தீபாவளி தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன!

வேற வழியே இல்லை. போற போக்கைப் பார்த்தா அப்படித்தான் நடக்கும்னு தோணுது. பிழைப்புக்காக சென்னைக்கு வந்த பிற பகுதி தமிழகத்து மக்கள் எல்லாம் 2011ல (அதாவது சமக தலைவர் சரத்குமார் முதல்வர் ஆகப்போற வருஷம்) இப்படித்தான் ஊருக்குப் போவாங்கன்னு தோணுது!)

காலங்கார்த்தால அலாரம் வைச்சு எழுந்து, படபடன்னு சிஸ்டம் ஆன் செஞ்சு, நெட் கனெக்‌ஷனை ஆன் பண்ணி, எப்போ ரயில்வே டைம் எட்டு ஆகும்னு செம விழிப்புணர்வோட படு வேகத்துல ரயில்வே டிக்கெட் பதிவு செஞ்சாக்கூட, வெயிட்டிங் லிஸ்டுன்னு நடுமண்டையில ஒரு சுத்தியல் அடி நங்குன்னு விழுகுது. (டிக்கெட் கவுண்டரில் முன்பதிவுக்காக ஏமாந்து நிற்கும் ஆயிரக்கணக்கான சக பயணிகளே எம்போன்ற கிராதகர்களை மன்னிப்பீராக!)

வருங்காலத்தில் ஏராளமான சிறப்பு ரயில்களோ, பேருந்துகளோ விட்டால்கூட கட்டுப்படியாகாது என்றே தோன்றுகிறது. அவரவர் இருக்கும் இடத்திலேயே பண்டிகை கொண்டாடிக் கொள்ள வேண்டியதுதான். அதையும் மீறி சொந்த ஊரில் மாமன் மச்சான்களோடுதான் பண்டிகை கொண்டாடுவோம் என்று மக்கள் அடம்பிடிக்கும் பட்சத்தில் அரசிடம் இருந்து ஓர் அறிவிப்பு வெளிவரும். (தேர்தல் அறிவிப்புபோல.)

‘தீபாவளி பண்டிகைக்கான கொண்டாட்ட தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வருகின்ற அக். 17 அன்று சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கும், அக். 19 அன்று தூத்துக்குடி, ஈரோடு, இராமநாதபுரம் மாவட்டங்களுக்கும், அக். 21 அன்று திருநெல்வேலி, பெரம்பலூர், சேலம், கடலூர் மாவட்டங்களுக்கும், அக். 23 அன்று கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் தீபாவளி கொண்டாட தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ரயில் பயணச் சீட்டு முன்பதிவு ஆரம்பமாகும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் ஜே.கே. ரித்தீஷ் அறிவித்துள்ளார்.’

இன்னொரு விஷயம் தெரியுமா! தொடர்ந்து உங்களுக்கு ரயில்ல டிக்கெட்டே கிடைக்கலேன்னா உங்க ஜாதகத்துல ஐஆர்சிடிசி தோஷம் இருக்குதுன்னு அர்த்தம். அதுக்கு பரிகாரமா தொடர்ந்து அஞ்சு வாரம் மம்தா பானர்ஜிக்கு மாவிளக்குப் போட்டா எல்லாம் சரியாகிரும். ஓகேவா!

லாலுவுக்கு ஒரு வேண்டுகோள்!

அதிகாலை ஏழு அம்பதுக்கு என் செல்ஃபோன் சிணுங்கும். நண்பர்களோ உறவினர்களோ யாராவது  இருக்கும். எடுத்து காதில் வைப்பேன்.

‘டேய், வீட்லதான இருக்க? வர்ற சண்டே, எங்கம்மாவை ஊர்ல இருந்து அழைச்சுட்டு வர்றேன். தி ருநெல்வேலில இருந்து. தட்கல்ல டிக்கெட் போடணும். எதுல இருக்குதுன்னு பார்த்து எனக்கு ஃபோன் பண்ணு. ம்.. வேணாம், நீயே புக் பண்ணிடு. எனக்கும் அம்மாவுக்கும். அம்மா வயசு  அம்பத்தியாறு.’

வைத்துவிடுவார்கள். செல்லில் மணி பார்ப்பேன். ஏழு அம்பத்துரெண்டு. இன்னும் எட்டு நிமிடங்கள்தான் இருக்கின்றன. தட்டுத்தடுமாறி எழுந்துநிற்பேன். சுவிட்சைத் தட்டுவேன். ரேடியோ  ஒன்னில் சுச்சியின் குரல் குட்மார்னிங் சொல்லும். பக்கத்து அறைக்கு நகருவேன். யுபிஎஸ்ஸின்  முனகலுடன் சிஸ்டம் உயிர்த்தெழும். பிஎஸ்என்எல் மோடம் பல்புகளால் சிரிக்கும். ஐஆர்சிடிசிக்குள்  லாக்-இன் ஆனபின் முகம் கழுவச் செல்லுவேன்.

வந்து உட்காரவும் ஐஆர்சிடிசியின் நேரம் ஏழு அம்பத்தொன்பதாக இருக்கும். பரபரப்பாவேன்.  இன்னொரு வின்டோவில் சதர்ன்ரயில்வே தளத்தில் ரயில்களையும் காலி இருக்கைகளையும்  தெரிந்துகொள்ள கண்கள் படபடக்கும். புறப்படும் இடம், சேருமிடம், தட்கல், பயணிகளின் விவரங்கள் விரல்களிலிருந்து சிதறிவிழும். பணம் செலுத்தும் ஆப்சனை க்ளிக் செய்யும் நேரத்தில் பெரும்பாலும் ராகுகாலம் ஆரம்பமாகும்.

