் இல்லீங்க, உங்க மனசை அவகிட்ட ‘படார்’னு தொறந்து காட்டுற மாதிரி ஒரு கவிதையை செஞ்சு தர சொல்லுங்க! யாரும் கிடைக்கலியா.. கழுத, கவிதைதானே. எழுதிட்டாப் போச்சு. 5 இங்கிலீசு வார்த்தை, 4 1/2 தமிழ் வார்த்தை, 25 கிராம் மானே, மீனே போட்டு தாளிச்சு, மேலே ரெண்டு ஆச்சரியக் குறியைத் தூவி இறக்கிட்டா சுடச்சுட கவிதை ரெடி! இப்ப உதாரணத்துக்கு,

‘சன்னைத் தின்ன முடியாது – மானே
உன் கண்ணு சன்னு!
பப்ஸைத் தின்ன முடியும் – மீனே
உன் லிப்ஸ் பப்ஸ்!
ரோஸுக்கு நோஸ் கெடையாது – தேனே
உன் நோஸ் ரோஸ்!
சொப்னா!
என் எதயம் ஒரு Hard Disk!
நீ வந்துப்புட்ட –
இனி அது Heart Disk!
நீ உன் எதயம் give.
நான் என் எதயம் give.
அதுக்குப் பேருதான் லவ்வு!

இப்படி ஜிவ்வுன்னு ஒரு கவிதைய போட்டுத்தாக்கினா அதுக்குப்புறம் சான்ஸே இல்லை. அட ஆளு மயங்கிடும்பா!

50 பைசா காதல்!

டவுன் பஸ். முதல் சீட்டில் சொப்னா! நல்ல கூட்டம். ‘கொருக்குப்பேட்டை ஒண்ணு’ன்னு டிக்கெட்டுக்கு உங்ககிட்ட பத்துரூபாய பாஸ் பண்ணுறா! நீங்களும் கண்டக்டர்கிட்ட அந்த ‘புனித’ நோட்டை அனுப்பி விடுறீங்க! ’50 பைசா சில்லறை வேணும்’னு கண்டக்டர் கேப்பாரு. நீங்க யோசிக்காம 50 பைசாவை கர்ணப்பிரபுவா எடுத்து நீட்டி அந்த டிக்கெட்டை எப்படியாவது சொப்னாவுக்கு வாங்கி கொடுத்துரணும். சொப்னா அவசரமா அவளோட குட்டி ஹாண்ட்பேக்ல ஒரு குகையில இருந்து 50 பைசாவை எடுத்து ‘தாங்க்ஸ்’னு நீட்டுவா! உடனே கருமம் புடிச்ச மாதிரி வாங்காம, ‘எனக்கு 50 பைசா வேண்டாம், இந்த 50 கிலோ மிராண்டா பாட்டிலோட இதயம்தான் வேணும்’ பளிச்சுன்னு ஒரு பஞ்ச் டயலாக்கை நெஞ்சுல இருந்து எடுத்து விடணும். அப்புறமென்ன, உங்களுக்கு பாலிஷ் போட பஸ்சு 50அடி தள்ளிப்போய் போலீஸ் ஸ்டேஷன்ல போய்கூட நிக்கலாம்.

போஸ்டர் விடு தூது!

சொப்னா நாய்க்குட்டிக்கு பொறந்த நாளா, அவ பாட்டிக்கு (12வது தடவையா) 51வது பொறந்தநாளா, அவளோட பாசத்துக்குரிய பக்கத்து வீட்டு தாத்தா மண்டையப் போட்டுட்டாரா, அவளோட பேவரிட் ஸ்டார் ஹிரித்திக் ரோஷன் படம் ரிலீஸ் ஆகுதா, உடனே நீங்க போஸ்டர் அடிச்சு ஒட்டிரணும். சொப்னாவுக்கு இன்னும் ரெண்டு மாசத்துல பொறந்தநாள் வருதா? முடிஞ்சா இப்பவே கட்-அவுட் வைச்சிருங்க! இப்படியே போய்க்கினு இருந்தா ஒரு நாள் ‘ஏன் இப்படி பண்ற?’ன்னு சொப்னா கேட்பா! அப்ப காதலை கண்டமேனிக்கு கொட்டிரணும். அப்பவும் உட்டுட்டா, அவ கல்யாணத்துக்கும் நீங்கதான் போஸ்டர் அடிக்கணும் மாமூ!

