சென்னை புத்தகக் காட்சி 2012 – சில அனுபவங்கள் (2)

11 ஜனவரி, புதன்கிழமை

* இன்றைக்கு பிளாட்பார வியாபாரிகள் மட்டுமல்ல; புத்தகக் காட்சி வியாபாரிகளுமே மழையைச் சபித்துக் கொண்டிருந்தார்கள். மாலை ஆறு மணிபோல ஆரம்பித்த மழை அடுத்த 45 நிமிடங்களுக்கு தாண்டவமாடியது. கண்காட்சிக் கூரையில் பல இடங்களில் ஒழுக ஆரம்பிக்க, புத்தகங்கள் நனைய ஆரம்பிக்க, வியாபாரிகளெல்லாம் புத்தகங்களைக் காப்பாற்ற அங்குமிங்கும் ஓட… பபாசி அடுத்த முறையாவது ஒழுகாத வண்ணம் கூரைகள் அமைக்கப் பாடம் கற்றுக் கொண்டால் சரி.

* பிளாட்பாரத்தில் இந்தமுறை இதுவரை எனக்கு எந்தப் பொக்கிஷமும் கிட்டவில்லை. இன்னும் ஓரிரு முறை சென்று மேய வேண்டும். காவ்யாவின் பல புத்தகங்கள் ரூ 20க்கும் ரூ 30க்கும் கூறுகட்டி விற்றுக் கொண்டிருந்தார்கள்.

* இந்தியாவுக்கு முதல் தேவை என்ன? விவசாயத்தில் வளர்ச்சிதான் என்று எடுத்துச் சொல்வதுபோல கண்காட்சியின் முதல் ஸ்டாலாக ‘நவீன வேளாண்மை’ அமைந்திருப்பது சிறப்பு. அந்த ஸ்டாலுக்குள் சென்று புத்தகங்களைப் புரட்டும்போது, எங்கிட்டாவது குக்கிராமத்துல துண்டு நெலம் வாங்கி, சோளம் கம்புன்னு பயிறு செஞ்சு… அப்படியே கயித்துக் கட்டில்ல படுத்துக்கிட்டு காத்து வாங்கிட்டு… கூழு குடிச்சிட்டு…  நடந்தா நல்லாயிருக்கும்!

* நற்றிணை பதிப்பகத்தில் சட்டெனக் கவரும் அழகான அட்டைகளுடன் இந்த முறை பல புதிய வெளியீடுகளைக் கொண்டு வந்துள்ளார்கள். பிரபஞ்சனின் இரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. புதிய தலைமுறை இதழில் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக ’மயிலிறகு குட்டி போட்டது’ புத்தகமும், ‘துறவாடைக்குள் மறைந்த காதல் மனம்’ என்ற புத்தகமும் கவனம் கவருகின்றன.

* கோலிவுட்டில் அதிகப் பாடல்களை எழுதும் ரேஸில் சமீப வருடங்களில் முன்னணியில் இருக்கும் நா. முத்துக்குமாரின் புத்தகங்கள், அவரது ‘பட்டாம்பூச்சி’ பதிப்பகத்தில் கிடைக்கின்றன. அவருடைய பழைய கவிதைப் புத்தகங்களும் புதிய அட்டைகளுடன் ஈர்க்கின்றன.

* பொன்னியின் செல்வன் – கல்கி – இளைஞர் பதிப்பு – என்ற அந்த நூலைப் பார்த்ததும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. அட்டையில் விஜயும் சூர்யாவும் ராஜா கெட்-அப்பில் பல்லைக் காட்டிக் கொண்டிருந்தார்கள். எல்லா விழாக்களிலும் பரிசளித்து மகிழ மலிவு விலையில் மகத்தான காவியம் – என்று வேறு அட்டையில் போட்டிருந்தார்கள். (விலை ரூ. 100 என நினைவு.) அதாவது பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களைச் சுருக்கி, இளைஞர்கள் சட்டென படித்து முடித்து வகையில் ஒரே பாகமாக வெளியிட்டிருக்கிறார் ஆர்.கே. சுப்பிரமணியன் என்பவர். ஓய்வுபெற்ற ஆசிரியராம். இன்றைய தலைமுறை இளைஞர்களிடமும் பொன்னியின் செல்வனைக் கொண்டு செல்ல இந்த முயற்சியாம்! லாப நோக்கின்றி சேவை நோக்கில் செய்யப்பட்டதாம்! அவரை வாழ்த்துவதா, திட்டுவதா?

