கெளம்பிட்டாருயா சுப்புடு!

சமீபத்தில் கேட்ட பாடல்களில் என்னைக் கவர்ந்தவை மட்டும் இங்கே :

அவன் இவன் (யுவன் ஷங்கர் ராஜா)

சுசித்ரா குரலில் டியா டியா டோலே என்ற தீம் இசைதான் கேட்டதிலிருந்தே மனத்துக்குள் சடுகுடு ஆடிக் கொண்டிருக்கிறது. உற்சாகத் துள்ளல் இசை. அதன் பின் பாதியில் வரும் கிராமிய இசை, அப்படியே நம்மை ஊர்ப்பக்கம் நடக்கும் ‘கோயில் கொடை’க்கு தூக்கிச் சென்று விடுகிறது.

ராசாத்தி போல – ஹிட் ஆவதற்குரிய இசைக்கலவை, ஏற்ற இறக்கங்கள், மாய வார்த்தைகள் கொண்ட பாடல். பிடித்திருக்கிறது. இருந்தாலும் காட்டுச் சிறுக்கியே என்ற வார்த்தை மட்டும் ராவணனால் தொந்தரவு கொடுக்கிறது.

ஒரு மலையோரம் – அருமையான மெலடி. எப்போதும் பச்சை (Ever green) ரக பாடல். ஏர்டெல் சூப்பர் ஜூனியர் சிங்கர்ஸ் ஸ்ரீநிஷா, பிரியங்கா, நித்யஸ்ரீயுடன் விஜய் யேசுதாஸ் பாடியிருக்கிறார். இளையராஜாவின் பழைய சரக்குதான் என்றாலும் அவன் இவனில் எனக்கு மிகப் பிடித்த பாட்டாக இது உள்ளுக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறது.

முதல் முறை, அவனைப் பத்தி – இரண்டுமே காட்சிகளுடன் பார்க்கும்போது, பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கிறேன். இரண்டு பாடல்களிலுமே மரணத்தின் வாசனை தூக்கலாக இருக்கின்றன. அவனைப் பத்தி பாடலில் – சாவு மோளத்தின் பின்னணியில் ஹீரோக்களின் ஆரம்பப் பாடல்போல இருக்கிறது. பாலாவின் டச்! டி.எல். மகாராஜன் குரல் – அதிர்வுகளை ஏற்படுத்துவது உண்மை.

அவன் இவன் – பாலாவின் காமெடி படமென்று கேள்விப்பட்டேன். இல்லையோ?

காதல் 2 கல்யாணம் (யுவன் சங்கர் ராஜா)

எனக்காக உனக்காக – யுவன் டெம்ப்ளேட் டூயட் – நரேஷ், ஆண்ட்ரியா குரல்களுக்காக, கேட்கக் கேட்க பிடிக்கும்.

குறிப்பு : இதே படத்தில், நான் வருவேன் உன்னைத் தேடி, தேடி உன்னை நான் வருவேன், வருவேன் தேடி நான் உன்னை, உன்னை வருவேன் தேடி நான், தேடி வருவேன் நான் உன்னை – இந்த வார்த்தைகள் கூட்டணியில் ஒரு பாடல் இருக்கிறது. கேட்காதீர்கள் 😉

180 (இசை : Sharreth – தமிழ்ல என்ன ஸ்பெல்லிங்?)

கார்க்கியின் வரிகளில் சிறுசிறு கண்ணில் – உத்வேகமூட்டும் வித்தியாசமான பாடல். பாடியிருக்கும் சிறுவர்களின் குரல்கள், பாடலைக் கவனம் பெற வைக்கின்றன.

AJ என்றொரு பாடல் – முழுவதும் கேட்கத் தோன்றுகிறது. மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. ஆனால் பாடலைப் புரிந்துகொள்ள தமிழோடு பிரெஞ்ச், ஜப்பானிஷ், ஆங்கிலம் உள்ளிட்ட ஏகப்பட்ட மொழிகள் தெரிந்திருக்க வேண்டும்போல.

தெய்வத் திருமகன் (ஜி.வி. பிரகாஷ்)

விழிகளில் ஒரு வானவில் – இசையமைப்பாளரின் வருங்கால மனைவி பாடிய பாடல். கேட்க இதமாகத்தான் இருக்கிறது. பண்பலை வானொலிகள் மூலம் ஹிட் ஆக ஆரம்பித்துவிட்டது. இருந்தாலும் இருபதோடு இருபத்தொன்றாகத்தான் இருக்கிறது.

இந்த ஆல்பத்தில் என்னைக் கவர்ந்த பாடல்கள் இரண்டு. இரண்டுமே விக்ரம் பாடியவை : பாப்பாப் பாட்டு, கதை சொல்லப் போறேன். இரண்டுமே குழந்தைத்தனமான பாடல்கள். அதனால்தான் எனக்குப் பிடித்திருக்கிறதுபோல.

ஆரிரோ ஆராரிரோ – நான் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கும் பாடல் இது. நா. முத்துக்குமாருக்கும் பெயர் கொடுக்கும் இன்னொரு பாடல், பாடகர் ஹரிசரனுக்கும். இசையில் புதிதாக எதுவும் தெரியவில்லை என்றாலும் மனதோடு ஒட்டிக் கொள்ளும் வகையில் கட்டமைக்கப்பட்ட பாடல்.

கோ – படம் சென்றிருந்தேன். இடைவேளையில் தெய்வத்திருமகன் டீஸர் காண்பித்தார்கள். விக்ரம், ஜன்னலைத் திறந்துகொண்டு வந்து, மழலையாகப் பேசும்போது… தியேட்டரே கேலியாகச் சிரிக்கிறது. இந்தப் படத்தைப் பார்க்க நினைத்தால்கூட தியேட்டரில் பார்க்கவிட மாட்டார்கள்போல!

வைரமுத்துவின் கவிதைகள் சில வைரமுத்துவின் குரலில், ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் பல காலத்துக்கும் முன் வந்திருக்கிறது. அந்த அபூர்வ புதையல் இங்கே.