ஈசன் – முருகேசன்

முருகேஷ் என் நெருங்கிய நண்பன். நல்ல படைப்புத்திறன் உள்ளவன். எனக்கும் அவனுக்குமான ரசனை அலைவரிசை ஒன்றே. கல்லூரி நாள்கள் தொடங்கி இன்று வரை எங்களுக்கிடையேயான உரையாடல்களில் சினிமாவே அதிகம் இடம்பெறும். தற்போது அவன் ஹைதரபாத்தில் சாஃப்ட்வேரில் (வேண்டா வெறுப்புடன்) கல்லுடைத்துக் கொண்டிருக்கிறான். அவன் பார்த்த, அவனைக் கவர்ந்த படங்களுக்கான விமரிசனம் எழுதி எனக்கு அனுப்புவான். அவனுடைய நண்பர் வட்டத்துக்கும் அனுப்புவான். அதிலுள்ள பெரும்பாலான கருத்துகளில் எனக்கு உடன்பாடு இருக்கும். இதோ இன்றுதான் ஈசன் விமரிசனம் அனுப்பினான். நானும் ஈசன் பார்த்துவிட்டேன். அதற்கான விமரிசனத்தை நான் எழுதவில்லை. பதிலாக, நண்பன் முருகேஷின் கருத்துகளுடன் என்னுடைய சில கருத்துகளும் இணைந்த ஈசன் விமரிசனம் இதோ.

***

பார்த்துப் பார்த்து பழகிப்போன பாடாவதியான பழிவாங்கும் கதைதான். ஆனா, ‘வைக்கிறவ வச்சா ரசம் கூட திராச்சை ரசம்’ மாதிரியான கைப்பக்குவ மேட்டர்தான் ஈசனை ரசிக்க வைக்கிறது.

முக்கிய மந்திரி ஏ.எல் அழகப்பனின் (திமுகவின் ஒரு முக்கிய அமைச்சரின் மேனரிஸங்களை பிரதிபலிக்கிறார்) மகன் வைபவ் (கதாபாத்திரத்தின் பெயர் ‘செழியன்’). மந்திரிக்கே உரிய எல்லா தந்திரங்கள் கொண்ட தந்தை. மந்திரி பிள்ளைக்கே உரிய எல்லா ‘நல்ல்ல்ல’ பழக்கங்களுடன் பிள்ளை. அந்த தங்கமான புள்ள அங்கமெல்லாம் அடிவாங்கி கொலை செய்யப்படுகிறார். ஏன்? எப்படி? நடந்தது என்ன என்று விளக்குவதுதான் இரண்டாம் பாதி.

இது, அக்மார்க் அரசியல்வாதிக்கும், பொளந்து கட்டுற போலீஸுக்கும் நடக்கப் போற மோதல் கதையா? இல்லை, கோடீஸ்வரன் மகளுக்கும் கேடி மகனுக்கும் நடக்கிற காதல் கதையா? இல்லை, பண பலத்தையும் பதவி பலத்தையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கிற வாடிக்கையான கதையா? ஒரு தெளிவே இல்லாமல் போகிறது திரைக்கதை, ஆனால் தெளிவான காட்சிகளுடன். சரியாகச் சொல்லவேண்டுமென்றால், இலக்கே இல்லாமல் வீசுகிற காற்று மாதிரி, எங்கே போகிறதென்று தெரியவில்லை. இருந்தும், சில்லென்றுதான் இருக்கிறது.

இரண்டாம் பாதியில், ஃப்ளாஸ்பேக் ஓப்பன் பண்ணும்போதே, விக்டிம் யாரு, கல்ப்ரிட் யாரு, இப்போது பழிவாங்குவது யார் என எல்லா விஷயங்களும் ரசிகர்களுக்கு முன்னமே தெளிவாகப் புரிந்துவிடுகிறது. சசிகுமாரும் அதில் பெரிதாக எந்த டிவிஸ்டும் வைக்க விரும்பவில்லை. இப்படித்தான் கதை போகுமெனத் தெரிந்தபின், ரசிகர்களை கட்டிப்போட்டு உட்கார வைப்பது ரொம்ப சிரமம். ஆனால், அந்த வேலையை சுலபமாகச் செய்துள்ளது சசிகுமாரின் மூளை. கேமரா ஆங்கிள், கதையோட பின்னணி, அங்கங்கே பார்க்க புதுசாக ஒரு சில காட்சிகள், நடிகை அபிநயா மேல் ரசிகர்களுக்கு இருக்கிற பிரியம், இப்படி எல்லாம் சேர்ந்து இழுவையான இரண்டாம் பாதிக்கு வலிமை சேர்க்கிறது.

