ஆடியது காங்கிரஸ் கூடாரம்!

(தேர்தல் செய்திதான். ஆனால் கொஞ்சம் பழசு.)

சுதந்தரம், சமஸ்தானங்கள் இணைப்பு இவையெல்லாம் நிகழ்ந்த பிறகும் பல மகாராஜாக்களுக்குப் பழைய நினைப்பும் மிதப்பும் குறையவில்லை. சொல்லப்போனால் அதுவரை மன்னர் ஆட்சிக்குப் பழகியிருந்த மக்கள் மனத்தில் மகாராஜாக்களின் மீதான மதிப்பு குறையாமல்தான் இருந்தது.

1952. ராஜஸ்தான் மாநிலத்துக்கான முதல் சட்டசபை, இந்தியாவின் முதல் மக்களவைக்கான தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. ‘எவனாவது தேர்தல்ல நின்னீங்க, மானியம் கிடையாது’ என்று நேரு, முன்னாள் மகாராஜாக்களை மிரட்டியதாக ஒரு தகவல் உண்டு.

ஜோத்பூரின் கடைசி மகாராஜா ஹன்வந்த் சிங்கும் தேர்தலைச் சந்திக்கத் தயாரானார். காங்கிரஸோடு கூட்டணி அமைத்து போட்டிபோட நினைத்தார். பாதி தொகுதிகள் கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினார். உடன்பாடு ஏற்படவில்லை. தனித்து நிற்க முடிவு செய்தார்.

ஹன்வந்த் சிங்

காங்கிரஸார் கைகொட்டிச் சிரித்தார்கள். ‘நான் நிக்கவைச்சா ஒரு கல்லுகூட தேர்தல்ல ஜெயிக்கும்’ என்று சவால்விட்டு களமிறங்கினார் ஹன்வந்த் சிங். தனது ரதோர் பரம்பரையைச் சேர்ந்த பிரமுகர்களையெல்லாம் சேர்த்தார். முப்பந்தைந்து சட்டசபை, நான்கு பாராளுமன்றத் தொகுதிகளில் நிறுத்தினார். அவரு ஜோத்பூர் சட்டசபை, பாராளுமன்றம் இரண்டிலும் வேட்பாளராக நின்றார்.

‘போடுங்கம்மா ஓட்டு! ஒட்டகத்தைப் பார்த்து!’ – ஊர் ஊராகச் சுற்றினார். ‘நீங்கள் என் மக்கள். நீங்களே எனக்கான மானியம்!’ – ஹன்வந்த் சிங்குக்கு செல்லுமிடமெல்லாம் படுவரவேற்பு. காங்கிரஸ் கூடாரம் ஆடித்தான் போயிருந்தது. தேர்தல்கள் முடிந்தன. ஓட்டு எண்ணிக்கைகள் ஆரம்பமாயின (ஜனவரி 26). ஆரம்பத்திலிருந்தே ஒட்டகத்துக்கு நல்ல செய்திதான் வந்துகொண்டிருந்தது.

ஹன்வந்த் சிங்குக்கு குஷி தாங்கவில்லை. தனது மூன்றாவது மனைவியும் நடிகையுமான ஸுபைதாவை அழைத்துக்கொண்டார். இருவர் மட்டும் செல்லும் மினி விமானம் ஒன்றில் ஏறினார். மகிழ்ச்சியாக ஓட்ட ஆரம்பித்தார். விமானம் வானத்தில் சாகசம் செய்துகொண்டிருந்தது.

இரவு. நொறுங்கிக் கிடந்த விமானத்தில் இருந்து ஹன்வந்த் சிங்கின் உடலையும் ஸுபைதாவின் உடலையும் மீட்டெடுத்தார்கள். (ஹன்வந்த் சிங், ஸுபைதாவின் கதை, ‘ஸுபைதா’ என்ற ஹிந்தித் திரைப்படமாக வெளிவந்துள்ளது.) தேர்தல் முடிவுகள் முழுவதுமாக வெளியாகின. ஹன்வந்த் சிங்கின் வேட்பாளர்கள் 31 சட்டசபைத்தொகுதிகளிலும், 4 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தார்கள். அவரும் இரண்டிலும் வெற்றிபெற்றிருந்தார்.

காங்கிரஸின் முதலமைச்சர் வேட்பாளரான ஜெய் நாராயன் வியாஸுக்குப் படுதோல்வி. மகாராஜா இறந்த துக்கம், ஆத்திரம். வியாஸை ஜோத்பூர் மக்கள் நையப்புடைத்திருந்தார்கள். பின்பு இடைத்தேர்தல் ஒன்றில் வெற்றிபெற்றுதான் வியாஸால் முதலமைச்சர் ஆக முடிந்தது.