எம்.ஆர். ராதா என்ன சொல்வார்?

கடந்த ஞாயிறு (ஆக.2, 2015) காலையிலிருந்து இன்று (ஆக.8, 2015) காலை வரை, குறைந்தபட்சம் 300 அறிமுகமில்லாத நபர்களிடமாவது போன் வழியாகப் பேசியிருப்பேன். எல்லாம் எம்.ஆர்.ராதா செய்த மாயம்.

கடந்த 25 வாரங்களாக எனது எம்.ஆர்.ராதா – கலகக்காரனின் கதை – நூல், தொடர் வடிவில் வாரமலரில் வெளியானது. சென்ற ஞாயிறன்று நிறைவடைந்தது. அதன் விளைவாக இத்தனை அழைப்புகள். பெரும்பான்மையானவை சந்தோஷ அழைப்புகள். விதவிதமான மனிதர்களிடம் பேசும் வாய்ப்பு. நல்ல அனுபவம்.

செங்கல்பட்டிலிருந்து ஒரு பள்ளியின் முதல்வர் பேசினார். அவர்களது மாணவர்கள் மத்தியில் வந்து வாசிப்பார்வத்தைத் தூண்டும்படி உரையாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். நிச்சயம் செய்வதாகச் சொல்லியிருக்கிறேன். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரும், அவரது மனைவியும் அத்தனை அன்பைக் கொட்டி பேசினார்கள். நெகிழ்வு. பணி நேரத்தில் கான்ஸ்டபிள் ஒருவர் வயர்லெஸ் இரைய பேசி, என் புத்தகங்கள் எங்கு வாங்க முடியும் என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். அதேசமயம், ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஒருவர், ‘என் அட்ரஸ் நோட் பண்ணிக்கோங்க. எங்க குடும்பம் டீஸண்டான குடும்பம். உங்க புத்தகத்தை எல்லாம் அனுப்பி வையுங்க’ என்று குழைந்தார். பாவம், ஓஸிக்கே பழகிவிட்டார்போல. அவருக்கு என் பரிதாபங்கள்.

அந்தக் கால நாடக நடிகர்கள் சிலர் பேசினார்கள். எம்.ஆர். ராதாவைச் சந்தித்த, அவரது நாடகங்களைக் கண்டுகளித்த நினைவுகளைச் சந்தோஷமாகப் பகிர்ந்து கொண்டார்கள். குடும்பத்தலைவிகள் பலரும் பேசினார்கள். ‘எம்.ஆர்.ராதா படிச்சதுல இருந்து டீவில எம்.ஆர்.ராதா நடிச்ச படம் வந்தாலே விரும்பி பார்க்குறோம்’ என்று மகிழ்ந்தார்கள். வாரமலரில் தொடர்ந்து எழுதச் சொல்லி கேட்டுக் கொண்டார்கள். பேசியவர்களில் பெரும்பான்மையானோர் 50+ கடந்தவர்களே. பலரும் எழுப்பிய கேள்வி, ‘நீங்கள் ஏன், எம்.ஜி.ஆரைச் சுட்ட விஷயத்தைப் பற்றி மிக விரிவாகப் பேசவில்லை?’

அதற்கு என்னுடைய பதில் இதுவே. எம்.ஜி.ஆரைச் சுட்டதென்பதும் ராதாவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம். ஆனால், அது மட்டுமே ராதாவின் அடையாளமாக முன்னிறுத்தப்படுவது, மக்களின் மனங்களில் பதிந்திருப்பது வருத்தத்திற்குரிய விஷயம். ராதாவின் பன்முக ஆளுமையை அழுத்தமாகப் பதிவு செய்வதே என் ஒரே நோக்கம். ராதாவின் அடையாளங்களாகப் பேச அவரது தனித்துவமான நடிப்பு, நாடகத் துறையில் அவரது அர்ப்பணிப்பு, பெரியாரின் சீடராக அவர் செய்த பகுத்தறிவுப் பிரசாரம், திராவிட அரசியலில் அவரது பங்கு, மனிதநேயம் உள்ளிட்ட ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ஆக, எம்.ஜி.ஆரைச் சுட்டதற்கு என்ன முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமோ அதனளவில் அதைச் சுட்டிக் காட்டியிருக்கிறேன். அவ்வளவே.

பேசியவர்களில் பலரும் பொதுவாகச் சொன்ன விஷயம், ‘நாங்க தீவிர எம்.ஜி.ஆர். ரசிகர்கள். எம்.ஆர்.ராதான்னாலே பிடிக்காது. அவரு எம்.ஜி.ஆரைச் சுட்டவரு. வில்லன். ஆனா, இந்தத் தொடரைப் படிச்சதுக்கு அப்புறம்தான் எம்.ஆர்.ராதா எவ்வளவு பெரிய ஆளு, எவ்வளவு உயர்ந்த மனிதர், நல்லவர்னு புரிஞ்சுக்கிட்டோம்.’

கலைத்துறையிலும் சரி, அரசியலிலும் சரி எம்.ஆர். ராதாவின் பங்களிப்பு மிகப்பெரியது. எம்.ஆர். ராதா நூற்றாண்டு நிகழும் இந்தச் சமயத்தில் என் எழுத்து மூலம் அவரது வாழ்க்கையும், அவரது உயரிய பண்புகளும் மனித நேயமும் பலரையும் சென்றடைந்ததில் பெருமகிழ்ச்சி. கூடவே மனத்தில் அதீத கற்பனை ஒன்றும் தோன்றுகிறது. டைம் மிஷின் ஒன்று கிடைத்தால், அதில் ஏறி ராதா வாழ்ந்த காலத்துக்குச் சென்று அவரிடம் கலகக்காரனின் கதை புத்தகத்தைக் கொடுக்க வேண்டும் என்று. அப்படி நிகழ்ந்தால் ராதா என்ன சொல்லுவார்?

‘நாட்லே எவ்வளவோ பெரிய பெரிய மனுஷங்க, மேதைகள், அறிஞர்கள், மகான்கள் எல்லாம் வாழ்ந்துட்டுப் போயிருக்காங்க. நீ அவங்களை பத்தி எழுதாம, என்னைப் பத்தி எழுதி உன் டைம் வேஸ்ட் பண்ணிருக்க. பரவாயில்ல மேன். இனிமேலாவது நல்ல விஷயங்களை எழுத முயற்சி பண்ணு.’