கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு 100

அல்வா.

இந்த ஒரு  வார்த்தையை வைத்துக் கொண்டு உங்கள் மனத்தில் தோன்றும் அர்த்தமுள்ள கேள்விகளைக் கேளுங்கள்.

உதாரணத்துக்கு…

அல்வாவைக் கண்டுபிடித்தது யாராக இருக்கும்? அல்வாவின் ஆதி வடிவம் எப்படி இருந்திருக்கும்? அது வேறு நாட்டின் இனிப்பு பதார்த்தம் என்றால் இந்தியாவுக்குள், தமிழ்நாட்டுக்குள் எப்படி புகுந்திருக்கும்? இல்லை, இங்கு நம்மவர்களின் பாரம்பரிய பதார்த்தம் என்றால், இங்கிருந்து இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும், பிற கண்டங்களுக்கும் எப்படி பரவியிருக்கும்? உலகில் இன்று எத்தனை விதமான அல்வாக்கள் உள்ளன?

இன்னும் பல கேள்விகள் உதிக்கலாம்.

இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தேடுவதே, தேடித் தொகுப்பதே, தொகுத்ததைக் காட்சிப்படுத்துவதே ‘கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு’ நிகழ்ச்சியின் மையக்கரு. அல்வாவையே எடுத்துக் கொள்வோம். அல்வா என்றதும் நமக்கு திருநெல்வேலியின் நினைவும் நெய்யாக ஒட்டிக் கொண்டு வரும். ஆக, திருநெல்வேலிக்கு அல்வா எப்படி நுழைந்தது, எவ்விதம் பெயர் பெற்றது, திருநெல்வேலியில் அல்வா எப்படி தயாராகிறது என்பதையும் சேர்த்து காட்சிப்படுத்துவது கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு நிகழ்ச்சியின் சிறப்பு.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி இது. ஆரம்பமான முதல் எபிசோடிலிருந்தே பெருத்த வரவேற்பைப் பெற்றது. நிகழ்ச்சியின் ஆரம்ப எபிசோடுகளின் ‘ஆய்வு – எழுத்து’ பணியை அன்பிற்குரிய பா. ராகவன் மேற்கொண்டார். 31-வது எபிசோடிலிருந்து நிகழ்ச்சிக்கான ‘ஆய்வு – எழுத்து’ப் பணியை நான் மேற்கொண்டு வருகிறேன். இதோ நாளைய எபிசோட் (16 மார்ச் 2014, ஞாயிறு) கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு நிகழ்ச்சியின் 100வது எபிசோட். இந்த சிறப்பு எபிசோடில் பிஸ்கட்டின் வரலாறு பேசப்படுகிறது.

புதிய தலைமுறை டீவியில் வாரம் ஒருமுறை ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி, கடந்த சில மாதங்களாக புதுயுகம் டீவியில் வாரம் இருமுறை ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அல்வா, பிஸ்கட், கத்தரிக்காய் என ஏதாவது ஓர் உணவுப்பொருளை எடுத்துக் கொண்டு அதன் வரலாற்றை, உணவுக் குறிப்புகளை கொடுப்பது ஒருவிதம். அல்லது, கும்பகோணம், தூத்துக்குடி, கோவா என்று ஊர்களுக்குச் சென்று அந்தந்த ஊரின் வரலாற்றைப் பேசியபடி, அந்தந்த மண்ணுக்கான பாரம்பரிய உணவுகளை, சிறப்பு சுவையைப் பேசுவது இன்னொரு விதம். இந்த இரண்டு விதங்களிலும் கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

எபிசோடுகள் வளர வளர, இந்த நிகழ்ச்சிக்கான எழுத்துப்பணி மிகவும் சவாலானது. காரணம் ‘கூறியது கூறல்’ ஆகிவிடக்கூடாதல்லவா. அதே சமயம், நாம் கருவாக எடுத்துக் கொண்டிருக்கும் உணவு குறித்து வரலாறு பேசலாம். ஆனால், அதைக் கொண்டு சமையல் செய்ய அதிகம் வாய்ப்பிருக்காது. உதாரணம், நாவல் பழம் குறித்த வரலாறு பேசலாம். ஆனால், அதைக் கொண்டு பதார்த்தங்கள் அதிக அளவில் செய்ய இயலாது. ஆரஞ்சு என்று எடுத்துக் கொண்டால், அதன் வரலாறு பேசலாம், அதைக் கொண்டு பதார்த்தங்களும் செய்யலாம். ஆனால், நினைத்த நேரத்தில் ஆரஞ்சைப் படம் பிடிக்க முடியாது. அதற்கான சீஸன் வரும்வரை காத்திருக்க வேண்டும் – அதற்கான நல்ல தோட்டம் கிடைக்க வேண்டும். தவிர, படப்பிடிப்பு குழுவினர் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு ஊருக்கு ஓட வேண்டும். நேர நெருக்கடி. ஆக, அதற்கு ஏற்றாற்போலும் ‘பாடுபொருளைத்’ தேர்ந்தெடுக்க வேண்டும்.  இப்படிப் பல சவால்கள்.

ஒவ்வொரு எபிசோடுக்கும் புதுப்புது விஷயங்களை யோசிப்பது, வரலாற்றைத் தேடிப் பிடிப்பது, அந்தந்த பாடுபொருளுக்கேற்ப விதவிதமான சுவாரசியமான வரலாற்றைச் சேர்ப்பது என மிகுந்த மனமகிழ்வுடன் இந்த ‘ஆய்வு – எழுத்துப்’ பணியை செய்து வருகிறேன். ‘அடை’ என்பதற்கான வரலாறு என்னவாக இருக்க முடியும்? டபரா செட் எப்படி உருவாகியிருக்கும்? சட்னியின் வரலாறு என்ன? அம்மிக்கு வரலாறு உண்டா? இந்திய சமையலறைகளுக்கு மிக்ஸி வந்த வரலாறு என்ன? இப்படிப் பலப்பல சுவாரசியமான கேள்விகளுக்கான விடைகளைத் தேடுவது என்பது… எனக்குப் பிடித்திருக்கிறது.

இதோ நூறைத் தொட்டுவிட்டோம் என்று எண்ணும்போது திருப்தி. மகிழ்ச்சி. மனநிறைவு. உணவும் வரலாறும் பேசும் தமிழின் முதல் நிகழ்ச்சி இதுவே. இனி இதுபோன்ற நிகழ்ச்சிகளை உருவாக்கலாமே தவிர, இதைவிடச் சிறந்த நிகழ்ச்சியை உருவாக்குவது என்பது ஆகப்பெரிய சவால்.

கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு குழுவினருக்கு (நான் அறிந்த/அறியாத ஒவ்வொருவருக்கும் என்) வாழ்த்துகள். நிகழ்ச்சியின் அகமாகவும் புறமாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் ஹரிக்கு என் வாழ்த்துகள். புதிய தலைமுறை, புதுயுகம் சேனல்களுக்கு என் நன்றி.

இன்னும் பேசப்பட வேண்டிய சுவையான வரலாறு ஏராளம் இருக்கிறது. பணி தொடர்கிறது.