* இன்றும் வாழும் சோழ மன்னர்கள், இன்றும் வாழும் பல்லவ மன்னர்கள் – என சோழ, பல்லவ வாரிசுகள் குறித்த ஆவணப் படங்கள் ரூ. 50 விலையில் இரண்டு சிடிக்களாக தென்பட்டன.

 

 

 

 

 

 

 

* எல்லா புத்தகக் காட்சியிலும் ஹீரோவாக வலம் வரும் சே குவாரா, இந்த முறை படக்கதை வடிவில் (மொழி பெயர்ப்பு புத்தகம்) நல்ல ஓவியங்களுடன் கிடைக்கிறார். கவனம் கவர்ந்த இன்னொரு படப் புத்தகம் – கார்டூனாயணம். அண்ணா குறித்து வெளிவந்துள்ள கார்ட்டூன்களின் தொகுப்பு. தொகுப்பாளர்களில் ஒருவர் டிராஸ்கி மருது.

* மதி நிலையத்தில் பாராவின் குற்றியலுலகம் முதல் 1000 பிரதிகளைக் கடந்துவிட்டதாக ட்விட்டர் மூலம் அறிந்துகொண்டேன். சொக்கன் எழுதிய விண்டோஸ் 7 கையேடு – பலரது கவனத்தையும் ஈர்க்கும் புத்தகமாக அமைந்துள்ளது.

* விகடனில் டாப்பில் இருப்பது பொன்னியின் செல்வன். அடுத்தடுத்த இடங்களை சுகாவின் மூங்கில் மூச்சு, நா. முத்துக்குமாரின் அணிலாடும் முன்றில், விகடன் பொக்கிஷம், காலப்பெட்டகம் போன்றவை பிடித்த்துள்ளன. கிழக்கிலும் சுகாவின் தாயார் சந்நிதி வேகமாக விற்று வருகிறது. நல்ல எழுத்தாளர்களின் ஊர் சார்ந்த அனுபவங்களை வாசகர்கள் மிகவும் ரசித்துப் படிக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

* சென்ற முறை கிழக்கில் 80 பிரதிகளுக்கும் மேல் விற்ற அகம் புறம் அந்தப்புரம் (ரூ. 950), இந்தமுறை விற்பனைக்கு இல்லை. ஸ்டாக்கில் இருந்த ஐந்து புத்தகங்களும் ஓரிரு நாள்களிலேயே விற்றுவிட்டன.

* தென்னிந்தியப் பதிப்பகத்தில் – காமிக்ஸ் பிரியர்களின் ஆதரவால் எப்போதும் கூட்டம்தான். கிங் விஸ்வா மொத்தமாக அள்ளிச் செல்வோர் அனைவரையும் போட்டோ எடுத்துக் கொள்கிறார். நானும் ஒரு செட் வாங்கிவிட்டேன். உங்கள் பிரதிகளுக்கு முந்துங்கள். லயன் ComeBack எடிசனும் வந்துவிட்டது.

* இந்தப் புத்தகக் காட்சியில் நான் கவனித்த ஒரு பொதுவான விஷயம் : வாசகர் கூட்டம் குறையவில்லை. அவர்கள் வாங்கும் புத்தகங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கொஞ்சம் மாற்றியும் சொல்லலாம். அதாவது கடந்த ஆண்டுகளில் ஒரு வாசகரால் 500 ரூபாய்க்கு 5 புத்தகங்கள் வாங்க முடிந்ததென்றால், இந்த ஆண்டு அதே 500 ரூபாய்க்கு 3 புத்தகங்கள்தான் வாங்க முடிகிறது. புத்தகங்களின் விலையேற்றம்தான் காரணம். புத்தகங்களின் விலையேற்றத்துக்குப் பல காரணங்கள்.

* ஒரு ஸ்டாலில் நடந்த உரையாடல் :
‘ஆர்னிகா நாசரோட விஞ்ஞான நாவல்லாம் உங்ககிட்ட இருக்கா?’
‘ஆர்னிகா நாசர், எங்ககிட்டதான் எல்லா கதையும் கொடுத்து வைச்சிருக்காரு. விஞ்ஞான கதைகள் நாங்க போடல. யோசிக்கணும்.’
‘எப்போ கொண்டு வருவீங்க?’
‘யாரு வாங்குவா? அவரென்ன சுஜாதாவா? அந்தளவு மார்க்கெட் இல்லியே.’
‘ஓ… சரி, எந்திரன் கதை தன்னோடதுன்னு கேஸ் போட்டாரே. என்னாச்சு?’
‘சங்கரு தாத்தாவாகுற வரை அந்தக் கேஸு நடக்கும்.’