SMS புரட்சி!

காதலை நேரே சொல்லப்போனா உதடு ‘ஒத்துழையாமை இயக்கம்’ நடத்துதா! கவலையை விடுங்க! இருக்கவே இருக்கு செல் பேசும் வார்த்தைகள், அதாம்பா SMS. அதுலயும் ‘I LOVE YOU!’ அப்படிங்கிற வார்த்தை மொத்தமா அனுப்ப விரலு மிரளுதா? தவணை மொறையில ஒவ்வொரு எழுத்தா குழப்பி குழப்பி அனுப்புங்க. ஆனா எப்படியாவது தைரியத்தை வரவழைச்சுக்கிட்டு ஒரு மாசத்துக்குள்ள மொத்த எழுத்துக்களையும் அனுப்பி வைச்சுருங்க! இது ரொம்ப பாதுகாப்பான வழி. இதுல உள்ள ஒரே ஒரு சின்ன ரிஸ்க். சொப்னா மெஸேஜை ‘Y I LOVE U’ன்னு தப்பா புரிஞ்சுக்கூட வாய்ப்பிருக்கு! காதல்ல இதெல்லாம் சகஜம்பா!

ஆமா, இவ்வளவு அருமையான பொஸ்தகம் எங்க கிடைக்குதுன்னு சொல்லவே இல்லீயே வருத்தப்படாதீங்க. மொத்த பொஸ்தகமே இம்புட்டுத்தான்.
(ஒரு சின்ன திருத்தம்: பொஸ்தகத்தின் தலைப்பு மேலே தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. நிஜமான தலைப்பு இதுவே : ‘லவ்வைச் சொல்லக்கூடாத சில ஜிவ் வழிகள்!’ )

**(சில வருடங்களுக்கு முன் தினமணி கதிரில் எழுதியது.)

Alt + Ctrl + Del ஆகாஷ்!

(இந்தக் கட்டுரைகளில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள், உரையாடல்கள் யாவும் கற்பனை அல்ல. உங்களைக் குறிப்பிடுவதாகக் கூட இருக்கலாம். ஹிஹிஹி… )
1998

‘சுளையா… சுளை சுளையா செமஸ்டருக்கு செமஸ்டர் முப்பதாயிரம் ரூவா கட்டிருக்குலே… எப்படியாவது அரியர்ஸையெல்லாம் க்ளியர் பண்ணிருலே’ன்னு உள்மனசு கிடந்து குய்யோ முய்யோன்னு கதறுது! இப்பத்தான் பிஎஸ்சி மேத்ஸ் முடிச்சு, எம்சிஏ சேர்ந்தாப்புல இருக்குது. ஆனா வெட்டியா விமலாகிட்ட கடலை போட்டதுலயே ரெண்டரை வருசம் ஓடிப்போச்சு.

மவனே இதுவரைக்கும் அஞ்சு அரியர்ஸ் வைச்சிருக்க. இந்த அஞ்சாவது செமஸ்டர்லயும் எண்ணிக்கையைக் கூட்டிடாத, நெஞ்சு தாங்காது. நாளைக்கு ஆரக்கிள் பேப்பர் இருக்குடா, படிடா மவனே… படிடா… அய்யோ இன்னிக்குன்னு பார்த்து கிரிக்கெட் மேட்ச் நடக்குதே. ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு டீவியைப் போடலாமா..?