ஒன்று ஐசிஐசியை தளம் வேலைசெய்யாது அல்லது பணம் செலுத்திய பின் சர்வர் எரர் வரும்.  டிக்கெட் பதிவு செய்யப்பட்டிருக்காது. மீண்டும் பரபரவென ஆரம்பத்திலிருந்தே ஆரம்பிக்கவேண்டும். அதற்கும் எல்லா டிக்கெட்டுகளும் தீர்ந்துபோய்விடும் அபாயம் நிறைய உண்டு. டிக்கெட்  புக் செய்யும் நேரத்தில் அவைலபிள்-ஆக இருக்கும். பணம் எல்லாம் செலுத்தியபின் வரும்  டிக்கெட்டில் வெயிட்டிங் லிஸ்ட் என பல்லிளிக்கும் சம்பவங்களும் சகஜம்.

நண்பனுக்கு ஃபோன் செய்வேன். ‘டேய், எல்லாம் காலி. ஏற்கெனவே ரெண்டுதடவை பணம் போயிருச்சு. ஒரே ஒரு ஸ்பெஷல் டிரெயின் விட்டிருக்கான். பகல் பதினொன்னுக்குத்தான் வந்து சேரும். முப்பதியிரெண்டு சீட் இருக்குது. போட்டுரவா?’

*

‘மாப்ளே, நவம்பர் 1 தீவாளி. நாளைக்கு புக்கிங் ஆரம்பமாகுது. உஷாரு!’

தீபாவளி, பொங்கல் என்றால் சரியாக தொன்னூறு நாள்களுக்கு முன்பாக டிக்கெட் புக் செய்ய ஒரு  பெரிய நெட்வொர்க்கே அமைத்து காலை எட்டுமணிக்காகக் காத்திருப்போம். ஆளுக்கு ஓர்  இடத்தில் இருந்துகொள்வோம். செல்ஃபோன்கள் தயார்நிலையில் இருக்கும்.

எட்டு மணிக்கு உள்ளுக்குள்ளிலிருந்து ஒரு குரல் அலறும்.. ‘ஃபயர்!’

‘டேய் எனக்கு ஐஆர்சிடிசிக்கு உள்ளேயே போகலடா. நீ பண்ணிரு’, ‘டேய் என் சிஸ்டம் ரீஸ்டார்ட்  ஆகியிருச்சு.’, ‘மச்சான், தூத்துக்குடி ஃபுல். அனந்தபுரில இருக்குது. சீக்கிரமா பண்ணுடா.’

தீபாவளி, பொங்கலை தூத்துக்குடி தவிர வேறெங்கு கொண்டாட முடியும்? பல்வேறு போராட்ட ங்களுக்குப் பிறகு தீபாவளிக்கான டிக்கெட் புக்கிங்கை செய்து முடிப்போம். அன்று  கிடைக்கவில்லையா? வேறுவழியில்லை, அடுத்தநாளைக்கு முயற்சி செய். துவண்டு விடாதே மனமே, தொடர்ந்து போராடு! உன் தீபாவளி உன் கையில்!

*

அலுவலக நண்பர்களுக்கு வெளியூரில் திருமணமா? ஏதாவது புத்தகக் கண்காட்சிக்கு வெளியூர்  செல்ல வேண்டுமா? அலுவலகத்தின் ஆஸ்தான ரயில்வே டிக்கெட் புக்கிங் வித்வான் முகிலைக் கூப்பிடுங்கள்!

‘மச்சான் நாளைக்குள்ள டிக்கெட்டை கேன்சல் பண்ணிருடா. அப்புறமா எவ்வளவு ஆச்சுன்னு சொல்லு. அனுப்புறேன்’ – இப்படி கேன்சல் சடங்குகளும் பொது வாழ்க்கையில் சகஜம். என்னுடைய பேங்க் ஸ்டேட்மெண்டை எடுத்துப் பார்த்தால், எனக்கும் ரயில்வேக்குமான பாசப்பிணைப்பு பளீரிடும். கொடுக்கல் நிறைய. வாங்கல் சற்றே நிதானமாகத்தான் நடக்கிறது. ஒவ்வொரு  டிக்கெட்டும் வங்கிகளுக்கு நான் கட்டிய கப்பத்தொகையை வைத்துமட்டுமே ஒரு நானோ கார் வாங்கியிருக்கலாம் போல!

*

ஒவ்வொரு இரவு தூங்குவதற்கு முன்பு நானும் சொக்கலிங்கமும் பேசிக்கொள்வோம். ‘நாளைக்கு யாருக்காவது டிக்கெட் புக் செய்யணுமா?’

இணையம், டிக்கெட் கவுண்ட்டரில் கால்கடுக்க நிற்கும் அவஸ்தைகளிலிருந்து விடுதலை கொடுத்திருக்கிறது என்றுதான் நினைத்தேன். ஆனால் அந்த சௌகரியம், இப்படி ஒரு ஏஜெண்ட் அவதாரத்தை எனக்கு அளிக்குமென நினைக்கவில்லை. இருந்தாலும் இணைய வசதியின்றி  கவுண்டரில் நிற்கும் சக மனிதர்களை நினைக்கும்போது உறுத்தலாகவே இருக்கிறது.

*

லாலுவுக்கும் வேலுவுக்கும் ஒரு வேண்டுகோள். டிக்கெட் பதிவு செய்வதில் எனது அனுபவம், வேகம், விவேகம், திறமை – இவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு மாம்பலம் ரயில்நிலைய பதிவுச்சீட்டு அலுவலகத்தில் பார்ட்-டைம் வேலை போட்டுக் கொடுப்பீர்களா?