அரசியல்வாதியில் ஆரம்பித்து அல்லக்கை வரைக்கும் அப்படியொரு அட்டகாசமான நடிகர் தேர்வு. ஈசன் கேரக்டர் ‘துஷ்யந்த்’, இந்த படத்துக்காகவே பிறந்த மாதிரி ஒரு அமைப்பு (‘பசங்க’ வாத்தியார் ஜெயபிரகாஷின் இரண்டாவது பையன். முதல் பையனும் இதில் நடித்திருக்கிறார், வைபவின் நண்பன் வினோத் பாத்திரத்தில்.). கொஞ்சம்கூட மீறாத மிரட்டல்.

அபிநயாவின் ஒவ்வொரு உணர்வையும் ரசிகர்களின் முகத்திலே பார்த்துவிடலாம். அவர் சிரிக்கும் போது மகிழ்ச்சியும், அழும்போது துயரமும் நம்மோடு ஒட்டிக்கொள்வதை மறுக்க முடியாது. அதுதான் அவரதும் வெற்றியும் கூட. குடிப்பது காபி இல்லை எனத் தெரிந்ததும், இயல்பாக நடிக்கிறது அவரது முகம்.

ஒரு சில காட்சிகளில் பார்வையாளர்களைக் கையைப் பிடித்து கூட்டி போகிற யுக்தி தெரிகிறது. நல்ல விஷயம்தான் என்றாலும், தேவைக்கும் அதிகமான நீளமாகத் தெரிகிறது. சுப்ரமணியபுரத்தில் சில முக்கியமான விஷயங்களைக்கூட கதாபாத்திரங்கள் பேசும் ஒருவரி டயலாக்கில் சொல்லிக் கொண்டுபோன சசிகுமார்தானா இது என்ற உறுத்தல் ஏற்படுகிறது. பல ஊர்களில் படத்தின் இரண்டாவது பாதியில் சுமார் இருபத்தைந்து நிமிடங்கள் கத்தரித்துவிட்டார்களாம். சந்தோஷம்.

ஈசனோட அறிமுகக் காட்சியில் இருக்கும் த்ரில், அமைச்சர் கேரக்டர் வழியாக கிழிக்கப்படும் நிகழ்கால திராவிட அரசியல்வாதிகளின் முகங்கள், அங்கங்கே பட்டாசாகச் சிதறுகிற காமெடி ஒன் லைனர்ஸ், பல இடங்களில் பளிச்சிடும் கூர்மையான வசனங்கள் – இன்னும் நிறைய இருக்கிறது நிறை என்று சொல்ல.
இருந்தாலும், பொழுதுபோக்குக்காக அரங்கினுள் நுழையும் ஜனரஞ்சக சினிமா ரசிகனின் பார்வையில் பார்க்கும்போது, ‘பழைய கதை, பபுள்கம் காட்சிகள், எதிர்பார்த்த ஃபிளாஸ்பாக்’ என்பதெல்லாம் பெரும் குறைகள்தாம்.

‘ராம்’ ஜீவாவுக்கும் ‘ஜித்தன்’ ரமேஷுக்கும் உள்ள சம்மந்தம்தான், ஈசனின் முதல் பாதிக்கும், இரண்டாம் பாதிக்கும். ஒரே டிக்கெட்டில் இரண்டு படம் பார்த்த மாதிரி ஓர் உணர்வு. இருந்தாலும் ஈசன், எந்த உலகப் படத்தையும் நினைவுபடுத்தவில்லை. சசிகுமாரும் தான் ஓர் உலகப் படத்தைப் படைத்துவிட்டதாக சேனல்களில் சொகுசு சோபாக்களில் அமர்ந்து மார்தட்டிக் கொள்லவில்லை. புதிய கதைக் களத்தில் ஒரிஜினலாக ஒரு படம் பார்த்த திருப்தி ஈசனில் கிடைக்கிறது.