1999

என்னடா இவங்க நமக்கு மேல ஃப்ராடா இருக்கானுங்க. இது எனக்கு பைனல் செமஸ்டர். ஏதாவது ப்ராஜெக்ட் தேடலாம்னு சென்னைக்குக் கிளம்பி வந்தேன். பெரிய கம்பெனிக்காரங்க எல்லாம் ‘நோ என்ட்ரி’ன்னு தொரத்துனான். சரி, எதாவது சின்ன கம்பெனியாப் பாத்து பட்டறையைப் போடலாமுன்னு ‘ப்ராஜெக்ட்ஸ் அவைலபிள்’ பேப்பர் வெளம்பரம் பார்த்து இந்த இடத்துக்கு வந்தேன். இனிக்க இனிக்கப் பேசி பத்தாயிரம் குடுன்னு பதவிசா கேட்டான். சரி, இப்பவாவது ஏதாவது கத்துக்கலாமேன்னு சொல்லி நானும் கொடுத்தேன். வீக்லி டென் ஹவர்ஸ். அதுல டூ ஹவர்ஸ் சிஸ்டம் யூஸ் பண்ணலாமுன்னு சொன்னாங்க. ஆனா அவங்க கொடுத்த சிஸ்டத்துல வீபி, ஆரக்கிள்னு ஒரு எலவும் இன்ஸ்ட்டாலே பண்ணலை. வெறுமன கம்ப்யூட்டர்ல சீட்டு விளையாண்டுகிட்டு இருந்தேன்.

ரெண்டு மாசம் முடிஞ்சே போச்சு. இன்னிக்கு மூஞ்சிக்கு முன்னாடி, ‘ஹாஸ்பிடல் மேனேஜ்மென்ட்’, ‘லைப்ரரி மேனேஜ்மென்ட்’, ‘பில்லிங் மேனேஜ்மென்ட்’னு மூணு சர்ட்டிபிகேட்டைத் தூக்கிப் போட்டு, ‘உன் ப்ராஜெக்ட் முடிஞ்சுது. இதுதான் சர்ட்டிபிகேட். எது வேணுமோ எடுத்துக்கோ’ன்னு சொல்லுறான். அடங்கொக்கமக்கா… ப்ராஜெக்ட் வைவா-ல எப்படிச் சமாளிக்கப் போறேன்னு தெரியலயே?

2000

வேலை தேடப் போறேன்னு சென்னைக்கு வந்து செங்கல்லை நட்டியாச்சு. மூணு மாசமாச்சு. வீட்டுல இருந்து வர்ற பணத்துல, பக்கத்துல இருக்கு மெஸ் புண்ணியத்துல வாழ்க்கை சுமுகமா ஓடிக்கிட்டிருக்கு. திநகரு, ஸ்பென்ஸர் ப்ளாசா, பெசண்ட் நகர் பீச்சுன்னு எதோ ஃபிகரும் பீருமா டைம் பாஸாகுது.

ஆனா எதாவது கம்பெனில இன்டர்வியூக்குன்னு போனா, முத ரவுண்டுலயே நம்ம முகமூடி டார்டாரா டர்ராயிடுது. வீபி, ஆரக்கிள், சி++… இதெல்லாம் படிச்சிருக்கேன்னு சொல்லி வெளிய தலைகாட்ட முடியல. எவனாவது ஒருத்தன் வீபி கத்துக்குறதுக்குன்னு சம்பளம் இல்லாம வேலை கொடுத்தாக் கூட சேர்ந்துரலாம். அவனவன் கேக்குற கேள்வியைப் பார்த்தா, ஜப்பான்காரன் பாஷை மாதிரி புரியவே மாட்டிங்குது.

இப்படியே போய்க்கிட்டிருந்தா சென்னைல நீ கிழிச்சது போதும், ஊரு பக்கமா வந்து நம்ம கடையிலேயே உக்காந்து வியாபாரத்தைப் பாருன்னு உத்தரவு போட்டுருவாரு எங்கய்யா. இப்போதைக்கு பிஎஸ்சின்னு குவாலிபிகேஷனைக் காட்டி, ஏதாவது டேட்டா என்ட்ரி வேலைக்குப் போகலாம். மாசம் ரெண்டாயிரம் ரூவா கிடைக்கும்.

2001

அரியர்ஸ் கணக்கை அப்படி இப்படி பார்டர்ல பைசல் பண்ணியாச்சு. ஆகாஷ் எம்சிஏன்னு வருங்காலத்துல என் கல்யாணப் பத்திரிகைல வக்கணையாப் போட்டுக்கலாம். கூடிய சிக்கீரம் இந்த எழவு டேட்டா என்ட்ரியை விட்டு வெளிய வரணும். விட்டா, இதுலயே சிக்கிச் சீரழிஞ்சு முன்னேறிறுவேனோன்னு பயமா இருக்கு.