படம் பார்க்க வந்திருந்தவர்களில் பெரும்பாலோனோர் சசிகுமாரும் நடித்திருக்கிறார் என்ற நினைப்போடு வந்து ஏமாந்துபோனார்கள். எல்லாம் டிரெய்லர் செய்த வேலை. ஒருவேளை, பாதிக்கப்பட்ட அக்காவுக்காக பழிவாங்கும் தம்பி என்பதற்குப் பதிலாக, பழிவாங்கும் அண்ணனாக சசிகுமார் நடித்திருந்தால் படம் பெரிய ஹிட் ஆகியிருக்கலாம். ஏனென்றால் நட்சத்திர வேல்யூ இல்லாத ஒரு படத்துக்கு இத்தனை பெரிய ஓப்பனிங் கிடைக்கிறதென்றால், அதற்கான ஒரே காரணம் சசிகுமார் மட்டுமே.

ஈசன் – சிற்பி கொத்தியிருக்கும் அம்மி. என் பார்வையில் சிலையாகத்தான் தெரிகிறது.

– முருகேஷ்

நாடோடிகள் – 2009ன் சுப்ரமணியபுரம்!

தனது மூன்றாவது முயற்சியிலும் வெற்றி பெற்றிருக்கிறார் சசிகுமார், கதாநாயகனாக. இயக்குநராக சமுத்திரக்கனிக்கு இந்தப் படம் பெருவாழ்வு. எல்லா சென்டர்களிலும் வசூலை அள்ளப்போகிறது நாடோடிகள்.

படத்தின் கதையை விலாவாரியாகச் சொல்லமாட்டேன். அது திரையில் ரசிக்க வேண்டியது. என்  நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன். படத்தில் ஒரு வரி இதுதான். நண்பனின் (நண்பன்) காதலைச் சேர்த்து வைப்பதற்காகப் போராடும் நண்பர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் இழப்புகளைச் சுளீரென எடுத்துக்  காட்டியிருக்கிறது இந்தப்படம். அந்தக் காதலர்கள் நன்றி மறந்து நண்பர்களுக்குத் துரோகம் செய்தால்? அதற்குப் பின் அந்த நண்பர்களின் எதிர்வினை என்ன? அதுவே கதை.

நட்பை ஏக உயரத்தில் ஏற்றி வைத்திருக்கும் இந்தப்படம், இன்று மலிந்து கிடக்கும் போலி  காதல்களையும் தோலுரித்துக் காட்டியிருக்கிறது.

படத்தின் முதல்பாதி – அத்தனை விறுவிறுப்பு, அவ்வளவு சுறுசுறுப்பு. அதுவும் இடைவேளைக்கு முந்தைய சேஸிங் காட்சிகள் – செம வேகம். ஒளிப்பதிவாளர் கதிர் – அசத்தல். முதல் பாதி சிறுத்தை வேகத்தில் செல்வதால் இரண்டாவது பாதி கொஞ்சம் மெதுவாகச் செல்வதாகத் தோன்றுகிறது என  நினைக்கிறேன். ஆனால் இரண்டாவது பாதியிலும் விறுவிறுப்பு, சோகம், நகைச்சுவை எதற்கும் தட்டுப்பாடு இல்லை.

கதாபாத்திரங்களுக்கு வருவோம். கருணாகரனாக சசிகுமார் – ஒரு தேர்ந்த இயக்குநரால்தான் கதாபாத்திரத்தின் தேவைக்கேற்ப நடிக்க முடியும் சொல்லிக் காட்டியிருக்கிறார். மிகை நடிப்பு இல்லை. ஆக்ரோஷமான  காட்சிகளிலும், சோகமான காட்சிகளிலும் அப்ளாஸ்! அடுத்த இடம் பாண்டியாக வரும் கல்லூரி  பரணிக்கு. நகைச்சுவையில் கஞ்சா கருப்பை ஓரம்கட்டி விடுகிறார். ஆக்ரோஷமான காட்சிகளிலும்  ஆள், தூள். சென்னை 28ல் நடித்திருக்கும் விஜய்க்கு இதில் அழுத்தமான பாத்திரம்.

பெண் கதாபாத்திரங்களில் முதலிடம் கு. நல்லம்மாவுக்கு. குந்தாணி என்று செல்லப்பெயரோடு  அறிமுகமாகியிருக்கும் அனன்யா. முகபாவனைகளில் ஜோதிகாதான். சு.புரம் சுவாதி எட்டடி  என்றால் இவர் பதினெட்டு அடி. ஆள்தான் கொஞ்சம் குள்ளம். அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு  எப்படி அமையுமோ? சசிகுமாரின் தங்கையாக அபிநயா. ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பு. இந்தச் சிறப்புப் பெண்ணை நடிக்க வைத்ததில் ஜெயித்திருக்கிறார் சமுத்திரக்கனி.

தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் ப்ளக்ஸ் வைக்கும் கலாசாரத்தை சின்னமணி (பார்ப்பதற்கு மன்சூர் அலிகான் போலவே இருக்கிறார்) என்ற கதாபாத்திரம் மூலம் நையாண்டி செய்திருக்கிறார்கள். அதற்கு  தியேட்டரில் செம கைதட்டல். தியேட்டருக்கு வெளியே இவருக்குத் தனியாக ப்ளக்ஸ் வைத்திருக்கிறார்கள் என்பது தனிக்கதை.

சசிகுமாரின் பாட்டி, ரெண்டாவது பொண்டாட்டிக்குப் பயந்து முதல் தாரத்தின் மகன் மீது வெளிப்படையாகப் பாசத்தைப் பொழிய முடியாமல் மருகும் பாண்டியின் அப்பா, தனது மகனது காதலுக்காகத் தூது செல்லும் விஜயின் அப்பா – இப்படி யதார்த்தமாகப் படைக்கப்பட்ட பல கதாபாத்திரங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். ஒவ்வொன்றிலும் அவ்வளவு  அழுத்தம் (சில பாத்திரங்கள் தவிர).

சம்போ சிவ சம்போ – பாடல் பின்னணி இசையின் உயிர்நாடி போல படத்தில் உதவியிருக்கிறது.  கண்கள் இரண்டால் போல ஒரு ஹிட் அமையாதது மட்டுமே குறை. மற்றபடி, ஒரு திருவிழா பாட லும், யக்கா யக்கா பாடலும் செருகல், உறுத்தல். அதுவும் யக்கா, யக்கா பாடலை நீக்கினால் அது இயக்குநர் ரசிகர்களுக்குச் செய்யும் நன்றிக்கடன். இசையமைப்பாளர் சுந்தர் சி. பாபு பின்னணி  இசையால் ஜெயித்திருக்கிறார்.

வசனங்கள் பல இடங்களில் பளிச். சத்யம் தியேட்டர் ரசிகர்களும் விசிலடித்துக் கைதட்டும்  அளவுக்கு. நட்பு குறித்த வசனங்களுக்கும் சசிகுமாரும் பாண்டியும் ஆக்ரோஷமாகப் பேசும் வசனங்களுக்கும் படு வரவேற்பு.

சில காட்சிகளில் சுப்ரமணியபுரம் நினைவுக்கு வருகிறது. புதிதாக யோசித்திருக்கலாம். மேலும் சில குறைகளையும் எடுத்துவைக்கலாம். படத்தின் ஓட்டத்தில் அவை தெரியாது.  விட்டுவிடலாம்.

கோடிக்கணக்கில் தயாரிப்பாளர் தலையில் மிளகாய் அரைக்கும் வெத்துவேட்டு மாஸ் ஹீரோக்கள் தேவையில்லை. கதை, திரைக்கதைதான் நிஜ ஹீரோ. அதைக் கொடுக்கவேண்டிய விதத்தில் கலந்துகொடுத்தால், எந்தப் படத்தையும் ரசிகர்களின் ஆதரவோடும், பெரும் வசூலோடும் ஜெயிக்க வைக்கலாம் என்று மூன்றாவது முறையாக நிரூபித்துக்  காட்டியிருக்கிறார்கள் சசிகுமார் கூட்டணியினர். நல்ல சினிமாவை ரசிக்கும் ரசிகர்களின் மனத்தில்  சசிகுமாருக்கு நிரந்தர இடம் உண்டு.

டைரக்டர் சமுத்திரக்கனியின் ‘உன்னைச் சரணடைந்தேன்’ – தியேட்டரில் பார்த்திருக்கிறேன். எனக்குப் பிடித்திருந்தது. நீண்ட போராட்டத்துக்குப் பின் சமுத்திரக்கனி நாடோடிகள் மூலமாக தனக்கான உயரத்தை அடைந்துவிட்டார். சமுத்திரக்கனி, சசிகுமாரின் நிஜ நட்பு ஜெயித்துவிட்டது.

இனி இவர்களை கோடம்பாக்கத்து மசாலா கோமாளிகள் அண்ணாந்து பார்க்கக் கடவதாக!