பீல்டு மாறணும். ஆங்.. அது என்ன.. ஆரக்கிள்… ஆரக்கிள்… அதுல அட்வான்ஸ் கோர்ஸ் ஏதாவது சேர்ந்து, அதையாவது ஒழுங்காப் படிச்சு, நல்ல வேலைக்குப் போகணும். கூட படிச்சவனெல்லாம் பத்தாயிரம், பதினைஞ்சாயிரம் சம்பாதிக்கிறேன்னு மெயில் அனுப்பி வயிறெரிய வைக்குறானுங்க. விமலாக்கு வேற கல்யாணம் ஆயிருச்சு. அடுத்த வாரம் புருஷனோட யுஎஸ் போறாளாம். டேய் ஆகாஷு, உன் வாழ்க்கை என்னடா இன்னும் boot ஆகாத சிஸ்டமாவே இருக்கு?

2002

‘டேட்டாவேர்ல்ட் கம்பெனில சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டரா ஒரு வருஷம், ஜே&ஜே பிரைவேட் லிமிடெட்ல ப்ரோகிராமரா ஒன்றரை வருஷம், அப்புறம் அது என்ன, ஆங் ஸ்வஸ்திக் சாஃப்ட்வேர்ஸ்ல ஆரக்கிள் ப்ரோகிராமரா கடந்த ரெண்டு வருசமா வேலை பார்த்துக்கிட்டிருக்கேன். இப்போ நான் வாங்குற சம்பளம் எட்டாயிரம்’ – இந்த டயலாக்கை நியாபகப்படுத்தி சொல்லிப் பார்த்துக்குவேன். ஏன்னா அப்படித்தான் என்னோட ரெஸ்யூம்ல போட்டிருக்கேன்.

ஆமாங்க… Fake-தான். 100% சுத்தமான பொய்களால் நிரப்பப்பட்ட ரெஸ்யூம்தான். ‘Fake போட்டு வாழ்வாரே வாழ்வார் –  மற்றோரெல்லாம் பிழைக்கத் தெரியாதவர்’-னு வள்ளுவரே சொல்லியிருக்காரே! ஆரக்கிள்ல அட்வான்ஸ்  கோர்ஸ் ஒண்ணு படிச்சிட்டு நானும் கடந்த ஆறு மாசமா, இதே Fake ரெஸ்யூமோட கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கிட்டிருக்கேன். எதாவது கன்டிஷனைச் சொல்லி, query எழுதச் சொல்லுறான். worry ஆகிப் போகுது. எப்படி ஒரு டேட்டாபேஸை backup எடுப்பேன்னு கேக்குறான். அதுல நான் pack-up ஆயிடுறேன். பிள்ளையாரே, எனக்கு மட்டும் ஒரு வேலை கிடைச்சுட்டா, 1008 ஆரக்கிள் query எழுதி உனக்கு மாலையாப் போடுறேன்.

2003

டேய் ஆகாஷு… உன்னையும் நல்லவன்னு நம்பி ஒருத்தன் வேலை கொடுத்துட்டான்டா! சம்பளம் வேற 15000-னு சொல்லிட்டான். ஜாய்ன் பண்ணி ஒரு வாரமாச்சு. எந்த ப்ராஜெக்ட்ல போடப் போறாங்கன்னு தெரியல. ஏதோ சமாளிக்கிற அளவுக்கு ஆரக்கிள் தெரியும், எடக்குமடக்கா ஏதாவது வேலை கொடுத்து, கோக்குமாக்க நான் முழிச்சி, இவன் Fake-தான் கண்டுபிடிச்சிருவாங்களோன்னு அடிவயிறு ரிமைண்டர் வைச்சு அரை மணி நேரத்துக்கு ஒருமுறை கலங்கிக்கிட்டே இருக்கு.

இவ்வளவு நாள், மாசம் ரெண்டாயிரத்தை வைச்சே இன்பமா வாழ்ந்துட்டேன். இனிமே மாசம் 15000 ரூபா வரப் போகுதே.. அவ்வளவு பணத்தை எப்படிச் செலவழிக்க? பீட்ஸா, பீட்டர் இங்கிலான்ட், கிரெடிட் கார்டு, டிஸ்கோதேன்னு உன் வாழ்க்கையே மாறப் போகுதுடா மச்சான்!

2004

ங்கொய்யால… பதினைஞ்சாயிரம் சம்பளம் கொடுத்துட்டு, முப்பதாயிரத்துக்கு வேலை வாங்குறானுங்க. கடைசியா என்னிக்கு வீட்டுக்குப் போனேன்னு மறந்து போச்சு. தீவாளிக்கு லீவு தர மாட்டேனுட்டானுங்க. கேட்டா, யுஎஸ் க்ளையண்ட். தீவாளி அன்னிக்கி முக்கியமான call வரும். இருந்தே ஆகணுங்கிறாரு என்னோட ப்ராஜெக்ட் மேனேஜர். நான் எப்படியோ போராடி ஒருநாள் லீவு வாங்கி, ஊருக்குக் கிளம்பிட்டேன்.

பஸ், டிரெயினு எதுலயும் டிக்கெட் இல்லாம கஷ்டப்பட்டு, ஒரு டப்பா ப்ரைவேட் பஸ் புடிச்சு ஊர் பக்கத்துல போறேன். கம்பெனில இருந்து போன் வருது. ‘ஆகாஷ், உடனே கிளம்பி வாங்க. கோடிங்ல நிறைய bugs இருக்கு’ன்னு ப்ராஜெக்ட் மேனேஜர் மிரட்டுறாரு. ‘சார் இப்பத்தான் ஊருக்குள்ளேயே போகப் போறேன்’னு பரிதாபமா சொல்லுறேன். ‘நோ ப்ராப்ளம். அடுத்த பஸ்ஸைப் பிடிச்சு வந்திருங்க’ன்னு கூலா சொல்லுறாரு. ம்ஹூம்… இனிமே தாங்காது. கம்பெனி மாறிட வேண்டியதுதான்.

2005

இந்த வருசத்துலேயே ரெண்டாவது கம்பெனி மாறப்போறேன். வருசத்துக்கு நாலு லட்சம் தர்றேன்னு சொல்லிருக்கான். லாப்டாப் தர்றதாவும் சொல்லிருக்கான். ரெண்டு வருசத்துக்கு முன்னாடி 50 கிலோ இருந்த நான், இப்ப 80-ஐத் தொடப் போறேன். தொப்பையைக் குறைக்கணும். ஜிம் போகணும். ஏன்னா வீட்டுல பொண்ணு பாக்குறாங்க.

2006

நான் இப்போ பிஎம் ஆகிட்டேன். அதான் ப்ராஜெக்ட் மேனேஜர். இப்ப கொஞ்ச பேரை இண்டர்வியூ எடுத்துக்கிட்டிருக்கேன்.

‘பேரு என்ன, சுபாஷா? ஓகே… SQL-ல உங்க ஸ்டிரென்த் என்ன? இப்ப எங்க வொர்க் பண்ணுறீங்க? ஆரக்கிள் ப்ரொகிராமரா எத்தனை வருஷம் எக்ஸ்பீரியன்ஸ்? ஓகே வீ வில் கால் யூ லேட்டர்’

அந்தப் பையன் போயிட்டான். நான் அவனை செலக்ட் பண்ணப் போறதில்லை. முசப் புடிக்குற நாயை மூஞ்சப் பார்த்தா தெரியாதா! ரெஸ்யூம் சுத்த Fake. அதை வெச்சிக்கிட்டு என்கிட்டயே டகால்டி வேலை காட்டுறான். இன்டர்வியூல எப்படியெல்லாம் நடிக்கணும்னு அவன் இன்னும் பழகல. போகப் போக கத்துக்குவான். நாங்கள்ளாம் எவ்ளோ கஷ்டப்பட்டோம் தெரியும்ல?

# கிழக்கு வெளியீடு : லொள் காப்பியம்