பக்கடாவும் மனோன்மணியும்!

தமிழ் சினிமாவில் குழந்தைகளுக்காக வந்துள்ள ஒரே படம் என்று அஞ்சலியை பலகாலமாக வேறுவழியின்றிக் கொண்டாடிக் கொண்டிருந்தோம். அஞ்சலி குழந்தைகளுக்கான படமா என்ன?

இனி நாமும் துண்டை, கௌரவமாகத் தோளில் போட்டுக் கொள்ளலாம். பசங்க வந்துவிட்டது. குழந்தைகளுக்கான முதல் தமிழ் சினிமா வந்தேவிட்டது. இயக்குநர், தயாரிப்பாளர் சசிகுமாரைப் பார்த்து கேட்கத் தோன்றும் கேள்வி, இத்தனை நாளா எங்க சார் இருந்தீங்க?

முதல் படத்துக்கு ‘சின்னப்பசங்க’ கதையை வைத்துக்கொண்டு வாய்ப்பு தேடி அலைஞ்ச இயக்குநர் பாண்டிராஜுக்கு தன்னம்பிக்கை ஜாஸ்திதான். இந்தக் கதையை பல மசாலா தயாரிப்பாளர்கள் இடதுகையால் நிராகரிச்ச சம்பவங்கள் கண்டிப்பாக நடந்திருக்கலாம். சமீபத்தில் மீண்டும் படம் தயாரிக்க ஆரம்பித்த அந்த நிறுவனமும் நிராகரித்ததாகக் கேள்விப்பட்டேன். இப்போது வருத்தப்படுவதாகவும் சொல்கிறார்கள்.

விகடனில் 50 மார்க் போட்டிருக்கிறார்கள். மகிழ்ச்சி. மக்களை தியேட்டருக்கு இழுக்க இந்த மார்க் மிகவும் உபயோகப்படும். இரு தினங்களுக்கு முன்பு நானும் சூரியனில் பசங்க பார்த்தேன், பசங்களோடு. பக்கடா, மனோன்மணி, குட்டிமணி உள்பட சில சிறுவர்களை படத்தின் உதவி இயக்குநர்கள் தியேட்டருக்கு அழைத்து வந்திருந்தார்கள். அனைத்து பகுதிகளிலிருந்தும் ரிசல்ட் பாசிட்டிவாக வருகிறது என்றார் அந்த உதவி இயக்குநர். ஜீவா, அன்பு தவிர மற்ற எல்லோரும் புதுக்கோட்டை பசங்க. படத்தில் வரும் பள்ளி, டைரக்டர் படித்த இடம். எல்லோரையும் கவர்ந்த கதாபாத்திரமான புஜ்ஜியின் சொந்த வீட்டில்தான் அவன் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.

கோடை விடுமுறை என்பதால் படத்தில் நடித்த பசங்க, தியேட்டர் தியேட்டராக சென்று மக்களின் வரவேற்பை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே நாம், நம் வீட்டுப் பசங்களோடு தியேட்டருக்குச் சென்று அனுபவித்துப் பார்க்கவேண்டிய படம் இது.

படத்தில் குறைகளே இல்லையா? நீளமான காட்சிகள், சேராத பின்னணி இசை, க்ளைமாக்ஸ் என்று குறைகள் இருக்கின்றன. ஆனால் நிறைகள் நிறையவே இருக்கின்றன. குறிப்பாக யதார்த்தம் மீறாத காட்சிகள், வசனங்கள், கதாபாத்திரங்கள்.

அவ்வளவு உயர்தரமான படமா? ரெண்டாம்தர கதைகளோடும், மூன்றாம்தர வசனங்களோடும் வரும் கேடுகெட்ட சினிமாக்களே நமக்கு விதிக்கப்பட்டது என்று நொந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோமே. அந்தக் குப்பைகளோடு ஒப்பிடத் தேவையே இல்லை. பசங்க, பெரியவங்க!

இயக்குநருடன் போனில் பேசும் வாய்ப்பு அமைந்தது. ‘அடுத்த படத்துல நீங்களும் கமர்ஷியல் ஃபார்முலாவுக்குள்ள சிக்கிக்காதீங்க’ என்றேன். ‘கண்டிப்பாக மாட்டேன்’ என்றார் அழுத்தமாக.

நம்புகிறேன்.